இடைவெளி வலிக்குதே 26 – 2

நாளாக நாளாக அவள் அருகிலேயே இருப்பதாலா, இல்லை அவனுக்குள் நடந்த தன் உணர்வுப் புரிதலா தெரியவில்லை, மனம் மனைவியோடு சமாதானமாகிவிட ஆசைகொண்டது. சிவரூபனின் நடவடிக்கைகளும் அவன் எங்கே தவறினான் என்றும் உணர்த்திற்று.

இரண்டு நாள்களில் வீட்டுக்கான வரைபடம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டுவந்து அவளுக்குக் காட்டினான்.

“உனக்குப் பிடிச்சிருக்கா?”

மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, “நல்லாருக்கு.” என்றாள் சுருக்கமாக.

“உனக்குப் பிடிச்சிருக்கா எண்டு கேட்டனான்.”

பதில் சொல்லாமல் திரும்பி அவனைப் பார்த்தாள்.

“இது உங்கட வீடு. இதில நான் சொல்ல என்ன இருக்கு?”

“என்ர வீடு இல்ல. எங்கட வீடு! நீ, நான், தம்பி மூண்டு பேரும் வாழப்போற வீடு.” என்றுவிட்டுப் போனான் அவன்.

அவன் இல்லாத நேரத்தில் எடுத்துப் பார்த்தாள். பெரிய விறாந்தை. விசாலமான மூன்று அறைகள். உண்ணும் மேசை போடும் அளவிலான பெரிய சமையலறையைக் கண்டவள் புருவங்கள் உயர்ந்தன. வீட்டுடனேயே குளிக்கும் வசதியுடன் கூடிய பாத்ரூம். இவற்றோடு சேர்த்து அவன் சொன்னது போலவே அவளுக்கான நீட்டு ஹோல் போன்ற ஒன்றும் இருந்தது. வீட்டின் ஒரு பக்கச் சுவரோடு அது வந்தாலும் தனியாக இருந்தது. முன்னால நீட்டு ஹோலும் பின்னால் பொருட்கள் வைத்தெடுக்க ஒரு அறை.

அதையே பார்த்துக்கொண்டு இருந்தவள் உள்ளத்தில் மெல்லிய நெகிழ்வு. இப்போதெல்லாம் அவன் அடிக்கடி இணைய வாயிலாக வகுப்புகள் எடுப்பதால் இன்னொரு அறையும் அதற்கென்றே தனியாகக் கட்டலாம் என்று அவள் சிந்தனை அது பாட்டுக்கு ஓடிற்று. ஆனாலும் அவனிடம் வாயைத் திறந்தாள் இல்லை.

*****

தைபொங்கல் வர இருந்தது. அன்று காலையில் கல்லூரிக்குப் புறப்படுகையில், “பின்னேரம் நாலு மணிபோல வாறன். வெளிக்கிட்டு நில்லு, உடுப்பெடுத்துக்கொண்டு வருவம்.” என்றதும் அவளுக்குள் என்னென்னவோ பழைய நினைவுகள் எல்லாம் வந்து குவிந்தன.

சற்றே தடுமாறிப்போனாள் கானவி. அவளிடம் பதில் இல்லாமல் போனதில் திரும்பிப் பார்த்த செந்தாளனும் அவள் முகத்தைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான். “வெளிக்கிட்டு நில்லு. அப்பதான் இருட்ட முதல் திரும்பலாம்.” என்று அவளைக் கவனியாதவன் போன்று சொன்னான்.

“இல்ல, அது தம்பியோட கஷ்டம்.”

“என்ன கஷ்ட்டம்? நீ மேக்கப் வகுப்புக்குப் போன நேரமெல்லாம் அம்மாவோட நிண்டவன் தானே?” என்றவன் உடனேயே புவனாம்பிகையை அழைத்து, “அம்மா, பின்னேரம் உடுப்பு எடுக்கப் போகோணும். தம்பியக் கொஞ்ச நேரம் வச்சிருப்பீங்களா?” என்று கேட்டான்.

மகனிடம் மாற்றம் வரத் துவங்கிவிட்டதைக் கவனித்துக்கொண்டிருந்த புவனாம்பிகை விடுவாரா? “என்ன கேள்வி இது? அது நான் பாப்பன். நீங்க போயிற்று வாங்கோ. சிவா, நந்தினிக்கும் பாத்து நல்லதா எடுத்துக்கொண்டு வாங்கோ.” என்று அவர் பங்குக்கும் ஒரு பொறுப்பைக் கொடுத்தார்.

அதற்குமேல் அவளால் மறுக்க முடியவில்லை. அவன் வரும்போது தயாராகி நின்றாள். பார்த்தவனுக்குள் உள்ளூர மெல்லிய குதூகலம். வேகமாகக் குளித்துத் தயாராகி வந்து, புவனாம்பிகை தந்த தேநீரையும் நின்ற நிலையிலேயே வாய்க்குள் ஊற்றிக்கொண்டு புறப்பட்டான்.

அவர்கள் ஒன்றாகப் போவதைப் பார்த்திருந்த புவனாம்பிகைக்கு உள்ளம் நெகிழ்ந்து போயிற்று. ‘கடவுளே ரெண்டு பேரும் சமாதானம் ஆகிடோணும்’ என்று வேண்டிக்கொண்டார்.

சரியாகச் சொல்லப்போனால் அவள் அவன் பணத்தைத் தொடுவதற்கு முதல் இப்படி அவனோடு போயிருக்கிறாள். அதற்குப் பிறகு இன்றுதான். இத்தனை நாள்களாக முகத்தில் எதையும் காட்டாமல் நடமாடியவளால் இன்று முடியவில்லை. விழிகள் கரித்துக்கொண்டு வந்தன.

அப்போதெல்லாம் பைக்கில் பயணிக்கையில் அவனோடு ஒட்டிக்கொள்ள, அவன் இடையைக் கட்டிக்கொள்ள எல்லாம் அவளுக்குப் பிடிக்கும். அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. கடுமையாக மறுத்துவிடுவான். முகம் வாடினாலும் தன் அன்பை, அவன் மீதான பிரியத்தை அவள் காட்ட மறந்ததே இல்லை. அதற்கெல்லாம் கிடைத்த பரிசு?

நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்த வேதனையை என்ன முயன்றும் அவளால் விழுங்க முடியவே இல்லை. செந்தாளனும் கண்ணாடி வழியே அவளைத்தான் கவனித்துக்கொண்டிருந்தான். அவனுக்குள்ளும் அதே நினைவுகள்தான். இன்றைக்கு அன்று அவன் சொன்ன இடை வெளியையும் தாண்டித் தள்ளி அமர்ந்திருந்தாள் அவள். அவனுக்கு அது பிடிக்கவே இல்லை.

“எங்க போவம்?” மெல்லப் பேச்சுக் கொடுத்தான்.

அவள் பதில் சொல்லவில்லை.

“நீ எப்பவும் போவியே, அங்கயே விடவா?”

அவன் ஒருவன் பேசவே இல்லை என்பதுபோல் அமர்ந்திருந்தாள் அவள். அவன் பைக்கை நிறுத்திவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“இன்னும் இப்பிடியே எத்தின நாளைக்கு இருக்கப் போறாய்?” என்றான் முகத்தில் இறுக்கத்தோடு.

“அண்டைக்கு நீ சொன்ன மாதிரி நான் வார்த்தைகளை விட்டுட்டேன்தான். அதெல்லாம் பிழை எண்டு எனக்கும் விளங்குது. ஆரம்பம் முதலே உன்னைப் பற்றின பிழையான கணிப்பீடு அதுக்குக் காரணமாப் போச்சு. அதுக்கு சொறி. ஆனா, நீயும் நிறைய விசயங்களில பிழை விட்டிருக்கிறாய். தம்பி உருவான நிமிசத்தில இருந்து பிறந்து மூண்டு மாதம் வரைக்கும் அவனைப் பற்றின விசயம் ஏதாவது எனக்குத் தெரியுமா எண்டு சொல்லு பாப்பம்? என்னைப் பாத்துப் பயந்து வீறிட்டு அழுறான் அவன். அவன் என்ன உனக்கு மட்டுமே சொந்தமான பிள்ளை எண்டு நினைச்சியா நீ? ஆனாலும் அதையெல்லாம் கடந்து, நாங்க மூண்டு பெரும் ஒரு குடும்பமா வாழ எனக்கு விருப்பமா இருக்கு. மாட்டன், நான் முறுக்கிக்கொண்டுதான் நிப்பன் எண்டு நிண்டா என்னாலயும் ஒண்டும் செய்யேலாது.” என்றுவிட்டு மீண்டும் பைக்கை கிளப்பினான்.

அதன் பிறகு ஒருவிதமான திகைத்த நிலையில்தான் அவனுடன் பயணித்தாள் கானவி. ஆரம்ப காலத்தில் இருந்த அவளின் பொறுப்பற்ற குணங்கள் எவ்வளவு தவறானவை என்பதை எப்போதோ உணர்ந்துகொண்டாள்தான். ஆனால், மகன் என்ன உனக்கு மட்டுமே சொந்தமானவனா என்கிற கேள்வி அவளைப் பெரியளவில் அசைத்திருந்தது.

அதற்குப் பிறகு எங்குப் போவது என்று அவன் கேட்கவில்லை. அவள் வழமையாகப் போகும் கடைக்கு விட்டான்.

“ஏதும் பட்ஜெட் இருக்கா?” கடைக்குள் நுழைகையில் அவளிடமிருந்து வந்த கேள்வியை மெல்லிய ஆச்சரியத்தோடு உள்வாங்கிவிட்டு, “அப்பிடி எல்லாம் இல்ல. பொங்கலுக்குப் போடுற மாதிரி எடு.” என்றான் அவன்.

முதலில் சிவரூபனுக்கும் நந்தினிக்கும் எடுத்தாள். முக்கியமாக அவை ஒரே நிறத்தில் இருக்காமல் பார்த்துக்கொண்டாள். சிந்துஜா மனோகரனையும் மறக்கவில்லை.

அடுத்தது சற்குணம் புவனாம்பிகைக்கு. அவர்களை எண்ணியதுமே உள்ளம் நெகிழ்ந்து போயிற்று. அவளின் பல செயல்கள் அவர்களைக் கோபம் கொள்ள, குறை நினைக்க வைத்திருக்கும். ஆனாலும் இன்றுவரையில் அதைக் காட்டிக்கொண்டதே இல்லை. அத்தனை அன்பான மனிதர்கள். நெஞ்சில் பாசம் சுரக்க, ஆசையாசையாக அவர்களுக்கு இவ்விரண்டு உடைகள் பார்த்து எடுத்தாள்.

“மாமா மாமிக்கும் எடு.” என்றான் அவன்.

“இல்ல…” என்றவளை இடையிட்டு, “எடு கானவி!” என்றான் அழுத்தி.

அதன் பிறகு அவள் மறுக்கவில்லை. உள்ளத்தில் மெல்லிய இதமும் பரவிற்று. அடுத்தது நிலவனுக்கு. “தம்பிக்கு ரெண்டு மூண்டு எடு.” என்றான் ஆசையாக.

“அவர் டக்டக்கென்று வளந்திடுவார். பிறகு அளவில்லாமப் போயிடும்.” என்றவள் ஒன்று நல்லதாகவும் இன்னொன்று சாதாரணமாகவும் எடுத்தாள்.

இப்போது அவனுக்கா அவளுக்கா? அவளுக்குள் ஒரு படபடப்பு. அவனும் இவ்வளவு நேரமாக இதற்குத்தானே காத்திருக்கிறான்.

“நீங்க உங்களுக்கு எடுக்கேல்லையா?” என்றாள் தன் முன்னால் கிடந்த மகனுக்கான உடைகளை ஆராய்கிறவள் போன்று.

எல்லோருக்கும் அவள் தெரிவு செய்துவிட்டு அவனுக்கு மட்டும் அவனை எடுக்கச் சொல்லுவாளா? மனத்தில் மெல்லிய ஏமாற்றம் பரவினாலும், “எனக்கும் நீயே எடு.” என்றான் அவன்.

“இவருக்குக் காட்டுங்க” என்று கேட்டு ஆண்களுக்கான பிரிவுக்குச் சென்றனர். அங்கே அவனுக்கு அளவான ஷேர்ட்டுகளை தொட்டபோது அவள் கைகள் மெலிதாக நடுங்கின. நெஞ்சுக்குள் உணர்வலைகள் பொங்கி எழுந்தன. ஆசையாசையாக அவன் மீது வைத்துப் பார்த்து, அவன் சினந்தாலும் விடாமல் போட வைத்து, தனக்குப் பிடித்தது போன்று அவனுக்கு எடுத்த நாள்கள் எல்லாம் நினைவில் வந்து அவளை வருத்தின.

இன்றைக்கு அவளால் எதையும் தெரிவு செய்ய முடியவில்லை. கண்கள் கலங்கி, எதுவும் தெளிவாய்த் தெரியமாட்டேன் என்றது. அவன் முன்னே அழவும் பிடிக்கவில்லை. கண்ணீரை மறைக்கவும் முடியவில்லை.

அவன் நிலையும் அதேதான். அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை. இயல்பு போன்று அவள் கரம் பற்றி அழுத்திக் கொடுத்துவிட்டு, அவளுக்குப் பிடித்த மெல்லிய மெரூன் நிறத்தில் இருந்த ஒரு ஷேர்ட்டை காட்டி, “எனக்கு இது பிடிச்சிருக்கு. இதையே எடு!” என்று
அவளிடம் எடுத்துக் கொடுத்தான்.

அதற்குமேல் அங்கே நிற்கவில்லை கானவி. ஆண்கள் பிரிவை விட்டு வெளியே வந்திருந்தாள்.

இனி அவளுக்கு. விலை பாராமல் அவளுக்குப் பிடித்ததாக எடுத்துக்கொடுக்கும் ஆசை எழுந்தது அவனுக்கு. அவன் அப்படிப் பார்க்க அவளுக்கோ பொருளற்ற கோபம் ஒன்று சட்டென்று கிளர்ந்தது. அங்கே கிடந்த ஒரு சாதாரண சட்டையை எடுத்து, “எனக்கு இது போதும்.” என்றாள்.

“அது வேண்டாம். இது நல்லாருக்கா பாரு.” என்று ஒரு அழகான சோளி ஒன்றை எடுத்துக் காட்டினான். அவள் அதை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. “நான் எடுத்ததே போதும்.” என்று நின்றாள்.

“இன்னும் கொஞ்சம் நல்லதா எடன்.” தான் எடுத்தது பிடிக்கவில்லையோ என்றெண்ணிச் சொன்னான்.

“ஏன், நீ வேற என்ர குடும்பம் வேற எண்டு பிரிச்சுக் காட்டுறியா எண்டு நீங்க கேக்கவா?” பட்டென்று சினம் தெறிக்கும் குரலில் வினவினாள்.

அவனுக்குச் சுறுசுறு என்று ஏறிக்கொண்டு வந்தது. அவளை உறுத்து விழித்துவிட்டு அதன் பிறகு வாயைத் திறக்கவே இல்லை. பேசாமல் நின்றுகொண்டான். புவனாம்பிகைக்கும் அவள் அன்னைக்கும் எடுத்த சேலைகளுக்கு பிளவுசுகளுக்கான துணிகள், உள்பாவாடைகள் எல்லாம் எடுத்து முடித்துவிட்டு, “அவ்வளவுதான்.” என்று அவள் சொல்ல வந்ததே அவனுக்கொரு கோபம்.

அவள் அவளுக்கென்று எடுத்து வைத்திருந்ததைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தான் எடுத்ததையே எடுத்து வைத்து, “இப்ப பில்ல போடுங்க.” என்றான்.

error: Alert: Content selection is disabled!!