இடைவெளி வலிக்குதே 25 – 1

அத்தியாயம் 25

சிவரூபனின் திருமண வேலைகள் சூடு பிடித்திருந்தன. ஆனால், அது அவன் வரையில் மட்டுமே! தினமும் வீட்டுக்கு வருகையில் அம்மா இன்றைக்கு இதற்கு ஏற்பாடு செய்தோம், இப்படிச் செய்யப் போகிறோம், இந்த மண்டபம் பார்த்திருக்கிறோம், இங்கே உணவுக்குச் சொல்லியிருக்கிறோம் என்று தகவல்கள் மட்டும் தந்தான். மனோகரன் கூட, “என்ன சிவா, கலியாணத்துக்காவது எங்களைக் கூப்பிடுவீரா?” என்று பகிடி போன்று கேட்டிருந்தான்.

“என்னத்தான் நீங்க. உங்க ஆரையும் கஷ்டப்படுத்தக் கூடாது எண்டு நினைச்சா இப்பிடிக் கேக்கிறீங்க?” என்றான் அவன் பதிலுக்கு.

“எங்களுக்கு என்ன கஷ்டம்? செந்தாளன்ர கலியாணத்துக்கு ஓடியோடிச் செய்த நேரம் கஷ்டம் எண்டா நினைச்சனாங்க? எங்கட வீட்டில ஒரு விசேசம் நடக்கப்போகுது எண்டு ஆசையாத்தானே செய்தனாங்க. அப்பதானே வீட்டில கலியாணக் களையே கட்டும். இது என்னவோ ஆருக்கோ, எங்கயோ நடக்கிற மாதிரி இருக்கு.”

“சேச்சே! அப்பிடி எல்லாம் நினைக்காதீங்க அத்தான். நாள் நெருங்கட்டும். ஏனடா இவனிட்ட கேட்டன் எண்டு நினைக்கிற அளவுக்கு வேலை வைக்கிறனா இல்லையா எண்டு பாருங்க.” என்றுவிட்டுப் போனான் அவன்.

செந்தாளனும் சிவரூபனைக் கவனிக்காமல் இல்லை. அவனிடம் தெரியும் இந்த மாற்றங்கள் மலைப்பைத் தந்தன. அவன் பார்த்த மண்டபம், செய்யும் ஒழுங்குகள் எல்லாமே அதிகப்படி என்று நினைத்தான். எதிலும் அவன் இல்லை. “நான் ஏதாவது செய்யவாடா?” என்று கேட்டாலும், “இல்லை அண்ணா. நானே பாக்கிறன்.” என்றுவிடுவான்.

“காசப் பாத்துச் சிலவு செய் சிவா. கண்டபாட்டுக்குச் சிலவு செஞ்சிட்டுப் பிறகு கவலைப்படக் கூடாது.”

“எனக்குத் தெரியாதா அண்ணா? நான் கவனமாத்தான் இருப்பன், நீங்க கவலைப்படாதீங்க.” வார்த்தைகளில் எந்தக் குறையும் இல்லை. செயல்களிலும் எந்த மாற்றமும் இல்லை.

இதை வீட்டினரிடம் சொல்வதா, சொன்னால் வேறு விதமாகக் கதை மாறிவிடுமோ என்று யோசித்தான். காரணம் கிடுகிடு என்று உயர்ந்துகொண்டு போகும் சிவரூபனின் செல்வ நிலை.

அவன் மாதச் சம்பளக்காரன். டியூஷன் செண்டரிலும் அப்படித்தான். அதையும் தாண்டித் தனிப் பிள்ளைகளுக்கென்று ஒருசில இணைய வகுப்புகளும் எடுத்துக்கொண்டிருந்தான். கூடவே, தோட்டத்திலிருந்து கிடைக்கும் சிறு வருமானம். எப்படிப் பார்த்தாலும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகைதான் அவன் ஈட்டுவது. ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் மேலே கீழே இருக்குமே தவிர்த்துப் பெரிதாக மாற்றமிராது.

சிவரூபனுக்கு அப்படியன்று. ஒவ்வொரு மாதமும் சூப்பர் மார்க்கெட்டின் வருமானம் பெருகிக்கொண்டே இருந்தது. முதலே நிறைய வாடிக்கையாளர்கள், கொள்முதலாளர்கள் என்று அனைவரையும் பழகி வைத்திருந்தான். இப்போது கலியாண வீடு, சாமத்தியவீடு என்று விசேசங்களுக்குக் கூடக் கொடுத்துக்கொண்டிருந்தான். அவன் நிலை சடுதியில் உயர்ந்திருந்தது.

செல்வநிலைகள் மாறுகையில் உறவு நிலைகளும் மாறும். இது மிக மிக நிதானமாக அணுகவேண்டிய ஒன்று. இல்லையோ, பொறாமையில் பொசுங்குகிறான் என்று பொருளே மாறிவிடும்.

அவன் குடும்ப நிலையே ஒரு சீரில்லாமல் இருக்கையில் மொத்த வீட்டுக்குள்ளும் பிளவினைக் கொண்டுவர அவன் விரும்பவில்லை.

*****

திருமணத்துக்கு என்று மொத்த வீட்டுக்கும் சிவரூபன் உடைகள் எடுத்துக் கொடுத்திருந்த போதிலும் மனைவிக்கும் மகனுக்கும் தானும் எடுத்துக் கொடுக்க ஆசைப்பட்டான் செந்தாளன்.

அது ஒருவிதமான சமாதான முயற்சி. பக்கத்திலேயே இருந்துகொண்டு மனத்தளவில் விலகி நிற்கிறவள் நிறைய அவனை யோசிக்க வைத்தாள். அவளோடு சந்தோசமாக வாழ்ந்த நாள்களுக்கும் இன்றைய வரட்சியான நாள்களுக்குமான வித்தியாசத்தை உணர வைத்தாள்.

கேள்வி கேட்காமல், நியாயம் பேசாமல், சண்டை பிடிக்காமல் மௌனமாய் இருந்து வதைக்கும் மனைவியைப் பழையபடி மாற்றிவிடு என்று அவனுக்குள் இருந்து ஒரு குரல் சத்தமே இல்லாமல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்தது.

கடைக்குச் சென்று அவளுக்கென்று ஒரு பட்டுச் சேலையைத் தெரிவு செய்து கையில் எடுத்தபோது என்னென்னவோ உணர்வுகள் அவனுக்குள் பொங்கின. இப்படி, அவளைக் கூட்டிக்கொண்டு வந்த நாள்களில் அவள் பட்ட பாடுகளும், அவனைப் போட்டுப் படுத்திய பாடுகளும் கண்முன்னே வந்து போயின. அன்று தொந்தரவாய், சினம் தரும் அவள் குணங்களாகத் தெரிந்தவை இன்றைக்கு அப்படி என்னோடு இருக்க மாட்டாளா என்று ஏங்க வைத்தது. எவ்வளவு கண்டித்தாலும் கடுமையைக் காட்டினாலும் கொஞ்ச நேரத்துக்குத்தான். பிறகு பழையபடி அவனைத் தொந்தரவு செய்து, தனக்குப் பிடித்தது போலவேதான் எடுப்பாள்.

ஆனால் இன்று? ஒரு பொருள் கூட அவனிடம் வாங்கித் தரச்சொல்லி அவள் கேட்கவில்லை. உடை, அலங்காரம் சம்மந்தமாக எந்த ஆர்ப்பாட்டமும் அவளிடம் இல்லை. அவன் விலகி நின்ற நிலை மாறி, அவள் தானாகவே அவனிடமிருந்து மொத்தமாய்த் தள்ளி நிற்பது அவனை உறுத்தி வருத்தியது.

எல்லாவற்றையும் தனக்குள் விழுங்கிக்கொண்டு, வாங்கிய உடைகளைக் கொண்டுவந்து அவள் முன்னே வைத்தான்.

கேள்வியாக அவள் நிமிர்ந்து பார்க்க, “சிவான்ர கலியாணத்துக்கு உனக்கும் தம்பிக்கும் உடுப்பு.” என்றுவிட்டுப் போனான் அவன்.

சற்று நேரத்துக்கு அவள் அசையவே இல்லை. இதுவே பழைய கானவியாக இருந்திருக்க கணவனை முத்தங்களால் குளிப்பாட்டி இருப்பாளாக இருக்கும், அவளைக் கையிலேயே பிடித்திருக்க முடியாது. ஆனால் இன்று? எந்த உணர்வுகளும் இல்லாமல் பிரித்துப் பார்த்தவளை அந்தச் சேலையோ அதன் அழகோ கவர மறுத்தது. எடுத்து வைத்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டாள்.

சிவரூபனின் திருமண நாளும் விடிந்தது. ஆண்கள் காலையிலேயே மண்டபத்துக்குச் சென்றிருந்தனர். பெண்கள் இங்கே அரக்கப்பரக்க வேலைகளையும் பார்த்துத் தயாராகிக்கொண்டிருந்தனர். நிலவனோடு சிரமம் என்பதில் கடைசியாகத்தான் கானவி தயாராகினாள்.

எதற்கோ அறைக்குள் வந்த சிந்துஜா அவளைக் கண்டதும் அப்படியே நின்றாள்.

“தம்பி வேற சாறி எல்லா வாங்கித் தந்தவன்?”

“ஏன் இது நல்லா இல்லையா மச்சாள்?? அவள் முகம் பார்ப்பதைத் தவிர்த்தபடி வினவினாள் கானவி.

“நல்லா இல்லை எண்டு ஆர் சொன்னது. நல்ல வடிவா இருக்கு. ஆனா ஏன் அதக் கட்டேல்ல?” சிந்துஜாவும் விடாமல் கேட்டாள்

“இதே நல்லாருந்தது. அதான்.”

அவளையே ஊன்றிப் பார்த்தாள் சிந்துஜா. கானவி அவள் பார்வையைச் சந்திக்க முடியாமல் தடுமாறினாள்.

“இதுவரைக்கும் உங்கட பிரச்சினைகளுக்க நான் தலையிட்டது இல்ல கானவி. ஆனா இப்ப எனக்கு இதச் சொல்லாம விட விருப்பம் இல்ல. சில விசயங்கள் எங்களை மீறி எங்கட வாழ்க்கையில நடக்கும். அது சில நேரம் அழியாத காயத்தைத் தரும்தான். எண்டாலும் எல்லாத்தையும் பிடிச்சுத் தொங்கிக்கொண்டிருந்தா வாழ்க்கை நரகமாகிடும். மனுசருக்கு மறதி எண்டுற ஒண்டக் கடவுள் படைச்சதே தேவை இல்லாத குப்பைகளை மறக்கிறதுக்குத்தான். என்னவோ யோசிச்சு நடவும்.” என்றுவிட்டுப் போய்விட்டாள் அவள்.

அவளுக்கு ஒருமாதிரி ஆகிப்போயிற்று. உள்ளே வந்த செந்தாளனும் அவள் அணிந்திருந்த சேலையைக் கவனித்துவிட்டு அவளையே பார்த்தான்.

நெஞ்சு பயத்தில் படபடக்கப் பார்வையை மகனில் பதித்தாள் அவள். வார்த்தைகளை விட்டு நோகடிக்கப் போகிறான் என்று அவள் பயந்துகொண்டு நிற்கையில் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினான்.

இதை எதிர்பாராத கானவி அப்படியே அமர்ந்துவிட்டாள். சிந்துஜா சொன்னதுபோல் இன்னும் எல்லாவற்றையும் தூக்கிப் பிடிக்கிறாளா என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால், உரிமையாய் அவன் வாங்கித் தந்ததை அணிய முடியவில்லை. காலையில் அவன் தந்த சேலையைத்தான் முதலில் எடுத்தாள். மனம்தான் கட்டிக்கொள்ள ஒப்பவே மாட்டேன் என்றது. அதில்தான் இதை அணிந்திருந்தாள்.

திரும்ப திரும்ப அவனைக் கோபப்படுத்தி, பிரச்சனைகளை உருவாக்காமல் மாற்றுவோமா என்று இப்போது யோசித்தாள். முந்தானை பின்னில் அவள் கையை வைக்க உள்ளே வந்தார் புவனாம்பிகை.

“வெளிக்கிடுவமா பிள்ளை? நேரமாயிற்றுது. எங்கட சின்ன குஞ்சனும் வேட்டி கட்டி இருக்கிறாரோ.” என்றபடி பேரனை அவர் அள்ளிக்கொள்ள, அதன் பிறகு அவளுக்கு மாற்ற நேரம் அமையவில்லை. அவருக்கு அது, யார் எடுத்துக்கொடுத்த சேலை என்று எதுவும் நினைவில் இல்லாததால் அவர் எதுவும் அவளிடம் கேட்கவும் இல்லை.

செந்தாளனுக்குக் கோபம் என்பதை விட என்னவோ போட்டு அழுத்தியது. அந்த நாளின் நல்ல மனநிலையே கெட்டுவிட்ட நிலை. ஆனாலும், காட்டிக்கொள்ளாமல் திருமணப் பரபரப்பில் தன்னை நுழைத்துக்கொண்டான்.

error: Alert: Content selection is disabled!!