அத்தியாயம் 5
மெல்ல மெல்லக் கணவன் மனைவியின் வாழ்க்கை முறை வழமைக்குத் திரும்ப ஆரம்பித்தது. அதிகாலையிலேயே எழுகிறவன் தோட்டத்திற்குச் சென்று தந்தைக்கு உதவிட்டு வந்து பாடசாலைக்குப் புறப்படுவான். பாடசாலை முடிந்து வந்து உணவை முடித்துக்கொண்டு டியூஷன் செண்டருக்குச் செல்வான். நேரத்துக்குத் திரும்பி வந்தால் இன்னுமொருமுறை தோட்டத்தைப் பார்த்துக்கொண்டு வருவான். பிந்தி வந்தால் கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, பேப்பர்கள் திருத்துவது, நோட்ஸ் எடுப்பது, ஏதாவது வாசிப்பது என்று அந்த நாள் முடியும்.
அவன் வீட்டில் எல்லோருமே அப்படித்தான். ஏதோ ஒரு வேலை செய்துகொண்டே இருப்பார்கள். போதுமான ஓய்வு எடுத்துக்கொள்வார்களே தவிர சோம்பி இருப்பதில்லை.
ஆனால், கானவி அப்படி இல்லை. தனக்குப் பிடித்த காரியங்கள் என்றால் மட்டும் முழு உற்சாகத்துடன் செய்தாள். மற்றும்படி சோம்பிக் கிடந்தாள். அவன் கல்லூரிக்குப் புறப்படுகையில்தான் அவள் துயில் கலைவதே! அதுவும் அவன் தட்டி எழுப்பிவிட்டால்தான் நடக்கும்.
வீடு திரும்புகிற பொழுதுகளில் ஃபோனில் இருப்பாள். காலையிலிருந்து அன்று முழுக்க அவள் கலைத்துப்போட்ட அத்தனையும் ஒதுக்கப்படாமல் அவன் அறை அலங்கோலமாகக் கிடக்கும். பள்ளிக்கூடம் முடிந்து வருகிறவனுக்குக் கண்மண் தெரியாத கோபம் வரும். அதை அடக்கி இப்படி இருக்காதே என்று கடிந்துகொண்டால் மட்டும் மனமே இல்லாமல் ஒதுக்கி வைப்பாள்.
உண்பதற்கு அருந்துவதற்கு என்று எதுவானாலும் அவள் இருக்குமிடம் தேடிவந்து புவனாம்பிகை கொடுத்துவிட்டுப் போவார். அவராக ஏதாவது உதவி கேட்டால் மட்டும் செய்வாள். மற்றும்படி எதுவுமில்லை.
ஒரு வாரமாகக் கவனித்தவனுக்கு நடப்பது ஒன்றும்
பிடிக்கவில்லை. சிந்துஜாவும் வேலைக்குச் செல்வதால் மூன்று நேரத்துக்கும் அவர்களுக்கும் சேர்த்தேதான் புவனாம்பிகை சமைப்பார். இவள் கொஞ்சம் உதவியாக இருக்கலாம். அதை விட்டுவிட்டு இருந்த இடத்திலிருந்து அசையாமல் அவரை இன்னுமே வேலை வாங்குகிறாளே! கூடவே, இப்படி எப்படி மணித்தியாலக் கணக்கில் ஒரே இடத்தில் இருந்தபடி கைப்பேசியில் மூழ்க முடிகிறது என்று அவனுக்கு விளங்கவே இல்லை.
அன்றும் அப்படித்தான் அவன் வந்ததையே உணராமல் ஃபோனில் மூழ்கி இருந்தவளை அழைத்தான் செந்தாளன்.
அறைக்குள் வந்தவளிடம், “நான் வந்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
“இவ்வளவு பெரிய உருவம் என்னைக் கடந்து போனது தெரியாம இருக்குமா? என்ன கேள்வி இது?” என்று கேட்டுச் சிரித்தாள் அவள்.
“சரி சொல்லு, இண்டைக்கு விடிஞ்சதில இருந்து என்ன செய்தனி?”
“என்ன செய்தனான்? ம்… விடிய மாமியோட சேர்ந்து முத்தம் கூட்டினனான். பிறகு ரெண்டு பேரும் சாப்பிட்டனாங்க. ஒரு மேக்கப் போட்டுப் பாத்தனான். பின் வீட்டு வசந்தி அக்கா இருக்கிறா எல்லா. அவாக்கும் மேக்கப் போட்டுவிட்டனான். வடிவா இருக்கு எண்டு சொன்னவா. குக் வித் கோமாளி ரெண்டு கிழமை பாக்க நேரம் கிடைக்கேல்ல. இண்டைக்கு அது பாத்தனான். வெக்கையா இருக்கு எண்டு குளிச்சிட்டு வர மாமி சமைச்சு முடிச்சிட்டா. இருந்த பசிக்கு நல்ல வெட்டு வெட்டிப்போட்டு நித்திரை கொண்டு எழும்பினனான். இப்ப தேத்தண்ணி குடிச்சிட்டு ஃபோன் பாத்துக்கொண்டு இருக்க நீங்க வந்திட்டீங்க.” கிடுகிடு என்று அந்த நாளையே ஒப்பித்தாள்.
இப்படி, ஒரு முழு நாளைப் பிரயோசனம் இல்லாமல் போக்கிவிட்டு, அந்தக் குற்றவுணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் சொல்கிறவள் மீது கோபம்தான் உண்டாயிற்று.
“அம்மாக்கு ஏதாவது உதவி செய்தியா?”
“இல்லையே. மாமி ஒண்டும் கேக்க இல்லையே.”
“கேட்டாத்தான் செய்வியா? வீட்டில சும்மாதானே இருக்கிறாய். நீ கொஞ்சம் உதவி செய்தா அவாக்கு ஈஸியா இருக்கும் எல்லா?” என்றான் அதட்டலாக.
“ஹல்லோ என்ன, சும்மா இருக்கிறன் எண்டு சொல்லுறீங்க? எனக்குக் கோபம் வந்திடும் சொல்லிப்போட்டன்!” என்று முறைத்தாள் அவள்.
“எரிச்சலைக் கிளப்பாத கானவி. முதல் அறையின்ர கோலம் என்ன இது? மேக்கப் போட்டா அந்தக் கன்றாவிய எல்லாம் எடுத்து வைக்க மாட்டியா? இப்பிடித் துப்பரவு இல்லாம இருக்கிறது எனக்குப் பிடிக்காது எண்டு உனக்கு எத்தின தரம் சொல்லுறது?”
“என்ன துப்பரவு இல்ல? சும்மா சும்மா நீங்களும் கத்தாதீங்க. என்ர மேக்கப் சாமான் எல்லாம் மேசைலதானே கிடக்குது.”
“அப்ப எங்க இருந்து நான் என்ர வேலையப் பாக்கிறது?”
“ஹோல்ல இருந்து பாருங்கோ.”
அவன் முறைத்தான். “அங்க அப்பாவும் அம்மாவும் டீவி பாப்பினம். அக்கா, அத்தான் வந்தா இருப்பினம். அங்க இருந்து நான் என்ர ஸ்கூல் வேல பாக்கேலுமா? உனக்கு எடுத்த பொருளுகளை ஒதுக்கி வைக்கத் தெரியாதா?” என்று அதட்டினான்.
“கடவுளே, வாத்தி எண்டதுக்காகக் கேள்வியாக் கேட்டுச் சாகடிக்கிறீங்க நீங்க!” என்றபடி சென்று அவன் மேசையை ஒதுக்க ஆரம்பித்தாள்.
உண்மையில் செந்தாளனுக்கு இவளை எப்படிக் கையாள்வது என்று தெரியவே இல்லை. வீட்டில் ஒரு வேலை இல்லை. வேலைக்கோ படிக்கவோ போவதும் இல்லை. மொத்த வீட்டையும் அன்னை பார்த்துக்கொள்வார். அவர்களின் அறையை மட்டும், அதுவும் அவள் எடுக்கிற பொருட்களை எடுக்கிற இடத்தில் வைத்தாலே போதும். அதைக்கூடச் செய்யமாட்டாள்.
அவன் அமர்ந்திருந்து வேலை பார்க்கும் நாற்காலியில், கட்டிலில் எல்லாம் கழுவித் தோய்த்த உடைகள் கிடக்கும், போட்ட உடைகளும் அவற்றோடு கலந்திருக்கும். இதில் அவள் பாவிக்கும் மேக்கப் பொருட்கள் ஒரு தொகை, சென்ட் வகைகள் இன்னொரு தொகை, தலை முடி அயர்ன் பண்ண ஒன்று, சுருட்டிவிட ஒன்று என்று அது வேறு சில பல பொருட்கள் கிடக்கும். அயர்ன் பொக்ஸ் அதன் இடத்தில் இருக்காது. ஈரத் துவாயை கட்டிலில் போட்டு, கட்டில் ஈரமாகி இருக்கும். சில நேரங்களில் எல்லாவற்றையும் சுழற்றி அடித்துவிடலாமா என்று நினைக்கிற அளவுக்குக் கொதித்துவிடுவான்.
பொறுமையாய்ச் சொல்லிக்கொடுத்து, இதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று எடுத்துரைத்து, கண்டிப்புக் காட்டி, கடுமையைக் காட்டி என்று அவனும் தன்னால் முடிந்தவரையில் முயன்றுவிட்டான். ஆனாலும் கூட அவள் மாறுவதாய் இல்லை.
“என்ன? ஏன் இப்பிடிப் பாக்கிறீங்க?” அசையாமல் நின்று அவளையே பார்த்திருந்தவனைப் பார்த்து வினவினாள்.
“இப்பிடிப் பொறுப்பில்லாம இருக்கிறது உனக்கு நல்லாருக்கா?”
“என்ன பொறுப்பில்லாம இருக்கிறன்? எல்லாரும் என்னை மாதிரித்தான் இருப்பினம். நீங்கதான் ஆக மோசம்.” என்று அவனைக் குற்றம் சாட்டினாள் அவள்.
கடவுளே என்று உள்ளே அலறினாலும் “இப்பிடிச் சோம்பி இருக்காத கானவி. ஏதாவது பிரயோசனமாச் செய்யப் பழகு. முதல் நேரத்துக்கு எழும்பு.” என்றான் இன்னும் பொறுமையாக.
“அதுக்கு நீங்க நேரத்துக்கு என்னப் படுக்க விடோணும்.” பட்டென்று சொன்னாள் அவள்.
“நான் என்ன…” என்று ஆரம்பித்தவன் அப்படியே நிறுத்திவிட்டான். அவளை முறைக்க முயன்று முடியாமல் போக, வேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். இருந் மனநிலை அப்படியே மாறிச் சிரிப்பு வந்துவிடும் போலாயிற்று.
கேசம் கோதித் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “உன்னோடதானே நானும் படுக்கிறன். நான் மட்டும் நாலு மணிக்கு எழும்பேல்லையா? அப்பிடி நீயும் எழும்பு!” என்றான் அதட்டல் போன்று.
“நாலு மணிக்கா?” உண்மையிலேயே எழுப்பிவிடப் போகிறானோ என்கிற பயத்தில் விழிகளை விரித்தாள் அவள்.
கோபம் போய் அவன் பார்வையில் இரசனை படர்ந்தது. அவளை இழுத்துத் தன் கைகளுக்குள் நிறுத்தி, “அடியேய் சோம்பேறி! நாலு மணிக்கு எழும்பாட்டியும் கொஞ்சம் நேரத்துக்கு எழும்பி ஏதாவது படி, அம்மாக்கு உதவி செய், வேலைகளைப் பழகு. இப்பிடிச் சும்மாவே இருக்கிறது கூடாது கானவி. நேரத்தப் பிரயோசனப்படுத்த வேணும். போனா வராது.” என்றான் பொறுமையாகவே.
அதில் இலகுவானவளும், “இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு? நான் சந்தோசமா இருக்கிறது பிடிக்கேல்லை போல. அதுக்கெண்டு சும்மா படி கிடி எண்டு சொல்லாதீங்க. எனக்குப் படிக்கிறதே பிடிக்காது. இனி இப்பிடி ஏதும் சொன்னீங்க அடிதான் விழும்!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
அவன் முறைத்தான். “நல்லதுக்குச் சொன்னா விரல் நீட்டிக் கதைப்பியா நீ?” என்று கேட்டு அந்த விரலுக்குத் தண்டனை கொடுத்தான்.
ஆனாலும் அந்த விடயத்தை அவன் அதோடு விடவில்லை. புவனாம்பிகையிடம் அவளுக்கு வேலைகளைப் பழக்கச் சொன்னான்.
“ஏன் அப்பு. எனக்கு ஒரு குறையும் இல்ல. விடிஞ்சதும் விடியாததுமா நீங்க எல்லாரும் ஒவ்வொரு பக்கத்தால ஓடிருவீங்க. அவாதான் என்னோட இருக்கிறதே. நானும் அவாவும் சேர்ந்து கொமடி ஷோ எல்லாம் பாக்கிறனாங்க.” என்றார் அவர் சந்தோசமாக.
“ப்ச் அம்மா! அதெல்லாம் பாக்க வேண்டாம் எண்டு இப்ப ஆர் சொன்னது? அப்பிடியே அவளுக்கு வேலையையும் பழக்குங்க எண்டுதான் சொல்லுறன். படி எண்டாலும் கேக்கிறாள் இல்ல.” என்றவன் அவளிடமும் அவரோடு சேர்ந்து வேலைகளைச் செய்யச் சொல்லிக் கண்டிப்புடன் சொன்னான்.
மறுத்தால் அவன் கோபத்துக்கு ஆளாக வேண்டும் என்று அறிந்திருந்தவள் முகம் சுருங்க சரி என்றாள்.
*****

