அதுவே அழைப்பிதழுக்காகவன்றி அவனுக்காகத்தான் வந்திருக்கிறாள் என்று சொல்லிவிட, அவனால் நம்பவே முடியவில்லை. இவளுக்கு எவ்வளவு தைரியம் என்று பார்த்தான்.
அன்றைக்கு ஜீன்ஸ் அணிந்து நவநாகரிக மங்கையாக நின்றவள் இன்றைக்கு ஒரு சல்வாரில் வந்திருந்தாள். உயர்த்திப் போட்டிருந்த போனிடெயில், நெற்றிப் பொட்டு, கண்ணுக்கு மை என்று நெஞ்சை அள்ளினாள்.
இதற்குள் வீட்டு வாசலுக்கு வந்திருந்தார்கள். அவன் வழிவிட்டு விலகி நின்றான். அவனையே பார்வையால் தொட்டபடி வலக்காலை வைத்து வீட்டிற்குள் வந்தவள் சோபாவில் சென்று அமர்ந்துகொண்டாள். அவளை ஆழ்ந்த பார்வையால் உள்வாங்கிவிட்டு கடம்பனிடம் பொதுவாகப் பேச்சுக் கொடுத்தான் செந்தாளன்.
“தம்பியோட கதைச்சுக்கொண்டு இருங்கோம்மா. நான் குடிக்க ஏதாவது கொண்டு ஓடி வாறன்.” என்று உள்ளே ஓடினார் புவனாம்பிகை.
அவள் எதற்கு வந்திருந்தாலும் அவளாகவே வந்ததில் அவருக்கு அத்தனை பூரிப்பு. மகனைப் பிடிக்காமல் இது நடக்காதே!
அக்காவுக்கும் தம்பிக்கும் அவனிடம் என்ன கதைப்பது என்கிற தயக்கம். செந்தாளன் அவளிடம் ஒற்றைப் புருவத்தைக் கேள்வியாக உயர்த்தினான்.
“அது… கார்ட்…”
அம்மாவிடம் சொன்ன அதே கதையைச் சொல்லப் போகிறாள் என்று தெரிந்து, ஒன்றும் பேசாமல் கையை கார்ட்டுகளுக்காக நீட்டினான்.
எழுந்து வந்து தந்தாள். அவள் நெருங்கியபோது வீசிய நறுமணத்தில் அவன் மனம் மயங்கிற்று. எதையும் காட்டிக்கொள்ளாமல் வாங்கினான்.
“உனக்கு எது பிடிச்சிருக்கு?” ஒவ்வொரு அழைப்பிதழ்களாக எடுத்தெடுத்துப் பார்த்தபடி வினவினான்.
“இந்தப் பிள்ளையார் கார்ட். உள்ளுக்கும் நல்லாருக்கு. திறந்து பாருங்கோ.” ஒற்றை விரலால் அவன் கையில் இருந்த அழைப்பிதழ்களில் ஒன்றைத் தொட்டுக் காட்டிச் சொன்னாள்.
பிறை நிலவின் வடிவில் வெட்டப்பட்டு, அணிந்திருந்த பிங்க் வர்ண உடையின் நிறத்திற்கு ஏற்ப சாயம் பூசப்பட்டிருந்த நகமும், நீண்ட மெல்லிய ஆட்காட்டி விரலும், அதில் அணிந்திருந்த மெல்லிய வளைய மோதிரமும் அவன் கவனத்தில் பதிந்தன.
அவள் காட்டியதை எடுத்துப் பார்த்தான். நன்றாகத்தான் தெரிவு செய்திருந்தாள்.
“அதையே குடுப்பமா? என்ர சாறியும் மரூன் ரெட்டுக்கு கோல்ட் சேர்ந்ததுதான். மண்டப டெக்கரேஷனும் இந்தக் கலர் மிக்ஸ்லதான் செய்யச் சொன்னனான்.” அவன் மறுத்துவிட முடியாதபடிக்கு வினவினாள்.
அவளே முடிவு செய்துவிட்டாள் என்றால் எதற்கு இங்கே கொண்டு வந்தாளாம்? விடை தெரிந்த கேள்விதான். என்றாலும் அழைப்பிதழ்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு விழிகளை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தான்.
அவள் கண்களும் உதடுகளும் அவனிடம் பிரத்தியேகமாகச் சிரித்தன. அவனுக்குள் என்னவோ தடம் புரண்டது. அதுவும், மை தீட்டியிருந்த அந்த விழிகளைக் கொண்டு அவனை வசியம் செய்ய முயல்கிறாளா என்ன?
‘சேட்டைக்காரி! என்ர வீட்டுக்கே வந்து, என்னைப் பாத்தே கண்ணால சிரிக்கிறாள். இவளுக்குப் பாடம் படிப்பிக்காட்டி நான் என்ன வாத்தி?’ வேகமாக முடிவு செய்து, “இந்தக் கார்ட் நல்லாருக்கு. இதையே குடு!” என்று அதிலிருந்த இன்னொரு கார்ட்டை எடுத்து நீட்டினான்.
“இதா? அதுதானே இதைவிட நல்லாருக்கு.” முகத்தைச் சுருக்கி அவள் கேட்ட விதம் அவனுக்குள் சிரிப்பை உண்டாக்கினாலும் அசையவில்லை. “இதுதான் பைனல்.” என்றான்.
“உண்மையா இதுதானா?” முகம் சுருங்க வினவினாள்.
பதில் சொல்லாமல் அவளை ஒரு பார்வை பார்த்தான் செந்தாளன்.
“ஓகே! அப்ப இதையே குடுக்கிறன்.” வேறு வழியற்று அவள்தான் இறங்கி வந்தாள்.
இதற்குள் அவள் வந்தது அறிந்து சிந்துஜா மனோகரன் இருவரும் வந்தனர். சிவரூபனும் அப்போதுதான் குளித்துவிட்டு வந்தான். “ஹாய் அண்ணி!” என்றான் இவளிடம்.
அவன் சொன்ன அந்த அண்ணியில் செந்தாளன், கானவி இருவர் பார்வையும் சந்தித்துக்கொண்டன. இருவருக்குள்ளும் மிக நெருக்கமான ஒரு உணர்வு உண்டாயிற்று. அவன் பார்வை என்ன சொன்னதோ, மனம் தடுமாற விழிகளை வேகமாக அகற்றிக்கொண்டாள் கானவி.
அதன் பிறகு இருவரும் தனியாகப் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனாலும் செந்தாளன் அங்கேயேதான் அமர்ந்திருந்தான். யாரிடம் என்ன கதைத்துக்கொண்டிருந்தாலும் கானவியின் பார்வையும் அடிக்கடி அவனைத் தொட்டுக்கொண்டே இருந்தது.
தேநீர், பலகாரத்தோடு பெண்கள் ஒரு பக்கமாகத் திருமணம் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தனர். மனோகரன் எதிரில் அமர்ந்திருப்பது தெரிந்தும் சோபாவில் நன்றாகச் சாய்ந்து, கால்களை முன்னால் நீட்டியிருந்த கடம்பனை சிவரூபனுக்கு முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போயிற்று.
‘பெரிய இவன்! அத்தான் இருக்கிறார் எண்டும் இல்லாம!’
“நீங்க என்ன செய்றீங்க?” என்று பேச்சுக் கொடுத்தான்.
“எஞ்சினியரிங் முடிச்சிட்டு பிரைவேட் கோடிங் கோஸ் ஒண்டுக்குப் போய்க்கொண்டு இருக்கிறன்.” கையில் இருந்த ஆப்பிள் போனைச் சுழற்றியபடி சொன்னான் கடம்பன்.
அதுவே, வேலை இல்லாதற்கு ஒரு வேலையாக அந்த கோர்ஸுக்கு போகிறான் என்று சொல்ல, “அது முழு நாளும் இருக்காதே.” என்றான் சிவரூபன்.
கடம்பன் பதில் சொல்வதற்குள், “அவன மாமா ஜேர்மனுக்குக் கூப்பிடப்போறார் மச்சான். விசாவுக்காகத்தான் பாத்துக்கொண்டு இருக்கிறம். கிடைச்சதும் அங்க போயிடுவான்.” என்றாள் கானவி.
கடம்பனின் முகத்தில் மெல்லிய பெருமிதம். “அதுவரைக்கும் லைஃபை என்ஜோய் பண்ணிக்கொண்டு இருக்கிறன்.” என்றான் அலட்டலாக.
‘திண்ணுறது ஓசிச் சோறு. இதுல பெருமை வேற!’ மனம் எள்ளி நகையாடினாலும் அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை சிவரூபன்.
அவ்வளவு நேரமாக கார்ட்டுகளை திருப்பி திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்த சிந்துஜா, “எதை செலக்ட் பண்ணி இருக்கிறீர்?” என்று கானவியை விசாரித்தாள்.
செந்தாளனிடம் பார்வை ஒரு நொடி சென்று வர, “இந்தக் கார்ட்.” என்று, அவன் தெரிவு செய்து தந்ததையே காட்டினாள் கானவி.
‘அந்தளவுக்கு நல்ல பிள்ளையாடி நீ?’ உதட்டுக்குள் ஒளித்த சிரிப்புடன் அவளைப் பார்த்தான் செந்தாளன். அவளின் விருப்பம் வேறாக இருந்தும் அவன் தெரிவை அவளும் ஏற்றுக்கொண்டது அவனை மகிழ்வித்தது.
“அதவிட இந்தப் பிள்ளையார் கார்ட் நல்லாருக்கிற மாதிரி இருக்கே…” அந்த இரண்டு கார்ட்டுகளை மட்டும் மாறி மாறிப் பார்த்தபடி சொன்னாள் சிந்துஜா.
“ஓம், எனக்கும் அது பிடிச்சிருந்தது. ஆனா இதுவும் நல்லாருக்குத்தானே?”
“நல்லாருக்குத்தான்…” என்று சிந்துஜா இழுக்க, “உங்கள் எல்லாருக்கும் அந்த கார்ட் பிடிச்சிருக்கு எண்டா அதையே ஃபைனல் பண்ணுறதுதானே. இதில இவ்வளவு யோசிக்க என்ன கிடக்கு?” என்று, என்னவோ அவர்களுக்காகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு எழுந்து அறைக்கு நடந்தான் செந்தாளன்.
வியப்புடன் விரிந்த கானவியின் விழிகள், அவனையே தொடர்வதை அறிந்தாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ‘இவள் ஒருத்தி. சுத்தி ஆக்கள் இருக்கிறதை யோசிக்காமக் கண்ணாலயே திண்ணுறாள்!’ அவன் மனம் துள்ளிற்று. இன்னும் அவளோடு இருக்கவே ஆசையாய் இருந்தாலும் அதன்பிறகு அவன் வெளியே வரவில்லை.
உண்டுவிட்டுத்தான் வந்தோம் என்று அவர்கள் இருவரும் எவ்வளவோ சொல்லியும் காலை உணவைப் பரிமாறினார் புவனாம்பிகை.
புறப்படுவதற்கு முதல், “அத்தான், நாங்க வெளிக்கிடப்போறம்.” என்றபடி செந்தாளனின் அறைக்கு வந்தான் கடம்பன்.
“என்ன அவசரம், இருந்து மத்தியானம் சாப்பிட்டுப் போகலாமே.” ஏற்கனவே எழுதி வைத்திருந்த பொன்னுருக்கலுக்குத் தேவையான பட்டியலைச் சரி பார்த்துக்கொண்டிருந்தவன் வினவினான்.
“அச்சோ அத்தான். அக்கா வந்ததே உங்கட நம்பரை வாங்கத்தான். புரோக்கரிட்ட இல்லை எண்டதும் நேரா என்னை இங்க இழுத்துக்கொண்டு வந்திட்டாள். கார்ட் காட்டுறது எல்லாம் சும்மா ஒரு சாட்டு.” வெளியே கேட்டுவிடாமல் இருக்க அவனை நெருங்கி இரகசியக் குரலில் சொன்னான் கடம்பன்.
இதுதானா வீடு வரைக்கும் வந்த காரணம்? வகுப்புகளில் இருக்கையில் தொந்தரவு செய்வார்கள் என்றெண்ணி அவன் நம்பரை கொடுக்கவில்லைதான். அதைவிட, மனோகரன்தான் இந்தப் பேச்சை முன்னெடுத்தவன். அவன்தான் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். இதுவரையில் இவன் அவர்களோடு நேரடியாகத்தான் பேசியிருக்கிறான். அதன்பிறகு அவள் ஆர்வம் காட்டுகிறாள் என்று தெரிந்து அவன் கொடுக்க விடவில்லை. என்றாலும் எவ்வளவு தைரியம்?
‘இவளின்ர சேட்டைக்கு நானும் இடம் குடுக்கக் கூடாது.’ மனம் முடிவு கட்ட, “அது கிடைக்கிற நேரம் கிடைக்குமாம் எண்டு சொல்லிவிடும்.” என்றான் கடம்பனிடம்.
தமக்கையோடு இப்படி விளையாடும் அந்த அத்தானை கடம்பனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. “இதைத்தான் இந்த ஃபைட்டத்தான் நானும் எதிர்பாத்தனான் அத்தான்!” என்றான் பெரும் சிரிப்புடன்.
அவன் சொன்னதைக் கடம்பன் அவளிடம் சொல்லியிருக்க வேண்டும். புறப்படுகையில் அவனை முறைத்துவிட்டுப் போனாள் கானவி. கோபம் கொப்பளித்த அந்த விழிகளுக்குள் இதயம் நழுவுவதை உணர்ந்தான் செந்தாளன்.

