அத்தியாயம் 2
அன்று வகுப்புகள் முடிந்து யாழ்ப்பாண டவுனுக்கு வந்திருந்தான் செந்தாளன். தன் வேலைகளை முடித்துக்கொண்டு திரும்பியபோது கானவியைக் கடம்பனோடு கண்டான். அதுவும் சில அடிகள் தூரத்தில்.
புகைப்படத்தில் இருக்கும் அதே சிரிப்பு. நேரில் இன்னுமே மனத்தைக் கொய்தாள். அயர்ன் செய்து நேராக்கி விரித்து விடப்பட்டிருந்த கற்றைக் கூந்தல், அதன் மேலே வீற்றிருந்த கறுப்புக் கண்ணாடி, அளவான மேக்கப்பில் பளபளத்த முகம், அணிந்திருந்த ஜீன்ஸ் டொப், கையில் ஆப்பிள் மணிக்கூடு, அதே கை நளினமாகப் பற்றியிருந்த ஆப்பிள் ஃபோன் என்று அவளின் நடை, உடை, பாவனை அனைத்திலும் பணச்செழுமை கொட்டிக் கிடந்தது. கடம்பனின் தோற்றமும் அப்படித்தான். அவன் கைகளில் ஆடையகங்களின் பைகள் நிறைந்து வழிந்தன.
தன்னைக் காண்பாளா, கண்டால் என்ன செய்வாள் என்கிற கேள்விகள் எழுந்து வந்து மனத்தைக் குறுகுறுக்க வைத்தன.
வீட்டில் பேச்சு வார்த்தைகள் சுமூகமாகப் போய்க்கொண்டுதான் இருந்தன. பெருமளவில் அனைத்தும் முற்றான நிலை. விரைவில் சம்பந்தக் கலப்பு நடக்க இருந்தது. ஆனபோதிலும், இந்த நிமிடம் அவனுக்கும் அவளுக்கும் இடையில் எந்த உறவும் நிச்சயமாகியிருக்கவில்லை.
தம்பியாரின் முகம் பார்த்து எதையோ சொல்லிச் சிரித்தபடி வந்த கானவி, அவளின் மற்றப் பக்கம் நின்றிருந்த செந்தாளனைக் கவனிக்காமல், அவனைக் கடந்து போய்க்கொண்டே இருந்தாள்.
செந்தாளனின் முகத்தில் மெல்லிய இறுக்கம் படர்ந்தது.
அவள் உன்னைக் கவனிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை, நீ இங்கே நிற்கிறாய் என்று அவளுக்கு எப்படித் தெரியும் என்று கேள்விகளை எழுப்பி, அவன் மனம் அவனைச் சமாதானம் செய்ய முயன்றாலும் முடியவில்லை.
பைக்கை உதைத்துக் கிளப்பினான். ஆனாலும் அங்கிருந்து அகல முடியவில்லை. உறுமிக்கொண்டிருந்த பைக்கில் இருந்தவாறே திரும்பிப் பார்த்தான். பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் பார்ப்பதைக் கவனிக்காமல் அப்படி என்ன பேச்சும் சிரிப்பும்? ஒருவிதக் கோபம் அவனுக்குள் சடசடவென்று முளைக்க ஆரம்பித்தது.
சில நொடிகளிலேயே கானவியை என்னவோ உறுத்தியது. அந்த உள்ளுணர்வின் உந்துதலில் தன்னைச் சுற்றி விழிகளைச் சுழற்றினாள். இவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். பக்கத்தில் நின்றபோது திரும்பியே பார்க்கவில்லை. இப்போது என்னவாம்? ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுவிட்டு நிமிர்ந்தவன் பைக்கை ஒரு வேகத்துடன் வட்டமடித்துத் திருப்பினான். பார்வை மட்டும் தீர்க்கமாக அவளில்.
இப்போது, அவளும் அவனைக் கண்டுகொண்டாள். கண்டதும் அவள் விழிகள் அப்படியே விரிந்தன. முகம் பளீரென்று மலர்ந்தது. பார்வையால் அவனையே தொடர்ந்தாள்.
அவனும் அவள் மீது பார்வையைப் பதித்தபடியே அவளைக் கடந்துபோனான். மருந்துக்கும் சிரிப்பில்லை. முதலில் அது என்ன விதமான பார்வை? அவள் மனது துணுக்குற்றது. அவளைக் குற்றம் சாட்டியதா? கண்டிப்புடன்
பார்த்தானா? அவளால் இனம் பிரித்து உணர முடியவில்லை. அப்படி என்ன தவறு செய்தாள்? ஏன் அவளைக் கண்டும் கதைக்காமல் போகிறான்?
“ஆர் அக்கா? உனக்குத் தெரிஞ்ச ஆருமா?” தமக்கையின் விடாத பார்வையைக் கண்டு வினவினான் கடம்பன்.
“அது… அவர்… செந்தாளன்.”
“ஆர் அத்தானோ?”
அதிர்ந்து திரும்பினாள் கானவி. “டேய்! இன்னும் ஒண்டும் முடிவாகேல்ல!” என்றாள் அவசரமாக.
“அதெல்லாம் ஆயிடும். ஏன் கண்டுட்டும் காணாத மாதிரிப் போறார்?”
அதுதான் அவள் கேள்வியும். கூடவே, அவன் முகத்தில் தெரிந்த அந்தக் கடுமை ஏன் என்பதும்.
“இன்னும் ஒண்டும் முடிவாகேல்லதானே. அதா இருக்கும்.” அவனிடம் தன் மனத்தைச் சொல்லாமல் சமாளித்தாள்.
“அதா இருக்கும் இல்ல. அதாத்தான் இருக்கும். சரி வா, போவம்.”
கடம்பனின் பைக் வீடு நோக்கி விரைந்துகொண்டிருந்தது. பின்னால் அமர்ந்திருந்தவளின் சிந்தையைச் செந்தாளன் சிறை செய்திருந்தான். ஏன் அப்படிப் பார்த்தான்? என்ன கோபம் அவனுக்கு? இன்னும் எதுவும் முற்றாகாததில் கதைக்காமல் போயிருக்கலாம். ஒரு சிரிப்பு, சின்னதாய் ஒரு தலையாட்டலுமா கூடாது?
வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த செந்தாளனுக்கும் அவள் பற்றிய எண்ணம்தான். தன்னைக் கண்டதும் அவள் விழிகள் விரிந்த விதத்திலும், முகம் மலர்ந்த பாங்கிலும் உதட்டோரத்தில் மெல்லிய முறுவல் அரும்பிற்று. அவள் மீதிருந்த காரணமில்லாக் கோபம் கூடக் கரைந்திருந்தது.
‘அதென்ன பார்வை பாக்கிறா, கண்ணைச் சிமிட்டாம!’ தானாகத் தலைக்கோத எழுந்த கை, தலையில் ஹெல்மெட் இருந்ததில் மீண்டும் பைக் ஹாண்டிலை பற்றிற்று.
இத்தனைக்கு மத்தியிலும் அவள் தோற்றம் அவனை உறுத்தியது. விவசாயம் தொழில், மாமாக்கள் வெளிநாட்டில் இருப்பதால் வாழ்வாதாரத்துக்குப் பரவாயில்லை என்றுதான் அறிந்திருந்தான். பார்த்தால் அப்படித் தெரியவில்லை. இவள் தன் வீட்டுக்குப் பொருந்துவாளா என்கிற பெரும் கேள்வி எழுந்தது.
அவன் வீட்டினர் ஏழ்மையில் வாழ்கிறவர்கள் என்று சொல்வதற்கில்லை. ஓயாத உழைப்பு நல்ல நிலையைத் தந்திருந்தது. என்ன, அதையெல்லாம் நடை உடையில் காட்டுவதில்லை. எப்போதும் ஒரே மாதிரியாகவே இருந்துகொள்வார்கள். அவன் ஆசிரியன் என்பதும் ஒரு காரணமாயிற்று. கூடவே, கிடைக்கிற இலாபங்களை எல்லாம் தோட்டம், துரவு என்று அசையாத சொத்துகளாகத்தான் மாற்றி வைத்திருந்தார்கள். பகட்டில் பெரிய ஆர்வமில்லை.
வீடு வந்தவனின் முகத்தில் தெரிந்த சிந்தனை ரேகைகளைப் படித்துவிட்டு, “என்னப்பு, ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்று விசாரித்தார் புவனாம்பிகை.
“பெருசா ஒண்டும் இல்லை அம்மா.” அவர் தந்த தேநீரைப் பருகியபடி சொன்னான்.
“சின்னது எண்டாலும் என்ன எண்டு சொன்னாத்தானே தெரியும்.”
“கானவியையும் அவவின்ர தம்பியையும் டவுனில பாத்தனான். அவேன்ர வாழ்க்கை முறையே வேற மாதிரி இருக்கு. அதுதான் யோசிக்கிறன்.”
அப்படி என்ன வேறுமாதிரிக் கண்டானாம் என்று புருவம் சுருக்கினார் அவர்.
“எங்கட வீட்டுக்குப் பொருந்தி வருவாவா எண்டு பாத்தீங்களா? வேற ஒரு சம்மந்தமும் வரேல்லையோ?” என்றவனின் கேள்வியில் மெலிதாக அதிர்ந்தார் அவர்.
“என்னப்பு பிடிக்கேல்லையா?” வேகமாய் வினவினார்.
“பிடிச்சா மட்டும் போதுமா அம்மா?” என்றவனுக்கு அவளைத் தவற விடவும் மனதில்லை. அதற்கென்று மனத்தின் ஆசைக்கு மட்டுமே இணங்கி வாழ்க்கையை அமைக்கவும் முடியவில்லை. நெற்றியை அழுத்தித் தேய்த்துவிட்டான்.
“என்னப்பு இது? கடவுளே எண்டு எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி ஒரு பிள்ளை அமைஞ்சிருக்கிறா எண்டுற சந்தோசத்தில நான் இருந்தா…” என்றவருக்கு மேலே பேசக்கூட வரமாட்டேன் என்றது.
“நானும் இப்ப வேண்டவே வேண்டாம் எண்டு சொல்லேல்லையே அம்மா. இப்ப அவசரப்பட்டுட்டுப் பிறகு இருந்து கவலைப்பட வேண்டாம் எண்டுதான் சொல்லுறன்.” என்று சலித்தவன், “எங்கட வீட்டைப் பற்றி ஒண்டும் ஒளிச்சு மறைக்க இல்லதானே?” என்று தெளிவாய் வினவினான்.
“அப்பிடி ஒளிச்சு மறைக்க என்ன கிடக்கு? வெளிநாட்டில இருக்கிற மாமாக்கள் இவேல நல்ல பாசமாம். வெளிநாட்டுக் காசு வாறதால அப்பிடி உனக்குத் தெரியுது போல. மற்றும்படி நல்ல குடும்பம்தான்.” என்றாள் தமக்கை சிந்துஜா.
“எல்லாம் சரிதான் அக்கா. அதையே இங்க வந்தும் எதிர்பாப்பாவோ எண்டு இருக்கு.” அதுவே நாளாந்த வாழ்வில் சண்டை சச்சரவுகளைக் கொண்டுவந்து விடாதா என்கிற யோசனை அவனுக்கு.
“அதெல்லாம் குடும்பத்துக்கு ஏற்ற பிள்ளைதான். அயலட்டைச் சனம் முழுக்க அவாவில் அவ்வளவு அன்பு. ஆர் வீட்டில என்ன விசேசம் எண்டாலும் முன்னுக்கு நிண்டு செய்வாவாம். மேக்கப் எல்லாம் சும்மா போட்டு விடுவாவாம். என்ர குஞ்சியப்பரின்ர மகன் டொக்டரா இருக்கிறான் எண்டு சொன்னன். அவன் அங்கதானே கட்டி இருக்கிறான். அவனை வச்சு வடிவா விசாரிச்சிட்டன். யோசிக்கிறதுக்கு ஒண்டும் இல்ல.” அடித்துச் சொன்னான் சிந்துஜாவின் கணவன் மனோகரன்.
சிந்துஜாவும் மனோகரனும் சிந்துஜாவுக்குச் சீதனமாகக் கொடுத்த பக்கத்துக் காணியில்தான் வசித்து வந்தார்கள். திருமணமாகி ஆறு வருடங்களாகியும் குழந்தை இல்லை. இருவருமே தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள். குழந்தைக்காக இந்தியாவுக்கு ஒருமுறை சென்று வரலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நண்பனின் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்யும் சிவரூபனும் வேலை முடிந்து வந்து சேர்ந்தான். அவனும் அங்கே நடந்த பேச்சுகளைக் கவனித்துவிட்டு, “எனக்கும் அண்ணா சொல்லுறது சரி மாதிரித்தான் இருக்கு அம்மா. கொஞ்சம் பகட்டுக்குணம் அவாக்கு இருக்கிற மாதிரி இருக்கு.” என்று சொன்னான்.
செந்தாளனின் முகம் இலேசாய் மாறிற்று. அதற்குமேல் அவன் அவளைப் பற்றிக் கதைக்கவில்லை. அவன் மறையும் வரையில் விழியகற்றாமல் பார்த்தவள் கதைக்க விடவுமில்லை. எழுந்து தன் அறைக்குப் போனான்.
புவனாம்பிகையின் யோசனை மிகுந்த விழிகள் மகனையே தொடர்ந்தன. மகளும் மருமகனும் இரவுணவை முடித்துக்கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் அவனிடம் வந்தார்.
“என்னப்பு, ஏன் இவ்வளவு யோசின? அவவப் பிடிக்கேல்லையா? எங்களுக்காக ஓம் எண்டு சொன்னீங்களோ?” குரலில் மெல்லிய கவலை தொனிக்க வினவினார்.

