உன்னில் என்னை தொலைத்தேனடி 3 – 1

அத்தியாயம் 3

 

 

அது ஒரு பிள்ளையார் கோவில். பிரதான வீதியில் அமைந்திருந்தது. அதைக் கடந்துதான் ஷர்மினி வீட்டுக்குப் போகவேண்டும். அங்குச் சென்று நின்றுகொண்டான் சீராளன்.

 

‘என்ன சொல்லுவா?’ யோசனையில் மனம் உழன்றது.

 

விடலைப்பையன் போன்று கணப்பொழுதில் கண்ட பெண்ணுக்காக மொத்த வீட்டையும் எதிர்த்துக்கொண்டு வந்து நிற்கிறான்.

 

அம்மாவை எண்ணி மனம் கனத்தாலும் அவள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப்பார்க்கவும் முடியவில்லை. பார்த்தகணத்தில் மனதில் பதியவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டதுதான் நடந்திருக்கிறது. என்ன, பெண் வேறாகிப்போனாள்.

 

அம்மாவைச் சமாதானப்படுத்துவது சிரமம் என்றே தோன்றிற்று. ஆனால், எப்போது வேண்டுமானாலும் அதைச் செய்யலாம். அவளுக்கோ அவனுக்கோ வேறொருவருடன் திருமணம் நடந்துவிட்டால் அவனுக்குக் கிடைக்கவே மாட்டாளே!

 

எது எப்படியாயினும் அவளைத் தவறவிட முடியாது.

 

அவளும் வந்தாள். தூரத்திலேயே கண்டுவிட்டான். அன்று மின்னலாய் மறைந்தவள் இன்று மெல்ல மெல்ல அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள். மனதில் ஒருவிதப் பரவசம். அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

அப்போதுதான், அவளோடு அருகில் யாரோ ஒருவன் வருவது தெரிந்தது. மனம் அனிச்சம் மலராக வாடிப் போயிற்று. யாரையும் காதலிக்கவில்லை என்று தங்கை அடித்துச் சொன்னாளே.

 

அதைவிட, இவனைக் கவனியாது அவனோடு சிரித்துக் கதைத்துக்கொண்டு வருவது பெரும் கோபத்தையும் பொறாமையையும் உருவாக்கிற்று!

 

‘என்னோட ஒரு வார்த்த கதைக்காம ஓடிட்டு இவனோட மட்டும் என்ன சிரிப்பு?’

 

அவளோ அருகில் வந்ததும்தான் இவனைக் கவனித்தாள். அதுவும், ஏதோ ஒரு உறுத்தலில் ‘இது யார்… என்னையே பாக்கிறது…’ என்றுதான் புருவம் சுருக்கிப் பார்த்தாள்.

 

இவன் என்றதும் அன்று உள்ளாடையோடு கண்ட காட்சி கண்களில் வர, சின்ன வெட்கத்தோடு சிரிப்பும் வந்தது. வேகமாய்ப் பார்வையை விலக்கிக்கொண்டு அவள் போக முயல கை நீட்டித் தடுத்தான் சீராளன்.

 

தானாக அவளின் சைக்கிள் நிற்க, குழப்பமும் கேள்வியுமாகப் பார்த்தாள்.

 

உதயனும் அவளுடன் நின்றான். அதுவும் பிடிக்கவில்லை இவனுக்கு.

 

“யார் இது?” உதயனைக் கண்ணால் காட்டிக் கேட்டான்.

 

அவளுக்குள் மெல்லிய ஆச்சரியம். என்ன இது உரிமைப்பட்டவன் போன்று கேள்வி கேட்கிறான்? முதலில் ஏன் விசாரிக்கிறான்? அபியின் அண்ணா என்பதில் பதில் சொல்லாமல் இருக்க முடியாமல், “என்ர ஃபிரெண்ட், உதயன்.” என்றாள்.

 

உதயனின் விழிகளிலும் கேள்வி. அவன் அறியாமல் யார் இது? அதுவும், அவனை யார் என்று கேட்கும் அளவுக்கு?

 

அதைக் கவனித்தும் பொருட்படுத்தாமல், “உன்னோட கொஞ்சம் கதைக்கோணும். தனியா.” என்றான் சீராளன், உதயனைக் குறிப்பாகப் பார்த்து.

 

ஷர்மினிக்கு இன்னுமே குழப்பம். உதயனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “என்னோட என்ன தனியா கதைக்க இருக்கு?” என்று, தயக்கத்துடன் கேட்டாள்.

 

இதற்குள் இடையிட்டான் உதயன். “முதல் நீங்க ஆர் எண்டு சொல்லுங்கோ. திடீரென்று வந்து தனியா கதைக்கவேணும் எண்டால் எப்படி? அதுவும் ரோட்டுல வச்சு.”

 

உதயன் கேட்பது நியாயம்தான். ஆனால், சீராளனுக்குப் பிடிக்கவில்லை. வீதி முழுக்க அவளோடு சிரித்துக் கதைத்தபடி அவன் வரலாம். இவன் ஒரு ஐந்து நிமிடம் கதைக்கக்கூடாதா?

 

இவள் ஏதும் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்க, அவளோ அவன் கேட்டதற்குப் பதிலைச் சொல் என்பதுபோல இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அது சீராளனைப் பாதித்தது. அந்த இடத்தில், ‘அவன் என்ர ஃபிரெண்ட்’ என்று அவனை அறிமுகப்படுத்தி வைத்தவள், குறைந்தபட்சமாக, ‘இவர் என்ர ஃபிரெண்ட்டின் அண்ணா’ என்றாவது தன்னை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான்.

 

ஏமாற்றம் மனத்தைக் கவ்வ, இவளைப் பார்த்துக்கொண்டே, “நான் அபியோட அண்ணா. என்னை இவவுக்குத் தெரியும். நாங்க ஏற்கனவே சந்திச்சு இருக்கிறம். அந்தச் சந்திப்ப உங்கட ஃபிரெண்ட் மறந்திருக்க மாட்டா எண்டு நினைக்கிறன்.” என்றதும், இருந்த அத்தனை குழப்பங்களையும் தாண்டிக்கொண்டு கூச்சச் சிரிப்பு அவள் இதழ்களில் படர்ந்தது. வேகமாக விழிகளை அவனிடமிருந்து அகற்றிக்கொண்டாள்.

 

அவளின் அந்த வெட்கத்தை ரசித்தான் சீராளன். அதுவரை அவள் மீதிருந்த அத்தனை மனக்குறைகளும் மறைய இனிமையாக உணர்ந்தான்.

 

“அஞ்சு நிமிசம்தான். கோயிலுக்கு வா!” என்றான் இதமான புன்னகையோடு.

 

தயக்கத்தோடு என்ன சொல்ல என்று உதயனைப் பார்த்தாள் ஷர்மினி.

 

“அது… அவ்வளவு நல்லாருக்காது. நீங்க என்ன கதைக்கிறதா இருந்தாலும் வீட்டுக்கு வந்து கதைங்கோ.” என்று தன்மையாக அவனிடம் சொன்ன உதயன், “நீ வா!” என்றபடி சைக்கிளை திருப்ப, இவளும் புறப்படத் தயாரானாள்.

 

இருந்த இதமான மனநிலை மறைந்துபோனது சீராளனுக்கு. அவளின் ஹாண்டிலைப் பிடித்து நகரமுடியாதபடி செய்தான்.

 

அதிர்ந்த விழிகளோடு அவள் பார்க்க, உதயனின் புருவங்களும் பிடித்தமின்மையால் சுருங்கிற்று!

 

“அவன் உனக்கு ஃபிரெண்ட் மட்டும்தானே?” கூரிய விழிகளை அவள் முகத்திலேயே பதித்துக் கேட்டான்.

 

நொடியில் அவள் விழிகளில் சினம் தெறித்தது. பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் என்ன உணர்ந்தானோ, மெல்ல அடங்கினான் சீராளன்.

 

நண்பர்கள்தான் என்று அவனுக்கும் தெரியாமலில்லை. இருந்தபோதிலும் தன்னைவிட அவனை அவள் மேலாக நினைப்பதை ஏற்கமுடியவில்லை. கண்ட கணத்தில் தன்னை அவளிடம் தொலைத்துவிட்டு நிற்கிறான் அவன். அவளோ சற்றேனும் அவனைப் பொருட்படுத்தாமல் தொட்டதற்கும் நண்பனின் முகம் பார்க்கிறாள்.

 

அவளுக்கும் அவனுக்கும் இடையில் உதயன் வருவதை விரும்பாத மனம் சீறிச் சினப்பதைத் தவிர்க்க முடியவில்லை. எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. உனக்கு யாரையும் இதற்கு முதல் பிடித்துப்போயிருக்கக்கூடாது என்கிற தவிப்பில் கேட்கிறேன் என்று சொல்ல முடியாமல் தலையைக் கோதிக்கொண்டான்.

 

‘ஊப்ஸ்!’ உதடுகளைக் குவித்துக் காற்றை வெளியேற்றிவிட்டு ஒரு முடிவோடு உதயனிடம் திரும்பினான்.

 

“ஒரு பொம்பிளைப் பிள்ளையோட எப்பிடி நடக்கோணும் எண்டு எனக்கும் தெரியும். இது, வீட்டுல வச்சு எல்லாருக்கும் முன்னால கதைக்க முதல் அவளோட தனியாக் கதைக்கவேண்டிய விசயம். அவளின்ர பதில் தெரிஞ்ச பிறகு வீட்ட வந்து என்ன… ஊரைக் கூட்டியே சொல்லுறன். அதுக்கு முதல் ஒரு அஞ்சு நிமிசம்.” என்றவன் இப்போது அவளிடம் திரும்பி, “கோயிலுக்கு வா!” என்றான் முடிவான குரலில்.

 

நேரடியாக, தன்மையாக விளக்கம் சொல்லிக் கேட்டமுறை உதயனை நிதானப்படுத்திற்று. அதைவிட, அவர்களின் ஊரில், நாளாந்தம் அவர்கள் வந்து போகிற கோயிலில், கூப்பிடு தூரத்தில் அவனும் நிற்கையில் என்ன பயம்? அவனும் அபியின் அண்ணாதானே.

 

எனவே, “போ! நான் இங்க நிக்கிறன்.” என்று அனுப்பிவைத்தான்.

 

தயக்கம் கால்களைப் பின்ன தன்னோடு சேர்ந்து நடக்காமல், ஓரடி பின்னே வந்தவளைப் பார்த்து, “பரவாயில்ல. என்னோடயே வரலாம்.” என்றான் சிரிப்போடு.

 

வெட்கமாய்ப் போயிற்று அவளுக்கு. மெல்ல ஓரடி எடுத்துவைத்து அவனோடு கூட நடந்தாள். அவனுக்குள் மெல்லிய பரவசம். அவளறியாமல் அவளைப் பார்த்துக்கொண்டான்.

 

‘அண்டைக்கு அபிட்ட எப்பிடி வாயடிச்சாள். இப்ப மட்டும் என்னவோ வாயில்லாப் பூச்சி மாதிரி நடிப்பு.’ சிறு சிரிப்பு உதட்டில் நெளிய, “எந்த வெள்ளைக்காரியையும் நான் கட்டேல்ல.” என்றான் அவன் கண்ணால் சிரித்தபடி.

 

‘என்ன’ என்று அதிர்ந்து நிமிர்ந்தவளின் முகம், அவன் பேச்சில் இலேசாகச் சிவந்தது. வேகமாக வேறு புறம் பார்வையைத் திருப்பிக்கொண்டு, “அது சு..ம்மா அபிய சீண்ட சொன்னது.” என்றாள்.

 

அவன் விழிகள் ஆசையோடு அவளில் படிந்து மீண்டன.

 

“சுவாமி கும்பிடப்போறியா?” அவள், தன் சொந்தம் என்கிற உணர்வோடு கேட்டான்.

 

வேகமாகத் தலையசைத்து மறுத்தாள் அவள். சுவாமி கும்பிடும் மனநிலையிலா இருக்கிறாள்? விட்டால் புறங்கால் பின்பக்கம் பட ஓடிவிட மாட்டாளா?

 

அவன் அமைதியாகிப் போனான். விழிகளைத் தங்களைச் சுற்றிச் சுழற்றினான். மனதில் உள்ளதைச் சட்டென்று கேட்க முடியவில்லை. அவனுக்கும் இது புதுக் களமாயிற்றே. அவளின் அண்மை வேறு என்னென்னவோ செய்தது.

 

அன்னையிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் தன் விருப்பத்தைச் சொன்னவனுக்கு அவளின் விழிகளைப் பார்த்து உன்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்வது பெரும் சவாலாகத் தோன்றிற்று. என்ன சொல்லுவாள்? மறுத்தால் என்ன செய்வான்?

error: Alert: Content selection is disabled!!