உதயனுக்கு ஷர்மினியின் மனம் புரிந்துபோயிற்று. உடனே, அவளருகில் சென்று துணையாக நின்றுகொண்டான். கலக்கத்தோடு அவள் பார்க்க, எல்லாம் சரியாகும் என்று கண்களை மூடித்திறந்தான்.
ஓரளவுக்கு மனம் அமைதியாக, பார்வையைத் திருப்பினாள். இங்கே, தகப்பனின் காதருகில் குனிந்து அவன் என்னவோ கிசுகிசுப்பது தெரிந்தது.
அவளைச் சீண்டப்போகிறான் என்று நினைத்து முடிக்க முதலே, “நாங்களே எல்லாத்தையும் கதச்சுக்கொண்டு போறம். பிள்ளையிட்டையும் ஒரு வார்த்தை கேளுங்கோ; எங்கட மகனப் பிடிச்சிருக்கா எண்டு?” என்றார் அவர்.
அவராவது பிடித்திருக்கா என்று கேட்கிறாரே. சின்னச் சிரிப்பொன்று மொட்டு இதழ்களில் முளைவிட்டது. அதைக் கவனித்துவிட்டான் அவன்.
உள்ளத்தில் இனிமையான உற்சாகம் பொங்க, அவளோடான தனிமை வேண்டும் என்றாகிப்போனது அவனுக்கு!
“சொல்லம்மா.” என்றார், அம்மா அவளின் கரம் பற்றி.
என்ன சொல்லுவாள்? இத்தனைபேர் முன்னிலையில், அவனின் குறுகுறு பார்வையைத் தாங்கிக்கொண்டு எப்படிச் சொல்லுவாள்? பெரும் தயக்கத்துக்கு மத்தியில் தலையை ஆட்டினாள்.
“இப்பிடி ஆட்டினா என்னெண்டு எடுக்கிறது?” வேண்டுமென்றே சீண்டினான் சீராளன்.
“உங்க எல்லாருக்கும் பிடி..” என்றவளைச் சொல்லிமுடிக்க விடாது இடைமறித்தான் அவன்.
“நாங்க கேக்கிறது உன்ர விருப்பத்தைப் பற்றி.”
அவளுக்குப் புரிந்து போயிற்று! அன்று சொல்லாமல் அவனைத் தவிக்கவிட்டதற்கு இன்று பழி வாங்குகிறான்!
‘ஒருக்கா நிமிந்து பாத்து நல்லா முறைச்சு விடுவமோ?’
‘ம்க்கும்! முறைச்சிட்டாலும்! அதுக்கும் சிரிச்சு வைப்பான்!’
வேறு வழியில்லாமல், “பிடிச்சிருக்கு!” என்றாள்.
அந்த வார்த்தையில் கூட வெட்கம். மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் போலிருந்தது அவனுக்கு. இத்தனைபேர் முன்னிலையில், ஆசைகளை அடக்கிக்கொண்டு தூர நின்று அவளை ரசிக்கும் நிலை, பெரும் கொடுமையாய்ப் போயிற்று!
அவன் பார்வைகள் உண்டாக்கும் படபடப்பைத் தனியாகச் சமாளிப்பது பெரும் பாடாய் இருக்க, மெல்லத் தோழியை நிமிர்ந்து பார்த்தாள். அப்போதும், அவள் இவளைப் பார்த்தாளில்லை.
இந்தச் சந்தோசமான தருணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் துக்கப்பந்து ஒன்று தொண்டையை அடைத்தது.
தீபாவளியாகட்டும், பொங்கலாகட்டும், பிறந்த நாளாகட்டும் எல்லா சந்தோசமான நாட்களையும் ஒன்றாகத்தான் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். இன்று அவளின் வாழ்வில் மிக மிக முக்கியமான தருணம் ஒன்று கடந்துகொண்டிருக்கிறது. கூட நிற்க மாட்டேன் என்கிறாளே நண்பி.
ஏழை வீட்டுப்பெண்ணைத் தோழியாக ஏற்றவளுக்கு அண்ணியாக ஏற்கப் பிரியமில்லையோ?
இவளையே பார்த்திருந்த சீராளனின் மனம் சிணுங்கியது. ‘இவளைக் கட்டப்போறது நானா அபியா? என்னைப் பாக்கிறத விட்டுட்டு அவளையே பாக்கிறா.’
ஷர்மினியின் கைக்குள் இருந்த ஃபோன் கிர்ர் என்றது. புது நம்பரில் இருந்து மெசேஜ்.
“ஓய்! என்னையும் கொஞ்சம் பாக்கிறது.”
யார் இது என்று புருவங்களைச் சுருக்கினாள்.
“நான்தான்.”
“நான்தான் எண்டா?” உள்மன உந்துதலில் நிமிர்ந்து சீராளனைப் பார்க்க, அவனோ மெல்லக் கண்ணைச் சிமிட்டினான்.
சட்டென்று முகம் சிவந்துபோயிற்று அவளுக்கு.
“பிடிச்சிருக்குத்தானே?”
‘கடவுளே, சுத்தி இவ்வளவு பேரையும் வச்சுக்கொண்டு ஃபோனை நோண்டினா என்ன நினைப்பீனம்?’
கண்ணால் மற்றவர்களைச் சுற்றிக் காட்டிவிட்டு, ‘மெசேஜ் அனுப்பாதீங்கோ’ என்று செய்தி சொன்னாள். அத்தனைபேர் இருந்தும் அவர்கள் கண்களைச் சுத்திவிட்டு, செல்ல முறைப்போடு கண்ணால் மிரட்டியள் மீது, அவனுக்குள் அளவற்ற ஆசைகள் பொங்கிற்று.
“கேட்ட கேள்விக்குப் பதில் இன்னும் வரேல்ல.” கண்களில் குறும்போடு கேட்டான்.
‘எல்லாருக்கும் முன்னுக்குச் சொல்ல வச்சிட்டு திரும்பவும் என்ன?’
கள்ளச் சிரிப்போடு சத்தத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அருகிலிருந்த மேசையில் சாதாரணமாய் வைப்பதுபோல் ஃபோனை வைத்துவிட்டு, ‘இப்ப என்ன செய்வாய்?’ என்று கண்ணால் கேள்வி எழுப்பினாள் அவள்.
அவன் விழிகள் பளிச்சிட்டது. அவளும் உதட்டுச் சிரிப்பை மறைக்க முடியாமல் பார்வையைத் திருப்ப, “அப்ப ஏற்கனவே கதைச்சமாதிரி கோயில்லையே கல்யாணத்தை வைப்பம்.” என்று ஆரம்பித்த பெரியவர்கள், கடகடவென்று மிகுதி எல்லாவற்றையும் பேசி முடித்தபோது, ‘என்னது, இன்னும் மூண்டு நாளில கல்யாணமா?’ என்று அதிர்ந்து நிற்கத்தான் முடிந்தது அவளால்.
இதில், காதல் திருமணம் போலல்லாது, வீட்டுப் பெரியவர்கள் மூலம் ஃபோனில் பேசி, குறிப்பு பரிமாறப்பட்டு, பொருத்தம் பார்த்து, கோயிலில் வைத்து அவளுக்கே தெரியாமல் பெண்ணும் பார்த்து, கிட்டத்தட்டகலியாண நாளையே குறித்துவிட்டுத்தான் அவன் வந்திருக்கிறான் என்று உதயன் மூலம் தெரிந்தபோது, மலைத்தேபோனாள் ஷர்மினி.
அதைவிட, எப்போது அவளைப் பெண் பார்த்தானாம்? நேற்று அம்மா சொல்லி உதயனோடு கோவிலுக்குப் போனாளே, அப்போதா? அப்படித்தான் இருக்கவேண்டும். என்றுமே எதுவும் சொல்லாத அம்மா, நேற்று மட்டும் சாறி கட்டிக்கொண்டு போ என்று கட்டாயப்படுத்தினாரே. உதயனும் அப்படித்தான் என்றான்.
‘அடப்பாவி! என்னட்ட ஒருவார்த்தை சொல்லி இருந்தா நானும் ‘மாப்பிள்ளை’ பார்த்திருப்பேனே.’
அவளின் சம்மதத்தை எப்போது பெற்றார்களாம்?
உதயனின் காதைக் கடிக்க, “நான்தான் சொன்னான்.” என்றான் அவன் மீண்டும்.
அவள் முறைக்க, “‘ஆண்ட்டி என்னையெல்லாம் மருமகளா ஏற்கமாட்டா’ எண்டு அண்டைக்குச் சொல்லிப்போட்டு இப்ப என்ன முறைப்பு?” என்று மடக்கினான் அவன். “இண்டைக்கும் காரை கண்டுட்டு என்ன பாடு பட்டாய் நீ? இதில மற்றவைக்குக் காட்டாம மறைக்கிறாவாம்!”
தன் கள்ளம் பிடிபட்டதில் சத்தமில்லாமல் நின்றுகொண்டாள் ஷர்மினி.
வருகிறேன் என்றவன் ஒன்றுமே செய்யவில்லையே என்று கவலைகொண்டாளே. அவன் மலையையே புரட்டி இருக்கிறான். நேசம் பொங்க, நெஞ்சில் நிறைந்தவனைப் பார்த்தாள். சயந்தனிடம் மெல்லிய சிரிப்புடன் என்னவோ பேசிக்கொண்டிருந்தான் அவன்.
அனைத்தும் சுபமாக முடிந்ததில் பெரியவர்கள் விடைபெற்றுக்கொண்டனர். மீண்டும் சயந்தனைப் பிடித்தான் சீராளன்.
“உங்கட தங்கச்சியோட கொஞ்சம் கதைக்கோணும். ப்ளீஸ் ஹெல்ப்புங்க.”
“இப்பயேவா?” மச்சான் ஆகப்போகிறவனின் ஆர்வத்தில் அவன் உதட்டிலும் சிரிப்பு மலர்ந்தது.
அதுவரை, ‘தங்கையின் கணவனாகப் போகிறவர்’ என்றும், ‘மனைவியாகப் போகிறவளின் தமையன்’ என்கிற நிலையிலும் மரியாதை நிமித்தமாகவே பேசிக்கொண்ட அவர்கள் இருவருக்குள்ளும், மெல்லிய நட்பொன்று இளையோடத் துவங்கியது.
“பொஸ்! நான் நிக்கப்போறதே இன்னும் ரெண்டு கிழமைதான். கல்யாணத்துக்கு இன்னும் மூ…ண்டு நாள் இருக்கு. இதுல இப்பயேவா எண்டு நீங்க இழுக்கிறீங்க.” பாவம்போல் முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் சீராளன்.
அப்போதும், பதில் சொல்லாமல் நின்றான் சயந்தன்.
“ஒரு ஆம்பிளையின்ர மனம் இன்னொரு ஆம்பிளைக்குத்தான் விளங்கும் எண்டு நினைச்சன். நீங்க என்னடா எண்டா…”
சட்டெனச் சிரித்துவிட்டான் சயந்தன். அவனை முதலும், ‘நல்ல மாப்பிள்ளை’ என்று பிடிக்கும்தான். இப்போது, இன்னுமே பிடித்துப்போயிற்று. எனவே, “முயற்சி செய்றன்.” என்றான் வேண்டுமென்றே.
“நோ மச்சான்! செய்றீங்க. இல்ல, பிறகு நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்லை.” சிரிப்போடு சொன்னவனைக் கெட்டிக்காரன்தான் என்று நினைத்துக்கொண்டான் சயந்தன்.
யாரைப்பிடித்தால் காரியமாகும் என்று தெரிந்து காய் நகர்த்துகிறானே. அவனுக்கும் தங்கையின் சந்தோசமான வாழ்க்கைதானே முக்கியம். எனவே கேட்டதைச் செய்துகொடுத்தான்.

