அத்தியாயம் 29
திருமணம், கொண்டாட்டம், அங்குமிங்குமாக அலைச்சல் என்று எல்லாம் முடிந்து எல்லோர் வாழ்க்கையும் வழமைக்குத் திரும்பி இருந்தது. அங்கே சிந்துஜா இன்னும் ஆறு மாதங்களேனும் தங்கியிருக்க வேண்டி வருமாம் என்று சொல்லியிருந்தாள். புவனாம்பிகைக்கு அது கவலையைத் தந்தாலும் குழந்தை கிடைப்பதற்குச் சாத்தியங்கள் அதிகம் என்று சொன்னது பெரும் ஆறுதலைத் தந்திருந்தது.
அவளுக்கும் செலவுக்கு என்று தன் பங்காகப் பெரிய தொகை ஒன்றைக் கொடுத்திருந்தான் செந்தாளன். அதே நேரம், இங்கே தன் வீட்டு வேலைகளையும் ஒரு நல்ல நாளில் ஆரம்பித்திருந்தான்.
கானவிக்கும் ஒன்றிரண்டு விழாக்களுக்கு மேக்கப் போடும் வேலை வர ஆரம்பித்திருந்தது. கையும் கணக்கும் சரி என்பது போன்ற தொகையையே அவள் வாங்கவும் புவனாம்பிகைக்கு மனம் கேட்கவில்லை.
“நீங்க மெனக்கெடுற நேரத்துக்கே இது போதாதேம்மா. கொஞ்சம் கூட வாங்கலாமே.” என்று சொன்னார்.
அவள் முகத்தில் மெல்லிய புன்னகை. “அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் இருக்கு மாமி. இப்ப எனக்குத் தேவை கஸ்டமர்ஸ். குறைஞ்ச காசு சொன்னாத்தான் என்னைக் கூப்பிடுவினம். நானும் போட போடத்தான் அது அனுபவமா மாறும். அந்த அனுபவம் எனக்கே ஒரு நம்பிக்கையைத் தரும். அதோட அந்த கஸ்டமர்சே எனக்கான விளம்பரமா மாறுவினம். பிறகு தானாவே நான் வாங்கிற காசு கூடிடும். அப்ப இப்ப விட்டதுக்கும் சேர்த்து உழைக்கலாம். இப்பவே பெரிய தொகை சொன்னா தொழில் ஆரம்பிக்க முதலே படுத்திடும் மாமி.” என்று விளக்கியவளின் தொழில்முறைப் பேச்சில் அசந்துதான் போனார் புவனாம்பிகை.
யாரையும் சோரம் போனவர்கள் என்று எடைபோடுவது எத்தனை பிழையானது என்று அவருக்கே விளங்கினாற்போல் இருந்தது. எல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கும். அதை இனங்கண்டு வளர்த்துக்கொண்டால் பெரும் புகழும் கூடவே உழைப்பும் தன்னாலே வந்துவிடும் என்பதற்கு உதாரணமாக நின்றாள் கானவி.
இப்படி இருக்கையில்தான் ஒருநாள் அலைந்து திரிந்து களைத்துப்போய் வந்தான் சிவரூபன். நந்தினியின் முகமும் அழுது, சிவந்திருந்தது. பார்த்த புவனாம்பிகை, கணவன் மனைவிக்குள் ஏதும் பெரிய சண்டையோ என்று பயந்துபோனார்.
“என்னப்பு, ஏன் இப்பிடி ரெண்டு பேரும் ஒருமாதிரி இருக்கிறீங்க?” என்று வினவினார்.
அவருக்குப் பதில் சொல்லாது தமையனின் முகம் பார்த்தான் அவன்.
“என்னடா?” செந்தாளனுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
“அது அண்ணா, சூப்பர் மார்க்கெட்டுக்கு ஒரு சுவர் நீட்டுக்கும் பிரீசர் போட்டனான். கொஞ்சம் மலிவாக் கிடைக்குதே எண்டு ஒருத்தனப் பிடிச்சா, அது போட்டு ரெண்டு மாதத்திலேயே அடிச்சிட்டுது. ஆளைத் தேடினா ஆள் ஊர்லையே இல்ல. ஏழு லட்சம் மண்ணோட மண்ணாயிற்றுது.” என்று அவன் சொன்னதைக் கேட்டு எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சி.
“என்ன தம்பி இவ்வளவு சிம்பிளா சொல்லுறாய்? எவ்வளவு காசு? என்ர கடவுளே!” என்று நெஞ்சில் கையை வைத்தார் புவனாம்பிகை.
“அதானம்மா எனக்கும் கவலை. இனி என்ன செய்றது எண்டும் தெரியேல்ல. இண்டு முழுக்க அந்தக் கள்ளனைத் தேடியும் கிடைக்கேல்ல. கொழும்புக்கு ஓடிட்டானாம் எண்டு சொல்லினம்.” முகத்தை இரண்டு கைகளாலும் தேய்த்துவிட்டபடி சொன்னான் அவன்.
அப்போதும் அவன் சொல்வதை நம்ப முடியாமல் திகைத்துப்போய்ப் பார்த்திருந்தார் சற்குணம். ஏழு இலட்சங்கள் என்பது சின்ன தொகையா என்ன?
செந்தாளனுக்குக் கண்மண் தெரியாத கோபம்தான் வந்தது. இவ்வளவு பெரிய தொகையில் ஒரு வேலையைச் செய்கையில் இப்படி ஏமாறுவானா? நந்தினியும் அங்கே இருந்ததில், “இனி என்ன செய்யப் போறாய்?” என்றான் வேறு பேசாமல்.
“எப்பிடியும் அவனை நான் சும்மா விடமாட்டன் அண்ணா. பிடிச்சு, ஏமாந்த காச வாங்கிடுவன். ஆனா, இப்ப அவசரமா புது பிரீசர் போட்டே ஆகோணும். அதால உங்களுக்குத் தர எண்டு எடுத்து வச்ச காசை எடுத்துத்தான் புது பிரிட்ஜ்க்கு ஏற்பாடு செய்துபோட்டு வந்திருக்கிறன். இல்லாட்டி வாங்கிப்போட்ட பிரீசர் சாமான் எல்லாம் பழுதாகிடும். அதான்… வீடு கட்டுறது ஒண்டும் அவசர வேலை இல்லையே. அவசரமா வீடு வேணும் எண்டும் இல்லைதானே அண்ணா. அதான் உங்களைக் கேக்காம உங்கட காசை எடுத்திட்டன்.” என்றதும் கானவியைத்தான் அவசரமாகப் பார்த்தான் செந்தாளன்.
அவ்வளவு நேரமாகக் கணவனையே கவனித்திருந்தவள் வேகமாகப் பார்வையை மகனில் பதித்தாள்.
என்னவோ அன்று கானவி கெஞ்சிக் கேட்டு அவன் கொடுக்காததும் இன்று சொல்லாமல் கொள்ளாமல் சிவரூபன் பணத்தை எடுத்துச் செலவு செய்ததும் அவனை இரண்டு விதமாய்த் தாக்கின.
அதைவிட, அவன் ஏமாற மாட்டான், அவனுக்குத் கடை தொடர்பான அத்தனை நெளிவு சுளிவுகளும் தெரியும் என்று அவளிடம் மார்தட்டிய அவன் வார்த்தைகளே அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.
பணத்தை எடுத்துவிட்டு வந்து சொல்கிறவனிடம் என்ன சொல்வது? பேசாமல் எழுந்து வந்து அறைக் கட்டிலில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான். என்னதான் அவசரம் இல்லை என்றாலும் இத்தனை காலம் பொறுத்திருந்து, எல்லோருக்குமான தன் கடமைகளை முடித்துவிட்டு, தனக்கே தனக்கென்று ஆசையாசையாக ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பிக்கையில் என்ன இது என்று மனம் சுணங்கிற்று.
சிவரூபனும் நந்தினியும் அவர்களின் அறைக்குள் அடைந்துகொள்ள, சற்குணத்தாரும் புவனாம்பிகையும் அடுத்த தெருவில் இருக்கும் சற்குணத்தாரின் மச்சாள் முறையான பெண்மணிக்கு உடல் நிலை சரியில்லை என்று பார்த்து வரச் சென்றார்கள். கணவன் என்ன செய்கிறான் என்று பார்க்க மெல்ல அறைக்குள் வந்தாள் கானவி. அவள் வருகையை அவனும் உணர்ந்துதான் இருந்தான். ஆனாலும் தலை நிமிரவில்லை.
இவ்வளவு நாள்களையும் போன்று அது அவன் பிரச்சனை என்று இந்த முறையும் அவளால் போக முடியவில்லை. முறுக்கிக்கொண்டு நிற்கும் அவளையே இழுத்து வைத்து, எப்படியெல்லாம் வீட்டைக் கட்டப்போகிறேன் என்று கதை கதையாகச் சொன்னவனாயிற்றே!
“ஒரு மூண்டு மாதம்தானே. அவர் சொன்ன மாதிரி வீடு ஒண்டும் அவசரம் இல்லையே.” என்றாள் மொட்டையாக.
அப்போதும் அவன் நிமிரவில்லை. என்னவோ வீடு கட்டும் வேலையைத் தள்ளிப்போட மனமேயில்லை அவனுக்கு.
சற்று நேரம் அமைதியில் கழிய, “உன்னால முடிஞ்சா உன்ர நகைகளைத் தாறியா? ஆறு மாதத்துக்க திருப்பி எடுத்துத் தந்திடுவன்.” என்று அவள் முகம் பார்க்காமலேயே கேட்டு முடித்தான்.
ஒருகணம் அசையக்கூட மறந்தவளாக நின்றுவிட்டாள் கானவி. அவளிடம் சத்தமே இல்லை என்றதும் நிமிர்ந்து பார்த்தான். அவள் பக்க அலமாரியைத் திறந்து, நகைப் பெட்டிகளையும் ஒரு பாஸ் புத்தகத்தையும் எடுத்து அவன் அருகில் வைத்துவிட்டு வெளியே வந்தாள் அவள்.
அதிர்வுடன் அவள் போன திசையையே பார்த்தபடி இருந்தான் செந்தாளன். மனைவி என்பவள் எப்போதுமே கணிக்க முடியாதவள்தான் போலும். அவளுக்கு அவன் செய்தவைகளுக்கு அவளுக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் இது. நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போன்று நன்றாக நான்கு கேள்விகளைக் கேட்டிருக்கலாம். அதற்கு மாறாக அவள் செய்தது?
மெல்ல எடுத்து அவளின் பாஸ் புத்தகத்தைத் திறந்து பார்த்தான். அவனுக்குத் தேவையான பணம் அங்கே கிடந்தது.
அவள் நகைகளை மீண்டும் அவள் அலமாரிக்குள்ளேயே எடுத்து வைத்தான். அப்போதுதான் இதயங்கள் சுற்றி இருக்க, நடுவில் செந்தாளன் கானவி என்று எழுதியிருந்த அந்த வளையத்தைக் கண்டான். அவளின் மெகந்தி விழாவின்போது அவள் செய்தது.
கையில் எடுத்து வருடினான்.

