இப்போதெல்லாம் உதயன் சொன்னதுபோன்று, சற்றுப் பொறுமையாகத் தானும் போயிருக்கலாமோ என்கிற எண்ணம் அவளுக்குள் வந்துகொண்டிருந்தது.
அவர் கதைத்தது பெரும் தப்பு என்றால், அவள் வெளியே வந்ததும் தவறுதான். அவளை உயிராக நேசிக்கும் கணவனின் கோபமும் அதுவாகத்தான் இருக்கும் என்று விளங்கிக்கொண்டாலும், நடந்துவிட்ட பிளவை எப்படி நிவர்த்தி செய்வது என்று விளங்கவில்லை. அவளாக மீண்டும் பெட்டி கட்டிக்கொண்டு போக மனமேயில்லை. கணவன் ஒருமுறை அழைத்துத் திட்டினான் என்றாலாவது, அதுதான் சாக்கு என்று போய்விடலாம் என்றால் எங்கே?
ஒருவழியாக, அந்த மாதக் கடைசியில் ஒரு நல்லநாளில் சயந்தனுக்குக் கோவிலில் வைத்துத் திருமணம் என்று நிச்சயமாயிற்று. அதை மிக மிக எளிமையாக நடாத்த சயந்தன் திட்டமிட, ஷர்மினிக்குக் கோலாகலமாக நடந்த அவளின் திருமணம் நினைவிற்கு வந்தது.
“இவரிட்ட கொஞ்சம் காசு கேக்கவா அண்ணா?” என்று அவள் கேட்டபோது, அழுத்தம் திருத்தமாக, “ஒரு ரூபாயும் கேக்கக் கூடாது!” என்றுவிட்டான் சயந்தன்.
“கலியாணத்துக்கு எண்டு கடனப் பட்டுட்டுப் பிறகு தினம் தினம் கஷ்டப் படுறதை விட, எளிமையாத் தாலி கட்டிட்டு அதே எளிமையோட சந்தோசமான வாழ்க்கை வாழலாம்.” என்றான் அவன்.
“இவரிட்ட வாங்கிறது கடனா அண்ணா?” கடன் என்கிற ஒற்றை வார்த்தை கணவனது கௌரவத்தைச் சுரண்டிப்பார்ப்பது போலிருந்ததில் கேட்டுவிட்டாள்.
அவளை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தான் சயந்தன். பின், “என்ர தங்கச்சி வாழப்போன இடத்தில எண்டைக்கும் தலைநிமிந்து வாழவேணும். அவேற்ற கைநீட்டிக் காசு கேக்கிறது எனக்கும் மரியாதை இல்லயம்மா.” என்று நிதானமாக அவன் சொன்னபோது, மளுக் என்று கண்களில் கண்ணீர் நிரம்பிப்போனது அவளுக்கு.
உண்மைதானே. இப்போதே அவளுக்கு மரியாதையில்லை. இதில் கைநீட்டிக் காசு வேறு வாங்கினால்? மாமியார் காதுக்குப் போனதோ கதை சரிதான்!
“மகிழினிக்கும் எளிமையாச் செய்றதுதான் விருப்பம். நாங்க இதைப்பற்றி எல்லாம் கதைச்சு முடிவெடுத்திட்டம். நீ ஒண்டையும் யோசிக்காம சந்தோசமா இரு!” அவளின் தலையைத் தடவியபடி சொன்னான் தமையன்.
தமையனின் பேச்சில், அவர்கள் இருவரும் மனதால் ஒன்றிவிட்டதை அறிந்துக்கொண்டாள். மகிழினியைப் பற்றிப் பேசும்போதே அண்ணாவின் முகத்தில் வந்துபோன பிரகாசம், அவனுக்கும் இந்தத் திருமணம் பிடித்திருப்பதை உணர்த்த, சந்தோசமாயிருந்தது.
அதோடு, அவளுக்காக சக்திக்குமீறி எல்லாம் செய்த அண்ணாவுக்குக் கல்யாணப் பரிசாக அவளும் நிச்சயம் ஏதாவது கொடுக்கவேண்டும்.
தனக்காகக் கூடக் கணவனிடம் தன்மானம் பார்த்துக் கதைக்காதவள் தமையனுக்காக அழைத்தாள். அவனோடு அவளாகக் கதைப்பதற்கு ஒரு காரணம் கிடைத்துவிட்ட சந்தோசத்தில் அவளிருக்க, “சொல்லு!” என்றான் அவன் யாரோ போல்.
நிறைய நாட்களுக்குப்பிறகு கணவனின் குரல் வந்து காதுக்குள் மோத, தேகமெங்கும் சிலிர்த்துக்கொண்டு ஓடியது. கதைக்க வந்தது எல்லாம் மறந்தாள். மனதிலிருக்கும் அத்தனை குமுறல்களையும் அவனிடம் கொட்டி, ஒருமுறை அழுது தீர்த்துவிடவேண்டும் என்று எழுந்த உணர்வில் தொண்டை அடைத்துக்கொண்டது.
“அண்ணாக்குக் கலியாணம் சரிவந்திருக்கு.” குரல் கரகரக்கச் சொன்னாள்.
“நல்ல விசயம்!”
அவனுடைய ஒட்டாத பேச்சு அவளைக் காயப்படுத்தியது. இருந்தாலும், அடைத்த தொண்டையைச் சிரமப்பட்டுச் சீர் செய்து பேசினாள்.
“வாற கிழமை கோயில்ல வச்சுத் தாலி கட்டப்போறான். நாங்க எங்கட சார்பில ஏதாவது செய்யோணும். அதுதான், என்னட்ட காசில்லை. நீங்க அனுப்பினா நான் ஏதாவது வாங்கிக் குடுப்பன்.”
“ஓ..! அதுதானே பாத்தன். என்னடா என்ர மனுசி ஒருநாளும் இல்லாத அதிசயமா என்னைத் தேடி எடுக்கிறாள் எண்டு யோசிச்சன். காசு தேவை எண்டதும் என்னை நினைவு வந்திட்டுது போல.” இருந்த கோபத்துக்கு நக்கலாய்ச் சொன்னான்.
அல்லும் பகலும் அவனின் நினைவுகளோடு மாத்திரமே வாழ்கிறவளை என்ன வார்த்தை சொல்லிவிட்டான்?
மனது துடித்துவிட, “மற்றும்படியும் உங்கள நினைக்கேல்ல எண்டு யார் சொன்னது?” என்று குரலடைக்கக் கேட்டாள்.
“நினைச்சிருந்தா தேடி எடுத்திருப்பாய். ஒரு பிரச்சினை உனக்கு வரேக்க என்னட்ட வந்திருப்பாய். அப்பயெல்லாம் நினைவுக்கு வராத நான், இப்ப உனக்குக் காசு தேவை எண்டதும் நினைவுக்கு வந்திட்டேனோ?”
அவனின் கோபத்தில் இருக்கிற நியாயமும் மெல்லப் புரிந்தது. இருந்தாலும், தன் நிலையை விளக்க எண்ணி, “என்ன நடந்தது எண்டு தெரியாம கதைக்காதீங்கப்பா.” என்றவளை,
“என்ன வேணுமெண்டாலும் நடந்திருக்கட்டும்!” என்றான் அவன் இதையிட்டு.
அவள் திகைத்து நிற்க, “என்ன நடந்திருந்தாலும் வீட்டுல இருந்து பிரச்சினையத் தீர்த்திருக்க வேணும். எனக்கு எடுத்துச் சொல்லியிருக்கவேணும். அதைவிட்டுட்டுப் பெட்டியைக் கட்டிக்கொண்டு போனா எனக்கு என்ன மரியாதை? எப்பவும் அந்த வீட்டு மருமகளா நீ நடக்கவேணும் எண்டு சொல்லிப்போட்டுத்தானே வந்தனான். அதுக்குப் பிறகும் இப்பிடி நடந்திருக்கிறாய்.” என்றவனின் கோபத்தில் ஆடிப்போனாள் அவள்.
“இது வரைக்கும் உன்ர விருப்பத்துக்கு மாறா எதையாவது செய்திருக்கிறனா நான்? இல்ல, உன்னைத்தான் செய்யச் சொல்லி இருக்கிறனா? அப்பிடியான எனக்கு நீ என்ன தேடித் தந்திருக்கிறாய்? சீராளன்ர மனுசி சண்டை பிடிச்சுக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போய்ட்டாளாம் எண்டுற பெயரை. ஒற்றைக் கால்ல நிண்டு உன்னக் கட்டினதுக்கு நல்லா திரும்பிச் செய்திருக்கிறாய் நீ!”
கடவுளே! எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டாள்? தான் செய்துவிட்ட முட்டாள்தனம் இப்போதுதான் முழுமையாக உரைத்தது.
ஆனால், மாமி பேசியது ஒன்றும் சாதாரண விசயம் அல்லவே, அங்கிருந்தே சமாளிக்க? அதைச் சொல்லுவோம் என்று நினைக்க அவன் விட்டால்தானே?
“சொல்லு, எவ்வளவு வேணும் எண்டு உன்ர அண்ணா கேட்டவர்? அனுப்பி வைக்கிறன். நீ செய்த நல்லதுக்கு நானும் திருப்பிச் செய்யத்தானே வேணும்!” என்றான், அவன் அடங்காத கோபத்தோடு.
சுட்டுவிட்டது அவளுக்கு. அவள் செய்தது பெரும் பிழைதான். அதற்கென்று அண்ணாவைச் சொல்வானா?
“நீங்க அவ்வளவு சொல்லியும் ஏன் வீட்டை விட்டு வந்தனான் எண்டு நீங்களும் கொஞ்சம் யோசிங்கோ. அப்பிடியே செய்தது பிழையா இருந்தாக்கூட அதச் செய்தது நான். என்னை எவ்வளவு எண்டாலும் பேசுங்கோ. கேக்கிறன். ஆனா, அண்ணாவைக் கேவலப்படுத்தாதீங்கோ! அவர் கேக்கேல்லை. அவரின்ர கலியாணத்துக்கு எங்கட சார்பில நாங்க பரிசா ஏதாவது குடுக்கவேணும் எண்டு நான்தான் கேட்டனான்.” என்றாள் கோபத்தை அடக்கிய குரலில்.
ஆத்திரம் கண்ணை மறைத்தது அவனுக்கு. “உன்ர அண்ணா நல்ல புத்திசாலிதான். கேக்காத மாதிரியே உன்ன கேக்க வச்சிருக்கிறார்!” என்றான் விடாமல்.
அவள் உதட்டோரம் கசந்த முறுவல் ஒன்று வழிந்தது. “மனுசிக்கே செலவுக்கு அனுப்பாதவரிட்ட அண்ணா தனக்கெண்டு ஒரு ரூபாயும் வாங்க மாட்டான். காசுதான் எங்களிட்ட இல்ல. தன்மானம் நல்லாவே இருக்கு. கலியாணத்தப் பற்றி உங்களிட்ட சொல்லச் சொல்லி மட்டும்தான் சொன்னவன். சொல்லீட்டன். வைக்கிறன்.” என்றவள், கண்ணீரோடு வைத்துவிட்டாள்.
என்ன இருந்தாலும் அண்ணாவை அப்படிக் கதைக்கலாமா? மனமே ஆறவில்லை அவளுக்கு. அவன் புத்திசாலியாமே. உண்மையிலேயே புத்திசாலியாக இருந்திருக்க, சீதனம்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களே என்று பேசாமல் விட்டிருப்பானே. கடன் பட்டு, லோன் எடுத்துத் தங்கைக்கு நகைகளை வாங்கிப் போட்டுவிட்டு, தன் திருமணத்தை மிக மிக எளிமையாகச் செய்ய நினைப்பானா? அப்படியானவனைப்போய் என்ன சொல்லிவிட்டான் கணவன்?
சீராளன் நிதானம் இழந்திருந்தான். ‘எங்களிட்ட’ என்றால் அவன் யார் அவளுக்கு? மூன்றாம் நபராய் அவனைத் தள்ளி நிறுத்திய அந்த வார்த்தை, உச்சந்தலையிலேயே சென்று அமர்ந்துகொண்டு அவனுக்குச் சினமூட்டிக்கொண்டிருந்தது.
கட்டிலில் விழுந்துகிடந்து கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள் ஷர்மினி. அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெஞ்சுக்குள்ளேயே நின்று நோகடித்துக்கொண்டிருந்தது. தான் நடந்துகொண்ட விதம் பிழை என்று முதலே உணர்ந்துதான் இருந்தாள். அவனோடு பேசியபிறகு, அந்தத் தவறின் ஆழம் இன்னுமே நன்றாக விளங்கிப் போயிற்று. அவனுக்கு இப்படி ஒரு நிலையை உருவாக்கி விட்டோமே என்று அதுவேறு இப்போது வருத்தியது.
இதில், அவளுக்காக எவ்வளவோ செய்த தமையனின் கல்யாணத்துக்குப் பரிசு கொடுக்க அவளிடம் காசில்லை.
என்ன செய்யப் போகிறாள்? அழுகை ஓய்ந்துபோயிருக்கச் சிந்தனை ஓடியது. சீதனம் வேண்டாம் என்றார்கள்தானே. தமையன் அவளுக்குச் செய்துபோட்ட நகைகளை விற்றாள். அந்தக் காசில் அவனுக்கும் அண்ணிக்கும் நகை வாங்கிக்கொண்டு வந்து வைத்தாள்.

