இடைவெளி வலிக்குதே 8 – 1

அத்தியாயம் 8

கானவி அவர்களோடு இருந்தவரையில் வேலை வெட்டி இல்லாமல் இருப்பது ஒரு குறையாகக் கடம்பனுக்குத் தெரிந்ததே இல்லை. அவளோடு சுற்றுவது, அவளுக்காக எதையாவது செய்வது, அவளோடு சண்டை பிடிப்பது என்று அவன் நாள்கள் மிக மிக அழகானவை. அவள் திருமணமாகிச் சென்ற பிறகும் அடிக்கடி அங்கே போவான். அவளோடு நேரம் செலவழிப்பான். அவள் ஏதாவது கேட்டால் செய்து கொடுப்பான்.

ஆனாலும், அவனுக்கும் அவளுக்கும் இடையிலான உறவு முன்னர் போலில்லை. அன்பும் பாசமும் அக்கறையும் அப்படியே இருந்தாலும் இடைவெளி விழுந்திருந்தது. அவளுக்கு வேறு கடமைகள் இருந்தன; வேலைகள் இருந்தன; அத்தான் இருந்தார். கடம்பனோடு அவள் இருக்கும் நேரங்கள் வரையறுக்கப்பட்டதாக மாறிப் போயிற்று.

‘அடியேய் அக்கா! என்னடி செய்றாய்?’ என்று தயக்கம் சிறிதுமின்றி அவள் அறைக்குள் போகமுடியவில்லை. ‘ஏதாவது செய்து தாடி, பசிக்குது.’ என்று சமையல் கட்டில் ஏறி அமர முடியவில்லை. இருக்கும் இடம் பார்த்து, சுற்றியிருக்கும் ஆட்கள் பார்த்து, வார்த்தைகளில் கவனம் வைத்து எதையும் பேசவேண்டிய நிலையே கொஞ்சம் கொஞ்சமாக அங்குப் போவதைக் குறைக்க வைத்தது.

இப்போதெல்லாம் எதுவும் பிடிக்கவில்லை. நண்பர்கள் பட்டாளம் இருந்தாலும் தனிமையை உணர்ந்தான். ‘இந்த மாமா கெதியா ஏஜென்சி வேலையைப் பாத்தா நல்லாருக்கும்…’ அன்றைக்கும் வீட்டில் இருக்க அலுப்படித்ததில் நண்பர்களை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றப் புறப்பட்டான்.

எங்கென்று இல்லாமல் பைக்கில் வீதிகளை அளந்துகொண்டிருந்தபோது சிவரூபனைக் கண்டான். அதுவும், அவன் வேலை பார்க்கும் சுப்பர் மார்க்கெட்டின் முன்னால் நின்று, இன்னொருவனோடு சேர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான். பார்த்த கணம் அதிர்ந்து போனான். அத்தானின் தம்பியா? அவனால் நம்பவே முடியவில்லை. அவன்தானா என்று உறுதிப்படுத்துவதற்காகக் கூர்ந்து பார்த்தான். அவனேதான்!

இவ்வளவு காலமும் மாமாக்கள் அனுப்புகிற பணம், அதன் மூலம் கிடைக்கிற வசதிகள், செலவழிக்க யோசியாமை, ஓடுகிற பைக்கிலிருந்து அணிகிற ஆடை வரையில் இருக்கிற தரம், அவற்றைப் பார்த்துச் சுற்றியிருக்கும் நண்பர்கள் வாய் பிளப்பது என்று அவனுக்குள் ஒரு விதப் பெருமை இருந்தது உண்மை.

எப்போது கானவிக்குத் திருமணம் நடந்து, அவர்கள் வீட்டுக்குப் போய்வர ஆரம்பித்தானோ அப்போதிலிருந்து அவனுக்குள் என்னவோ ஒன்று உறுத்த ஆரம்பித்திருந்தது. அதற்குப் பெரும் காரணமாக இருந்தவன் இந்தச் சிவரூபன்.

அவனுக்கு இவனைவிட ஒரு வயதுதான் கூட. அப்படி இருக்கையில் இப்போதே அவன் நண்பனோடு சேர்ந்து சுப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்துகிறானாம் என்றும், தனியாகக் கடை ஆரம்பிப்பதற்கான வேலைகளைப் பார்க்கிறானாம் என்றும் அறிந்ததிலிருந்து, என்னவோ தான் அவனை விடவும் மிகவும் கீழே இருப்பது போன்று உணர ஆரம்பித்திருந்தான்.

ஒருமுறை பேசிக்கொண்டிருக்கையில், “இது நானே உழைச்சு என்ர காசில வாங்கினது.” என்று அவன் தன் பைக்கை காட்டிச் சொன்னபோது, முகம் கறுத்துவிடாமல் இருக்கப் பெரும் பாடுபட்டுப் போனான். அப்படிப் பல சம்பவங்கள்.

“இப்பிடிச் சும்மா ஊரைச் சுத்துறதுக்கு என்னோட வந்து வேலை பழகலாமே.” என்பான். “சும்மா இருந்தே பழகீட்டுது என்ன?” என்று சிரிப்பான்.

அவன் பார்வை, செயல் எல்லாமே இவனைத் தரமிறக்கிக் காட்டும். அவன் கேட்கிற கேள்விகளுக்கு நிமிர்ந்து சொல்வது போன்ற பதில்கள் இவனிடம் இருக்காது.

அப்படியானவனிடம் இப்படியொரு பழக்கமா? வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டு அவனைக் கவனிக்காதவன் போன்று பைக்கை விரட்டினான்.

சிகரெட்டை உதட்டில் வைத்து ஆழ்ந்து இழுத்துவிட்டு எடுக்கையில் சிவரூபனும் இவனைக் கண்டுவிட்டான். ஒருகணம் திடுக்கிட்டுப் போனான். தன்னிச்சையாய்க் கையைப் பின்னால் மறைத்துக்கொண்டாலும் அவனுக்குள் ஒரு வீம்பு உண்டாயிற்று.

‘வேலை வெட்டி இல்லாம ஊர் சுத்திற இவனுக்கு நான் பயப்பிடுறதா? பத்தினாலும் என்ர காசுலதான்டா பத்திறன்!’ ஒருவித இறுமாப்புடன் அவனைக் கண்டது போலவே காட்டிக்கொள்ளாமல் இன்னும் ஆழமாக இழுத்து, புகையை மூக்கின் வழியே வெளியேற்றினான்.

வீதியில் மட்டுமே கவனத்தை வைத்து ஒரு வேகத்துடன் அவனைக் கடந்து வந்திருந்தாலும் சிவரூபனின் செய்கை கடம்பனின் பார்வை வட்டத்தில் விழுந்துதான் இருந்தது. என்னவோ தான் தவறு செய்து மாட்டிக்கொண்டது போன்று அவனுக்கு வியர்த்தது. அவன் பின்னால் இருந்தவன் வேறு, “டேய்! அது உன்ர அக்கான்ர மச்சான் எல்லா. பத்திறான்டா!” என்று முன்னே எட்டிக் காதுக்குள் கிசுகிசுத்தான்.

“பாத்த மாதிரிக் காட்டாத மச்சான்!” என்றவனால் நடந்த நிகழ்வை மறக்கவே முடியவில்லை.

அதுவரையில் தமக்கையிடம் எதையும் ஒழித்து மறைத்துப் பழகாதவன் அன்று மாலை அவளோடு கதைக்கையில் இதையும் சொன்னான்.

“என்னவோ நான் வேலைக்குப் போகாம இருக்கிறதைப் பெரிய கேவலம் மாதிரி பாப்பாரடி அக்கா. ஆனா, வாயால இழுத்து முக்கால விடுறார். அது மட்டும் நல்ல பழக்கமாமா உன்ர மச்சானுக்கு?

“என்னடா சொல்லுறாய்?” என்று நடந்ததைக் கேட்டறிந்தவளுக்கும் அதிர்ச்சியே!

சிவரூபன் அவளோடு நல்லமாதிரித்தான். ஆனாலும் ஒரு இடைவெளி இருக்கும். அண்ணி என்கிற மரியாதையோடு தள்ளியே நிற்பான். மனோகரனோடு இயல்பாகப் பழகுவதுபோல் கூட அவனோடு பழக முடிவதில்லை.

ஆனாலும், நண்பனோடு சேர்ந்து ஒரு சுப்பர் மார்க்கெட்டை நடத்திக்கொண்டிருக்கும் அவன் மீது அவளுக்குப் பெரிய மதிப்புண்டு. பெரிய நண்பர் வட்டமில்லை. வீண் செலவுகள் இருக்காது. வேலை முடிந்தால் வீடு, வீட்டை விட்டால் வேலை என்று இருப்பவன். மாதா மாதம் தன் பங்கு என்று வீட்டுச் செலவுக்கு ஒரு தொகை கொடுத்துவிடுவான். அவர்கள் கதைத்துக்கொள்வதிலிருந்து தன் சொந்த உழைப்பிலேயே நல்ல சேமிப்பு வைத்திருக்கிறான் என்றும் அறிந்திருந்தாள்.

அவனைப் பார்த்த பிறகுதான், இத்தனை வருடங்களும் சும்மா இருந்ததற்குத் தம்பியும் எதையாவது செய்திருக்கலாமோ என்று நினைத்திருக்கிறாள். விரைவில் அவனைக் கூப்பிட்டுவிடுவேன் என்று அவள் மாமா சொல்லியிருந்ததில் அதைப் பற்றிக் கடம்பனோடு கதைத்ததில்லையே தவிர, அவன் வெளிநாடு போகவில்லை என்றால் சிவரூபனைப் போலவே ஒரு சுப்பர் மார்க்கெட் திறந்து, நடத்தச் சொல்லலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.

அப்பாடியானவன் புகைக்கிறானா? அது நல்லது இல்லையே!

அன்றிரவு வகுப்புகள் முடிந்து வந்த கணவனிடம் தயக்கத்தோடு அனைத்தையும் சொல்லிவிட்டு, “ப்ளீஸ், அவரிட்டக் கேட்டுப் போடாதீங்கோ. பிறகு நாங்க சொல்லிச் சண்டை வந்ததாப் போயிடும்.” என்றாள்.

செந்தாளனுக்கு முகம் இறுகிப் போயிற்று. “என்னால நம்பவே ஏலாம இருக்கு.” என்றான் நெற்றியைத் தேய்த்துவிட்டுக்கொண்டு.

அவள் கவலையோடு அவனையே பார்த்திருக்க, “கடம்பன் சும்மா சொல்லேல்லையே?” என்றான் அவள் புறம் திரும்பி.

அவன் அப்படிக் கேட்டது மெல்லிய வருத்தத்தை உண்டாக்கிற்று. அவள் தம்பி எதற்குப் பொய் சொல்லப் போகிறான்? என்றாலும் தன் தம்பியின் மீதான நம்பிக்கையில் கேட்கிறான் என்று தன்னைச் சமாதானம் செய்துகொண்டு, “அவனுக்கே இது ஷொக். சொல்லோணும் எண்டு என்னட்டச் சொல்லேல்ல. தான் பாத்தத நம்பேலாமத்தான் சொன்னவன்.” என்று சொன்னாள்.

விழிகளை மூடி யோசனையில் ஆழ்ந்தான் செந்தாளன். இதைச் சரியான முறையில் எப்படிக் கையாள்வது என்று யோசித்தான். பொறுப்பானவன்; அதுவும் தன் விசயங்களில் மிகுந்த கவனமாக இருப்பவன். அவனைக் குறித்து இதுவரையில் செந்தாளன் யோசித்ததோ, கவலைப்பட்டதோ இல்லை. அந்தளவில் எல்லாவற்றிலும் சரியாக இருப்பான். இன்றுவரையில் அண்ணா எனக்கொரு பிரச்சனை என்று இவனிடம் வந்து நின்றதே இல்லை. அவனுக்கு இப்படியொரு பழக்கமா?

அடுத்த ஒரு கிழமைக்குச் சிவரூபனை ஊன்றிக் கவனித்தான். வீட்டுக்கு வருகையில் அவன் மென்றுகொண்டு வரும் சுவிங்கம், இத்தனை நாள்களும் சாதாரணமாகத் தெரிந்தது இன்று வேறு விதத்தில் விளங்கிற்று. இதற்குமேல் விடக் கூடாது என்று தோன்றிவிட தனியாக அழைத்துக் கண்டித்தான்.

சிவரூபனுக்குத் தமையனின் முகம் பார்க்க முடியவில்லை.
இதுநாள் வரையில் இப்படியொரு நிலையில் தமையன் முன் நின்றிராதவன் மிக அவமானமாக, தலையிறக்கமாக உணர்ந்தான்.

அவர்கள் சொன்னதாகச் செந்தாளன் சொல்லவே இல்லை. ஆனால், தன்னை யார் கண்டது என்று தெரிந்திருந்தவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக யார் மூலம் தமையனுக்குச் செய்தி போனது என்று விளங்கிற்று. கடம்பன், கானவி மீது வெறுப்பு உண்டாயிற்று. பார்த்ததும் வந்து மூட்டிக் கொடுத்துவிட்டார்களே! எவ்வளவு கேவலமான புத்தி. உள்ளுக்குள் புகைந்தான்.

வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லையே தவிர அன்றிலிருந்து கானவியிடம் பேசுவதையே நிறுத்திக்கொண்டான். இதையறியாத கானவி, அன்று வேலை முடிந்து வந்தவனுக்குத் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

விருட்டென்று எழுந்து தன் அறைக்கு நடந்தான் அவன்.

இப்படி ஒரு நாளும் செய்யமாட்டானே என்கிற திகைப்புடன் போகிறவனையே பார்த்தாள் கானவி.

புவனாம்பிகைக்கும் என்னவோ போலாயிற்று. “விடாய்க்கேல்ல போல. அதக் கொண்டுவாங்கோம்மா, நான் குடிக்கிறன்.” என்று சமாளித்தார்.

அப்போதைக்கு அவளும் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், அந்த நிகழ்வே அதன்பிறகு அவனைக் கவனிக்க வைத்தது. அப்போதுதான் அவன் தன் முகம் பார்ப்பதையும் தன்னோடு பேசுவதையும் நிறுத்திவிட்டான் என்று கண்டுகொண்டாள்.

“மச்சானோட கதைச்சனீங்களா?” அன்றிரவு அவர்கள் அறையில் வைத்துக் கணவனிடம் கேட்டாள்.

“ஏன் கேக்கிறாய்?”

“இல்ல சும்மா, தெரியத்தான் கேக்கிறன்.”

“கதைக்காம? நல்ல பேச்சுக் குடுத்தனான். இனிச் செய்யமாட்டான் எண்டு நினைக்கிறன்.” என்றான் அவன்.

இப்போது காரணம் புரிந்துவிட்டதில் அவளும் அவனிடமிருந்து ஒதுங்கிக்கொண்டாள்.

*****

அன்று மாலை வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தான் சிவரூபன். அதுவும் அவன் பைக்கில் பின்னுக்கு அமர்ந்து வந்தாள் அவள். இருந்த பிணக்குகள் எல்லாம் மறக்க, குறுகுறு என்று அவர்களைப் பார்த்தாள் கானவி.

“அவவத்தான் அவன் கட்டப்போறான்.” இவள் பக்கத்தில் நின்றிருந்த மனோகரன் இரகசியமாகச் சொன்னான்.

error: Alert: Content selection is disabled!!