இடைவெளி வலிக்குதே 22 – 1

அத்தியாயம் 22

அன்று காலையில் அருந்தவராஜாவுக்கு அழைத்த செந்தாளன், அன்று மாலை அங்கு வருவதாகச் சொல்லியிருந்தான்.

ஏன், எதற்கு என்று விளங்காதபோதும், அவன் குரலில் தெரிந்த இறுக்கம் மெல்லிய கலக்கத்தை விதைத்தாலும், “சந்தோசம் தம்பி. தாராளமா வாங்கோ.” என்று பரபரத்திருந்தார்.

என்னதான் மனம் அவன் மீது குறைகளையும் அதிருப்தியையும் சுமந்திருந்தாலும் வருகிறவனோடு இதமாய்ப் பதமாய்ப் பேசி, அனைத்தையும் சமூகமாகவே முடிக்க விரும்பினார்.

விசாலாட்சியும் தன்னாலானதாகப் பலகாரம் செய்தார். கூடவே, “அம்மாச்சி, என்ன இது? தம்பி வாறன் எண்டு அவராச் சொல்லியிருக்கிறார். இப்பிடி அசையாம இருந்தா என்ன அர்த்தம்? இதுக்கு முதல் என்ன நடந்திருந்தாலும் அதெல்லாம் நடந்து முடிஞ்சதுகள். அதால சும்மா கோவம், குறைகளைப் பிடிச்சுக்கொண்டு நிக்கிறேல்ல. வாறவையோட நல்லமாதிரிக் கதைக்கோணும். சரியா?” என்று மகளுக்கும் அறிவுறுத்தினார்.

ஏனோ அவர்களுக்குப் போன்று கானவிக்குப் பரபரப்புத் தொற்றிக்கொள்ளவில்லை. ஒரு கலக்கம் மனத்தைச் சூழ்ந்தது. ஏதோ ஒரு முடிவோடுதான் வருகிறான் என்று விளங்கிற்று.

தனக்குள் ஓடும் சிந்தனைகளை வெளியே காட்டிக்கொள்ளாமல் மகனுக்கு எண்ணெய் வைத்து, தலைக்குக் குளிக்க வார்த்து, பசியாற்றி, உறங்க வைத்து எழுந்ததும் முகம் துடைத்து நல்ல உடையாக மாற்றிவிட்டாள்.

தன்னைக் குறித்து அவள் எந்தக் கவனமும் எடுக்காமல் இருப்பதைப் பார்த்த விசாலாட்சி, அவளை விடவில்லை. வலுக்கட்டாயமாக அவளுக்கும் எண்ணெய் தேய்த்து, குளிக்க வைத்துத் தயாராக வைத்தார். பளிச்சென்றும் இல்லாமல் பழையது என்றும் இல்லாமல் ஒரு பாவாடை சட்டை அணிந்துகொண்டாள்.

இத்தனை நாள்களும் இங்கிருக்கையில் தெரியவில்லை. அவர்கள் வரப்போகிறார்கள் என்றதும் அவர்களை எப்படி முகத்துக்கு நேரே எதிர்கொள்ளப் போகிறோம் என்றெண்ணித் தவித்தாள். அவளின் முறுகல் அத்தனையும் கணவனோடு மட்டுமே. ஆனால், அவனோடு சேர்த்து அவன் வீட்டினரிடமிருந்தும் ஒதுங்கி இருந்திருக்கிறாள். மனோகரன் உட்பட எல்லோருமே அவளோடு கனிவோடும் பாசத்தோடும் பழகியவர்கள். அப்படியானவர்களுக்கு அவள் செய்தவை?

மாலையானது. மனோகரன், புவனாம்பிகை, செந்தாளன் மூவரும் வந்து சேர்ந்தார்கள்.

அருந்தவராஜா விசாலாட்சிக்கும் ஏதோ ஒரு வகையில் பதற்றம்தான். காட்டிக் கொள்ளாமல் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்கள்.

கானவியால் யார் முகத்தையும் நேர் கொண்டு பார்க்க முடியவில்லை. அதுவும் கணவனின் புறம் திரும்பவே பயந்தாள். அந்தளவில் இறுக்கமாக இருந்தான் அவன்.

எப்போதும் போன்ற கனிந்த குரலில், “எப்பிடி இருக்கிறீங்கம்மா?” என்று நலன் விசாரித்த மனோகரனைக் கண்டு, விழிகள் கலங்கிவிடும் போலாயிற்று. அவர்களோடாவது நல்லமாதிரிப் பேசியிருக்க வேண்டுமோ என்று இப்போது நினைத்தாள். அப்படிப் பேசினால் வா என்றால் மறுக்க முடியாது, காரணத்தைக் கேட்டால் சொல்ல முடியாது என்று தவிர்த்திருந்தாள். ஆனால் இப்போது…

“மச்சாள் எப்பிடி இருக்கிறா அண்ணா?” என்று தானும் பதிலுக்குக் கேட்டுக்கொண்டாள். ஆனால், அதைக் கேட்டு மனோகரனின் பக்கத்தில் அமர்ந்திருந்த கணவனின் தாடை இறுகியதைக் கண்டதும் கைகால்கள் எல்லாம் உதறின. அதன் பிறகு வாயைத் திறக்கவே இல்லை.

அருந்தவராஜாவுக்கும் அடிவயிறு கலக்காமல் இல்லை. அவனிடம் அப்படி ஒரு இறுக்கம். நலன் விசாரித்ததற்குக் கூட ஒற்றைத் தலையசைப்பில் மட்டுமே பதில் சொன்னான்.

அங்கே நிலவிய இறுக்கமான அந்தச் சூழ்நிலையை இலகுவாக்க எண்ணி, “எங்கையம்மா தம்பி? நித்திரையோ?” என்று விசாரித்தார் புவனாம்பிகை.

மகனை அறையில் கிடத்தியிருந்ததில் அவனில் ஒரு கண்ணும் இவர்களில் ஒரு பார்வையுமாக அறை வாசலிலேயே நின்றிருந்த கானவி, “ஓம் மாமி. இப்ப எழும்பிற நேரம்தான்.” என்று சொன்னாள்.

அவள் சொல்வதற்காகவே காத்திருந்தவன் போன்று சிணுங்கினான் நிலவன்.

அவள் அறைக்குள் செல்ல, “எங்கட செல்லக் குஞ்சன் எழும்பிட்டாரோ? அப்பம்மா வந்திருக்கிறா எண்டு கண்டு பிடிச்சிட்டாரோ?” என்று கேட்டபடி புவனாம்பிகையும் எழுந்து அறைக்குள் வந்தார்.

தன்னோடு ஏதும் தனியாகப் பேசுவாரோ, இவ்வளவு நாள்களும் இங்கே இருந்ததற்கு ஏதும் சொல்வாரோ, நீ செய்தது சரியில்லை என்று குறைபட்டுக்கொள்வாரோ என்று கொஞ்சம் பயத்துடன் அவள் பார்க்க, அப்படி எதுவும் அவர் அவளோடு கதைக்கவில்லை. பேரனை அள்ளி அணைத்துத் தூக்கி, உச்சி முகந்தார். உள்ளமெல்லாம் என்னவோ செய்தது அவருக்கு. கண் நிறையப் பார்த்துக்கொண்டார். “கொஞ்சம் வளந்திட்டார் என்னம்மா?” என்றபடி அவனோடு வெளியே வந்தார்.

சற்றே ஆசுவாசமாகி அவரைப் பின்தொடர்ந்தாள் கானவி.

மகனின் சிணுங்கல் சத்தத்திலேயே செந்தாளனுக்குள் என்னென்னவோ உணர்வுகள் பொங்கின. எல்லோரையும் முந்திக்கொண்டு சென்று அவனைத் தூக்கிக்கொள்ளும் ஆவல் எழுந்தாலும் ஒரு பிடிவாதத்துடன் அமர்ந்திருந்தான்.

அன்னை மகனுடன் வர அவன் பார்வை அவனிடம் தாவிற்று. கைகள் தானாக அவரிடம் நீண்டன. அவரும் அவன் மனத்தை உணர்ந்தவராகப் பேரனைக் கொடுத்தார்.

மகனின் முகம் மாறி இருந்தது. கொஞ்சம் வளர்ந்திருந்தான். குண்டுமணி விழிகளை நன்றாகத் திறந்து எல்லோரையும் பார்த்தான். பிறந்தபோது யாரின் சாயல் என்று கண்டுபிடிக்க முடியாதபோதும் இப்போது பார்க்கையில் தன்னைப் போலவோ என்று தோன்றிற்று.

“அப்பிடியே உங்களை மாதிரி இருக்கிறார் தம்பி.” என்று புவனாம்பிகையும் சொல்ல, மகன் மீதே பார்வை பதித்திருந்தவனின் விழிகள் பனித்துப் போயின.

இதற்குள் தன்னைத் தூக்கி வைத்திருப்பது புதுமுகம் என்றுணர்ந்த நிலவன் சினுங்க ஆரம்பித்தான். அந்தச் சிணுங்கல் மெல்ல மெல்ல அழுகையாக மாறிற்று. செந்தாளன் கையில் வைத்து ஆட்டிப் பார்த்தான்; எழுந்து நடந்து பார்த்தான். புவனாம்பிகையும் மகன் கையில் இருந்த பேரனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அவன் கேட்கவில்லை. தகப்பனை யார் என்று தெரியாமல் வீறிட்டான்.

யாருக்கு என்ன செய்வது என்று தெரியா நிலை. செய்வதறியாது தவித்து நின்றனர்.

தன்னை அறியாது, “என்னட்டத் தாங்க” என்று அவனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்த கானவி, சரக்கென்று திரும்பிப் பார்த்தவனின் பார்வையில் தெறித்த சினத்தில் அப்படியே நின்றுவிட்டாள்.

“அது தம்பிக்குப் பசிபோல…” என்று வேகமாகச் சமாளித்துக்கொண்ட புவனாம்பிகை, பேரனை வாங்கி மருமகளிடம் கொடுத்தார். அப்படிக் கொடுக்கையில் அவர் பார்த்த பார்வையில் அவளால் அவளால் தலையை நிமிர்த்தவே இயலாமல் போயிற்று.

மகனோடு அறைக்குள் வந்துவிட்டவளும் இதை எதிர்பார்க்கவில்லை. கணவனின் கோபத்தைக் கண்டு இப்போதும் நெஞ்சு நடுங்கிற்று. அந்த நடுக்கத்தோடே மகனுக்குப் பசியாற்றினாள்.

“என்னவாம் கடம்பன்.” அந்த இறுக்கமான சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டுப் பேச்சை ஆரம்பித்தான் மனோகரன்.

“நல்லா இருக்கிறாராம். இப்ப கொஞ்சத்துக்கு முதல் தமக்கையோட வீடியோ கோலில கதைச்சவர். வேலைக்கு நேரமாயிற்றுதாம் எண்டு வச்சிட்டார்.” அருந்தவராஜாவும் முயன்று தருவித்த இலகு குரலில் பதிலிறுத்தார்.

“பரவாயில்ல. இங்க விளையாட்டுத்தனமா இருந்தாலும் அங்க போனதும் ஆள் வேலைக்குப் போகுது.”

“ஓமோம். மாமனார் ஒரு வேலை எடுத்துக் குடுத்தவர். அங்க இருந்த பெடியலைப் பழக்கம் பிடிச்சு, இப்ப இன்னொரு வேலையும் செய்றாராம். மகளின்ர நகையை எல்லாம் திருப்பிற்றார். கடனும் குடுக்கத் தொடங்கிட்டார்.” என்று, மகளின் நகையை மீட்டுவிட்ட செய்தியையும் பேச்சோடு பேச்சாக அவர்களுக்குத் தெரிவித்தார்.

புவனாம்பிகை மனோகரன் இருவருக்கும் இது புதுச் செய்தி. இருவருமே செந்தாளனைப் பார்த்தனர். எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த அவன் முகம், இது அவனுக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்லிற்று.

மகன் கூடத் தன்னிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்பது புவனாம்பிகையைச் சுருக்கென்று தைத்தாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை அவர். இதனாலதான் பிரச்சனையோ என்று உள்ளே ஓடிற்று. மனோகரனும் அதைக் குறித்து ஒன்றும் பறைந்தான் இல்லை.

அதற்குமேல் அமைதியாக இருக்க முடியாமல் செந்தாளனுக்கு மூச்சு முட்டிப் போயிற்று. தன்னைக் கண்டு வீறிட்ட மகனே அவனை இன்னும் சூறாவளியாகச் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தான். அதில், “என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க மாமா?” என்றான் நேராக.

எதற்கு என்ன முடிவு என்று தெரியாமல் கலக்கத்துடன் அவனை நோக்கினார் அருந்தவராஜா.

error: Alert: Content selection is disabled!!