அத்தியாயம் 4
முடிந்தவரையில் எளிமையாக இருக்கட்டும் என்று செந்தாளன் சொன்னதற்கு மாறான பெரிய மண்டபம். அதன் வாசலில் குழை தள்ளிய வாழைகள் இரண்டு இருபுறமும் கட்டப்பட்டிருந்தன. அதன் அருகிலேயே மிகப்பெரிய பதாகை. அதில், இவர்கள் இருவரின் புகைப்படங்களோடு ‘செந்தாளன் வெட்ஸ் கானவி’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
வாசலிலிருந்து மண்டப வாயில் வரைக்கும் தோரணங்கள் தொங்கின. பல வர்ணத்தாலான கடதாசிப்பூ மாலைகளைக் கொண்டு, கூரை வடிவில் வாசலிலிருந்து மண்டபம் வரைக்கும் சோடிக்கப்பட்டிருந்தது. அதன் இரு மருங்கிலும் தென்னோலைத் தோரணங்கள். மண்டபத்துக்குள்ளிருந்து ஒலிக்கும் மேளதாளத்தின் சத்தம் சுற்றுவட்டாரத்தின் காதைப் பிளந்தது.
மாப்பிள்ளைத் தோழன் கடம்பனோடு மண்டப வாசலில் வந்திறங்கினான் செந்தாளன். கானவி வீட்டினர் மேளதாளத்தோடு ஆரத்தி எடுத்து, அவனை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
மண்டப வாயிலிலிருந்து மணமேடை வரையிலான பாதைக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்க, கம்பளத்தின் விளிம்பை ஒட்டி, இருபுறமும் குறிப்பிட்ட இடைவெளியில் தங்க நிறத்திலான பெண் சிலைகள் கிண்ணமேந்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கிண்ணங்கள் முழுவதிலும் அடர் சிவப்பு ரோஜாக்கள்.
மண்டபம் முழுமைக்கும் வட்ட வட்ட மேசைகள் போடப்பட்டு, அதற்குத் தங்க நிறத்தில் விரிப்பு விரிக்கப்பட்டு, நடுவில் உயரமாய் நின்றிருந்த கண்ணாடிக் குவளைகளுக்குள்ளும் அதே அடர் சிவப்பு ரோஜாக்கள் தண்டுடன் கொத்துக் கொத்தாக வைக்கப்பட்டிருந்தன.
நாற்காலிகளின் விரிப்பும் அதே அடர் சிவப்பு. பெரிய பெரிய சர விளக்குகள் தலைக்கு மேலே தொங்க, டிஜே விளக்குகள் மண்டபத்தின் நாளா பக்கத்திலிருந்தும் ஒளிவீச, என்னவோ வேறு உலகத்துக்குள் பிரவேசித்த உணர்வு செந்தாளனுக்கு.
மணமேடையை விவரிக்க அவனிடம் வார்த்தைகள் இல்லை. அவ்வளவில் ஜொலிஜொலித்தது.
இத்தனை ஆடம்பரம் வேண்டாம் என்று அவன் சொன்னதை யாருமே காதில் விழுத்தவில்லை. எல்லோரும் கானவியின் பக்கம்தான் நின்றனர். எல்லாவற்றுக்கும் அவன் குறுக்காக நிற்பதுபோல் பேச்சு எழவும் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல், என்னவாவது செய்துகொள்ளுங்கள் என்று விட்டிருந்தான். இப்போது நேரில் பார்க்கையில் இது மிக மிக அதீதம் என்றே தோன்றிற்று.
முகம் மாறாமல் காத்தபடி மணமேடையில் சென்று அமர்ந்தான். ஐய்யர் அவனுக்கான சடங்குகளை ஆரம்பிக்க அதில் கவனமானான். திடீர் என்று மண்டபம் முழுவதும் பெரும் பரபரப்பு. அடுத்த சில நிமிடங்களில் கிட்டத்தட்ட அவன், அவன் குடும்பத்தினர், ஐயா தவிர்த்து மண்டபமே வெறுமையானது போலாயிற்று. என்ன என்று பார்க்க, மணமகள் ஹெலியில் வந்து இறங்குகிறாளாம் என்றனர்.
அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. தாயையும் தமக்கையையும் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். புவனாம்பிகைக்கு உள்ளே கிடுகிடு என்று நடுங்கியது. “கலியாண மண்டபமாப் போனதால தப்பீட்டம் அம்மா.” அவரின் காதுக்குள் முணுமுணுத்தாள் சிந்துஜா.
அவர்களுக்கு இது ஏற்கனவே தெரியும். அவன் காதுக்குப் போகாமல் பார்த்துக்கொண்டனர். மணப்பெண்ணின் ஆசை. அதை எப்படி மறுப்பது?
உண்மையில் கொதித்துப் போயிருந்தான் செந்தாளன். அவன் ஒரு ஆசிரியன். கல்லூரி மற்றும் கல்வி நிறுவன சகபாடிகள் பலர் வந்திருந்தனர். அவர்கள் எல்லோரும் என்ன நினைப்பார்கள்? ஒரு சொல் பொறுக்காதவன். யாராவது இதைப் பற்றிச் சின்னதாய்க் கேலி செய்துவிட்டால் எப்படிச் சமாளிப்பான்? முதலில் என்ன இதெல்லாம்?
எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல் அங்கே மண்டபத்திற்குப் பின்னால் இருந்த புற்தரையில் அவள் வந்து இறங்குவதை இங்கே ‘லைவ்’வாகக் காட்டிக்கொண்டிருந்தனர்.
ஹெலியிலிருந்து அவள் இறங்கினாள். காதைக் கிழிக்கும் பாடலுக்கு மத்தியில் பெண்களும் ஆண்களுமாக ஒரு கூட்டம் பூக்களைத் தூவி, நடனமாடி அவளை அழைத்து வந்துகொண்டிருந்தனர். அதற்குமேல் அவனால் அதைப் பார்க்க முடியவில்லை. அவன் முன்னால் எரிந்துகொண்டிருந்த அக்கினிக்கு ஒப்பாய் முகம் சிவந்து கொதித்தது.
மண்டபத்திற்குள் கேட்க ஆரம்பித்த சலசலப்பு மணப்பெண் மண்டப வாசலை நெருங்கிவிட்டதைச் சொல்லிற்று. ஆனாலும் அவன் பார்வையை உயர்த்தவில்லை. அவனருகே வந்து மாலையைச் சரி செய்வது போன்று குனிந்த சிந்துஜா, “கொஞ்சம் சிரிச்ச முகமா இரு தம்பி. எல்லாரும் உன்னைத்தான் பாப்பீனம்.” என்று இரகசியக் குரலில் சொல்லிச் சென்றாள்.
அதற்கும் அவன் அசையவில்லை. இடித்தபுளி போன்று அமர்ந்திருந்தான்.
தன் துணையாகப் போகிறவனின் மனநிலை அறியாமல், முழுமையான மணப்பெண் அலங்காரத்தில் பெற்றோர், உற்றார் உறவினர், தோழிகள் புடைசூழ நடந்து வந்து, அவனருகில் அமர்ந்தாள் கானவி.
மண்டபம் முழுமையும் அவளின் அழகில் வாயைப் பிளந்து பார்த்திருக்க, பார்க்க வேண்டியவனோ கற்சிலையென அமர்ந்திருந்தான்.
அவளுக்கான சடங்குகள் ஆரம்பித்தன. கவனம் அதிலிருந்தாலும் திரும்பியும் பாராதவனின் இறுக்கம் உறுத்திற்று. கிடைத்த குட்டி இடைவெளியில் சிறிதாக அவன் புறம் திரும்பிப் பார்த்தாள்.
அப்போதும் அவன் திரும்பவில்லை. ஆனால், இவள் பார்வையை உணர்ந்து அவன் தாடை இறுகுவது, கிளீன் சேவினால் பளபளத்த கன்னத்தில் அப்படியே தெரிந்தது.
அத்தனை நேரம் இருந்த பூரிப்பு வடிய அவள் முகத்தில் கேள்வியும் குழப்பமும் படிந்தது.
அவர்கள் இருவருக்கும் இது எவ்வளவு முக்கியமான நாள்? அதை அனுபவிப்பதை விட்டுவிட்டு எதற்கு இவன் இப்படி இருக்கிறான்? இன்னுமொருமுறை சந்தர்ப்பம் கிடைத்தபோது அவன் கையில் மெல்லத் தட்டினாள். அவன் அசையவில்லை.
தலையில் அணிந்திருந்த நெற்றை சரி செய்வது போன்று பாசாங்கு காட்டியபடி அவன் புறமாகச் சரிந்து, “ஏன் ஒருமாதிரி இருக்கிறீங்க?” என்றாள். அவன் தாடையின் இறுக்கம் கூடியதே ஒழிய வேறு மாற்றங்கள் எதுவுமில்லை.
பொறுத்து பொறுத்துப் பார்த்தவள் முடியாமல் இன்னொரு முறை சந்தர்ப்பம் கிடைத்தபோது நன்றாக அவன் கையில் ஒரு இடி கொடுத்தாள். பெரும் சினத்துடன் சரக்கென்று திரும்பியவன் மணப்பெண்ணின் பூரண அலங்காரத்தில் இருந்தவள் முகத்தைக் கண்டு திகைத்தான். திரை மறைக்கும் ஓவியமாக, அவள் அணிந்திருந்த நெற்றின் வழியே தென்பட்ட அந்த முகத்தைக் கண்டு, அவனுக்கு வார்த்தைகளற்றுப் போயிற்று.
“ஏன் இப்பிடி இஞ்சி திண்ட மங்கி மாதிரி இருக்கிறீங்க?” அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் வாய்க்குள் முணுமுணுத்தாள்.
அவன் பார்வை அவளை எரித்தது.
உதட்டோரம் சிரிப்பு முளைக்க, “ஓகே ஓகே! மாப்பிள்ளையா கம்பீரமா வடிவாத்தான் இருக்கிறீங்க. கொஞ்சம் சிரிச்சா இன்னும் வடிவா இருப்பீங்க.” என்றாள் அவள்.
அப்போதும் அவன் அசையவில்லை.
“ப்ச்! என்ன எண்டு சொல்லுங்கோவன்.”
“என்ன இது, ஹெலில வந்து இறங்கிறது எல்லாம்? பாக்கிற சனமெல்லாம் என்ன நினைக்கும். உனக்கு…” என்றவனை, “கடவுளே!” என்ற அவளின் சலிப்பு இடை நிறுத்திற்று.
“நீங்க வாத்தி எண்டு எனக்குத் தெரியும். எல்லாம் சொல்லித்தான் கலியாணம் பேசினவே. அதுக்கெண்டு மணமேடைல வச்சும் வகுப்பெடுக்காதீங்க. ப்ளீஸ்!” என்றதும், “வேற எங்க வச்சு எடுக்க எண்டு சொல்லு எடுக்கிறன்.” என்று அவனை மீறியே வார்த்தைகள் வந்திருந்தன.
அவள் விழிகள் விரிந்து போயின. ‘இப்படிக்கூடக் கதைப்பானா இவன்?’ என்று வாய் பிளக்காத குறையாகப் பார்த்தாள்.
அவனுக்கும் சொன்ன பிறகுதான் என்ன சொன்னோம் என்பதே உரைத்தது. தலைகோத எழுந்த கையைக் கட்டுப்படுத்திக்கொண்டு பார்வையைத் திருப்பினான். உதட்டோரம் அடக்கப்பட்ட சிரிப்பில் துடித்தது. சற்றுமுன் வரையில் இருந்த அவள் மீதான கோபம் போன பாதை தெரியவில்லை.
“பொம்பிளை வந்த பிறகுதான் மாப்பிள்ளைக்குச் சிரிப்பே வருது.” புரோகிதர் கேலி செய்தபோதும் அவன் சிரிப்புப் பெரிதாயிற்று.
திருமணம் மிக அழகாகவும் நிறைவாகவும் இனிதே நிறைவுற்றது. இரு வீட்டினருக்கும் எந்தக் குறையும் இல்லை.
அன்றிரவு அவன் கற்பித்த பாடத்தில் சிவந்து, மலர்ந்து, பூரித்துப் போனாள் கானவி.
*****
கானவிக்கு உறக்கம் மெல்ல மெல்லக் கலைந்தது. இரவின் இனிமைகள் இன்னுமே நெஞ்சினுள் நின்று இனித்தன. தலையணையைக் கட்டிக்கொண்டு சுகமாய்ப் புரண்டவள் படக்கென்று விழிகளைத் திறந்து அருகில் கணவனைத் தேடினாள். அங்கு அவன் இல்லை. நேரத்தைப் பார்த்தாள். காலை ஆறு மணிதான். இந்த நேரத்தில் எங்கே போனான்? அவன் கையணைப்புக்கு ஆசைப்பட்ட மனத்துக்கும் உடலுக்கும் அவன் அருகில் இல்லை என்பது சின்ன ஏமாற்றத்தைத் தந்தாலும் இன்னொரு பக்கம் அதுதான் நல்லது என்று தோன்றிற்று. இல்லாவிட்டால் அவனை எதிர்கொள்ளத் திணறியிருப்பாள்.
மணமேடையில் வைத்துக்கூடக் கடுமையையும் கண்டிப்பையும் காட்டியவன் இப்படிக் குழைந்து கொஞ்சுவான் என்று எண்ணிப் பார்க்கவே இல்லை. இரவு முழுக்கக் கொண்டாடித் தீர்த்திருந்தான். தன் மீதான மயக்கம் அவனிடம் இந்தளவில் இருக்கும் என்று இப்போதும் நம்ப முடியவில்லை. உதட்டோரம் மலர்ந்த வெட்கச் சிரிப்புடனேயே எழுந்துகொண்டாள்.
அந்த வீட்டில் கழிப்பறையுடன் கூடிய குளியலறை ஒன்று வீட்டுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. வீட்டுக்கு வெளியே தனியாக மலசலகூடம் இருந்தது. கிணறும், அதன் பக்கத்திலேயே தண்ணீர்த் தொட்டியும், உடைகள் தோய்க்கும் கல்லும் தனியாக இருந்தன. பெரும்பாலும் யாரும் அங்கே வீட்டுடன் கட்டிய அந்த பாத்ரூமைப் பாவிப்பதில்லை. அவர்களுக்கு அது பழக்கமும் இல்லை. அவளுக்காகவே பாத்ரூமை மீண்டும் புதுப்பித்து வைத்திருந்தார்கள்.
மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு மெல்லிய தயக்கத்துடன் அறையை விட்டு வெளியே வந்தாள். யாரும் இருப்பதுபோல் தெரியவில்லை. இரவே இவர்களை இங்கே விட்டுவிட்டு மற்ற எல்லோரும் சிந்துஜா வீட்டுக்கு நடையைக் கட்டியிருந்தார்கள்.
ஒரே ஓட்டமாக ஓடி பாத்ரூமுக்குள் நுழைந்துகொண்டாள். தலைக்குக் குளித்துவிட்டு வந்தபோது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியுடன் இருந்தன. மனம் கணவனைத் தேடிற்று.
கண்ணாடியின் முன்னே வந்து நின்றாள். புத்தம் புதுத் தாலி கழுத்தில் கிடக்க, பூரித்திருந்த முகத்துடன் வெகு அழகாய்த் தெரிந்தாள். நெற்றியில் திலகத்தை இட்டுவிட்டு, தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்க்கையில் அறைக்குள் வந்தான் செந்தாளன்.
அவன் பார்வையும் அவளில்தான். அறையின் கதவைச் சாற்றிவிட்டு வந்தவன் அவளைப் பின்னிருந்து அணைத்தான். அவள் உள்ளம் மகிழ்ந்தது; முகம் பூரித்தது. அவன் கைகளுக்குள்ளேயே திரும்பி, எம்பி அவன் தாடையில் ஆசையாக முத்தமிட்டுவிட்டு அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள். கணவனின் கதகதப்பும் கையணைப்பும் சொர்க்கத்தையே தந்தன.
செந்தாளனின் நிலையும் அதேதான்.
நடுச்சாமத்தில் உறங்கியபோதும் காலையிலேயே விழிப்பு வந்திருந்தது. அவனை ஒட்டிக்கொண்டு நல்ல உறக்கத்தில் இருந்த மனைவியைக் கண்டு முகம் மலர்ந்தான். கடந்துபோனது மிக அழகானதொரு இரவு. வெட்கத்திலும் கூச்சத்திலும் அட்டையாய் அவனுடனேயே அவள் ஒட்டிக்கொள்ள, அவற்றைக் களைந்து அவளோடு கூடிக் கழித்ததை நினைக்கையில் அழகிய முறுவல் மலர்ந்தது.
அவளை விட்டு விலக மனமேயில்லை. ஆனால், அவனுடைய அப்பா தோட்டத்துக்குப் போயிருப்பார். அவர் மற்ற வேலைகளைப் பார்க்க, வெயில் வருவதற்கு முதல் தோட்டம் முழுமைக்கும் அவன் நீர் பாய்ச்சுவான். அவன் அதைச் செய்யத் தவறினால் அதையும் சேர்த்து அவர்தான் செய்வார் என்பதில் அவள் உறக்கம் கலையாமல் எழுந்து, உடையை மாற்றிக்கொண்டு வெளியேறியிருந்தான்.
அங்கே வேலைகளைக் கைகள் பார்த்தாலும் எண்ணம் முழுவதும் மனைவியிடமே! “நானே செய்றன் தம்பி. நீங்க போங்கோ!” என்று தந்தை சொன்னதைக் கேட்காதபோதும் எப்போதடா முடித்துவிட்டு வருவோம் என்று மனம் பரபரத்தது. ‘அடங்கடா! என்ன இது!’ என்று அதட்டினாலும் முடியவில்லை. ஒரு வழியாக அனைத்தையும் முடித்துக்கொண்டு ஓடி வந்தால், அவன் மனைவி அப்போதுதான் மலர்ந்த மலரென மணம் வீசிக்கொண்டிருக்கிறாள்.
“விடியக் காலமையே எங்க போயிட்டு வாறீங்க? முழிச்சுப் பாத்தா உங்களக் காணேல்ல.” தாடையை அவன் மார்பில் பதித்து அவன் முகம் பார்த்து வினவினாள் அவள்.
“தேடினியோ?” குளித்துவிட்டு வந்தவளின் வாசனையை ஆழ்ந்து இழுத்து நுகர்ந்தபடி அவள் கழுத்தோரம் புதைந்தவன் கிசுகிசுத்தான்.
“பின்ன? நேற்று வந்தவளைத் தனியா விட்டுட்டுப் போனா தேடமாட்டனா?” அவன் செயலில் தேகம் எங்கும் பூக்கள் பூக்கச் சொன்னாள்.
“அப்பிடி எங்க போகப்போறன்? இல்லாட்டியும் அம்மா, அக்கா பக்கத்திலதானே இருக்கினம்.” பேச்சுப் பேச்சாக இருக்க கைகள் அவளை அள்ளிக்கொண்டன.
“மாமியாக்கள் வரப்போயினம்.” முணுமுணுத்தவளும் அவன் ஆசைக்கு மறுக்கவில்லை.
அதன் பிறகு வந்த நாள்களில் அவர்களின் உலகம் அழகாயிற்று. சின்ன சின்ன அதட்டல் உருட்டல்கள் செந்தாளனிடமிருந்து வந்தாலும் அதையும் தாண்டிக்கொண்டு திருமண வாழ்க்கை தித்தித்தது. கோயில் குளங்களுக்குச் சென்று வருவது, விருந்துக்குப் போய்வருவது என்று இரண்டு வாரங்கள் வேகமாகக் கடந்திருந்தன. மகனும் மருமகளும் வாழும் வாழ்க்கையைக் கண்டு, சற்குணம் புவனாம்பிகை தம்பதியருக்கு மிகுந்த நிறைவு. மருமகளை அவர்களும் அன்பாகவே கவனித்துக்கொண்டனர்.

