என்னது காதல் முறிவா? என்ன சொல்கிறான் இவன்? நேசித்தேன் என்று இறந்த காலத்தில் சொல்கிறான். அப்படியானால் இப்போது அந்த நேசத்துக்கு என்ன ஆனதாம்? அவள் நெஞ்சில் அவன் மீதான நேசம் நாளுக்கு நாளல்லவா பெருகிக் கொண்டிருகிறது. அவனுக்கு அப்படி இல்லையா? இப்படி எத்தனையோ கேள்விகள் அவளுக்குள் தோன்றியபோது, அவன் மறுபடியும் பேச்சை ஆரம்பித்து இருந்தான்.
“என்னால் உன்னோடு இணைந்து வாழமுடியாது. என்னை நீ உன் கட்டுக்குள் வைத்திருப்பது போல் இருக்கிறது. அம்மா அப்பாவுக்குப் பொய் சொல்லி, தாத்தா பாட்டியோடு நேரம் செலவழிக்க முடியாமல், அண்ணன் அண்ணியோடு கூட இருந்து கதைக்க முடியாமல், நண்பர்களோடு பொழுது போக்க முடியாமல், ஏன்.. என்னால் எனக்குப் பிடித்த விளையாட்டுக்கு கூட நேரம் ஒதுக்க முடியால் வாழ முடியாது. என் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் காதல். வாழ்க்கையே காதல் கிடையாது. அப்படி ஒரு பகுதியான காதலுக்காகவோ, இடையில் வந்த உனக்காகவோ என்னால் இவர்களை எல்லாம் இழக்க முடியாது லட்சனா.”
‘லட்டு’ லட்சனாவாக மாறிவிட்டது. அதிலிருந்தே புரிந்தது அவன் அவளிடம் இருந்து தள்ளிப் போய்விட்டான் என்று. அவன் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் காதலா? இடையில் வந்தவளா அவள்? அவள் வாழ்க்கையே காதல் அல்லவா! அவன் மட்டும் தானே அவள் உலகம்! அவன் தானே அவள் உயிர்! உயிரின்றி உடல் வாழுமா? அவளை இதுநாள் வரை உயிர்ப்பாய் வைத்திருந்தது அவனும் அவன் காட்டிய அன்பும் தானே! அவையின்றி அவளால் எப்படி வாழ முடியும்?
நீரின்றி செடி செழிக்குமா? அவன் துணை இன்றி அவளால வாழ முடியுமா?
உயிர்வரை வலித்தது. இதையெல்லாம் கேட்பதற்குத் தானா அவள் உயிரோடு இருக்கிறாள். இதற்கு அன்று அண்ணனோடு சேர்ந்து நானும் இறந்திருக்கக் கூடாதா என்று உள்ளம் கதறியது.
கண்ணீர் கன்னங்களில் ஆறாய் வழிய, நெஞ்சிலோ பெரும் வலியொன்று தாக்கியது.
அவன் குறுக்கப் பேசாதே என்று சொன்னதையும் மறந்து, “நான்… நா..ன்.. அவர்களை எல்..லாம் ஒதுக்கச் சொல்..லவில்லையே.” திக்கித் திணறி அவள் சொல்ல, “இல்லை. நீ சொல்லவில்லைதான். ஆனால் நீ காட்டும் அன்பே எனக்கு விலங்காக இருக்கிறது. என்னால் உன்னிடமும் இயல்பாக இருக்க முடியவில்லை. அவர்களிடமும் இயல்பாக இருக்கமுடியவில்லை. ஏன்டா காதலித்துத் தொலைத்தோம் என்றிருக்கிறது. என்னுடைய சுதந்திரத்தை எல்லாம் நீ பறிக்கிறாய்.” என்று குற்றம் சாட்டினான் அவன்.
அவளின் அன்பே அவனுக்கு விலங்கு என்றது அவளை அடியோடு சாய்த்தது. ஏன்டா காதலித்துத் தொலைத்தோம் என்று இருந்ததா? அந்தளவுக்கா அவளை வெறுத்துவிட்டான். அள்ள அள்ளக் குறையாதது அன்பு என்பார்களே! கொடுக்கக் கொடுக்க பெருகுவதும் அன்பு என்பார்களே! அதெல்லாம் பொய்யா? ஒருவனின் மேல் உயிரையே வைத்து, என் எதிர்காலமே அவன்தான் என்று எண்ணி, அவன் மேல் அளவற்ற அன்பைப் பொழிந்தது கூடத் தவறா?
மெல்லக் கொள்ளும் விஷம் போல், அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளைக் கொன்றது! அவள் மனதைத் தின்றது. விலங்கு என்கிறான், மூச்சு முட்டுகிறது என்கிறான், இயல்பைத் தொலைத்துவிட்டேன் என்கிறான்.. இவ்வளவு நாட்களும் அன்பு காட்டுகிறேன் என்கிற பெயரில் அவனைத் திணறடித்ததாகவா சொல்கிறான்.
என் காதல் பெரும் எதிர்ப்புக்கள் இன்றிக் கைகூடிவிடும் என்று அவள் கனவு கண்டிருக்க, அவள் காட்டிய காதலே அவள் காதலுக்கு எதிரியாகிப் போனது!
“உன்னாலும் என் பழக்க வழக்கத்துக்கு மாறமுடியாது. நீ கற்பு கட்டுப்பாடு என்று ஆயிரம் சொல்வாய். என்னாலும் என்றுமே உனக்கு ஏற்ற வகையில் மாறமுடியாது. உனக்கு ஏற்றவன் ஜெயன் தான். அவனையே நீ திருமணம் செய்துகொள். அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது.” என்று அவன் சொல்லவும், அதிர்ச்சியின் உச்சக் கட்டத்துக்கு சென்றவள், நெஞ்சில் கைவைத்தபடி பேயறைந்தவள் போல் அவன் முதுகையே வெறித்தாள்.
வாயால் வரமறுத்த வார்த்தைகளை ஒன்றாக்கி நெஞ்சம் ஊமையாய் கதறியது.
இரவும் பகலும் சேர்ந்ததுதானே நாளாகிறது. பகலவன் அவன் இன்றிப் போனால் அவள் வாழ்வில் இருள் கவ்வாதா? அதை அறியமாட்டானா அவன்?
அவனே அவளை இன்னொருவனுடன் இணைத்துப் பேசலாமா? எப்படி முடிந்தது அவனால்? அப்படியானால் இதுவரை உயிராகப் பழகியது எல்லாம் பொய்யா? காதலில் கசிந்துருகியது எல்லாம் சும்மாவா? அவளைக் கொஞ்சிக் குலாவியது எல்லாம் எதற்காக? அவள் மனதில் ஆசைகளை வளர்த்தது எதற்காக? உறவுகள் இன்றி வாழ்ந்தவளுக்கு எல்லாமாக நான் இருக்கிறேன் என்கிற நம்பிக்கையைத் தந்தது எதற்க்காக? இப்படி ஒரேயடியாக அதலபாதாளத்துக்கு அவளைத் தள்ளவா? இதற்கு அவன் அவள் கழுத்தை நெரித்துக் கொன்று போட்டிருக்கலாமே!
இப்படி நெஞ்சில் பல்லாயிரக் கணக்கான கேள்விகள். அதைக் கேட்கத்தான் அவளால் முடியவில்லை.
அவனிடம் கேள் கேள் என்று நெஞ்சு கதறியது. திறக்க மாட்டேன் என்று அடம்பிடித்த உதட்டினால், பேசும் சக்தியை இழந்து நின்றாள் லட்சனா.
அவள் புறமாகத் திரும்பிய சூர்யா, வேதனையால் விரிந்த விழிகளில் கண்ணீர் வழிந்தபடி இருக்க, வலியில் துடிக்கும் மார்பை இரு கைகளாலும் அடக்கியபடி, அவனையே வேதனையோடு பார்த்திருந்தவளைப் பார்த்ததும், ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
உடனேயே முகத்தைத் திருப்பிக்கொண்டு, “இதோ.. இந்த அழுகை கூடத்தான் எனக்குப் பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் அழுவது. அழுதழுதே உன் காரியங்களைச் சாதிக்க நினைப்பது..” என்று சிடுசிடுத்தான் அவன். வேதனை நிறைந்த அவள் முகத்தைப் பார்த்ததும் தடுமாறிய தன் உள்ளத்தின் மீது கொண்ட கோபத்தை அவள் மீது காட்ட முயன்றானோ?
அவன் சிடுசிடுப்பைக் கேட்டவளின் உதடுகள் அழுகையில் துடிக்க, அதைப் பற்களால் கடித்து அழுகையை அடக்க முயன்றாள். கண்களில் நீர் பெருக, இயலாமையால் இறுக மூடியவளின் விழிகளில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
அந்த முகத்தைப் பாராது பார்வையத் திருப்பியவன், “ஜெயனுடனான உன்னுடைய திருமண வாழ்க்கைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்றுவிட்டு, அவ்விடம் விட்டு வேகமாக நடந்தான் சூர்யா.
சட்டென்று விழிகளைத் திறந்தவள், நெஞ்சுக் கூட்டுக்குள் நஞ்சை ஊற்றிவிட்டுச் செல்லும் அவனையே பாத்திருந்தாள். கண்கள் கண்ணீரை மட்டும் நிறுத்தவே இல்லை.

