உன்னில் என்னை தொலைத்தேனடி 9 – 1

அத்தியாயம் 9

 

 

 

சீராளன் சுவிஸ் சென்று ஒருவாரமாகியிருந்தது. அவனது பிரிவு தாங்காமல், அழுது கரைந்துகொண்டிருந்தாள் ஷர்மினி. அவளை மாற்ற எண்ணி கொழும்புக்குப் போகச் சொன்னான் சீராளன்.

 

அங்கு, ஒரு அறை வாடகைக்கு எடுத்துத் தங்கிப்படிக்க என்று ஆயத்தமாக, சயந்தனுக்கு அதில் பெரிதாக விருப்பமில்லை. தெரியாத ஊரில், புரியாத மொழியோடு எப்படிச் சமாளிப்பாள்? அதுவும் தனியாக? பாதுகாப்பு இல்லையே. சீராளனைச் சென்று சேர்கிற வரைக்கும் அவளின் பாதுகாப்பு அவனுடையது அல்லவா!

 

ஒரு வயதான அம்மாவையும் அவளுடனேயே இருப்பதுபோன்று வேலைக்கு அமர்த்துவோம் என்று சீராளன் சொல்லியும் தயங்கினான்.

 

“எங்கட பிரான்ச் அங்க இருக்குத்தானேடா. நான் டிரான்ஸ்ஃபர் வாங்குறன்.” என்று, உதயன் சொன்னபிறகே சம்மதித்தான்.

 

திட்டமிட்டது போலவே அத்தனையும் நடக்க, புது இடம், புதுக் கல்வி, புது மனிதர்கள், டொச்சோடு சேர்த்து செவிவழி கற்கத் தொடங்கிய சிங்களம் என்று அவளுக்கும் ஒரு மாற்றம்தான். அழுகை நின்றிருந்தது.

 

ஆறுதலுக்கு உதயனும் இருந்தான். நேரமிருக்கையில் அவனோடு கொழும்பைச் சுற்றிப் பார்த்தாள். அமைதியாய் நாட்கள் நகர்ந்தாலும் கணவனோடு கதைக்கும் அந்த நேரங்களைத் தவிர்த்த பொழுதுகள் எல்லாம், ஒருவித சஞ்சலத்தோடே நகர்ந்தன. முழுமையாய் எந்த உணர்வையும் அனுபவிக்க முடியாமல் அல்லாடினாள்.

 

நல்ல கணவன், நல்ல குடும்பம், நல்ல வாழ்க்கை. ஆனாலும், ஒரு அலைப்புறுதல். கவலை கிடந்து அரித்தது. அதற்கு முழுமையான காரணம் மாமியாரும் அபியும். அவர்களை ஒதுக்கிவிட்டு எனக்கு என் கணவன் மட்டும் காணும் என்று சுயநலமாய் வாழவும் தெரியவில்லை.

 

இதையெல்லாம் தாண்டிக்கொண்டு, குழந்தை எதுவும் வந்துவிடுமோ என்றுதான் மிகவுமே பயந்தாள். அதுவும் மாமியார், அவரை நினைக்கவே நடுங்கினாள்.

 

அபியின் அம்மாவாக மட்டுமே இருந்த காலத்தில் அன்பாகப் பழகிய பெண்மணி, இன்று அவரா இவர் என்று பலமுறை நினைக்கவைத்தார். அந்தளவு இறுக்கம். இதுதான் என்றால் இதுதான். செய்யக்கூடாது என்றால் செய்யக்கூடாதுதான். மீறி நடந்துவிட்டால் அவர் வீசும் ஒற்றைப் பார்வையிலேயே பொசுங்கிப்போவாள். அவரின் உடல் மொழியே அவளைத் தின்றுவிடும். அப்படியானவர், பிள்ளை வேண்டாம் என்று அவ்வளவு சொல்லியும் ஏதாவது நடந்துவிட்டால்?

 

சும்மாவே அவருக்கு அவளைப் பிடிக்காது. இதில், அவர் சொன்ன ஒன்றை மீறிவிட்டால் இன்னும் வெறுத்துவிடுவாரோ?

 

திருமணம், கணவனோடான ஒருமித்த வாழ்க்கை, அடுத்தக் கட்டமாகக் கண் நிறைந்த கணவனைப்போலவே குழந்தையைத் தானே மனம் விரும்பும். விரும்பினாலும் வேண்டாம் என்று மறுக்கும் நிலையில் இருக்கிறாளே.

 

தொலைவில் இருக்கும் கணவனிடம் இதையெல்லாம் சொல்லி ஆறவும் மனமில்லை. தனியாய் இருந்து கஷ்டப்படுகிறவனை அவளும் வருத்துவதா? முதலில், இதை ஒரு விசயமாகச் சொல்லத் தெரியவில்லை. மேற்பார்வைக்கு எல்லாமே இயல்பாய் இருப்பது போல்தான் தோன்றிற்று. உள்ளேதான் ஒருவரோடு மற்றவருக்கு உள்ளார்ந்த பற்றுதலைக் காணோம்.

 

நாட்கள் நகர, ஒருநாள் இவள் பயந்ததுபோன்று குழந்தைதான் என்று உறுதியானது.

 

உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரவிய சந்தோசத்தோடு உணர்ந்த அந்தச் செய்தி, மாமியாரை நினைத்ததும் மனதுக்குள் பெரும் கிலியாய் இறங்கியபோது மிகுந்த வேதனையுற்றாள்.

 

எப்படி இதை அவரிடம் சொல்வாள்? என்ன சொல்வாரோ?

 

உதயனுக்கோ மிகுந்த சந்தோசம். “இனி நான் மாமாடி!” என்று சொல்லிக் குதித்தான்.

 

சயந்தனுக்கு அழைக்கப் போனவனைத் தடுத்துவிட்டு கணவனுக்கு அழைத்துச் சொன்னாள்.

 

“ஷர்மி!” அளவற்ற சந்தோசம் கொடுத்த நெகிழ்ச்சியில் அவன் குரல் கரகரத்துப் போயிற்று!

 

“தேங்க்ஸ்டா செல்லம்மா!” ஃபோன் வழியே ஓராயிரம் முத்தங்களைப் பரிசளித்தான். அருகினில் இருந்தபோது அவன் தந்த ஒரு முத்தத்துக்குக்கூட அது ஈடாக மறுத்தது.

 

“என்னை அப்பாவா ஆக்கியிருக்கிறாய் ஷர்மி. இன்னும் கொஞ்ச நாள்ல எங்களுக்கு ஒரு மகனோ மகளோ பிறக்கும். இரவுல எங்களை நித்திரை கொள்ளவிடாம ஒரே கீச்சுக் கீச்சுத்தான். தன்ர காலால நெஞ்சில உதைக்கும். சத்தமே இல்லாம இருக்கிற இந்த வீட்டுல ஒரே சத்தமா இருக்கும் என்ன?” ஆள்மனதிலிருந்து தன் கற்பனைகளை, சந்தோசத்தை அவன் பகிர்ந்துகொண்ட போது, இதையெல்லாம் அருகிருந்து, அவன் முகத்தைப் பார்த்தபடி கேட்கும் கொடுப்பினை இல்லாமல் போயிற்றே என்று கலங்கினாள் மனைவி.

 

‘ப்ச்! இப்ப அவருக்குப் பக்கத்தில இருந்திருந்தா எவ்வளவு சந்தோசமா இருந்திருக்கும்.’ கண்ணோரம் திரண்ட நீர்த்துளியை சுண்டிவிட்டுக்கொண்டாள்.

 

“இப்ப பாத்து நான் பக்கத்தில இல்லாம போயிட்டேன்.” என்றான் அவனும்.

 

அவளுக்கு அழாமல் சமாளிப்பது பெரும் சவாலாயிற்று.

 

“அம்மா அப்பாக்கு சொல்லீட்டியா?”

 

“உங்களுக்குத்தான் முதல் சொல்லோணும் எண்டு இன்னும் ஒருத்தருக்கும் சொல்லேல்ல. ஆனாப்பா… நீங்களே சொல்லுங்கோவன்.” தயக்கத்தோடு கேட்டாள்.

 

அவன் அதை ஏற்க மறுத்தான். “நீயே சொல்லு. போனமுறை உன்ர அம்மா வீட்டை நிக்குறதுக்கு உனக்காக நான் கேட்டது அம்மாவுக்கு மனம் சரியில்ல. இதையும் நான் சொன்னா உன்னில இன்னும் கோபப்படுவா. இப்ப நீயே சொல்லு, சந்தோசப்படுவா.”

 

கணவன் தன்னையும் தாயையும் சுமூகமாக்க நினைக்கிறான் என்று விளங்காமல் இல்லை. ஆனால்…

 

“மாமி இப்ப பிள்ளை வேண்டாம் எண்டு சொல்லியும் இப்படி எண்டா பேசப்போறா.” பயத்தோடு சொன்னாள்.

 

அவனோ அதை அர்த்தமற்ற பேச்சாக எண்ணிச் சிரித்தான். “என்ன சொல்லுறாய் நீ? இது அவவின்ர பேரக்குழந்தை. அதுக்குக் கோவிப்பாவா? அதெல்லாம் ஒண்டும் சொல்லமாட்டா. நீ சந்தோசமா சொல்லு. பிறகு நானும் எடுத்துக் கதைக்கிறன்.” என்று சொல்லிவிட்டு அவன் வைத்துவிட்டான்.

 

மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. கைகால்களில் எல்லாம் நடுக்கம். ‘நான் தாயாகி இருக்கிறேன்’ என்று துள்ளலோடு சொல்லவேண்டிய ஒரு விசயத்தை, இப்படிப் பயந்து பயந்து சொல்லவேண்டி இருக்கிறதே.

 

உலகில் இருக்கும் அத்தனை தெய்வத்தையும் துணைக்கழைத்துக்கொண்டு அவருக்கு அழைத்தாள்.

 

விசயத்தைச் சொன்னபோது, “உண்மையாவா? என்ர குடும்பம் தழைக்கப்போகுது. நல்லூர்க் கந்தா உனக்குப் பொங்கல் வைக்கிறன். இனி நீ கொழும்பில நிக்க வேண்டாம், இங்க வா.” என்று சொல்லிக்கொண்டு போனவரின் பேச்சு, சட்டென்று அப்படியே நின்றது.

 

இவளின் இதயத் துடிப்பு வேகமாக, நெற்றியில் வியர்வைப் பூக்கள் அரும்பிற்று!

 

“நான் எல்லோ சொன்னனான், இப்ப இது வேண்டாம் எண்டு. சொல்லுற எதையும் கேக்கமாட்டியா நீ? இனி என்ன, நீயும் பிள்ளையும் இங்கயும், அவன் அங்கயும் எண்டு வாழப் போறீங்களே?” என்றவரின் குரல், அப்படியே மாறிப்போயிருந்தது.

 

“இல்ல மாமி. அது இவர்தான்…”

 

“அவன் சொன்னா உனக்கு எங்க போனது அறிவு? கொஞ்சமும் யோசிக்க மாட்டியா? இப்பிடி ஆளாளுக்குப் பிரிஞ்சு இருக்கவே கலியாணம் கட்டினீங்கள். தப்பித்தவறி ஸ்பொன்சர் சரிவராட்டி பிறக்கிற பிள்ளையின்ர கதி என்ன? அப்பா முகம் பாக்காம பிறந்து வளரவேணும் எண்டு என்ர பேரக்குழந்தைக்குத் தலையெழுத்தா என்ன? அவன் அங்க தனிச்சு வாழுறதுக்கா உன்ன பிடிக்காட்டியும் அவனுக்குக் கட்டி வச்சது? முதல் என்ர சொல்லுக்கு என்ன மதிப்பு? அவன்தான் காரணம் எண்டு அவன்ர பேர்ல பழியைப் போடப்பாக்கிற? அப்ப, உனக்கு ஒண்டும் தெரியாது. அந்தளவுக்கு நீ பாப்பா. இதுக்குத்தான் அவனுக்குச் சொன்னனான், நல்ல இடத்துல கட்டடா எண்டு. கண்டறியாத காதலும் நீங்களும். என்னவாவது செய்து துலையுங்கோ! இனி நடக்கிற எதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல.” என்று வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டு, பட்டென்று தொலைபேசியைத் துண்டித்திருந்தார் அவர்.

 

அப்படியே உறைந்துபோனாள் ஷர்மினி.

 

கொஞ்ச நேரத்துக்குப் பிறகே மூச்சு வெளியேற, அது பெரும் கேவலாக வெடித்துக்கொண்டு வந்தது.

 

‘இல்ல மாமி. அது இவர்தான் இன்னும் மூண்டு மாதத்தில அங்க வந்திடலாம் எண்டு சொன்னவர்’ என்று அவள் சொல்ல வந்தது என்ன, அவர் விளங்கிக்கொண்ட விதம் என்ன? அழுகையும் அவமானமும் அவளை நசுக்கின.

 

தாய்மை அடைந்த நேரத்தில், அவரின் கடுமையான வார்த்தைகள் அவளை ஆழமாகக் காயப்படுத்திற்று.

error: Alert: Content selection is disabled!!