எதிலுமே அவளிடம் ஒரு நேர்த்தி இருக்கும். முதலே திட்டமிட்டு, சின்ன விசயத்தைக் கூடத் தவறவிடாமல் கவனித்து ஏற்பாடு செய்யும் திறன் இருக்கும். அதையெல்லாம் அவன் கவனித்ததே இல்லை. அப்படியும் சொல்ல முடியாது. கவனித்திருக்கிறான். ரசித்திருக்கிறான். அப்படியே அசட்டையாகக் கடந்தும் இருக்கிறான். காரணம் அவள் மீது பெரிய மதிப்பில்லை.
அவள் படிக்கவில்லை, வேலைக்குப் போகவில்லை, வீட்டிலேயே இருந்து காலத்தைக் கழிக்கிறாள், வெளிநாட்டுக் காசு வருவதில் நடை உடையில் பகட்டு என்று அவனாக எடுத்துக்கொண்ட முன்முடிவுதான் இதற்கெல்லாம் காரணம்.
ஒரு நெடிய மூச்சுடன் அறை வாசலுக்கு வந்து அவள் எங்கே என்று பார்த்தான். நிலவனை விறாந்தையின் தரையில் விளையாட விட்டுவிட்டு தொலைக்காட்சியைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவள் அமர்ந்திருந்த விதமே அவளும் தனக்குள் நிறையப் போராடுகிறாள் என்று சொல்லிற்று. சொல்லவோ சொல்லி ஆறவோ யாருமில்லா நிலையில் அனைத்தையும் தனக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டு இருக்கிறாள் என்று விளங்கிற்று.
அறைக்குள் மீண்டும் வந்து, “கானவி!” என்று அழைத்தான்.
அவளிடத்தில் வேகமாய் ஒரு மாற்றம். ஆனாலும் அங்கேயே அமர்ந்திருந்தாள்.
“கானவி, ஒருக்கா வந்திட்டுப் போ!” என்றான் மீண்டும்.
அவளும் வந்து அறை வாசலில் நின்றாள். வெளியே செல்லத் தயாராகிக்கொண்டு இருந்தவன் திரும்பிப் பார்த்தான். இருவர் பார்வையும் கவ்விக் கலந்தன. அவள் பார்வையில் என்ன இருந்தது? அவன் தொண்டைக்குள் எதுவோ சிக்கிக்கொள்ளும் உணர்வு. ஒரு உந்துதலில் கூப்பிட்டுவிட்டான்தான். இப்போது என்ன சொல்ல, என்ன பேச என்று தெரியவில்லை. குரலைச் செருமிச் சீர் செய்துகொண்டு, “உன்ர நகையெல்லாம் அலமாரிக்க வச்சிட்டன். பார் அத.” என்றான்.
அவள் பேசாமல் சென்று அலமாரியைத் திறந்து பார்த்தாள். அப்போது, பின்னிருந்து அணைத்துக்கொண்டான் அவன். அவள் விலக முயல அவன் விடவில்லை. அவளைத் திருப்பித் தன் முகம் பார்க்க வைத்தான்.
தன் உணர்வுகளை மறைக்கப் போராடும் அவளைப் பார்க்க பார்க்க அவன் மனத்தினுள்ளும் என்னென்னவோ உணர்வுகள் பொங்கிக்கொண்டு வந்தன. அவளிடம் நிறையச் சொல்ல ஆசைப்பட்டான். ஒரு வார்த்தை கூட வாயில் வரமாட்டேன் என்றது. தன்னை எப்படியாவது அவளுக்கு உணர்த்திவிட எண்ணி அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
அவள் திமிறினாள். ஊடலுடன் கூடிய ஒரு கோபம். இத்தனை நாள்களும் இல்லாமல் இப்போது என்னவாம் என்று மனம் முறுக்கியது. அவன் விடவில்லை. “பேசாம இரு கானவி!” என்றான் அவள் காதுக்குள்.
“நீங்க விடுங்க!” முணுமுணுத்தபடி அவள் அப்போதும் விடுபட நினைக்க அவன் விடவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் அவளாலும் முடியவில்லை. கணவனின் அணைப்பும் அவன் தவிப்பும் அவளையும் உடைத்தது. சின்ன விம்மலுடன் அவன் மார்பிலேயே சாய்ந்தாள்.
அவள் கண்ணீர் அவன் மார்பைச் சுட்டது. அவன் கைகளிலும் நடுக்கம். என்னவோ இருவரும் ஒருவரை விட்டு மற்றவர் நிறையத் தூரம் போய்விட்டது போலொரு உணர்வு. திரும்பவும் வேண்டும் அந்தப் பழைய அவள். வாரத்துக்கு இரண்டு கொண்டாட்டங்களைக் கொண்டாடிக்கொண்டு, சின்ன விசயங்களை எல்லாம் பெரிதாக எடுக்காமல், எப்போதும் மலர்ந்த முகமும் பூரித்த பார்வையுமாக அவனிடம் மயங்கி நிற்கும் அந்தப் பெண் வேண்டும் அவனுக்கு. இனிக் கிடைக்க மாட்டாளோ? அவன் உள்ளம் தவித்துப் போயிற்று.
அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி, “என்னை வெறுத்திட்டியா?” என்றான் அவள் கண்களையே பார்த்து.
அவள் முகத்தில் மெல்லிய அதிர்வு. அது அவளால் முடியுமா என்ன? விழிகள் மீண்டும் கலங்கின. உதட்டைப் பற்றித் தன்னை அடக்க முயன்றாள்.
“சொல்லு கானவி, என்னை வெறுத்திட்டியா? என்னைப் பிடிக்காமப் போயிற்றுதா உனக்கு?”
“என்ன கதைக்கிறீங்க?” என்றாள் உடைந்த குரலில்.
“உண்மையா எல்லாத்துக்கும் சொறி. இது நீ காசு தந்ததுக்காக இல்ல. நான் செய்த பிழைகளுக்காக, உன்ன விளங்கிக்கொள்ளாம நடந்ததுக்காக.” என்றான் அவன் மனத்திலிருந்து.
தன் பக்கமும் தவறுகள் இருந்ததை அவளும் அறிவாளே. அதில், “நானும் சொறி!” என்றாள் கண்ணீருடன்.
அவன் உதட்டில் மெல்லிய முறுவல் அரும்பிற்று. அவள் முகத்தையே சில கணங்களுக்கு விடாது பார்த்தவன் அவள் உதட்டில் அழுத்தி முத்தமிட்டான்.
சட்டென்று அவள் முகத்தில் மெல்லிய சிவப்பு ஏறிற்று. அவனிடமிருந்து வேகமாக விலக முயன்றாள். விடாமல் பற்றி, மீண்டும் ஒரு அழுத்தமான முத்தத்தைக் கொடுத்துவிட்டு, “இப்ப வெளில போறன். இரவைக்கு வாறன். அண்டைக்கு டியூஷன் செண்டருக்கு வந்து நீ கேட்ட ஸ்பெஷல் கிளாஸ் எடுக்க.” என்று அவள் காதுக்குள் சொல்லிவிட்டுப் போனான் அவன்.
வெயிலைக் கடந்துதான் நிழலைக் காணவேண்டியிருக்கிறது. அப்படி வெயிலைக் கடந்து நிழலை வந்தடைகையில்தான் நிழலின் அருமையும் தெரிகிறது. இனியும் வெயில் வரும். அதே போல நிழலும் வந்துகொண்டுதான் இருக்கும்.
இரவும் வந்தது. அவனும் வந்தான். உறங்கிவிட்ட நிலவனை அவனுக்கான கட்டிலில் போட்டுவிட்டு அவளை அள்ளிக்கொண்டான். அவளாலும் மறுக்க முடியவில்லை. ஆரத்தழுவி, இறுக்கியணைத்து, முத்தங்கள் பரிமாறியவனிடம் கரையவே முடிந்தது. ஒருவரில் மற்றவர் உருகி இடைவெளியை இல்லாமலாக்கினர்.
அடுத்த நாள் காலை அவள் முகத்தருகில் முகம் வைத்து, ஒரு கை அவள் மேல் இருக்க, ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தவனின் முகத்தில்தான் விழித்தாள் கானவி. அவர்களின் முதலிரவைக் காட்டிலும் இனிமை சேர்த்த இரவாய் அமைந்து போயிற்று முதல் நாளைய இரவு.
உடலிலும் உள்ளத்திலும் ஒரு நிறைவான உணர்வு. அவன் கன்னத்தில் அழுத்தி முத்தம் பதித்துவிட்டு மெதுவாக எழுந்துகொண்டாள். அவள் காலைக் கடன்களை முடித்து வந்தபோது நிலவன் விழித்திருந்தான். சற்குணத்தார் அவனைத் தூக்கிக்கொள்ள, புவனாம்பிகை தந்த காலைத் தேநீரை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்னால் இருக்கும் வாங்கிலில் சென்று அமர்ந்துகொண்டாள்.
இந்தக் கணத்தில் அவள் உள்ளத்தில் குறைகள் என்று எதுவுமில்லை. காலம் பெரும் காரணமென்றால் அவள் வளர்த்துக்கொண்ட திறமை இன்னுமொரு வலுவான காரணமாயிற்று.
அதனாலேயே அவள் உலகம் பெரிதானது. பார்வை விரிந்தது. சின்ன விடயத்துக்குக் கூட உடைந்துவிடும் பழைய கானவி காணாமல் போனாள். ஆக, சோதனைகளையும் துன்பங்களையும் இலகுவாகக் கடந்து வருவதற்கும் கற்றுக்கொள்கிற கல்வியும், அதன் மூலம் கிடைக்கிற வேலையும், வேலை மூலம் கிடைக்கிற தன்னம்பிக்கையும் பெரும் துணையாக நிற்பதை உணர்ந்துகொண்டாள் காணவி.
இத்தனை காலமும் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சை குத்திக்கொண்டிருந்த முள்ளைக் கூடச் சர்வ சாதாரணமாகத் தூக்கி எறிய முடிந்தது.
ஒரு உழைப்பு எத்தனையைத் தருகிறது? தன்னம்பிக்கையைத் தருகிறது, தலை நிமிர்ந்து இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளும் துணிச்சலைத் தருகிறது, அவள் வாழும் சூழலில் அவளுக்கான அங்கீகாரத்தை வாங்கித் தருகிறது, நானும் இங்கே ஒருத்தி இருக்கிறேன், என்னையும் நீ மதித்தே ஆக வேண்டும் என்கிற நிலையை மற்றவர்களிடம் உருவாக்குகிறது, எல்லாவற்றையும் விடச் சுதந்திரமாகச் சிந்திக்கவும், பிடித்ததைச் செய்யவும், முடிவுகளை எடுக்கவும் முடிகிறதே!
சுகமாக ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டபடி வானத்தைப் பார்த்தாள். சூரியனின் கதிரொன்று மெலிதாய் வந்து அவள் முகத்தில் படிந்தது. இதழோரம் ஜனித்த மென் சிரிப்புடன் ரசித்து ஒரு மிடறு தேநீரை உறிஞ்சினாள்.
அப்போது அவளருகில் வந்து அமர்ந்தான் செந்தாளன். சின்ன முறுவலோடு அவள் திரும்பிப் பார்க்க அவளின் தேநீர்க் கோப்பையை வாங்கித் தான் அருந்தினான் அவன். வேகமாகப் பார்வையை திருப்பிக்கொண்டவளின் உதட்டோரத்து முறுவல் விரிந்து போயிற்று.
முற்றும்.

