இடைவெளி வலிக்குதே 28 – 1

அத்தியாயம் 28

சொன்னது போலவே ஒரு வாரத்துக்கு முதலே கானவியையும் மகனையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தான் செந்தாளன். கட்டாயக் காரணங்கள் எதுவும் இல்லாமல் அவனாக வருவது இதுதான் முதல் முறை என்பதில் மொத்த வீடும் பரபரப்புற்று நின்றது. கிட்டத்தட்ட குட்டி விருந்து ஒன்றை விசாலாட்சி படைத்திருக்க, ஓடி ஓடிக் கவனித்தார் அருந்தவராஜா.

அவர்களைப் பார்க்க அவனுக்கே ஒருமாதிரியாயிற்று. இப்படி எல்லாம் வேண்டாம், சாதாரணமாக இருங்கள் என்று சொல்ல முடியாமல் நின்றான்.

உணவு முடிந்தது. இனி அவன் புறப்பட வேண்டும். மானதேயில்லாமல் கானவியின் அறையில் மகனோடு அமர்ந்திருந்தான்.

அப்போது,
பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ… வேறில்லை என்ற வரிகளைக் கானவியின் கைப்பேசிஇசைத்தது.

நிமிர்ந்து அவளைப் பார்த்தான். கடம்பன் அழைத்ததால் அழைப்பை ஏற்று அவள் பேசிக்கொண்டிருக்க, இவன்தான் எப்படி உணர்கிறோம் என்று தெரியாமல் நின்றான்.

மகன் மீதான அன்பைச் சொல்லும் பாடல்தான். ஆனால், அவளுக்குப் பிடித்த பாடல், செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலாயிற்றே! இப்போது இல்லையோ?
இதற்குள் கடம்பன் அவனோடு பேசப்போவதாகச் சொல்லவும் கைப்பேசியைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள் அவள்.

அவள் விழிகளையே பார்த்தபடி வாங்கினான். அங்கே கடம்பனோடு கதைத்தாலும் அவன் பார்வை இங்கே அவளிடமே இருந்தன. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் பார்க்கிறான்? என்ன கேட்க வருகிறான்? ஒரு நிலைக்கு மேல் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் நழுவி, வெளியே வந்தாள்.

சற்று நேரத்தில் கைப்பேசியைக் கொண்டு வந்து அவளிடம் நீட்டிவிட்டு, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டான் செந்தாளன்.

அதுவரை தெரியாத ஒன்று அவளைத் தாக்கிற்று. போகிறவனையே பார்த்து நின்றாள். அவர்களின் கேட் வரை சென்றவன் மறையப்போகும் கணத்தில் திரும்பி அவளைப் பார்த்துவிட்டுப் போனான். அப்படியே நின்றுவிட்டாள் கானவி. முதன் முதலாக டவுனில் வைத்து அவன் பார்த்த பார்வை கண்முன்னே வந்து போனது.

அன்று குழப்பத்தையும் கேள்வியையும் தந்த நிகழ்வு, இன்று அவள் உள்ளத்தினுள் புகுந்து என்னென்னவோ செய்தது. பேசாமல் சென்று மகனருகில் அமர்ந்துகொண்டாள். கணவனின் நினைவே அவளைச் சுற்றிச் சுழன்றது. அவனிடம் நிறைய மாற்றங்கள். கண்கூடாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். இத்தனை நாள்களாக அதற்கெல்லாம் மசியமாட்டேன் என்று நின்ற மனது, இன்று மழையை உள்வாங்கிய மண்ணாய் இளகி நின்றது.

அதன் பிறகும் என்ன வேலை பார்த்தாலும் பின்னணியில் அவன் நினைவுகள் ஓடிக்கொண்டே இருந்தன.

திடீரென்று அவள் கைபேசி,‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா’என்று பாடவும் திகைத்துப்போனாள். உள்ளத்தினுள் என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் பாய்ந்தன. அழைப்பது குமரன் என்று அறிந்து அழைப்பை ஏற்றாலும் அவளால் அவன் பேச்சில் கவனம் செலுத்தவே முடியவில்லை.

அவள் வந்துவிட்டாளா என்று அறிய எடுத்திருந்தான் அவன். அவன் வைத்த பிறகும் கொஞ்ச நேரத்துக்குக் கைப்பேசியைக் கையில் பற்றியபடி அப்படியே அமர்ந்திருந்தாள். இந்தப் பாட்டை அவன்தான் மாற்றியிருக்க வேண்டும். என்ன சொல்ல வருகிறான்? அல்லது மகனோடு போட்டி போடுகிறானா என்ன என்று நினைத்த மாத்திரத்தில் அவள் உதட்டில் குட்டியாய்ச் சிரிப்பு அரும்பிற்று.

கூடவே, மனத்தில் இதம் ஒன்று பரவுவதைத் தடுக்கவே முடியாமல் போயிற்று. கணவன் மீதான நேசம் மீண்டும் துளிர்க்கும் சத்தங்கள் அவளுக்குள்.

குமரன் லதாங்கியை அழைத்துக்கொண்டு வந்திருந்தான். போடப்போகும் மேக்கப்புகள் பற்றி, தலையலங்காரங்கள் பற்றி எல்லாம் கலந்து பேசி, போட்டுப் பார்த்து, எது நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யும் வரையில் நிலவனைக் குமரன் பார்த்துக்கொண்டான். இரவு உணவையும் அங்கேயே முடித்துக்கொண்டு அவர்கள் புறப்பட, மகனோடு அறைக்குள் ஒதுங்கியவளுக்கு மீண்டும் கணவனின் நினைவே.

போகும்போது ஏன் அப்படி பார்த்துவிட்டுப் போனான்? என்னை விட்டுத் தள்ளி இருப்பாயா என்று கேட்டானா, இல்லை, அதற்கு உன்னை நான் விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா என்று சொல்லாமல் சொன்னானா? விளையாடிக்கொண்டிருந்த நிலவனைப் பார்க்க பார்க்க அவனோடு போட்டிக்கு வந்த தகப்பனே கண்களுக்குள் வந்து நின்றான்.

‘பாக்கிறது வாத்தி வேல. இதில குழந்தைப் பிள்ளை மாதிரிப் போட்டிக்கு வாறார்…’ அவள் உதடு கடித்துச் சிரிப்பை அடக்கியபோது அவனே அழைத்தான்.

அதே,
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என்மீது மோதுதம்மாதான்.

அவளுக்குள் ஒருவித இனிய படபடப்பு. இருக்கிற மனநிலையில் அவனை இயல்பாய் எதிர்கொள்ள முடியும்போல் தெரியவில்லை. என்ன செய்ய என்று யோசிக்கையிலேயே அழைப்பு நின்றிருந்தது.

ஒரு சில நொடிகளின் இடைவெளியில் மீண்டும் அழைத்தான். வேறு வழியற்று அழைப்பை ஏற்றாள்.

“வேலையா நிக்கிறியா?” காதுக்குள் கேட்ட அவன் குரலில் அவள் தடுமாறினாள். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “இல்ல, தம்பிய நித்திரையாக்க வந்தனான்.” என்றாள் மெல்லிய குரலில்.

“ஓ! நான் குழப்பிட்டனா?”

“இல்ல… அவர் இன்னும் விளையாடுறார்.”

“பேந்து(பிறகு)?”

என்ன பிறகு? இன்றுதான் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனான். அதற்குள் சொல்ல என்ன இருக்கிறது?

“கானவி?”

“ம்?”

“என்ன?”

“இல்ல ஒண்டும் இல்ல.”

இப்படி இலகுவாய் எல்லாம் அவர்கள் பேசிக்கொண்டது இல்லையே. உண்டாகிப்போன விலகல் வேறு வாயைக் கட்டிப்போட்டது.

“என்ர நம்பர் உனக்கு எப்பிடிக் கிடைச்சது?” மெல்லிய மௌனத்தின் பின் சின்ன சிரிப்புடன் வினவினான்.

அவன் நம்பரை எடுத்து, அவனுக்கு ஆர்வமாய் அழைத்து, வாங்கிக் கட்டியது எல்லாம் நினைவு வந்தபோது இருந்த நல்ல மனநிலை மங்கிப்போன உணர்வு. அவள் அமைதியாய் இருக்க அவன் விடவில்லை.

“சொல்லன்.”

“அது… உங்கட டியூஷன் செண்டர்ல ஸ்பெஷல் கிளாசுக்கு எண்டு கேட்டு வாங்கினான்.” இவ்வளவு காலமும் அவன் கேட்டபோதெல்லாம் விளையாட்டாகச் சொல்லாமல் இருந்தவள் இன்று சொன்னாள்.

அதைக் கேட்டவனால் உடனே எதுவும் சொல்ல முடியாமல் போயிற்று. தன்னோடு பேசிவிடுவதற்காக அவள் பெரும் முயற்சி எடுத்திருக்க, அவனானால் இலகுவாய் அவளைக் காயப்படுத்திவிட்டான். “சொறி!” என்றான் தன்னிச்சையாய்.

அவளுக்கும் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. ஒன்றும் சொல்லாமல் இருக்க, “முதல் தெரியேல்ல. ஆனா இப்ப நீயும் தம்பியும் இல்லாம அறைக்க வரவே விசரா இருக்கு.” என்றான் அவன்.

அதற்கும் என்ன சொல்ல என்று தெரியாது அமைதி காத்தாள் அவள்.

“சாப்பிட்டியா?”

“ம்!”

வேறு என்ன பேசுவது? இருவருக்கிடையில் மீண்டும் அமைதி.

“வேற என்ன? வைக்கவா?”

“ம்.”

அவனுக்கு வைக்க மனமில்லை. அதே நேரம் பாரம் ஏறிவிட்ட மனத்தோடு என்ன கதைக்க என்றும் தெரியவில்லை. அடுத்த நாள் பள்ளிக்கூடமும் இருந்ததில், “தம்பி கவனம்.” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அந்தப் பாட்டை மாற்ற வேண்டும் போல் இருந்தாலும் மாற்றக் கை வராமல் அப்படியே விட்டுவிட்டாள். அதன் பிறகான கானவியின் நாள்கள் அவள் கையிலேயே இல்லை. முதன் முறையாக ஒரு திருமணப் பெண்ணை அலங்கரிக்கப் போகிறாள். பெரும் பொறுப்பு. அதைவிட, தமையன் அவளை நம்பி ஒப்படைத்திருக்கிறான். அவன் நம்பிக்கையையும் காப்பாற்றி, அவளால் முடியும் என்று நிரூபிக்க வேண்டும்.

தினமும் இரவுகளில் அழைப்பான் செந்தாளன். அதுவும் இப்போதெல்லாம் வீடியோ கோலில் வர ஆரம்பித்திருந்தான்.

முதல் அவள் இங்கே வந்திருந்த பொழுதுகளில் எல்லாம் இப்படித் தேடவில்லையே என்று மனம் முரண்டினாலும் அவனிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை அவள்.

அன்று ஒரு வீம்புடன் இருந்துவிட்ட செந்தாளானால் உண்மையில் இந்த முறை முடியவேயில்லை. மகனும் ஒரு காரணமென்றால் என்னவோ மனம் அதிகமாக மனைவியைத் தேடிற்று.

திருமண நாளும் விடிந்தது. செந்தாளனின் மொத்தக் குடும்பமும் தயாராகி மண்டபத்துக்கு வந்தபோது, ஒரு வாரத்துக்குப் பிறகு தகப்பனைக் கண்ட நிலவன் பாய்ந்து வந்தான். கானவியைக் காணக் கிடைக்கவில்லை. அதிகாலையிலேயே மணப்பெண்ணை அலங்கரிக்கச் சென்றுவிடுவேன் என்று முதல் நாள் சொல்லியிருந்தாள். அதில் மகன் பொறுப்பைச் செந்தாளன் எடுத்துக்கொள்ள, விசாலாட்சி மற்ற வேலைகளைக் கவனிக்கலானார்.

error: Alert: Content selection is disabled!!