இடைவெளி வலிக்குதே 23 – 1

அத்தியாயம் 23

அவர்கள் வீட்டு வாசலில் வந்து இறங்கியவளுக்கு என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் அலையெனப் பொங்கிக்கொண்டு வந்தன. அந்த வீடும், அந்த வீட்டு மனிதர்களும் அவள் வாழ்க்கையில், அவள் சிந்தனையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியவர்கள். இங்கே அவள் கற்றுக்கொண்டவை நிறைய! பெற்றுக்கொண்ட காயங்களும் நிறைய!

உள்ளத்தில் இருக்கும் குமுறல்களுக்கெல்லாம் நியாயம் கிடைக்காமல் இங்கே வருவதில்லை என்றுதான் இருந்தாள். ஆனால்… அவள் சிந்தனையை இடையிட்டுக்கொண்டு கையில் இருந்த மகன் சிணுங்கினான். குனிந்து பார்த்தாள். எல்லாம் அவனுக்காக, அவளின் பெற்றோரின் நிம்மதிக்காக.

அவளுக்காக என்று வாழ்ந்த காலம் எல்லாம் எங்கே போனதென்றே தெரியவில்லை. ஆசையாசையாய்த் தன்னை அழகுபடுத்தி, ஆயிரம் முறை கண்ணாடியில் தன்னைத் தானே இரசித்துப் பார்த்து, ஓராயிரம் கற்பனைகளை நெஞ்சில் சுமந்து, பிடித்ததுபோல் மட்டுமே வாழ்ந்த காலமெல்லாம் கலைந்தே போயிற்று.

நெஞ்சிள் ஏறிய பாரத்தை நெடிய மூச்சு ஒன்றோடு சேர்த்து வெளியேற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

அந்த வீட்டிலும் அவள் நாள்கள் உருள ஆரம்பித்தன. மனோகரன், சிந்துஜா, புவனாம்பிகை, சற்குணம் என்று எல்லோருடனுமான அவள் உறவு ஓரளவுக்குச் சமூகமாகவே போனது. நிலவன் அவர்களுக்கு நடுவில் பாலமாக இருந்தான்.

சிவரூபனோடும் அவளுக்கு எந்த முரண்பாடும் இல்லை. ஆனால், இந்த ஏழு மாதத்தில் அவனிடம் நிறைய மாற்றங்கள் தென்பட்டன. கடை நன்றாகப் போகிறது என்று பார்க்கவே தெரிந்தது. அவனின் நடை, உடை, பாவனையில் கம்பீரம் கூடித் தெரிந்தது. ஒருவித நிமிர்வு, தன்னம்பிக்கை என்று ஆச்சரியம் தரும் மாற்றங்கள் நிறைய. நந்தினி அடிக்கடி வந்து போனாள். இருவரும் சோடியாகவே திரிந்தனர்.

அவளுக்கும் கணவனுக்குமான உறவு மட்டும் வாழை மடலில் நழுவும் தண்ணீரைப் போன்று ஒட்டாமலேயே இருந்தது. அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்தனர். மகன் மட்டும் அவர்களுக்குப் பொதுவில் இருந்தான்.

நிலவன் வீட்டுக்கு வந்த அடுத்த நாளே அவனுக்கு ஏற்ற குட்டிக் கட்டில் ஒன்று வாங்கிவந்து போட்டான் செந்தாளன். அவனுக்குத் தேவையானவற்றைக் கவனித்துச் செய்தான். வீட்டில் இருக்கும் பொழுதுகள் அத்தனையும் மகனோடு மட்டுமே கழிந்தன.

அன்று அவள் வீட்டில் வைத்து அவ்வளவு கடினமாகக் கதைத்தவன் இங்கு வந்தபிறகு அவளிடம் எதையும் கேட்டுக்கொண்டு வரவேயில்லை. அது பெரும் ஆறுதலாக இருக்க அவளும் மகன் அவள் என்று இருந்துகொண்டாள்.

அவள் பழகிக்கொண்டிருந்த சிகையலங்கார வகுப்புத்தான் அப்படியே நின்றது. மனத்தில் மிகுந்த வருத்தம் இருந்தாலும் நான் போகட்டுமா என்று கணவனிடம் கேட்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

அன்று அவளுக்கு அழைத்த விசாலாட்சியும், “இப்பிடி வகுப்பை இடையில விட்டுப்போட்டு என்னம்மா செய்யப் போறீங்க? கட்டின காசு அநியாயம் எல்லா. உங்கட மாமியோட கதைச்சுப்போட்டு, தம்பிய அவாட்ட விட்டுட்டு நீங்க போயிற்று வரலாமே. இன்னும் ஒரு மாதம்தானே இருக்கு. அத முடிச்சிட்டா கையோட செர்டிபிக்கேட் வந்திடும் எல்லா.” என்றார் மனம் கேளாமல்.

சர்வதேச தரத்துடன் கூடிய செர்டிபிக்கேட்டுடன் பிரான்சிலிருந்து வந்து கற்றுக் கொடுக்கும் ஒரு கோர்ஸுக்குத்தான் சேர்ந்திருந்தாள் கானவி. அதைவிட ஒவ்வொரு இரண்டு வாரத்துக்கும் ஒருமுறை என்று ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சிகையலங்கார நிபுணர்கள் வந்து சிகையலங்காரப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தனர்.

அங்கே பயிற்சி எடுத்துவிட்டு வந்து, அவள் வைத்திருக்கும் அலங்கார பொம்மையின் தலையில் போடும் சிகையலங்காரங்களைக் கண்டுவிட்டு வாயைப் பிளப்பார் விசாலாட்சி. இப்படியெல்லாமா தலைமுடியில் அலங்காரம் செய்யலாம் என்னுமளவில் இருக்கும். இலட்சத்தைத் தொடும் அளவில் இருந்தது அதற்கான கட்டணம். கடம்பன்தான் கட்டிச் சேர்த்துவிட்டான். அவள் மீது கோபமிருந்தாலும் அவள் சொந்தக்காலில் நிற்பதற்கான நடவடிக்கைகளில் அவன் குறை வைக்கவே இல்லை. அப்படியான ஒரு வகுப்பை மகள் இடையில் நிறுத்துவதில் அவருக்கு உடன்பாடே இல்லை.

அதைவிட, மகன் பிறந்து இரண்டாம் மாதத்தில் இருந்தே ஒருவிதப் பிடிவாதத்துடன் போக ஆரம்பித்திருந்தாள். ஒவ்வொரு வருடமும் ஒரு நாட்டைத் தெரிவு செய்து அவர்கள் இப்படியான பயிச்சியைக் கொடுப்பதால், இந்த முறை தவறவிட்டால் இனிச் சந்தர்ப்பம் அமையுமா என்று தெரியாது என்று வேறு சொல்லியிருந்தாள்.

ஆரம்ப நாள்களில் நிலவனுக்கு இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுப்பதால், அவனுக்குத் தேவையான அனைத்தையும் பெட்டி கட்டி எடுத்துக்கொண்டு, நிலவனோடு அவருமே ஆட்டோவில் சென்று அங்கேயே அமர்ந்துகொள்வார்.

அவளின் அந்த ஊக்கத்தை மெச்சிய வகுப்பு ஏற்பாட்டாளர்களும் நிலவனுக்கு வசதி செய்து கொடுத்திருந்தனர். அவ்வப்போது அவனுக்குப் பசியாற்றியபடி கற்க ஆரம்பித்த ஒன்றை எப்படியாவது முடிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணினார் விசாலாட்சி.

ஆனால், அவர் என்ன சொன்னபோதும், “என்ன செய்யலாம் எண்டு பாக்கிறன் அம்மா.” என்றுதான் சொன்னாள் அவள்.

அதுவே அவள் புவனாம்பிகையிடம் கேட்கப்போவதில்லை என்று சொல்லிவிட, விசாலாட்சி நேராகப் புவனாம்பிகைக்கே அழைத்து விடயத்தைச் சொன்னார்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு வைத்த புவனாம்பிகைக்கு உண்மையில் மிகுந்த மனவருத்தமாய்ப் போயிற்று.

அவள் மீது மனவருத்தங்கள் இருந்த போதிலும் அவற்றையெல்லாம் மருந்துக்கும் அவளிடம் காட்டியதில்லை. ஏன் சிந்துஜாவிடம் கூடப் பகிரமாட்டார். அப்படியானவரிடம் ஒன்றைக் கேட்க ஏன் அவளால் முடியாமல் போனது? அவளைத் தேடிக்கொண்டு அறைக்கு வந்தவர், “நான் உங்களுக்கும் சிந்துக்கும் வித்தியாசம் காட்டி இருக்கிறேனம்மா?” என்றார் நேராகவே.

அவள் திகைத்துத் திரும்பினாள். “ஏன் மாமி இப்பிடிக் கேக்கிறீங்க? அப்பிடியெல்லாம் நீங்க நடந்ததே இல்ல. நான் பிழை செய்தாலும் கூட நீங்க என்னோட கோவிச்சதே இல்ல.” என்று சொல்லும்போதே அவள் குரல் மெலிதாக உடைந்துபோயிற்று.

“பிறகு ஏனம்மா அந்த வகுப்பு இருக்கிற விசயத்த என்னட்டச் சொல்லேல்ல? உங்கட அம்மா மாதிரி நானும் தம்பியோட அங்க வந்து இருக்க மாட்டன் எண்டு நினைச்சீங்களா?”

அவள் பதறிப்போனாள். “ஐயோ மாமி! அப்பிடியெல்லாம் இல்ல.” என்றவளால் என்னால்தான் உங்களிடம் உரிமையாகக் கேட்க முடியவில்லை என்று சொல்ல வரவில்லை.

“பிறகு என்ன? அடுத்த வகுப்பு எப்ப எண்டு சொல்லுங்கோ. நானும் தம்பியோட வாறன்.”

“இல்ல… அது நீங்க இப்ப தம்பிய இங்க இருந்து பாத்தாலே போதும் மாமி. இப்ப நாலு, அஞ்சு மணித்தியாலத்துக்கு ஒருக்காத்தான் தாய்ப்பால் குடுக்கிறனான். அதுக்கிடைல நான் வந்திடுவன். மிச்சம் ஒன்லைனில சொல்லித் தருவினம்.”

“அப்ப பிறகு என்ன? நீங்க போங்கோ. நான் தம்பியப் பாப்பன்.”

“அது… வகுப்பு நாலு மணித்தியாலம். இங்க இருந்து போய் வர ஒரு மணித்தியாலம் பிடிக்கும் மாமி.” என்று அப்போதும் தயங்கிச் சொன்னாள்.

அவ்வளவு நேரத்துக்கு வைத்திருப்பாரா என்று எண்ணி அவள் தயங்குவது புரிய, “ஒரு பேரப்பிள்ளைக்காகத் தவம் இருந்தவளாம்மா நான். அஞ்சு மணித்தியாலம் என்ன, நாள் முழுதும் எண்டாலும் கொஞ்சமும் நிலவன விட்டு அரக்காம பக்கத்தில இருந்து பாப்பன். நீங்க போயிற்று வாங்கோ.” என்றதும் ஓடிவந்து அவரைக் கட்டிக்கொண்டவள், “சொறி மாமி!” என்றாள் அரும்பிவிட்ட கண்ணீருடன்.

அவருக்கும் விழிகள் கலங்கிப் போயிற்று. கூடவே மலர்ந்த சிரிப்போடு, “போங்கோம்மா, போய் வகுப்புக்குத் தேவையான வேலையப் பாருங்கோ. நாளைக்கு நானும் என்ர மருமகள் இது இதெல்லாம் செய்வா எண்டு நாலு பேரிட்ட பெருமையாச் சொல்லுவன் எல்லா.” என்றுவிட்டுப் போனவருக்கு அவள் மீதிருந்த மனக்குறைகள் எல்லாம் எங்கு போனதென்றே தெரியவில்லை.

அன்றே வீடு வந்த மகனிடமும் பகிர்ந்தார். அவள் அறைக்குள் படபடக்கும் நெஞ்சோடு காத்திருக்க, “கிட்டத்தட்ட அரை நாள் அம்மா. தாயில்லாம தம்பி இருப்பானா?” என்று கேட்டான் அவன். “இதுக்க நீங்க சமைக்கவும் வேணும், அப்பா சரியாப் பன்னெண்டுக்குச் சாப்பிட வருவார். சமாளிப்பீங்களா?”

“அதெல்லாம் ஒரு விசயமா? இனி அப்பாவை ஒரு மணித்தியாலம் முதலே வரச் சொல்லப்போறன். அவர் வந்து தம்பியப் பாக்கட்டும். அதுக்கிடையில நான் சமைச்சிடுவன்.”

‘இதெல்லாம் நடக்கிற கதையா?’ என்பதுபோல் பார்த்தான் அவன்.

“அதெல்லாம் நடக்கும் தம்பி. அம்மா சமாளிப்பன்.” என்று முடித்தார் அவர்.

அவன் அறைக்குள் வந்தான். ஏதும் சொல்லப் போகிறானோ என்று இதயம் வந்து தொண்டைக்குள் துடிக்க வாய்ப் பார்த்தாள் கானவி. அவன் பேசாமல் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

‘ப்பூ!’ என்று காற்றை ஊதி வெளியேற்றியவளுக்கு இவனோடுதானா கொஞ்ச மாதங்களுக்கு முன்னால் ஊனும் உயிருமாக வாழ்ந்தோம் என்றிருந்தது. அந்தளவில் முழு அந்நியமாய் நின்றான் கணவன். என்னவோ இருவருக்குமிடையிலான இடைவெளி எல்லை தெரியாத அளவில் நீண்டு கிடந்தது.

எதையும் காட்டிக்கொள்ளாமல் விறாந்தையிலேயே அமர்ந்துகொண்ட செந்தாளனால் புத்தகத்தில் கவனம் செலுத்தவே முடியவில்லை. அவளின் பயந்த பார்வை அந்தளவில் தொஙகரவு செய்தது. கூடவே ஒரு மெல்லிய கோபமும். அப்படி என்ன செய்துவிடுவானாம்? அவனை என்ன அவளுக்குத் தெரியவே தெரியாதா?

ஒரு வழியாக அவளின் அந்த ஒரு மாதமும் முடிவுக்கு வந்தது. கடைசியாக செர்டிபிக்கேட் கொடுக்கும் நாளில் சின்ன விழாப் போன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்குப் புவனாம்பிகையை நிலவனோடு அழைத்துச் சென்றிருந்தாள் கானவி. அங்கிருந்து விசாலாட்சியும் வந்திருந்தார்.

அவர்களின் தீம் நிறம் கருப்பு வெள்ளை. மண்டபம் முழுவதும் கருப்பு வெள்ளை பலூன்களால் அலங்கரிக்கப் பட்டிருக்க, மேசை விரிப்புகள், அலங்காரப் பொருள்கள், அறிவிப்புப் பலகைகள் என்று எல்லாமே கருப்பு வெள்ளையில் மட்டுமே இருந்தன.

error: Alert: Content selection is disabled!!