இடைவெளி வலிக்குதே 6 – 2

கடம்பனையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு ஓடி ஓடி அனைத்தையும் செய்துகொண்டிருந்தாள். மனோகரனும் அவளுக்கு உதவியாய் இருந்தான்.

விழா ஆரம்பித்தது. சற்குணம் கூச்சப்பட்டபடி ஒரு வழியாகக் கேக்கை வெட்டினார். புவனாம்பிகைக்கு தீத்திவிட(ஊட்டிவிட) சொன்னதும் அவர் பட்ட வெட்கம் கண்டு வீடே கலகலத்துச் சிரித்தது.

அவருக்கு மேலால் வெட்கப்பட்டார் புவனாம்பிகை. சம்பந்தி வீட்டினரும் இருக்கையில் என்ன இது என்று உள்ளே ஓடப்போனவரை அவள் விடவில்லை. இழுத்து மாமனாரின் அருகில் நிறுத்தி, “என்ன வெக்கம் மாமா? மாமி உங்கட வைஃப் எல்லா? இண்டைக்கு நீங்க தீத்தியே ஆகோணும்.” என்று நின்று, அவரைச் செய்ய வைத்த பிறகே விட்டாள்.

அவனுக்கே பெற்றவர்களை அப்படிப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால், அந்த வீட்டில் நிறைந்து தளும்பிய சிரிப்பும் சந்தோசமும் அவன் வாழ்வில் காணாத ஒன்றாக இருந்தது.

பெரிதாக ஒன்றுமே இல்லை. ஒரு கேக், நாலு பலகாரங்கள், இரண்டு குடும்பங்கள் மட்டுமே சேர்ந்து கொண்டாடிய ஒரு பிறந்தநாள் விழா. அதை இத்தனை நிறைவாய், என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாய் மாற்ற முடியுமா? முடியும் என்று சொன்னாள் அவன் மனைவி.

அவனால் அவளிடமிருந்து விழிகளை அகற்ற முடியவில்லை. இந்த நான்கைந்து நாள்களின் ஊடலுக்கும் சேர்த்து மனம் மனைவியைத் தேடிற்று. அவன் உணர்வுகள் அவளைச் சென்று சேர்ந்திருக்க வேண்டும். சிந்துஜாவோடு சேர்ந்து எதற்கோ சிரித்துக் கொண்டிருந்தவள் திரும்பி அவனைப் பார்த்தாள். இருவர் பார்வையும் சந்தித்துக்கொண்ட நொடியில் உள்ளுக்குள் உடைந்தாள்.

மனத்தில் இருந்த அத்தனை வருத்தங்களும் மேலெழுந்து வந்தன. அவன் முகம் திருப்பியது, அவள் கையைத் தட்டிவிட்டது, உன்னைக் கட்டினதுக்கு நான்தான் அழ வேண்டும் என்று சொன்னது, உன்னால் என் மொத்த மானமும் போயிற்று என்றது என்று அனைத்தும் நினைவில் வந்து நெஞ்சை அடைத்தன.

சமூகத்தில் அவன் நிலை என்ன என்று தெரிந்திருந்தும் யோசிக்காமல் நடந்தது பிழைதான். உணர்ந்து மன்னிப்புக் கேட்டும் மன்னிக்கவில்லையே! எத்தனை முறை அவனைச் சமாதானம் செய்ய முயன்றிருப்பாள். அத்தனை முறையும் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டு இப்போது மட்டும் என்ன பார்வை? மனத்தில் இத்தனையும் பொங்கிக்கொண்டு வந்தாலும் அவளுக்கு அழுகைதான் வந்தது. அவனது ஒற்றைப் பார்வை அவளை நிலைகுலைய வைக்க வல்லதாய் இருந்தது. எதையோ எடுக்கப் போகிறவள் போன்று குசினிக்கு ஓடினாள்.

அவள் மனத்தைத் துல்லியமாக உணர்ந்த செந்தாளனும் கனத்துவிட்ட மனத்துடன்தான் அமர்ந்திருந்தான். அவளின் பின்னால் விரையக் கால்கள் பரபரத்தன. சுற்றி எல்லோரையும் வைத்துக்கொண்டு எப்படி? தவிப்புடன் காத்திருந்தான்.

கானவிக்கு விழிகள் கரித்துக்கொண்டு வந்தன. அவள் வீட்டினரும் இருக்கையில் அவளால் அழ முடியாது. ஆழ மூச்சை இழுத்து வாயால் வெளியேற்றினாள். அவசரமாகத் தண்ணீரை எடுத்துப் பருகினாள். விழிகளைச் சிமிட்டிக் கண்ணீரை அடக்கினாள். தன்னைச் சற்றே நிதானப்படுத்திக்கொண்டு திரும்பி வந்தவள் அதன்பிறகு அவன் பக்கம் திரும்பவே இல்லை.

மற்றவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியாதபோதும் அவள் முகத்தின் வாட்டத்தையும், செயற்கையாய் ஒட்ட வைக்கப்பட்டிருந்த சிரிப்பையும் செந்தாளன் கவனித்தான். அவளோடு தனிமை கிடைக்கும் வரையில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு காத்திருந்தான்.

கானவியின் பெற்றோருக்கு அந்த வீட்டில் மகள் வாழும் வாழ்க்கையைக் கண்டு மிகுந்த திருப்தி. அவள் அவர்களில் ஒருத்தியாய் மாறியிருப்பதும், மனோகரன் உட்பட அனைவரும் அவளைச் செல்லப் பெண்ணாக நடத்துவதும், அவர்களுக்குள் உண்டாகிப் போயிருந்த பிணைப்பும் மிகுந்த நிறைவைத் தந்திருந்தன. சந்தோசமாக விருந்துண்டு, ஆசை தீர அவளோடு கதைத்துக்கொண்டு இருந்தனர்.

செந்தாளனுக்கு அழைப்பு ஒன்று வரவும், “வாறன் கதைச்சிட்டு.” என்று எழுந்து சென்று கதைத்துவிட்டு வந்து மீண்டும் அமர்ந்தான்.

அப்போது அவன் கைப்பேசி வெடித்திருப்பதைக் கவனித்துவிட்டு, “என்ன அத்தான், போன் உடைஞ்சிட்டுதா? ஒரு ஆப்பிள் போன் ஓடர் போடுவமா?” என்றான் கடம்பன் இயல்பாக.

“தாராளமாப் போடலாம். ஆனா அது உங்கட சொந்தக் காசா இருக்கோணும்.” சிரித்துக்கொண்டு சொன்னான் சிவரூபன். கடம்பனுக்கு முகம் கறுத்துவிடப் பார்த்தது. ஆனாலும் சமாளித்தான்.

அவர்களுக்குள் நடக்கும் பனிப்போர் அறியாத மனோகரன், “அதுக்கு என்ன? உழைக்கிற காலத்தில வாங்கிக் குடுத்தாப் போச்சு. என்ன கடம்பன்?” என்றான் இயல்பாக.

கடம்பனும் சமாளித்துச் சிரித்தான். மற்றவர் எல்லோருக்கும் அது ஒருவிதமான விளையாட்டுப் பேச்சாகவே போயிற்று.

ஒரு வழியாக அவர்கள் புறப்பட்டுவிட எல்லோரும் வீட்டை ஒதுக்க ஆயத்தமாகினர். உடை மாற்றுவதற்காக அறைக்கு வந்து கதவைச் சாற்றிய கானவியைப் பின்னிருந்து அணைத்தான் செந்தாளன்.

ஒருகணம் திகைத்தாலும் வெளியே இருப்பவர்களுக்குக் கேட்டுவிடும் என்று பயந்து, சத்தம் இல்லாமல், அவன் முகமும் பாராமல், அவன் கைகளைப் பிரித்துவிட முயன்றாள். அவன் விடவில்லை. வலுக்கட்டாயமாக அவளைத் திருப்பித் தன் முகம் பார்க்க வைத்தான்.

அவளுக்கு மீண்டும் அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. கூடவே ஒரு கோபமும். அவன் சமாதானத்துக்கு வந்தால் மட்டும் அவள் சமாதானமாகிவிட வேண்டுமா என்ன? பிடிவாதமாக அவனிடமிருந்து விடுபட முயன்றாள்.

அவளின் அந்தச் செல்லக் கோபம் அவன் உதட்டில் புன்னகையை வரவழைத்தது. இன்னும் இறுக்கமாக அணைத்து, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அவ்வளவுதான். அவள் போராட்டம் நின்று போயிற்று. சின்ன விம்மல் வெடிக்க, அவன் மார்பிலேயே முகத்தை முட்டிச் சத்தமில்லாமல் கண்ணீர் சொரிந்தாள்.

“இப்ப என்னத்துக்கு அழுறாய்?” மெல்லிய குரலில் கிசுகிசுத்தவன் அவள் கன்னங்களைத் தாங்கி, முகம் பார்த்தான்.

எப்போதும் அவன் மீதான நேசத்தில் பளீரிடும் கண்கள் கண்ணீரில் பளபளத்தன. அதை அனுமதிக்க முடியாமல் அந்த விழிகளின் மீது ஆழ்ந்து முத்தமிட்டான். மீண்டும் மீண்டும் முத்தமிட்டான். அவள் விழிகள் பெருகி பெருகி வழிந்தன. உதடுகள் அழுகையில் துடித்தன.

“அழாத எண்டு சொன்னனான் எல்லா!” கன்னங்களைத் துடைத்துவிட்டு அவளை மார்போடு அணைத்துக்கொண்டான்.

அவளின் அந்த உடைதல் அளவுக்கதிகமாக அவளிடம் கண்டிப்பைக் காட்டுகிறோமோ என்று அவனை நினைக்க வைத்தது. அவன் வீட்டில் அவனைத் தவிர்த்து அவளை யாரும் ஒரு வார்த்தை சொல்வதில்லை. அவன் கோபித்துக்கொண்டால் கூட அவனைத்தான் கடிவார்கள்.

என்னதான் சோம்பி இருந்தாலும், கைப்பேசியிலேயே குடியிருந்தாலும் அந்த வீட்டிற்கு அவள் வந்த பிறகான மலர்ச்சியும் துள்ளலும் தனிதான். எப்போதும் சற்று விலகி நிற்கும் மனோகரன் கூட, அவள் வந்த பிறகு இன்னுமே இயல்பாகிய ஒரு உணர்வு. இனி இன்னுமே கொஞ்சம் கனிவோடு அவளைக் கையாள வேண்டும் என்று எண்ணியபடியே அவளைத் தன் அணைப்பில் வைத்திருந்தான்.

அவள் சற்று நிதானத்துக்கு வந்ததும் அவள் முகத்தை நிமிர்த்தி ஆராய்ந்தான். அழுததில் மூக்கு முகமெல்லாம் சிவந்திருந்தவளைப் பார்க்க, மார்கழி மாதத்துக் காலைப்பனியில் மலர்ந்திருக்கும் அவன் வீட்டுத் தோட்டத்து ரோஜா நினைவில் வந்தது. இவள் அவன் ரோஜா! அவன் அணைக்கவும் இரசிக்கவும் என்றே படைக்கப்பட்ட ரோஜா.

மென் சிரிப்புடன் அவள் முகம் நோக்கிக் குனிந்தான். ஆழமாய், அழுத்தமாய், தன் உணர்வுகளைச் சொல்லும் விதமாய், அவள் உள்ளத்தின் காயத்தை ஆற்றும் விதமாய் நீண்டுகொண்டே போனது அவன் கொடுத்த முத்தம்.

அவன் விலகியபோது அவள் விழியோரம் கசிந்திருந்தது. உள்ளத்தில் என்னவோ நிறைந்து தளும்பிற்று. இதழ்களுக்குப் போட்டியாய்ச் சிவந்திருந்த முகம், அவன் கொடுத்த முத்தம் அவளுக்குள் விளைவித்த மாற்றத்தைச் சொல்லிற்று. சந்தோச முறுவலுடன் அவள் நெற்றியில் இதழ்களை ஒற்றி எடுத்துவிட்டு விட்டான்.

இருவரும் மௌனமாகவே உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தனர். மற்றவர் கவனத்தைக் கவராது குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள் கானவி.

எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மற்றவர்கள் வழமை போன்று சிந்துஜாவின் வீட்டுக்கு நடையைக் கட்டிவிட, அவளுக்காக அறையில் காத்திருந்தான் செந்தாளன். விளக்குகள் அனைத்தும் அணைந்த பிறகும்கூட அவள் வரவில்லை. காத்திருந்து பார்த்துவிட்டு எழுந்து வந்தான். அவள் விறாந்தையில் தன்னந் தனிமையில் அமர்ந்திருந்தாள்.

ஒருகணம் அவளையே பார்த்தவன் வந்து அவளை அப்படியே தூக்கினான்.

“அச்சோ! என்ன செய்றீங்க?” இதை எதிர்பாராததில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு பதறியவளால் நடப்பதை நம்பவே முடியவில்லை.

“என்ன செய்றன்?” குறும்புச் சிரிப்புடன் வினவினான்.

“தெரியாதா?”

“தெரியாததாலதானே கேக்கிறன். நீயே சொல்லு!”

பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள். இவன்தானா வார்த்தைகளால் அவளை நோகடித்தவன் என்று நம்ப முடியவில்லை.

அறைக்கு வந்து அவளோடு கட்டிலில் சரிந்தவன் அதைப் பற்றி மேலே சிந்திக்க அவளை விடவில்லை. ஆரத்தழுவி அணைத்தான். ஆயிரம் முத்தங்கள் பதித்தான். இத்தனை நாள்களும் விலகி இருந்தாலும் எந்தளவு தூரத்துக்கு அவளைத் தேடினான் என்பதைச் சொல்லாமல் சொன்னான். அவளையும் அவனுக்குள் கரைய வைத்தான். அவள் உணர்வுகளை எல்லாம் அவனோடு ஒன்ற வைத்தான். அவன் கைகளில் குழைந்து உருகும் களிமண்ணாகிப் போனாள் கானவி.

error: Alert: Content selection is disabled!!