உன்னில் என்னை தொலைத்தேனடி – 6

அத்தியாயம் 6

 

 

அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தார்கள் இருவரும்.

 

இந்தச் சம்மந்தம் கைகூடுவது நடவாத காரியம் என்று நன்றாகவே தெரிந்திருந்தும், தன்னவனாய் அவன் வந்துவிட மாட்டானா என்று ரகசியமாய் ஏங்கித் தவித்த நிலைமாறி, அவளைத் தன்னவளாய் நிச்சயித்துக்கொண்டு அருகில் நடந்து வந்துகொண்டிருந்தவனின் அருகாமையில் உள்ளம் தளும்பிக் கரைந்துகொண்டிருந்தது அவளுக்கு.

 

சீராளனின் விழிகளோ அவளோடான தனிமைக்கு ஏதுவாய் இடமொன்றைத் தேடிக்கொண்டிருந்தது.

 

‘என்ன இவன் தனியா கூட்டிக்கொண்டு வந்திட்டு கதைக்காம நடந்துகொண்டே இருக்கிறான்…’ யோசனையோடு கடைக்கண்ணால் அவனைப் பார்க்க, அதேநேரம் அவனும் திரும்பிப் பார்த்துவிட, படக்கென்று விழிகளைத் திருப்பிக்கொண்டவளைப் படபடப்புத் தொற்றிக்கொண்டது.

 

சீராளனின் உதடுகளில் சிரிப்பொன்று மலர்ந்தது.

 

காய்கனிகளைத் தரும் மரங்கள் தோட்டத்தைப் பசுமையாய் மாற்றியிருக்க, அங்கிருந்த மல்லிகைப் பந்தலைக் கண்டதும், “வா, அங்க போவம்!” என்றுவிட்டு அவளோடு நடந்தான்.

 

பந்தலின் கீழே, தன்முன்னே நின்றவளை ஆவலோடு வருடின அவன் விழிகள். கைகளில் ஃபோனைப் பற்றிக்கொண்டு, தன் தடுமாற்றத்தை மறைக்க முயன்றபடி நின்றிந்தவளைப் பார்க்கச் சிரிப்பு வந்தது.

 

அவனுக்குள்ளும் தடுமாற்றம் தான். மனதுக்குப் பிடித்தவளோடான முதல் தனிமை. முன்னனுபவம் அவனுக்குமில்லையே! ஓராயிரம் வார்த்தைகளைச் சேகரித்துக்கொண்டுதான் வந்தான். இப்போதோ, அதில் ஒன்று கூடக் கிட்டாமல், அவளைப் பார்த்துக்கொண்டு மட்டும் நின்றிருந்தான்.

 

“பிறகு?” என்றான்.

 

‘என்ன பிறகு?’ கண்களால் கேள்வி எழுப்பினாள் அவள்.

 

“நாளைக்கு வெளில போவமா?”

 

“அண்ணாவைக் கேளுங்கோ.” மெல்லத் தயங்கிச் சொன்னாள்.

 

“சரி வா, இப்ப கோயில் வரைக்கும் நடந்திட்டு வருவம்.” அவளின் தயக்கத்தை அவனால் இனியும் அனுமதிக்க முடியாது.

 

ஒருவார்த்தை பேச ஓராயிரம் யோசிக்கும் அவள், அப்போதாவது இயல்புக்கு வருவாளா என்றெண்ணி அவன் கேட்க, “அம்மாட்டக் கேளுங்கோ..” என்றாள் அதற்கும்.

 

“அப்ப என்னத்த உன்னட்டக் கேக்கிறது?” அதட்டலாக வந்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, கண்ணால் சிரித்துக்கொண்டிருந்தான் அவன்.

 

அவளோடு விளையாடுகிறான். பின்னே, சிறுபிள்ளைபோல் அண்ணாவிடம் கேள், அம்மாவிடம் கேள் என்றால்? சிரிப்போடு பார்வையை அகற்றிக்கொள்ள, அவனது ஒற்றை விரல் ஒன்று நீண்டு வந்து, அவள் நாடியைப் பற்றி நிமிர்த்த முனைந்தது.

 

வேகமாய்ப் பின் நகர்ந்தாள் ஷர்மினி.

 

அந்தரத்திலேயே நின்றது அவன் கை.

 

“தொடக்கூடாதா?” என்றான் ஏமாற்றத்தோடு.

 

அவளின் மௌனம் அவனுக்குள் கோபத்தை உண்டாக்கிற்று.

 

“சொல்லு ஷர்மி! நான் உன்னைத் தொடக்கூடாதா?”

 

எத்தனை பாடுபட்டு வீட்டினரை சம்மதிக்க வைத்து, இரண்டு நாட்களில் திருமணம் என்கிற நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறான்.

 

அவன் ஆண்மகன் தான். தனித்து நின்று முடிவுகளை எடுத்துச் செயல்படும் உறுதிமிக்கவன் தான். அதற்காக, எனக்கு என் விருப்பம் தான் முக்கியம் என்று குடும்பத்தினரை அலட்சியப்படுத்திவிட்டு, தன் விருப்பத்தைச் சாதிக்கிறவனும் அல்லனே!

 

எல்லோரையும் சமாளிப்பதற்குள் எவ்வளவு போராட்டம்? இது எல்லாவற்றுக்கும் பரிகாரமாக அவளின் அருகண்மையும் அன்பும் தேவைப்பட்டது. அவளானால் ஒற்றை விரல்கூடத் தன்மேல் படக்கூடாது என்கிறாள்!

 

“ப்ச்!” தன் ஏமாற்றத்தைச் சலிப்பாகக் கொட்ட, அழுகையே வந்துவிட்டது அவளுக்கு. சங்கடத்தோடு பார்வையைத் தங்களைச் சுற்றிச் சுழற்றிவிட்டு, என்னைப் புரிந்துகொள்ளேன் என்கிற கெஞ்சலோடு அவனைப் பார்த்தாள்.

 

அப்போதுதான் பட்டப்பகலில், யார் எங்கு நின்று பார்த்துவிடுவார்களோ என்கிற பயத்தில் அவள் தடுமாறுவதை உணர்ந்தான் அவன்.

 

“வா போவம்.” சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தவனை ஏமாற்றத்தோடு பார்த்தாள். ‘தொட வேண்டாம் என்றால் கதைக்கவும் கூடாதா?’

 

வீட்டுக்குள் வந்ததும், “உன்ர அறை எது?” என்று கேட்டான்.

 

அவள் காட்ட, “போ, வாறன்!” என்றவன் சயந்தனைத் தேடிப்போனான்.

 

“சயந்தன் ப்ளீஸ். ஒரு அஞ்சு நிமிசம் அறைக்குப் போய்க் கதைச்சிட்டு வாறன். வெளில உங்கட தங்கச்சி பக்கத்தில வரக்கூடப் பயப்பிடுறா.” என்றான் நேராகவே.

 

சயந்தனுக்கு அவன் பேச்சுச் சங்கடத்தை உண்டாக்கிற்று. கூடவே, இதற்கு எப்படிச் சம்மதிப்பது என்கிற கேள்வியும்! தோட்டத்தைத் தெரிவுசெய்யக் காரணமே அவர்களுக்கான முழுமையான தனிமையைத் தவிர்க்க வேண்டும் என்பதே. அவனானால் அதுதான் வேண்டும் என்கிறான்.

 

அவன் மறுக்கத் தொடங்கும் முதலே, “எனக்கும் என்ர லிமிட் தெரியும் சயந்தன். அஞ்சு நிமிசம்தான்.” என்றவன், அவன் அனுமதியை எதிர்பாராமலேயே அவள் அறைக்குள் நுழைந்து, கதவைச் சாற்றியிருந்தான். .

 

என்னடா இது என்று உதயனைப் பார்க்க, “விடு மச்சி! இன்னும் ரெண்டுநாள்ல கல்யாணமே நடக்கப்போகுது. இப்பப் போய் இதையெல்லாம் பாத்து என்ன வரப்போகுது. அவருக்கு எங்கட ஷர்மியை நல்லா பிடிச்சுப்போச்சுது எண்டு நினைக்கிறன். எல்லாத்தையும் விட அதுதானே எங்களுக்கு முக்கியம்.” என்று சமாதானமாகச் சொன்னவன், அன்று கோவிலில் வைத்து, எத்தனை பிடிவாதமாக நின்று அவளோடு கதைத்தான் என்பதையும் பகிர்ந்துகொண்டான்.

 

இப்படி, அறைக்குள் வருவான் என்று ஷர்மினி எதிர்பார்க்கவில்லை. அண்ணா என்ன நினைப்பான்? பதட்டத்தோடு, “கதவைப் பூட்டாதீங்கோ..” என்றவளை, “மூச்!” என்றபடி வேகமாக வந்து அணைத்துக்கொண்டான்.

 

பயந்து திமிரத் தொடங்கியவளை, “கொஞ்ச நேரம் சும்மா இரு!” என்றவன் அவள் முகத்தைத் தன் மார்புடன் சேர்த்தணைக்க, ஒருகணம் நடுக்கமொன்று உடலில் ஓடி அடங்க அந்த அணைப்பில் உடைந்தாள் அவள்.

 

“டேய்! என்னடா?” உருகிப்போனான் அவன்.

 

நனைந்த விழிகளோடு அவன் முகம் பார்த்து, “இவ்வளவு நாளும் நீங்க ஏன் வரேல்ல?” என்றாள் அவள்.

 

“ரெண்டு நாள் தானே. முதல் அதுக்கு ஏன் அழுறாய்?” செல்லமாகக் கடித்தபடி அவள் விழிகளைத் துடைத்துவிட்டான்.

 

“உங்களப் பாத்து பாத்து ஏமாந்து, பயந்தே போய்ட்டன்.” விழியோரம் கசியச் சொன்னவள் உச்சியில், உதடுகளைப் பதித்து மீட்டான் சீராளன்.

 

“சொன்னா செய்வன் செல்லம்! ஆனா, எல்லாரோடையும் கதைச்சு, சம்மதம் வாங்கி, நாள் குறிச்சு எண்டு முடிஞ்சவரைக்கும் முறையா செய்றதுதானே சரி. அதுக்கு நேரம் வேண்டாமா?”

 

“சீதனம் எங்களால தர ஏலாது எண்டு தெரிஞ்சு, மனம் மாறிட்டீங்களோ எண்டு…” என்று அவள் தேம்பவும், அவளைத் தன்னிடமிருந்து பிரித்து நிறுத்திவிட்டு முறைத்தான் அவன்.

 

“என்னப் பாத்தா உனக்குச் சீதனத்துக்காக ஒரு பெட்டையக் கட்டுற ஆள்மாதிரி இருக்கா?” அவன் காட்டிய கோபம், அவள் உள்ளத்தை வசீகரித்தது.

 

“ஒரு செக்கன் கூடப் பாக்காத பெட்டையத் துரத்திக்கொண்டு வந்து கட்டுற ஆள் மாதிரி இருக்கு.” என்று சொல்லும்போதே, அவ்வளவு நேரமும் அழுகை ஆக்கிரமித்திருந்த உதடுகளில் சிரிப்புப் பொங்கியது.

 

“ஒரு செக்கன் பாக்காட்டியும், ‘கருமம் கருமம்’ எண்டு சொன்னவள் பச்சக் எண்டு வந்து நெஞ்சுக்க பதிஞ்சுபோனா நான் என்ன செய்றது?” குறும்புச் சிரிப்போடு கண்ணைச் சிமிட்டியவனுக்குள்ளேயே தன்னை மறைத்துக்கொண்டாள் அவள்.

 

சந்தோசமாய்ச் சிரித்தான் அவன்.

 

“அச்சோ! மெல்லச் சிரியுங்கோ. வெளில கேக்கப்போகுது!” பயந்துபோய் அவன் வாயைப் பொத்தினாள் ஷர்மினி. அவளையே பார்த்தபடி அந்த விரல்களில் தன் உதடுகளைப் பதித்தான் அவன்.

 

விசுக்கென்று கையை எடுக்கப்போக, விடாமல் பற்றிக்கொண்டு அவளின் ஒவ்வொரு விரலுக்கும் தன் உதட்டு முத்தத்தைப் பரிசளித்தான். பூவாக மலர்ந்தது அவள் மேனி. சுகமாய் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

 

இந்தச் சொந்தம் எப்படி உருவாகிற்று? என்னவோ காலம் காலமாய் வாழ்ந்த சுகம் நெஞ்சுக்குள். ஒருவர் மற்றவருக்கு அந்நியமாய், புதிதாய்த் தெரியவே இல்லை. அவள் சாய்வதற்காகவே அவன் தோள்கள் படைக்கப்பட்டது போலவும், அவன் கையணைப்பில் கரைவதற்காக மட்டுமே அவள் பெண்ணாய்ப் பிறந்தது போலவும் இருவரும் ஒன்றிப்போயினர்.

 

“உங்களுக்குத் தெரியுமா, இண்டைக்குத்தான் பாட்டி சொன்னவா ஒண்டுக்கும் கவலைப்படாம போ; தம்பி வரும் எண்டு. வீட்ட வந்து பாத்தா நீங்க நிக்கிறீங்க.” என்று புன்னகைத்தாள் அவள்.

 

மின்னலாய் மின்னிய முத்துப்பற்களை ரசித்துக்கொண்டே, “ஆர் பாட்டி?” என்று வினவினான் அவன்.

 

“நாளைக்கு ஹொஸ்ப்பிட்டல் வாறீங்களா, அறிமுகப்படுத்திறன். அருமையான பாட்டி.” ஆர்வத்துடன் கேட்டாள் அவள்.

 

அவளின் கன்னம் வருடியபடி, “கட்டாயம் வாறன். ஆனா, ரெண்டுபேரும் சேர்ந்து போயே பாப்பம். இனி நீ வேலைக்குப் போகவேண்டாம்.” என்றான் அவன்.

 

“ஏன்?”

 

“கஷ்டப்பட்டு உழைச்சு, களைப்போட வீட்டுக்கு வரவேண்டிய அவசியம் இனியும் உனக்கு இல்ல. உன்னச் சந்தோசமா வச்சுப்பாக்க நான் இருக்கிறன். நீ நிம்மதியா வீட்டுல இரு.” என்றான் அவன்.

 

இதே வார்த்தைகளை அபி சொல்லியிருக்கிறாள்; அண்ணாவுக்கு அவள் வேலைக்குப் போவதில் விருப்பமில்லை என்று. இன்று அதே அவன் அவளுக்கு உரியவனாக நின்று சொல்கையில் நெஞ்சில் இனித்தது.

 

ஆனாலும், “எங்கட வீட்டுச் செலவுக்கு என்ர சம்பளம் வேணும். அதோட, அது நான் விரும்பிப் படிச்சுச் செய்ற தொழில். எனக்கு ஒரு கஷ்டமுமில்லை.” என்றாள்.

 

“ஆனா நீ எப்பிடியும் விடத்தான் போறாய். சுவிஸ் வந்தபிறகும் வேலைக்குப் போகப் போறேல்ல. அதால இப்பவே விடுறதில ஒண்டுமில்லை தானே. அதோட, இனி உன்ர வீடு எனக்கும் வீடுதான். உன்ர பொறுப்பு என்ர பொறுப்பு. எதைப்பற்றியும் நீ யோசிக்கக் கூடாது. எல்லாத்தையும் நான் பாப்பன்.” என்றான் அவன்.

 

அப்படி, அவளின் பொறுப்புக்களை அவன் ஏற்றுக்கொண்டது சந்தோசத்தைக் கொடுக்க, சரி என்று தலையசைத்தாள் அவள்.

 

“சரிடா. நான் இப்ப போயிட்டு நாளைக்கு வாறன்.” கையணைப்பில் இருந்தவளை வாகாகத் திருப்பி, நெற்றியில் அவன் பதித்த முத்தத்தில் மனமெங்கும் நிறைந்துபோயிற்று அவளுக்கு.

 

விடைபெற முயன்றவனைத் தன் அணைப்பிலிருந்து விடவில்லை அவள். விட மனமில்லை. அவன் முகம் பளிச்சென்று மலர்ந்தது. வெட்கத்தில் அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு மார்புக்குள் முகத்தை மறைத்துக்கொண்டாள் அவள்.

 

அவன் கரங்களும் அவள் இடுப்பை வேகமாய் வளைத்தன. “என்ன நீ, ‘மூடவேண்டியத மூடுங்கோ’ எண்டு என்னட்ட சொல்லிட்டு நீ திறந்துவிட்டிருக்கிறாய்” என்றான் அவன்.

 

என்ன என்று யோசிக்க முதலே, பாவாடைக்கும் சட்டைக்கும் நடுவிலான வெற்றிடையில் அவன் கரம் பதிந்திருந்தது.

 

“அச்சோ..!” என்று துள்ளி விலகப்போக, தன் உதடுகளால் அவளின் உதட்டோசையை நிறுத்தியிருந்தான் அவன்.

 

அத்தனை அசைவுகளும் அப்படியே அடங்க, அவனிடம் மயங்கிப்போனாள் அவள்.

 

 

 

 

 

 

error: Alert: Content selection is disabled!!