“தம்பி பிறந்து மூண்டு மாதம் முடிஞ்சுது. அவவா வருவா எண்டுதான் இவ்வளவு நாளும் பொறுத்துப் பாத்தனான். வாற மாதிரி இல்ல. என்ன பிளான்ல இருக்கிறா, நிரந்தரமாவே இங்க இருக்கப் போறாவா, என்ன ஏது எண்டு எனக்கு இண்டைக்கு ஒரு முடிவு தெரியோணும்!” என்றதும் பதறிப்போன அருந்தவராஜா, “அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல தம்பி. அவாவும் வரத்தான் இருந்தவா.” என்றார் அவசரமாக.
“வர இருந்தவா எண்டால் வந்திருக்கோணும். இல்ல, எப்ப வருவன் எண்டாவது சொல்லியிருக்கோணும். ஒவ்வொரு முறையும் நாங்களா வந்து உங்கட மகளை அழைச்சுக்கொண்டு போகேலாது!” என்றான் முகத்துக்கு நேராகவே.
அவருக்கு ஒரு மாதியாகிப் போயிற்று. நீங்களும்தானே வந்து பார்க்கவில்லை என்று திருப்பிக் கேட்க முடியாமல் நின்றார்.
விசாலாட்சிக்கு அழுகையே வந்திருந்தது. “அவா வராம இருந்தது பிழைதான் தம்பி. நாங்களும் ஒண்டும் சொல்லிக் குடுக்காம செல்லமா வளத்துப்போட்டம். அதால யோசிக்காம நடந்திட்டா. மற்றும்படி வேற எந்த யோசினையும் அவாக்கு இல்ல. அவா வருவா.” என்று, தன் பங்குக்குத் தானும் சொன்னார்.
அப்போதும் அவன் இளகவில்லை. “அப்பிடி வந்தாலும் அங்கேயே இருந்து வாழவேணும் மாமி. சும்மா சின்ன பிள்ளை மாதிரி தொட்டதுக்கும் கோவிச்சுக்கொண்டு இங்க ஓடி வாறதெல்லாம் சரியா வராது. நல்லது கெட்டதுக்கு வாறதோ, வந்து ஒரு கிழமை பத்து நாள் இருந்திட்டு வாறதைப் பற்றியோ நான் கதைக்கே ல்ல. சரி பிழைகளைத் தாண்டி, குடும்பங்களுக்க பிரச்சினைகள் வாறது வளமை எண்டு உங்களுக்கும் தெரியும். ஒவ்வொரு பிரச்சினைக்கும் வெளிக்கிட்டுக்கொண்டு ஓடி வந்து இங்க இருக்கிறது இனியும் சரியா வராது. அவா மட்டும் எண்டால் என்னவாவது செய்யட்டும் எண்டு விட்டுடுவன். இப்ப மகனும் இருக்கிறான். எனக்கு என்ர மகன்ர வாழ்க்கை முக்கியம். அவனை என்னால அப்பிடி விடேலாது. இல்ல அவா வேற ஏதும் ஐடியாவில் இருக்கிறா எண்டா அதையும் சொல்லச் சொல்லுங்க. என்ன எண்டாலும் எனக்கு இண்டைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியோணும். அதாலதான் வகுப்பை எல்லாம் நிப்பாட்டிப்போட்டு வந்தனான்.” அழுத்தம் திருத்தமாக அவன் சொல்லவும் அவள் பெற்றோர் நடுங்கியே போயினர்.
“இல்ல தம்பி. அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்ல. அவா வருவா.” பதறியடித்துக்கொண்டு சொன்னார் அருந்தவராஜா.
“நீங்க எதுக்கும் உங்கட மகளையே கேளுங்கோ. அவா என்ன முடிவில இருக்கிறா எண்டு ஆருக்குத் தெரியும்? வருவா எண்டால் இப்பவே வெளிக்கிட்டு வரச் சொல்லுங்கோ. பாத்தனீங்கதானே எனக்கும் என்ர மகனுக்குமான உறவு எவ்வளவு மோசமா இருக்கு எண்டு?” என்றான் அப்போதும் மருந்துக்கும் இளக்கமற்ற குரலில்.
அவர்களால் என்ன சொல்ல முடியும்? நிலைகுலைந்து நின்றனர்.
இங்கே நடந்த பேச்சு வார்த்தை அத்தனையும் அவளுக்குக் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. ‘அவா மட்டும் எண்டால் என்னவாவது செய்யட்டும் எண்டு விட்டுடுவன்.’ என்ற வார்த்தைகள் அவளைத் தைக்காமல் இல்லை. மேலே எதையும் யோசிக்கப் பிடிக்காமல், ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “அப்பா!” என்று குரல் கொடுத்தாள்.
செய்வதறியாது நின்ற மனிதர், “ஓமாச்சி.” என்று விழுந்தடித்துக்கொண்டு அவளிடம் ஓடி வந்தார்.
புவனாம்பிகைக்கு கதி கலங்கிப்போய் அமர்ந்திருந்த விசாலாட்சியைப் பார்க்க மனத்தை என்னவோ செய்தது. அங்கே வந்து எதுவும் கதைக்கக் கூடாது, நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லித்தான் அழைத்து வந்திருந்தான் செந்தாளன். கூடவே, சற்றே கடுமையாகப் பேசினாலுமே மகன் பேச்சில் தவறில்லை என்றதில்தான் அவ்வளவு நேரமாக அமைதியாக இருந்தார்.
ஆனால், விசாலாட்சி பரிதவித்து நிற்கும் நிலையைப் பார்க்க முடியாமல், “ஒண்டுக்கும் யோசிக்காதீங்கோ. மருமகள் வந்து இங்கயே இருந்துகொண்டதில தம்பிக்குக் கோபம். பிள்ளைப் பாசம் ரெண்டு பேருக்கும்தானே. அதவிட வளருற காலத்தில அம்மா அப்பாவோட வளருறதுதானே பிள்ளைகளுக்கும் நல்லது. அதுதான் கொஞ்சம் கோவமாக் கதைச்சுப்போட்டார். மற்றும்படி ஒண்டும் இல்ல. நீங்க கானவியோட கதைங்கோ.” என்றார் ஆறுதலாக.
அப்படிச் சொன்னவருக்குத் தானும் போய் அவளை அழைக்க மனமில்லை. மகன் சொன்னதுபோல அவளாக ஒரு முடிவெடுத்து வரட்டும் என்று எண்ணினார்.
இங்கே அறையில் தன் முகம் பார்த்த தந்தையிடம், “நான் போறன் அப்பா.” என்றாள் கரகரத்த குரலில்.
“அம்மாச்சி…” என்றவருக்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை. அவள் போகத்தான் வேண்டும். அதுதான் சரி. இப்படி அவர்களே வந்து அழைத்த பிறகும் மறுத்தால் அது பெரும் பிளவில்தான் சென்று நிற்கும். இதெல்லாம் புத்திக்குத் தெரிந்தது. மனமோ மருமகனின் கோபத்தை எண்ணி மருகிற்று. அங்கே வைத்து மகளோடு என்னவெல்லாம் கதைப்பானோ என்று நினைத்துப் பயந்தார்.
அவர் கலக்கம் உணர்ந்தவளும், “சும்மா எதையும் யோசிச்சுக் கவலைப்படாதீங்க அப்பா. நான் போறதுதான் சரி.” என்று தைரியம் கொடுத்தாள்.
இன்று காலையில் அவன் வரப்போகிறான் என்று தெரிந்ததில் இருந்தே இப்படி ஒன்றை எதிர்பார்த்து இருந்ததாலோ என்னவோ திடமாகவே இருந்தாள் கானவி. அவன் வார்த்தைகள் காயப்படுத்தினாலும் பெரிதாக உடையவும் இல்லை.
இங்கே விசாலாட்சிக்கு மனம் அமைதியடைய மாட்டேன் என்றது. அதில், “இருங்கோ, அப்பாவும் மகளும் என்ன செய்யினம் எண்டு பாத்துக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு எழுந்து வந்தார்.
அவரைக் கண்டதும் கானவிக்கு விழிகள் கலங்கப் பார்த்தன. காட்டிக்கொள்ளாமல் முறுவலிக்க முயன்றபடி, “நான் வெளிக்கிடப் போறன் அம்மா.” என்றாள்.
ஒன்றும் சொல்லாமல் அவளின் மற்றப் பக்கத்தில் வந்து அமர்ந்தார் விசாலாட்சி. அவள் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தார். அவளுக்கு உடைந்துவிடுவோமோ என்று பயமாயிற்று. உதட்டைப் பற்றியபடி மகனைப் பார்ப்பதுபோல் தலையைக் குனிந்துகொண்டாள்.
நெடிய மூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு, “நிம்மதியாக வாழ ரெண்டே ரெண்டு வழிதானம்மா. ஒண்டு உன்ர சூழ்நிலைக்கு ஏற்ப நீ மாறவேணும். இல்ல, அந்தச் சூழ்நிலைய உனக்கு ஏற்ற மாதிரி மாத்தோணும். இது ரெண்டுல எது நடந்தாலும் நிம்மதி வந்திடும். நிம்மதி தெளிவத் தரும். தெளிவு சந்தோசமான வாழ்க்கையத் தரும். ஒண்டுக்கும் கவலைப்படாம வெளிக்கிடுங்கோ. எப்பவும் உங்களுக்குத் துணையா அம்மாவும் அப்பாவும் இருப்பம். சரியா?” என்றார் கரகரத்தாலும் கனிந்த குரலில்.
எவ்வளவு பெரிய வார்த்தைகள்? அதற்கு மேலும் விழிகள் கலங்குவதைத் தடுக்க முடியாமல், “அம்மா!” என்றவள் அவர் தோளில் சாய்ந்தாள்.
பல நேரங்களில் ஒருவருடைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் தேவையே இல்லை. தோள் சாய ஒரு துணை இருந்தாலே போதும். அது, ஒரு கை பார்க்கலாம் என்று நிமிர வைக்கும். தற்போது அந்த நிலையில் இருந்தாள் கானவி.
“வருசக் கணக்கில காதலிச்சு, ஒருத்தரை ஒருத்தர் நல்லா விளங்கி வச்சிருக்கிறோம் எண்டு நினைச்சுக் கலியாண வாழ்க்கைக்க நுழையிற ஆக்களுக்கே ஆயிரம் சண்டைகள் வருதாம். இங்க உங்களுக்கு அவரைப் பற்றி ஒண்டும் தெரியாது, அவருக்கும் உங்களைப் பற்றிப் பெருசாத் தெரியாது. அதால முதல் ரெண்டு மூண்டு வருசம் இப்பிடித்தானம்மா சண்டை சச்சரவுகள் வந்து போகும். அதெல்லாம் பெரிய விசயம் மாதிரியும் இருக்கும். கொஞ்சம் சமாளிச்சு ஒருத்தரை ஒருத்தர் விளங்கிக்கொண்டுட்டா போதும். வாழ்க்கை நல்லாருக்கும். இப்ப உங்கள் ரெண்டு பேருக்கும் நடக்கிறது அதுதான்.”
உண்மைதானானோ என்று தோன்ற நிமிர்ந்து அன்னையின் முகம் பார்த்தாள் கானவி.
“வாழ்க்கைல வாற கஷ்ட துன்பம் எல்லாம் கஷ்டம் இல்ல பிள்ள. அதெல்லாம் உங்களைப் பற்றியும் உங்களைச் சுத்தி இருக்கிற ஆக்களைப் பற்றியும் தெரிஞ்சுகொள்ளக் கிடைக்கிற சந்தர்ப்பங்கள். யோசிச்சுப் பாருங்கோ, இதெல்லாம் நடந்ததாலதானே படிக்காம விட்டது எவ்வளவு பெரிய பிழை எண்டு தெரியவந்தது. அதாலதானே முந்தி விளையாட்டுக்குப் பழகின மேக்கப்பை இப்ப ஒரு வெறியோட பழகுறீங்க?”
உண்மைதான். அவமானங்கள் படிப்பிக்கும் படிப்பினைகள் ஆழமானவைதான். அவர் சொன்னவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு கணவன் வீட்டுக்குத் தயாராகினாள் கானவி.

