அத்தியாயம் 7
திருமணம் மிக நிறைவாகவே நடந்தேறியது. எல்லோர் முகத்திலும் மிகுந்த சந்தோசம். தேவகிக்கு மனதில் சுணக்கம் என்றாலும் ஒரே மகனின் திருமணத்தில் அவரும் நெகிழ்ந்திருந்தார். அபியின் முகத்தில்தான் மலர்ச்சியே இல்லை.
பெண்ணுக்குத் தோழியாக அருகில் நின்றவளிடம், “என்னில என்னடி கோபம் உனக்கு?” என்று ஷர்மினி கேட்டபோது, காதில் விழாதவள் போன்று நின்றுகொண்டாள்.
“நானே இதெல்லாம் நடக்கும் எண்டு எதிர்பாக்கேல்ல அபி.” என்று கலங்கியபோதும் கண்டுகொள்ளவில்லை.
“உன்ர அண்ணா வந்து கேட்ட அந்த நிமிசம் எனக்கும் பிடிச்சுப்போ…” என்றபோது, சட்டென்று அங்கிருந்து விலகிப்போனவளைக் கண்டு, விக்கித்துப்போனாள் ஷர்மினி.
அதற்குப் பிறகு பெண்ணுக்குத் தோழி என்கிற கட்டாயத்தின் பெயரில், அவள் அருகில் நின்றபோதும் ஷர்மினி வாயைத் திறக்கவில்லை. இன்னொருமுறை அடிவாங்க அவள் இதயத்துக்குத் தெம்பில்லாமல் போயிற்று!
அந்த ஒரு குறையைத் தவிர்த்து ஷர்மினிக்கும் மிகுந்த சந்தோசமே.
சீதனம் என்கிற பேச்சுக்குள் வராதபோதும், கடன் பட்டு என்றாலும் குறைவில்லாமல் தங்கைக்கு நகைகளும் செய்து போட்டிருந்தான் சயந்தன்.
“என்ன இதெல்லாம்?” இறுக்கமான குரலில் சீராளன் கேட்டபோது, “என்னால முடிஞ்சதை என்ர தங்கச்சிக்கு நான் செய்திருக்கிறன். இது சீதனமில்ல, பாசம்.” என்று புன்னகைத்தான் சயந்தன்.
அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு ஹோட்டலை புக் செய்திருந்தான் சீராளன். அவன் வீட்டில் அபி இருக்கிறாள். ஷர்மினி வீட்டில் வசதி இல்லை. இருந்தாலும் இரண்டு இளம்வயது ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில், தன் அருகில் கூட வரமாட்டாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
வீட்டின் எந்த மூலையிலாவது யாராவது இருந்துவிட்டாலே போதும், அவனைக் கண்டாலே எந்தப்பக்கம் ஓடி ஒளியலாம் என்று தேடுபவளை, கட்டிப்போட இதுதான் வழி என்று முடிவு செய்திருந்தான்.
சயந்தனுக்கும் அதில் உடன்பாடு இருந்ததில், புதுமணத்தம்பதி அன்று இரவு ஹோட்டலுக்குப் புறப்பட ஆயத்தமாகினர்.
ஓடி ஓடி எல்லாவற்றையும் பார்த்த அம்மாவின் கண்களில் அவ்வப்போது வந்துபோகும் ஏமாற்றத்தையும், அதனால் விளைந்த கண்ணீரை நாசுக்காக ஒற்றிக்கொள்வதையும் பார்த்திருந்த சீராளன், புறப்படுமுன் அவரைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
இறுக்கமான அந்த அணைப்பே அவனது சந்தோசத்தையும் மனநிறைவையும் சொன்னாலும், “இந்த நிமிசம் இவ்வளவு சந்தோசமா நான் இருக்கிறதுக்குக் காரணம் நீங்கதான் அம்மா. அதேமாதிரி, நீங்களும் எந்த மனக்கவலையும் இல்லாம, சந்தோசமா இருக்கோணும். உங்கட ஆசைய விட என்ர விருப்பம் முக்கியம் எண்டு சம்மதிச்சு, இந்தக் கலியாணத்தை நடத்திவச்ச உங்கட கண்ணுல எண்டைக்குமே நான் கலக்கத்தையோ கண்ணீரையோ பாக்கக்கூடாது! சரியா?” என்றான் இதமாக.
தன் மனவேதனையை உணர்ந்து ஆற்றிய மகனின் அன்பில், தாய்மனம் குளிர்ந்துபோயிற்று.
கண்களில் கண்ணீர் கரகரவென்று வழியத் தொடங்க, “இப்பத்தானே அழக்கூடாது எண்டு சொன்னனான்.” என்று துடைத்துவிட்டான் அவன்.
“நீ சந்தோசமா இருந்தா சரியப்பு.” மகனின் கன்னம் வருடிச் சொன்னார் தேவகி.
கலங்கிய கண்களோடு அருகில் நின்ற அபியிடம், “அடுத்தக் கல்யாணம் உனக்குத்தான்! அதால கவலைப்படாத!” என்று, என்னவோ அதற்காகத்தான் அழுதாள் போன்று அவன் சொல்ல, “அண்ணா!” என்று சிரித்தபடி, அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் அபி.
‘யார் வந்தாலும் அண்ணா எனக்கு அண்ணாதான்!’ தமையனின் தோளில் சாய்ந்தவாறே ஷர்மியை அவள் பார்த்த அதேநேரம், ‘இந்தப் பாசப் பிணைப்பை உன்னால உடைக்க முடியாது’ என்று சொல்வதைப்போலத் தேவகியும் பார்க்க, குடும்பத்தின் மீதான கணவனின் அன்பில் நெகிழ்ந்துபோய் நின்றிருந்த ஷர்மினிக்கு ஒருமுறை திக் என்றது.
உடைக்க நினைக்கவில்லையே? அந்தக் கூட்டுக்குள் இன்னோர் பறவையாகத்தானே ஆர்வம் கொண்டாள்.
பரிதவிப்போடு கணவனைப் பார்த்தாள். சட்டெனக் கண்ணைச் சிமிட்டிவிட்டுக் குறும்புடன் நகைத்தான் அவன். அத்தனை மனப்பாரமும் நொடியில் காணாமல் போய்விட, அழகாய்ச் சிவந்தாள் அவள்.
கண்ணால் அழைத்தவனிடம் காந்தமாய் நகர்ந்தன அவள் பாதங்கள்.
அவள் அருகில் வந்ததும், “சரி தம்பி. இருட்ட முதல் வெளிக்கிடுங்கோ. ஆனா, இப்போதைக்குக் குடும்பம் பெருக வேண்டாம். பிறகு நீ போய்டுவாய். அவள் இங்க பிள்ளையோட கஷ்டப்படவேண்டி வரும். ஸ்பொன்சரும் கஷ்டமாப் போய்டும். எதுக்கும் அங்க வந்த பிறகு அதெல்லாம் நடக்கட்டும். கவனமா இருங்கோ.” என்று நாசுக்காகச் சொன்னார் தேவகி.
தலையாட்டிக் கேட்டுக்கொண்டாலும் அதைப் பெரிதாகக் கருத்தில் எடுக்கவில்லை அவன்.
காரில் ஏறிக் கையாட்டி விடைகொடுக்க, “என்னவோ சுவிஸுக்கே போறமாதிரி சீனப் போடாதயடி. போறது பக்கத்து ஹோட்டலுக்கு.” என்று வாரினான் உதயன்.
“இண்டைக்கு ஹோட்டலுக்குப் போனாலும் சுவிஸுக்கும் போகத்தான்டா போறன், பொறாமை பிடிச்சவனே. அதப்பாத்து நீ வயிறு எரியத்தான் போறாய்.” தலையைச் சிலுப்பிக்கொண்டு சொன்னாள் ஷர்மினி.
“அங்க போனதும் கண்கலங்காம பாக்கிற மாதிரி ஒரு பொம்பிளையை… அதுவும் வெள்ளைக்காரியா பாத்து எனக்குக் கட்டிவை. பிறகு ஏன் நான் வயிறு எரிய?” விடாமல் வம்பிழுத்தான் அவன்.
“உனக்கு? நான்? பொம்பிளை பாத்து… அதுவும் சுவிஸ் பொம்பிளை கேக்குது உனக்கு? உள்ளூருக்கையே ஒருத்தியும் அம்பிட(அகப்பட) மாட்டாள்.” என்று அவள் விடாமல் சண்டை வளர்த்துக்கொண்டு நிற்க, ‘விட்டா இவள் இண்டு(இன்று) முழுவதும் வாயடிச்சுக்கொண்டு நிப்பாள்.’ என்று நொந்துபோனான் சீராளன்.
“அவள் பாக்காட்டியும் நான் பாக்கிறன்!” என்றான் அவசரமாக.
உதயனின் உதட்டோரம் அவனைக் கண்டுகொண்ட நக்கல் சிரிப்பொன்று ஓடியது.
“ஓகே ஓகே! உங்கட அவசரம் விளங்குது. பாக்கப் பாவமாத்தான் இருக்கு, போய்ட்டுவாங்க.” என்றான் கிண்டலோடு.
‘இவர…’ சரக்கென்று திரும்பிக் கணவனை முறைத்தாள் ஷர்மினி.
சீராளனுக்குமே உதட்டினில் சிரிப்பு மலர்ந்தது. “ஹலோ பொஸ்! ஆகத்தான் சீண்டாதீங்க. இண்டைக்கு நான் எண்டா நாளைக்கு நீங்க. அப்ப கதைக்கிறன் நானும்!” என்றுவிட்டுப் புறப்பட்டான் அவன்.
அறைக்குள் போனதும் முகம் சிவந்துபோனாள் ஷர்மினி. உங்கள் இருவருக்கும் இன்று முதலிரவு என்று பறைசாற்றி, வெட்கமூட்டிக் கொண்டிருந்தது அந்த அறை.
“எப்படி இருக்கு ?” அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்தபடி கேட்டான் சீராளன்.
“ஊருக்கே தம்பட்டம் அடிச்சிருக்கிறீங்க. உங்களை என்ன செய்றது?” அவன் மார்பில் குத்திச் சிணுங்கினாள் அவள்.
அவனோ வாய்விட்டுச் சிரித்தான். “உன்ர குணம் தெரிஞ்சு, நானேதான் செய்தனான். என்னையும் உன்னையும் தவிர ஒருத்தனுக்கும் தெரியாது.” என்றான், அவள் உதட்டினில் முத்தமிட்டு.
“உண்மையாவா?” கணவனின் கைவண்ணத்தை அவன் கைகளுக்குள் இருந்தவண்ணமே ரசித்தபடி கேட்டாள் அவள்.
சிரிக்கும் ஸ்மைலிகளோடு கூடிய பெரிதிலிருந்து சின்னது வரையான சிவப்பு இதயத் தலையணைகள் கொண்டு அறையெங்கும் அலங்கரித்து, மனதை மயக்கியிருந்தான் அவன்.
ஆங்காங்கே தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குவளைகளில் வீற்றிருந்த சிவப்பு மலர்கள், அவளிடம் அவன் பிரியத்தைச் சொல்லிக்கொண்டிருந்தன! கட்டிலின் புறம் திரும்பிக்கூடப் பார்க்க முடியாமல், உதட்டாலும் தன் கரங்களாலும் குறுகுறுப்பூட்டிக்கொண்டிருந்தான் அவன்!
“பிடிச்சிருக்கா?” காதுமடலைத் தீண்டிய உதடுகள் ரகசியமாய்க் கேட்டன.
“ம்ம்..” என்றவளை மீட்டத் துவங்கின அவன் கரங்கள்.
“அப்ப என்னை?”
“இன்னும் எத்தனை நாளைக்கு இதையே கேப்பீங்க?” அவன் கையில் ஒரு அடியைப் போட்டுவிட்டுக் கேட்டாள் அவள்.
“எப்பயெல்லாம் கேக்கவேணும் மாதிரி இருக்கோ அப்பயெல்லாம்.” வாய்தான் பதிலிறுத்தது. கைகள் தம் வேலையில் கவனமாயிருந்தன. பொய்யாக முறைத்து அவள் போட்ட அடிகளை, அவன் பொருட்டில் கொள்ளவே இல்லை.
“எனக்குப் பிடிக்கேல்ல! இப்ப என்ன செய்யப் போறீங்க?” அவன் சேட்டைகளைத் தாங்க முடியாமல் விழிகளில் மின்னிய சவாலுடன் கேட்டாள் ஷர்மினி.
ஒரு நொடி நிதானித்து அவளின் முகம் பார்த்தவன் அடுத்தக் கணமே, “ஓ..! என்னைப் பிடிக்கேல்ல உனக்கு? பிடிக்கேல்ல என்ன?” என்று கேட்டு கேட்டுத் தேகமெங்கும் கிச்சு கிச்சு மூட்டியதில், துள்ளத் துவங்கியிருந்தாள் அவள்.
“ஐயோ விடுங்க விடுங்க! பிடிச்சிருக்கு! கடவுளே… பிடிச்சிருக்கு! போதும்!”
எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அவன். “உனக்குத்தான் என்னைப் பிடிக்கேல்லையே. பிறகு என்ன?” என்றபடி செய்த சேட்டைகளில், செங்கொழுந்தாகிப் போயிருந்தாள் அவள்.
மெல்ல மெல்ல விளையாட்டை மறந்து ஒருவர் மற்றவரில் லயிக்கத் துவங்க, கணவனின் கைகளுக்குள் கரைந்துகொண்டிருந்தவளின் மூளைக்குள், திடீரென்று வந்துநின்று மணியடித்தார் மாமியார்.
மயக்கத்தில் கிறங்கிக்கிடந்த இமைகள் பட்டென்று விரிந்துகொள்ள, “மாமி கவனமா இருக்க…” என்று ஆரம்பித்தவளின் இதழ்களைச் சிறை செய்து, அவளின் அத்தனை இயக்கங்களையும் நிறுத்தினான் அவன்.
‘இந்தச் சந்தோசம் வேண்டாமா?’ உள்ளம் கேட்டது.
வேண்டும்தான்! ஆனால் மாமி?
“ஒண்டுக்கும் யோசிக்காத. இன்னும் நாலு மாதத்தில நீ அங்க வந்து சேர்ந்திடுவாய். இல்லாட்டியும் நடக்கிறது நடக்கட்டும். கடவுள் தாறத நாங்க தடுக்க வேண்டாம்.” என்றவன், தன் தேடலைத் தொடங்கி இருந்தான்.
ஆலிங்கனம் முடிந்து, களைத்துப்போய் அவன் மார்புக்குள் மான்குட்டியாய் சுருண்டு கிடந்தாள் ஷர்மினி. அணைப்பை அவன் இறுக்கவும் கையில் கிள்ளினாள். அவன் உடல் சிரிப்பில் குலுங்கியது.
‘கள்ளன்!’ முகத்தை நிமிர்த்தக்கூட முடியாமல், வெட்கம் பிடுங்கித் தின்றது. அவன் கையில் அடி போட்டாள்.
“கட்டின புருசனுக்கு அடிக்காதயடி!”
“உங்கட வேலைக்கு அடிக்கிறேல்ல, கடிக்கவேணும்.”
“நான் என்ன செய்தனான்?”
அதையெல்லாம் வாயைத் திறந்து வேறு சொல்லவேண்டுமாக்கும்! வம்பு வளர்க்கும் கணவனின் மார்புக்குள் இன்னுமே அவள் ஒன்றிக்கொள்ள, “இப்ப நீ பதில் சொல்லோணும். இல்லாட்டி, நான் செய்த எல்லாத்தையும் திருப்பிச் செய்வன்.” என்று ஆரம்பிக்க, அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் அவள்.
“ஒண்டும் வேண்டாம். ஓடிப்போய்டுங்க. நானே மாமி பேசப்போறா எண்டு பயத்தில இருக்கிறன்.”
“அவவுக்கு எப்பிடித் தெரியவரும்? நீ போய்ச் சொல்லப்போறியா?” வேண்டுமென்றே கேட்டான் அவன்.
அவள் முறைக்க, “என்னத்துக்குப் பயம்?” என்று அவளை மீண்டும் தன்னோடு இழுத்துக்கொண்டான்.
“நான் போனதும் நீயும் கொழும்புக்குப்போய் டொச் படி. மூண்டு இல்ல நாலு மாசம்தான். அதுக்குள்ள அங்க வந்திடுவாய். இங்க சும்மா இருக்கிற நேரத்தில படிச்சிட்டாய் எண்டால் அங்க படிக்கத் தேவையில்லை. அங்க வந்தபிறகு உன்ர முழு நேரமும் என்னோடதான். நீ வந்தோன்ன நானும் லீவு எடுத்தா ஒருமாதம் எங்கயாவது ஊரைச் சுத்தலாம்.” அத்தனையும் அவன் திட்டம் போட்டு வைத்திருந்தான்.
“நான் அங்க வர மூண்டு மாதமாகுமா?” அவன் சொன்னவற்றில் அவளுக்கு அதுதான் நின்றது.
எப்படிச் சமாளிக்கப் போகிறாள்? அவனில்லாமல்? சட்டென்று கண்ணீர் மல்கியது!
இத்தனை காலமும் அவளின் உலகத்தில் அவனது அடையாளமே இல்லை. இன்றோ, அவனைத் தாண்டிய எதுவுமே அவளது உலகமாயில்லை. கண்களைக் கண்ணீர் சூழ, கணவனின் தோளில் தஞ்சமானாள்.
அவன் மனதிலும் பாரமேறிப் போயிற்று! பிரிவை நினைத்தாலே நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.
மூன்று நாட்களுக்கு என்று இருந்த ஹோட்டலிலேயே அந்த ஒரு வாரமும் தங்கிக்கொண்டனர். கையோடு கை கோர்த்தபடி ஊரைச் சுற்றுவதும், பசிக்கும்போது எதையாவது உண்டுகொள்வதும், எங்காவது பார்க்குக்குள் நுழைந்து மர நிழலின் கீழிருக்கும் ‘பெஞ்ச்’சினில் அவன் தோளில் சாய்ந்தபடி அமர்ந்துகொள்வதும், வரப்போகும் பிரிவை எண்ணி உள்ளுக்குள் பரிதவித்தாலும் வெளியே மற்றவரிடம் காட்டிக்கொள்ளமால் இருப்பதும் என்று, ஒருபக்கம் சொர்க்கமாகவும் இன்னோர் பக்கம் சோகமாகவும் கழிந்துகொண்டிருந்தது, அவர்களின் நாட்கள்.
உள்ளே ஒரு வேதனை கிடந்து அரித்தாலும் அதையும் தாண்டிக்கொண்டு சந்தோசமாய் வாழ்ந்தனர்.
அவளின் கலகல பேச்சையும் சிரிப்பையும் அவனும், கண்களாலேயே அன்பைக் கொட்டும் பார்வையையும் அவனது அருகண்மையையும் அவளும், உயிருக்குள் நிரப்பிக்கொண்டு வரக்காத்திருந்த பிரிவுக்குத் தயாராகினர்.

