ஒரு வழியாகச் சிவரூபனின் திருமணம் நல்லபடியாகவே நடந்தது. வீட்டினர் யாரும் எதிர்பாராத அளவில் இருந்தன கொண்டாட்டங்கள். புவனாம்பிகைக்குச் செந்தாளன் எதுவும் சொல்லிவிடுவானோ என்று மிகுந்த பயம். அடிக்கடி அவனை அவனைக் கவனித்தார். அதைக் கண்டுவிட்டு, “அம்மா, இது அவன்ர கலியாணம். நான் சொல்ல ஒண்டும் இல்ல. அதவிட இப்ப சொல்லி எதுவும் மாறப் போறேல்ல.” என்றான் அவரை நெருங்கி. கண்கள் தன்பாட்டுக்கு மனைவியையும் மகனையும் தேடின.
அங்கே மண்டபத்தில் சற்று ஒதுக்கமாக அமர்ந்திருந்து மகனுக்குப் போத்தல் பால் கொடுக்க முயன்றுகொண்டிருந்தாள் அவள். நிலவன் மறுத்துச் சிணுங்கிக்கொண்டிருந்தான். எப்படியாவது அதைக் கொடுத்துவிட முயன்றுகொண்டிருந்தவளின் முகத்தில் மெல்லிய சங்கடம்.
மகனின் பார்வையைக் கவனித்துத் தானும் பார்த்துவிட்டு, “இவ்வளவு நேரமா என்னோடதான் இருந்தவர். ஆளுக்கு நேரம் போக போக இந்தச் சத்தமும் சன வெக்கையும் சரி வரேல்ல போல. நித்திரைக்குச் சிணுங்கிறார்.” என்ற புவனாம்பிகையிடம், “பொறுங்கம்மா வாறன்.” என்றுவிட்டு அவளிடம் நடந்தான்.
தவிப்புடன் அவள் நிமிர்ந்து பார்க்க, அவளிடமிருந்து மகனை வாங்கிக்கொண்டு, “என்னோட வா!” என்றுவிட்டு முன்னால் நடந்தான்.
அவன் அவளை அழைத்துச் சென்றது மணமகனின் அறைக்கு. அங்கே வைத்து மகனை அவளிடம் கொடுத்து, “நீ தம்பியக் கவனி.” என்றான்.
“ஆரும் வந்தா…”
“நீ வாறவரைக்கும் நான் வாசல்லதான் நிப்பன்.” என்றுவிட்டு, அங்கே இருந்த ஒரு நாற்காலியை இழுத்துக்கொண்டுபோய் வாசலில் போட்டுவிட்டு அமர்ந்துகொண்டான்.
கவலையகல மகனுக்குப் பசியாற்றினாள் கானவி. சற்று நேரத்தில் மகன் சிரிக்கும் சத்தமும் அவள் அவனோடு கதைக்கும் சத்தமும் கேட்க, கதவைத் திறந்து எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்தான்.
நிலவனுக்கு உடைகளைக் கழற்றிவிட்டு, வெறும் டயப்பரோடு விட்டிருந்தாள் கானவி. வயிறு நிரம்பியிருந்த மகன், தந்தையைக் கண்டதும் பொக்கை வாய்ச் சிரிப்புடன் அவனிடம் தாவ முயன்றான்.
தன்னாலே முறுவல் மலர, அவனை அப்படியே அள்ளிக்கொண்டபடி, “ஏதும் எண்டா வந்து சொல்லாம இப்பிடித்தான் தம்பிய அழ வைப்பியா?” என்று அவளைக் கடிந்தான்.
“மணமகளின்ர அறைக்குப் போய்ப் பாத்தனான். அங்க அவவின்ர சொந்தக்காரர் இருந்தவே. அதான்.”
“அதச் சொன்னாத்தானே எனக்குத் தெரியும்.”
“இல்ல… நான் இந்த அறைய யோசிக்கேல்ல. தனியா ஒரு இடம் எங்கயும் இல்ல எண்டுட்டுத்தான் போத்தில் பால் குடுத்தனான். அதைவிட, வீட்டில தம்பி போத்தில் பாலும் குடிக்கிறவர்தானே. அதான் அதையே குடுப்பம் எண்டு நினைச்சன்.”
“சரி அவனுக்கு உடுப்பைப் போட்டுவிடு. போவம்.” என்றான் அவன் வேறு பேசாமல்.
உள்ளூர மெல்லிய ஆச்சரியத்தோடு அவன் சொன்னதைச் செய்தாள் கானவி. இவ்வளவு பொறுமையாக நடக்கும் செந்தாளன் புதிதாய்த் தெரிந்தான்.
இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. திருமண ஆரவாரங்கள் எல்லாம் அடங்கி இருந்தது. சிவரூபனின் திருமணம் முடிவதற்காகவே காத்திருந்த மனோகரனும் சிந்துஜாவும் இந்தியாவுக்குப் புறப்பட்டிருந்தனர்.
சிவரூபன் நந்தினியோடு காலையிலேயே எழுந்து சூப்பர் மார்கெட்டுக்குப் போவது, பகல் உணவை வெளியே எங்கேயும் பார்ப்பது, நேரம் கிடைத்தால் எங்காவது செல்வது என்று திருமணமானதிலிருந்து வீட்டில் தங்குவதே இல்லை. உறக்கத்துக்கு மட்டுமே வீடு என்று இருந்தார்கள்.
அவ்வப்போது பார்ட்டி, வெளியே உண்பது, ஒரு நாள் டூர் போன்று பைக்கில் சுற்றுவது, அவற்றை எல்லாம் முகப்புத்தகத்தில் பதிவேற்றுவது என்று அவன் மொத்தமாக மாறி இருந்தான். நந்தினி கொழும்பிலிருந்து வரும்போதே வேலையை விட்டிருந்தாளாம் என்பது எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சி. அரசாங்க உத்தியோகமாயிற்றே!
“ஏனடா? அநியாயம் எல்லா?” என்ற செந்தாளனிடம், “அரசாங்க உத்தியோகம் மட்டும்தான் வேலையா அண்ணா? அவளுக்குச் சொந்தமா தொழில் செய்யத்தான் விருப்பமாம். ஈவண்ட் பிளானிங் ஆரம்பிக்கப் போறாளாம். அதான் ஒரு ஆறு மாதத்துக்கு என்னோட இருந்திட்டு மெல்ல மெல்ல அதைப் பற்றி டீடெயில்ஸ் எடுத்துக்கொண்டு ஆரம்பிக்கச் சொன்னனான்.” என்றான் அவன்.
செந்தாளனுக்கு இது மிகுந்த அதிர்ச்சி. தன் தம்பியா என்று நம்ப முடியவில்லை. அவள் அந்தத் துறையில் நிலையாகக் கால் ஊன்றும் வரையில் பிள்ளை வேண்டாம் என்றும் இருக்கிறார்களாம். வேகமாகத் திரும்பிக் கானவியைத் தேடினான். அவள் அங்கே இல்லை. அறையில் இருந்தாலும் அவளுக்குக் கேட்காமல் இராது.
என்ன நினைப்பாள் அவனைப் பற்றி?
அரசாங்க வேலையில் நல்ல சம்பளத்தில் இருந்தவள் வேலையை விட்டுவிட்டு வந்ததைப் பற்றித் துளியும் கவலை கொள்ளாது, மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற நினைக்கும் அவன் எங்கே, நீ எங்கே என்று நினைப்பாளோ?
மேலே யோசிக்கக் கூட முடியாமல் நின்றான் செந்தாளன்.
உண்மையில் அவன் உலகம் மிகச் சின்னது. அவன் பார்வைக் கண்ணோட்டமும் மிகத் தீவிரமானது. அப்படித்தான் சிவரூபனையும் எண்ணியிருந்தான். அதுவரையில் அவனும் அப்படித்தான் இருந்தான். திருமணம் ஆனதும் அப்படியே தலைகீழாக மாறிப்போவான் என்று யோசிக்கவில்லை.
அப்படியும் சொல்வதற்கில்லை. தன் முன்னேற்றத்தில் கவனமாக இருந்த அதே நேரத்தில் வாழ்க்கையையும் அனுபவிக்கிறான் என்றே தோன்றிற்று. முக்கியமாகச் சிரித்தே இருக்கும் அவர்கள் முகங்கள், தான் எவ்வளவு வறட்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்று சொல்வது போலிருந்தது.
புவனாம்பிகைக்கும் சின்ன மகனின் செயல்களில் பெரும் மனவருத்தம்தான். சிந்துஜாவும் இல்லை. வீடே வெறிச்சோடிப்போனது போலொரு நிலை. நிலவன் மட்டுமே புவனாம்பிகைக்கும் சற்குணத்தாருக்கும் ஆறுதலாக இருந்தான்.
ஒரு நாள் இரவு தண்ணீர் அருந்தக் குசினிக்கு வந்தவனிடம், “தம்பி, என்னப்பு இது? எல்லா நாளும் அவாவையும் கூட்டிக்கொண்டு திரிஞ்சா எப்பிடி அப்பு? வீட்டில விட்டாத்தானே எங்களோடயும் பழகுவா. அண்ணா இப்பிடித்தான் ஒவ்வொரு நாளும் அண்ணியக் கூட்டிக்கொண்டு திரிஞ்சவரா?” என்றார் மனம் கேளாமல்
“அவே வாழுறதுக்கு பெயர் வாழ்க்கையாம்மா? அவர் ஒரு பக்கம், அவா ஒரு பக்கம் எண்டு என்னத்துக்குக் கலியாணம் கட்டினவையாம்? பிள்ளையை மட்டும் பெத்து வச்சிருக்கினம். இதில நீங்க எங்களையும் அவேய மாதிரி வாழச் சொல்லுறீங்க!” அவன் பட்டென்று சொன்னதும் அவரே அதிர்ந்து போனார்.
“தம்பி, என்ன கதை இது? அண்ணான்ர காதில விழுந்தா என்ன நினைப்பார்?” என்று பதறினார்.
“வேற என்ன சொல்லச் சொல்லுறீங்க? அவள் வந்தா எனக்கு எவ்வளவோ உதவி அம்மா. அவள் கடையைப் பாக்க, நான் வெளி வேலைகளைக் கவனிக்கிறன். ஆனா யோசிக்காதீங்க. இது எல்லாம் கடைய இன்னும் கொஞ்சம் பெருசாக்க மட்டும்தான். பிறகு வேலைக்கு இன்னும் ரெண்டு பேரப் போட்டுட்டு பிரீயாகத்தான் எனக்கும் விருப்பம்.” என்றுவிட்டுப் போனான் அவன்.
வெக்கையாக இருக்கிறது என்று கிணற்றடிக்குச் சென்று உடல் கழுவிக்கொண்டு வந்த செந்தாளனின் காதிலும் இதெல்லாம் விழுந்துவிட அப்படியே நின்றுவிட்டான். அதுவும், ‘பிள்ளையை மட்டும் பெத்து வச்சிருக்கினம்’ எனும் வார்த்தையில் கொதித்துப் போனான்.
பெரும் பாடுபட்டுத் தன்னை அடக்கிக்கொண்டு வந்து கட்டிலில் சரிந்தவனால் உறங்கவே முடியவில்லை.
மெல்லத் திரும்பிப் பார்த்தான். மகனை உறங்க வைக்க என்று படுத்தவளும் உறங்கி இருந்தாள். நிலவன் பின் பக்கத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு குப்புறப் படுத்திருந்தான். தன்னிச்சையாய் அரும்பிய முறுவலோடு அவன் தலையை இதமாக வருடிவிட்டவனுக்குச் சிவரூபன் அவனைக் குறித்துச் சொன்ன வார்த்தைகள் மிகுந்த மன வேதனையைத் தந்தன.
அவன் சொன்னதுபோல இன்றைக்கு அவர்கள் இருவரும் இரண்டு திசையில் நிற்கலாம். ஆனால், கடிந்துகொண்டாலும் கண்டிப்போடு நடத்தினாலும் அவனையே சுற்றி சுற்றி வந்த அவளுக்கும், வெளியே காட்டிக்கொள்ளாத போதும் பைத்தியக்காரனைப் போல் அவளை நேசித்த அவனுக்கும் பிறந்தவன் அவர்களின் நிலவன். அதன்பிறகுதான் எல்லாம் மாறிப்போனது.
துள்ளலும் துடிப்பும் மிகுந்த அவள் எத்தனை அழகான வாழ்க்கையை அவனுக்குத் தந்திருக்கிறாள் என்று இப்போதுதான் மெல்ல மெல்ல உணர்கிறான். இன்றைக்கு அவள் பொறுப்பாக இருக்கிறாள், மகனுக்கு நல்ல அன்னை, இதை நீ திருத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்வதற்கு அவனிடம் எதுவுமில்லை, சமையல் கூட அன்னையோடு சேர்ந்து பழகுகிறாள். எல்லாம் அவன் விரும்பிய மாற்றங்கள். ஆனால் அந்தச் சந்தோசம்? உற்சாகம்? எல்லாமே காணாமல் போயிருந்தன. அவன் அறைக்குள் வந்தாலே அவன் உலகத்தைத் தலைகீழாக மாற்றிவிடும் அந்த மந்திரக்கோல் தொலைந்து போயிற்று.

