இடைவெளி வலிக்குதே 21 – 2

தவறு மகள் பக்கமே என்றாலும் இப்படியா தன் பிடியில் பிடிவாதமாக நிற்பது என்று அருந்தவராஜாவுக்கு மிகுந்த கவலையாயிற்று. நடந்தவை அறிந்து அவனுக்கு அழைத்துப் பேசிய கணேசனிடமும், “நீங்க என்ன கதைக்கிறதா இருந்தாலும் உங்கட மருமகளோடதான் கதைக்கோணும்.” என்று சொல்லியிருந்தான் அவன்.

கடம்பன் அழைத்துப் பேசியபோதும் அதேதான்.

கணேசனுக்கு மிகுந்த கோபம். “அவரிட்ட ஒரு அளவுக்கு மேல தழைஞ்சு போறதுக்கு நாங்க ஒண்டும் சும்மா எங்கட வீட்டுப் பிள்ளையைக் குடுக்கேல்ல அத்தான். பொம்பிளைப் பிள்ளையின்ர வாழ்க்கை எண்டு பாத்தா ஆகத்தான் சேட்டை விடுறார். என்ன எண்டாலும் நடந்திருக்கட்டும். இவ்வளவு அலட்சியம் காட்டுவாரா? அவேயா வந்து கூப்பிடுற வரைக்கும் கானவிய அனுப்பாதீங்கோ சொல்லிட்டன்.” என்றதும் அவருக்குப் பயம் பிடித்துக்கொண்டது. பிரச்சனை பெரிதாகிவிடுமோ என்று யோசித்தார்.

எல்லோரும் வீரமும் வீராப்பும் பேசலாம். நடுவில் சிக்குண்டு நிற்பது அவர் மகள் வாழ்க்கை! அதில், கணவன் வீட்டுக்குப் போகிறாயா என்று மகளிடம் மெதுவாகக் கேட்டுப் பார்த்தார்.

“இல்லை அப்பா. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.” அவரைப் பாராமல் சொன்னாலும் அவள் குரலில் ஒரு திடம் இருந்தது.

என்னதான் அவர்கள் இருவருக்கிடையில் கோபதாபங்கள் இருந்தாலும் கூட, ஆழ் மனத்தில் கணவனுக்கான தேடல் அவளிடம் அதிகமாகவே இருந்திருக்கிறது. ஆனால், வைத்தியசாலையில் வைத்து அவன் காட்டிய புறக்கணிப்பில் தனக்குள் இறுகிப் போயிருந்தாள். அந்தளவில் நான் என்ன செய்தேன் என்கிற கேள்வி வீம்பாக அவளுக்குள் வந்து நின்றிருந்தது.

“இது இன்னும் தம்பின்ர கோபத்தைக் கூட்டுற வேலை எல்லாம்மா?”

“அதுக்காக என்னால இறங்கிப் போகேலாப்பா.”

“அப்பிடி என்னதானம்மா நடந்தது?”

அவளிடம் மிகப்பெரிய மௌனம்.

இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லமாட்டாள். இதுதான் இந்த மூன்று மாதங்களும் நடக்கிறது. கடம்பன் கோபத்தில் அவளுடன் கதைப்பதைக் கூட நிறுத்திப் பார்த்தான். அவள் அசையவே இல்லை. கணவன் மீது கழுத்து முட்டக் குறைகளும் மனத்தாங்கலும் இருந்தபோதிலும் அவனைப் பற்றி ஒரு வார்த்தை குறையாக வீட்டில் சொல்ல அவளால் முடியவில்லை.

“இந்தப் பிரச்சினைக்கு என்ன தானம்மா முடிவு? அதையாவது சொல்லுங்க!” என்று கேட்டுப் பார்த்தார் அருந்தவராஜா.

“நான் இங்க இருக்கிறது உங்களுக்குத் சுமையா இருக்காப்பா?” என்றாள் அவர் முகம் பார்த்து.

“பிள்ளை, என்னம்மா இது? நீங்க மனுசன், குழந்தை எண்டு குடும்பமா வாழ்ந்தாத்தானே அப்பாக்குச் சந்தோசமா இருக்கும். அதுக்காகக் கேட்டா என்னம்மா கதைக்கிறீங்க?” என்றார் அவர் இயலாமையும் வருத்தமுமாக.

கலங்கி நிற்கும் தந்தையின் கலக்கத்தைப் போக்க முடியாதவளும் தன் கண்ணீரைக் காட்டாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

பிள்ளைகளின் விருப்பத்துக்கேற்ப மட்டுமே வளர்த்துப் பழகியவர் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாது தவித்து நின்றனர்.

என்னவோ அவருக்குத் தான் செயல் இழந்த தகப்பனாகிப்போன உணர்வு. பிள்ளைகளுக்குக் கஷ்டம் தெரியாமல் வளர்க்கிறோம், பாசமாக வளர்க்கிறோம், அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்து வளர்க்கிறோம் என்று அவர்களை அவர்கள் பாட்டில் விட்டு விட்டு, ஒரு கட்டத்தில் இறுக்கிப் பிடிக்க வேண்டிய நேரத்தில் கூட இறுக்கிப் பிடிக்க முடியாமல், உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் கூட முடிவெடுக்க முடியாமல் நிற்கும் நிலை அறுத்தது.

புவனாம்பிகையும் சிந்துஜாவும் கூட இந்த முறை இது சம்மந்தமாக வாயைத் திறப்பதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருந்தனர். நான் பேசிப் பார்க்கட்டுமா என்று கேட்ட மனோகரனையும் விடவில்லை. அந்தளவில் அவர்களுக்கும் மனம் விட்டுவிட்ட நிலை.

குழந்தை பிறக்கும்வரை அங்கே இருக்க அவள் பிரியப்பட்டதில் கூட ஏதோ ஒரு நியாயத்தைக் காண முடிந்தவர்களால் பிள்ளை பிறந்த பிறகும் அங்கேயே தங்கி விட்டதை ஏற்க முடியவில்லை. இங்கே வருவாள், ஆறுதலாகப் பேசி, என்ன பிரச்சனை என்று அறிந்து, அவர்களைச் சமாதானமாக்கிவிட வேண்டும் என்று புவனாம்பிகை எண்ணிக்கொண்டிருக்க, அத்தனையும் தலைகீழாக நடந்து முடிந்திருந்தது.

சரி போனவள் கொஞ்ச நாள்கள் இருந்து, உடம்பைத் தேற்றிக்கொண்டு வந்திருக்கலாம். அதுவும் இல்லை. அவள்தான் வரவில்லை என்றால் அவள் வீட்டினர் கூட அதைப் பற்றி ஒன்றும் கதைப்பதாக இல்லை. அன்றைக்கு மருமகன் வந்து மகளைப் பார்க்கவில்லை என்று குறை சொன்னவர்களுக்குத் தற்போது அவர்கள் நடக்கும் முறை மட்டும் சரியா என்று மனம் பொறுமிற்று.

எதையும் வாய் விட்டுக் கதைத்துப் பிள்ளைகளின் வாழ்வில் பெரும் பிளவுகளை உருவாக்கி விட விரும்பாமல் கணவரிடம் மட்டுமே புலம்பித் தீர்த்தார்.

நான் போய் என்ன என்று கேட்டுக்கொண்டு வரட்டுமா என்று கேட்ட சற்குணத்தாரை அசையக் கூடாது என்று சொல்லியிருந்தான் செந்தாளன்.

*****

அன்று டவுனுக்கு வந்திருந்தான் செந்தாளன். இப்படி ஒருமுறை வந்தபோதுதான் கானவியை முதன் முறையாகப் பார்த்தான். அன்று கவனிக்காமல் அவனைக் கடந்துபோனவள் இன்று தெரிந்தே அவனை விட்டுத் தள்ளி நிற்கிறாள். தனக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு வெளியே வந்தவன் அன்று போலவே இன்றும் கானவியைக் கண்டான்.

கண்டவனுக்குத் திகைப்பு. எதிரில் இருந்த பான்சி கடையில் ஏதோ வாங்கிக்கொண்டு வந்தவள், அருந்தவராஜாவின் பைக்கில் ஏறிப் போனாள். அன்று போலவே இன்றும் அவனைக் கவனியாது!

அதைப் பற்றி இன்று அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், மகனை விட்டுவிட்டு ஏன் வந்தாள்? அப்படி என்ன தேவை அவளே வந்தும் வாங்கும் அளவில். இந்தளவில் உடல் தேறிய பிறகும் வீட்டுக்கு வரும் எண்ணம் அவளுக்கு இல்லையென்றால் அதன் பொருள்?

ஒரு கோபம் அவனுக்குள் பெரிதாக முளைக்க, வீட்டுக்கு வந்தவனை வீட்டினரும் சரியில்லாத முகத்துடனேயே வரவேற்றனர்.

அதுவும் மனோகரனின் முகத்தில் ஒருவித இறுக்கம் மட்டுமல்லாது அடக்கப்பட்ட கோபமும் தெரிந்தது.
இவன் பார்வையை வேறு சந்திப்பதைத் தவிர்த்தான். அதுவே அவனுக்குத் தன்னோடுதான் ஏதோ பிணக்கு என்று விளங்க, “என்னம்மா?” என்றான் புருவம் சுருக்கி.

புவனாம்பிகைக்கு அழுகை வந்துவிடுமோ எனும் நிலை. மனத்தை அழுத்துவதை அப்படியே மகனிடம் கொட்டிக் கவிழ்க்க வேண்டும் போலிருந்தாலும் கவனமாகச் சொல்ல வேண்டும் என்றும் நினைத்தார்.

இதற்குள் அவன் பொறுமை போயிருந்தது. “என்ன எண்டு சொல்லுங்கோவன் அம்மா. இப்பிடிப் பேசாம இருந்தா என்னத்தை எண்டு நான் நினைக்க? என்னக்கா? என்ன பிரச்சினை?” என்றான் மூவரையும் மாறிமாறிப் பார்த்தபடி.

“அது இவரின்ர குஞ்சியப்பரின்ர மகன் இவரோட எடுத்துக் கதைச்சவராம்…” என்று சிந்துஜா ஆரம்பிக்கையிலேயே அவர் மூலம்தான் கானவி வீட்டினரின் சம்மந்தம் வந்தது என்று மின்னலாய் ஓட, “என்னவாம்?” என்றான் எதையும் காட்டிக்கொள்ளாது.

அப்போதும் சிந்துஜா கணவனைத் திரும்பிப் பார்க்க, “நீ கதைச்சுப்போட்டு வா.” என்றுவிட்டு எழுந்து வீட்டுக்கு நடந்தான் மனோகரன்.

“அது கானவின்ர மாமா வெளிநாட்டில இருந்து எடுத்து அவேயோட கதைச்சவராம். நல்ல சம்மந்தம் பாத்துத் தாங்கோ எண்டு கேட்டா இப்பிடியா பக்கிறது எண்டு நிறையக் கதைச்சிருக்கிறார் போல. இனிக் கானவிய நாங்களா அனுப்ப மாட்டம் எண்டு சொன்னவராம். அவாவை என்னவோ மேக்கப் கோர்ஸ் எல்லாம் பழகச் சொல்லிட்டாராம், கடை போட்டுக் குடுக்கப்போறாராம். அவர் அப்பிடி எல்லாம் கதைச்சது அந்த அண்ணாக்குக் கோவம் போல. ‘உங்கட மச்சான் நல்ல பெடியன் எண்டு நீங்க சொன்னதை நம்பித்தான் உங்களைப் பற்றி அவேற்ற சொன்னனான். பிறகும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள், என்ன எண்டு பாருங்க. இது எனக்குத் தேவை இல்லாத தலைவலி.’ எண்டு இவருக்கு எடுத்துக் கோவப்பட்டிருக்கிறார்.” என்றதும் கண்மண் தெரியாத கோபத்தில் அவன் விழிகள் சிவந்து போயின.

எவ்வளவு பெரிய அவமானம்! அதைவிட, அவள் இன்று டவுனுக்கு வந்து போனதன் காரணமும் புரிந்துவிட உள்ளே கொதித்தது. என்ன நினைப்பில் இதையெல்லாம் செய்கிறாள்? என்ன முடிவு எடுத்திருக்கிறாள்? இப்படி எல்லாவற்றையும் அவளே முடிவு செய்வாளானால் அவன் யார் அவளுக்கும் பிள்ளைக்கும்?

“இவருக்குத் தலையிறக்கமாப் போயிற்று போலயடா. என்னட்ட கோபப்பட இல்லையே தவிர ஆள் சரியான கோவத்துல இருக்கிறார். எனக்கும் என்னவோ இதுக்கு ஒரு முடிவைக் கட்டினா நல்லம் எண்டு இருக்குத் தம்பி. ஆத்திரப்படாம நிதானமா யோசி.” என்றுவிட்டுக் கணவனைத் தேடிப்போனாள் சிந்துஜா.

இறுகிப்போய் அப்படியே அமர்ந்திருந்தான் செந்தாளன். புவனாம்பிகையால் பேச்சுக்குக் கூட ஆறுதல் வார்த்தைகளை இந்த முறை சொல்ல முடியவில்லை. ஒற்றைக் கையில் நெற்றியைத் தாங்கி, விழி மூடியபடி அமர்ந்திருந்த மகனையே கவலையோடு பார்த்திருந்தார்.

ஒரு முடிவுடன் நிமிர்ந்தவன், “நாளைக்குப் பள்ளிக்கூடம் முடிஞ்சு வாறன் அம்மா. அங்க ஒருக்கா போயிற்று வருவம். நீங்களும் அத்தானும் மட்டும் வாங்க என்னோட.” என்றுவிட்டு எழுந்து போனான்.

error: Alert: Content selection is disabled!!