உன்னில் என்னை தொலைத்தேனடி 2 – 1

அத்தியாயம் 2

 

இவனுக்கு முதுகைக் காட்டியபடி மிக வேகமாய் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள் ஒரு பெண். சரியாகச் சொல்லப்போனால் அவள் ஆடவில்லை, பறந்துகொண்டிருந்தாள். அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. காற்றைக் கிழித்துக்கொண்டு முன்னேயும் பின்னேயும் அந்தரத்தில் அவள் ஆடிக்கொண்டிருக்க, அவளின் கூந்தல் ஒரு நீண்ட பாம்பாக மாறி முதுகினில் படர்ந்து அதுவும் பறந்தது. அந்த அழகான காட்சியை ரசித்தான் அவன்.

 

தன்னை ஒருவன் பின் பக்கமிருந்து பார்த்துக்கொண்டிருப்பதை அறியாமல், “நான் சொல்லுறது பொய் எண்டா பாரன், உன்ர அண்ணா வெள்ளைக்கார மனுசியும் பிள்ளையுமாத்தான் வந்து இறங்கப்போறார். நீ அண்ணான்ர கலியாணத்துக்குச் சோளி போடப்போறன் லெஹெங்கா மாட்டப்போறன் எண்டு கனவு காணுறத விட்டுட்டு, அந்த வெள்ளைக்காரப் பிள்ளைகளுக்குத் தமிழ் எப்பிடிச் சொல்லிக்குடுக்கலாம் எண்டு யோசி!” என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள் அவள்.

 

“ஆகத்தான் ஆடாதயடி! என்ர அண்ணா ஒண்டும் அப்பிடியான ஆள் இல்ல. நாங்க பாத்து வச்சிருக்கிற பெட்டையைத்தான் கட்டுவார்.” ரோசத்துடன் பதிலிறுத்தாள் அவனுடைய தங்கை.

 

“போடி, மண்டைக்க ஒண்டும் இல்லாதவளே! அப்பிடி ஒண்டும் இல்லாட்டிச் சொல்லிப்போட்டு வரவேண்டியதுதானே. வாறது கலியாணத்துக்கு. இதுல சப்ரைஸ் பயணமாம். ஆருக்கு விடுறாராம் கதை!” என்று தலையைச் சிலுப்பிட்டு, சற்றே யோசித்து, “சிலநேரம் அங்க ஒரு கலியாணம் இங்க ஒரு கலியாணம் எண்டு கட்ட வாறாரோ?” என்று அவள் தன் கற்பனையை அவிழ்த்துவிட, மேலே கேட்டுக்கொண்டு இருந்தவன் அரண்டுபோனான். இவள் என்ன கண்டபாட்டுக்குக் கதை விடுகிறாள். பொல்லாதவள்! அவன் உதட்டோரம் முறுவல் ஒன்று தொற்றிக்கொண்டது.

 

அபிராமிக்கு அதற்குமேல் பொறுக்க முடியவில்லை. “மாடு! என்ர அண்ணாவை என்ன நினச்சனி நீ? இவ்வளவு மோசமாக் கதைக்கிறாய்? உன்ன…” என்று அடிக்க ஓடிவர, அவளோ ஊஞ்சலில் இருந்து குதித்து ஓடத்தொடங்கினாள்.

 

இங்கே, அறைக்குள் வந்த சீராளனுக்கு அந்த வாயாடியின் நினைவுதான். ‘கலியாணம் ஒண்ட கட்டி வாழ்க்கைல செட்டில் ஆகுவம் எண்டு ஆசையா வந்தா, இவள் எல்லாத்தையும் நாசமாக்கிடுவாள் போலவே.’ நினைக்க நினைக்கச் சிரிப்புத்தான் வந்தது. அவன் வந்துவிட்டது தெரியாமல் என்ன பேச்சுப் பேசுகிறாள்?

 

‘டேய் சீராளா! அம்மா எந்தப் பொம்பிளையக் காட்டினாலும் கண்ண மூடிக்கொண்டு ஓம் எண்டு சொல்லி, கெதியா கலியாணத்தை முடி. இல்ல, இந்தப் பெட்டையே அங்க சுவிஸில் ஒருத்தியோட வாழுறன் எண்டு ஊர் முழுக்கக் கதையைப் பரப்பிவிட்டு உன்னக் காலம் முழுக்கச் சந்நியாசியா வாழ வச்சாலும் வச்சிடுவாள்.’ என்று எண்ணமிட்டபடி உள்ளாடையை அணிந்துவிட்டு டவலை கழட்டிய அந்த நொடி,

 

“எங்கயோ இருக்கிற அண்ணா சேருக்காக உயிர் நண்பியப் பகைக்காத அபி. ஐயோ எண்டாலும் நான்தான் ஓடி வரோணும். உன்ர கொண்ணா சேர் வெள்ளைக்காரியோட குடும்பம் நடத்தத்தான் சரி!” என்று, அடக்கமுடியாத நகைப்புக்கிடையில் சொல்லிக்கொண்டு ஓடிவந்து, அறைக்குள் நுழைந்து கதவை அடித்துச் சாத்தினாள் அவள்.

 

தோழியிடமிருந்து தப்பிவிட்டோம் என்கிற எண்ணத்துடன் நெஞ்சில் கைவைத்து மூச்சு வாங்கிக்கொண்டு திரும்பியவள், அங்கே வெறும் உள்ளாடையோடு நின்றவனைக் கண்டதும் நொடி திகைத்து, “கருமம் கருமம்!” என்றபடி கண்களைக் கைகளால் இறுக்கி மூடிக்கொண்டாள்.

 

அவனும் இதை எதிர்பார்க்கவில்லை. ஒரு பெண்ணின் முன்னால் அவன் நிற்கும் நிலை எவ்வளவு அவமானம்! “அச்சோ!” என்று பதறியபடி, வேகமாகக் கழற்றி எறிந்த டவலை தேட, “முதல் மூட வேண்டியதை மூடுங்க!” என்றுவிட்டு ஓடிப்போனாள் அவள்.

 

அப்படியே நின்றுவிட்டான் சீராளன். ‘குறும்பி!’ உதட்டில் அரும்பிய சிரிப்புடன் தனக்குள் சொல்லிக்கொண்டான். அவன் ஒன்றும் மோசமாய் நிற்கவில்லை. ‘box shorts’ என்கிற உள்ளாடையோடுதான் நின்றிருந்தான். குனிந்து பார்க்க அவனுக்கு அவ்வளவு மோசமாய்த் தெரியவில்லை. என்றாலும்… முகமெங்கும் தொற்றிக்கொண்ட சிரிப்புடன் உடைகளை மாற்றிக்கொண்டு கீழே வந்தவனின் விழிகள் ஆர்வத்தோடு அவளைத் தேடின.

 

“யார் அபி அது?” எதிரில் சிரித்துக்கொண்டு வந்தவளிடம் விசாரித்தான்.

 

“என்ர ப்ரெண்ட் அண்ணா. ஷர்மினி எண்டு சொல்லுவன். அவள்தான் இவள். நீ வந்திருக்கிறாய் எண்டு சொன்னா வரமாட்டாள் எண்டு வரவச்சா, உன்னைப் பகிடி பண்ணுறாள். அடிக்கத் துரத்தினா ஓடிட்டாள்!” என்று அவள் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டு போக, தனக்குள் சிரித்துக்கொண்டான் சீராளன்.

 

அவனுக்குத் தானே தெரியும், ஏன் ஓடினாள் என்று.

 

அடுத்தநாள் காலை, ஏற்கனவே அவனுடைய வீட்டினர் பார்த்துவைத்த பெண்ணைப் பார்க்கப் போனார்கள்.

 

தன் எதிர்காலத் துணைவியாகப் போகிறவளைக் காண சீராளனும் சந்தோசமும் ஆர்வமுமாகவுமே தயாராகிப் போனான். எல்லாவற்றிலுமே இவர்களுக்குச் சமமானவர்கள். சந்தோசமாக வரவேற்று உபசரித்தார்கள். பெண் பார்க்கும் படலமாக அல்லாமல் இரண்டு குடும்பங்கள் சந்தித்துக் கதைப்பதுபோல் இயல்பாய் இருந்தது.

 

பெண் நல்ல அழகி. படிப்பு, வசதி என்று எதிலும் எந்தவிதக் குறையும் இல்லை. ஆனால், ‘என் மனைவி’ என்கிற எண்ணத்தோடு அவளைப் பார்த்தபோது, “கருமம் கருமம்!” என்றபடி முகத்தை மூடியவள்தான் கண்ணுக்குள் வந்து நின்றாள். என்னைவிட்டு அவளைக் கட்டுவாயோ என்று முறைத்தாள்.

 

அதிர்ந்து போனான் சீராளன்.

 

தன் மனம் எங்கே போகிறது? தங்கையின் தோழியையா? ச்சே! இதென்ன சபலக்குணம்?

 

அவளைத் தவிர்த்துவிட்டு நேரெதிரில் இருந்து தங்கையோடு அளவளாவிக்கொண்டிருந்த பெண்ணை ரசிக்க முனைந்தான். அவளைத் தன்னவளாய்க் கற்பனை செய்தான். முடியவேயில்லை. ஒரு கணத்துக்கு மேல் அவள் மேல் விழிகளை நிலைக்க விடவே முடியவில்லை.

 

ஏதோ ஊரான் வீட்டுப் பெண்ணை அத்துமீறிப் பார்ப்பதுபோல் அசௌகர்யமாக உணர்ந்தான்.

 

ஃபோட்டோ அனுப்பவா என்று கேட்ட தாயிடம் கூட அவன் மறுத்ததற்குக் காரணம், முதன் முதலாக நேரில் பார்க்கையிலேயே அவள் தனக்குள் முழுமையாக வந்துவிட வேண்டும்; தன்னை முற்றிலுமாக அவளிடம் இழக்கவேண்டும் என்கிற அவா. இப்போதோ அந்தப் பெண்ணின் முகத்தில் கூட இவள்தான் கண்ணை மூடிக்கொண்டு கருமம் கருமம் என்றாள்.

 

என்ன இது?

 

அந்த இடத்திலேயே இருக்க முடியாமல் அவன் நெளிவதைப் பார்த்துவிட்டு, “என்னப்பு?” என்று தேவகி மெல்லக் கேட்டார்.

 

“போவம் மா!” என்றான் மெதுவாக.

 

“அந்தப் பிள்ளையைப் பிடிச்சிருக்குத் தானே?” ஆர்வத்தோடு கேட்டவரிடம், “வீட்டபோய்ச் சொல்லுவம், இப்ப வாங்க!” என்றான்.

 

அவருக்குச் சற்றே ஏமாற்றம் தான். பார்த்ததும் தலைகுப்புற விழுந்துவிடுவான் என்றுதான் எண்ணியிருந்தார். அந்தளவு பார்ப்பவரைக் கவரும் அழகி அவள். அழகு மட்டுமல்ல பண்பான, பழக இனிமையான பெண்ணும் கூட.

 

கணவரின் கையை அவர் சுரண்ட, “அப்ப நாங்க வெளிக்கிடப்போறம். மகனோட வடிவா கதைச்சிப்போட்டு நல்ல பதிலா சொல்லுறம்.” என்று எழுந்துகொண்டனர்.

 

பெண் வீட்டினருக்கும் இது பெரிய ஏமாற்றம்தான் என்பதை அவர்களின் முகம் அப்படியே காட்டிக்கொடுத்தது. இவர்களும் சங்கடமாக உணர்ந்தார்கள்.

 

error: Alert: Content selection is disabled!!