அத்தியாயம் 11
அந்த கேம்ஷோவில் கலந்துகொண்டிருக்கும் இளவட்டங்களான பிருந்தா, அஜய், ரதன், தாரா எல்லோரும் நண்பர்களாக நெருங்கிவிட்டதைக் காட்டுவதுபோல ஜாலியான பாடல் ஒன்றைப் பதிவு செய்யத் திட்டமிட்டிருந்தார் விக்ரமன். அதற்குப் பொருத்தமாக நுவரெலியாவில் புகழ்பெற்ற விக்டோரியா பார்க்கில் வெட்ட வெளியில் பனிப்போர்வைக்கு மத்தியில் அடுத்த மூன்று நாட்களும் பாடல் காட்சிகளைப் பதிவு செய்ததில், பலருக்கும் உடல் சோர்ந்துபோயிருந்தது.
பலருக்குச் சளியும் பிடித்திருந்ததால் அடுத்த இரண்டு நாட்களையும் ஓய்வு நாட்களாக அறிவித்திருந்தார் விக்ரமன்.
மனம் முற்றிலும் சோர்ந்து போயிருந்ததில் எதிலுமே ஆர்வமற்றுக் காட்டேஜிலேயே சோம்பிக் கிடந்தாள் அனன்யா.
ஜேகேயின் முகத்திருப்பல், பழையபடி நெருங்கிவர முனையும் விக்ரமன், விரைவில் வரப்போகிற அர்ஜுன், அவன் புராணம் பாடும் ஷியாம் என்று அவளைச் சுற்றி இருந்த அனைவருமே ஏதோ ஒரு வகையில் அவளை மன அழுத்தத்துக்கு ஆளாக்கினர்.
இவற்றை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு வெளியே வரத்தான் விரும்பினாள். முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவளை அழைத்தார் விக்ரமன்.
‘எதுக்கு கூப்பிடுறார்..’ சிந்தனை ஓட, காதுக்குக் கொடுத்தாள்.
“வீட்டுக்கு வா, உன்கிட்ட பேசணும்.”
அவர் காட்டிய உரிமை மறுக்கச் சொல்லித் தூண்டியது அவளை.
“எதுவானாலும் இப்பவே சொல்லுங்க.”
“நேர்ல பேசணும் அனு. வா!” அழுத்திக் கூப்பிட்டார். எல்லோரும் அவளை அனு என்று அழைப்பதில் அவரும் அதற்கே மாறியிருந்தார்.
“எதச் சொல்லுறதா இருந்தாலும் போன்லையே சொல்லுங்க. நேர்லலாம் வரமுடியாது!” அவளும் அழுத்தமாகவே பதில் சொன்னாள்.
“அப்போ நான் வரேன். வந்தா ஃபிரியா இருக்கிற இந்த ரெண்டு நாளும் உன் கூடத்தான் இருப்பேன். ஓகேவா? எனக்கும் உன்கூட இருக்கத்தான் ஆசையா இருக்கு!” என்றார், ஏக்கம் நிறைந்த குரலில்.
விழுக்கென்று எழுந்து அமர்ந்தாள் அனன்யா. சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருந்தார் போலும். “வந்து தொலைக்கிறேன்!” என்றுவிட்டு எழுந்து தயாரானாள்.
அங்கே அவளுக்கு மிகவுமே பிடித்த ‘சிலோன் டீ’யுடன் காத்திருந்தார் அவர்.
“எடுத்துக்கோ!” அவள் மீதே பார்வையைப் பதித்தபடி அவரும் தன்னதைப் பருகினார்.
“என்ன பேசணும்?” பக்கவாட்டில் முகம் திரும்பியபடி கேட்டாள் அனன்யா.
“அர்ஜுன் வரப் போறானாமே?”
திரும்பி அவரைப் பார்த்தாள். ‘அதுக்கு?’ என்கிற கேள்வி தெரிந்தது அவள் விழிகளில்.
“உனக்கும் தெரியுமாம்?” அப்போதும் அவள் கேள்வி மாறவில்லை.
“அவனை மறக்கலையா நீ இன்னும்?”
அவளின் பாதையில் வரும் எல்லோரையும் வெட்ட நினைக்கிறார். அவளின் இதழ்கள் ஏளனமாக வளைந்தது. அதைக் குறித்துக்கொள்ளத் தவறவில்லை விக்ரமன்.
“உங்களைக்கூடத்தான் நான் மறக்கல!”
சட்டென்று சொன்னதில், பார்வையை அவளிடமிருந்து அகற்றிக்கொண்டு தேநீர்க் கோப்பையை அவர்களுக்கு முன் இருந்த டீப்போவில் வைத்தார்.
“அவன் வேண்டாம் உனக்கு!”
அதைக் கேட்டதும் அவள் புருவங்கள் உச்சி மேட்டுக்கே உயர்ந்தது. ‘அதை நீ சொல்லுறியா?’ என்பதாக அவர் அதை மொழிபெயர்த்துக்கொண்டதில் ஒருகணம் உதட்டைக் கடித்தார்.
ஒரு முடிவுக்கு வந்தவராக, “இங்க பார் அனு, என்னைப்பத்தி நீ என்ன நினைச்சாலும் சரிதான். ஆனா, அவனோட நீ எந்தத் தொடர்பும் வச்சிக்காத. உனக்கு நல்லதில்லை.” என்றார் அழுத்தம் திருத்தமாக.
“ஓ!” என்றபடி அவள் இதழ்களில் புன்னகை வழிந்தது.
“அனு! அயம் சீரியஸ்! அன்னைக்கு அவன் உயரத்துல இருந்தான், நீ கீழ இருந்த. ஈஸியா கழட்டி விட்டுட்டான். இன்னைக்கு நீ உயரத்துல இருக்க அவன் அட்ரஸே இல்லாம இருக்கான். சோ… இப்பவும் அவன் உன்ன யூஸ் பண்ண மட்டுமே ட்ரை பண்ணுவான். நம்பி ஏமாந்துடாத. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ! அவன் நல்லவன் இல்லை.” அதட்டலில் ஆரம்பித்துக் கெஞ்சலில் முடித்தார்.
“இதையெல்லாம் நீங்க சொல்லுறீங்களா எனக்கு?” என்றபடி எழுந்தாள் அவள்.
அவர் அவளையே பார்த்திருக்க, “உங்க புத்திமதிக்கும், எனக்காகச் செலவு செய்த உங்க பொன்னான நேரத்துக்கும் ரொம்ப நன்றி. ஆனா, ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க வேலையை மட்டும் நீங்க பாத்தாலே போதும்!” என்று, நக்கலாகச் சொல்லிவிட்டு வெளியே வந்தவளுக்கு தலை வலிக்கும் போலிருந்தது.
ஆளாளுக்கு என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் அவளைப் பற்றி? சுயசிந்தனையே இல்லாதவள் என்றா? உண்மையிலேயே தலை மிகவும் வலித்தது. அவர் வீட்டில் பருகி முடிக்காத தேநீர், எங்காவது நிம்மதியாக ஒரு கப் அருந்தேன் என்று அழைக்க, ஒரு நல்ல ரெஸ்ட்டாரெண்ட்டாகப் பார்த்து உள்ளே சென்று அமர்ந்துகொண்டாள்.
குளிருக்கு இதமாகத் தேநீரும், வாய்க்கு ருசியாக பற்றிசும் ஓடர் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள். ஒரு மலை உச்சியில் அமைந்திருந்தது அந்த ரெஸ்ட்டாரெண்ட். கண்ணாடிச் சுவர்கள் மரங்களின் உச்சியைக் காட்டி நிற்க, இன்னோர் விதமாக அந்த மலைநாடு தன்னழகைக் காட்டி நின்றது!
தன் முன்னால் யாரோ வந்து அமரவும், இயல்பாகத் திரும்பியவள் அங்கே அமர்ந்திருந்த ஜேகேயைக் கண்டுவிட்டு அதிர்ந்தாள்.
‘இவன் எங்க இங்க?’ அவள் விழிகள் அவனிடமே இருக்க, அவனோ, எப்போதும்போல குனிந்த தலை நிமிராத குமரியாக ஃபோனை நோண்டிக்கொண்டு இருந்தான்.
‘இந்த ஃபோனை பறிச்சு அவன் மண்டையிலேயே போடணும். ஒரு மனுசியாக் கூட மதிக்கிறது இல்ல. கண்ணுக்கு முன்னால இவ்வளவு பெரிய உருவம் இருக்குது. தெரிஞ்ச மாதிரிக் காட்டுறானா? கதைக்க வேண்டாம். ஒரு சிரிப்பு, குறைஞ்சது ஒரு பார்வை. ஒரு தலையசைப்பு? எல்லாம் திமிர். அப்பா, தாத்தா சேத்து வச்ச புகழையும் காசையும் அனுபவிக்கிற திமிர். பிறகு ஏன்டா நடிக்க வந்த எருமைமாடு? நீயெல்லாம் மனுசனாடா? நாசமா போனவன்!’ ஏற்கனவே கொதித்துக்கொண்டிருந்த மனநிலையில் அவனைக் கண்டபடித் திட்டித் தீர்த்தாள்.
இப்போது அவளுக்கு அடுத்த சந்தேகம் வந்து தொலைத்தது. ‘நாம கதைக்கிறதா வேணாமா? இவனை மாதிரியே தெரியாத மாதிரி நடிப்பம். டேய்! நடிப்பில நீ கத்துக்குட்டிடா. நான் திண்டு பழம் போட்டவள். வாடா நானா நீயா எண்டு பாப்பம்.’
குழல்களாகத் தொங்கிய முடிக்கற்றைகளை அலட்சியமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தானும் ஃபோனுக்குள் தலையை நுழைத்துக்கொண்டாள்.
சற்று நேரத்திலேயே குறுகுறு பார்வை ஒன்று தன்னைத் துளைப்பது போன்றதொரு உணர்வு. அனிச்சையாகத் தலை உயரத் துடித்துக்கொண்டிருந்தது. ‘நிமிராதடி. நிமிந்தா நீ அவனை பாத்திட்ட எண்டு அவனுக்குத் தெரிஞ்சிடும். நிமிராத!’
‘அப்ப அவன் பாக்கிறானா என்று எப்படிக் கண்டு பிடிக்கிறது? அப்படியே சைட்டா பாப்பம்.’ பக்கவாட்டுப் பக்கமாகவே நிமிர்ந்து, வெளியை பார்த்து, சட்டைக் கையை சரி செய்து நேரம் பார்ப்பதுபோல பார்த்துப் பேரர் வருகிறானா என்று பார்ப்பதுபோல மெல்ல அவனைப் பார்த்தாள். அவன் அவளைத் தாண்டி அவளுக்குப் பின்னால் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.
அனிச்சையாய்த் திரும்பிப் பின்னால் பார்த்துவிட்டு, ஒன்றும் இல்லையே என்று குழப்பத்துடன் திரும்பி அவனைப் பார்க்க, அவனோ மீண்டும் ஃபோனுக்குள் முகத்தைப் புதைத்திருந்தாலும் உதட்டோரம் துடிப்பது நன்றாகவே தெரிந்தது.
தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது, அவளுக்கு. பிடிபட்டுவிட்டாளே. புத்திசாலித்தனமாக அவளின் நடிப்பை அவன் பிடித்திருக்கிறான். அடேய்… பாரங்கல்லு மண்டையா… உன்ன!
வந்த தேநீர் கோப்பையை அவன் தலையிலேயே கொட்டவேண்டும் போலிருந்தது. அதற்குள் அதை எடுத்து அவன் பருகிக்கொண்டிருந்தான்.
“அது என்னோட டீ!”
அருந்திக்கொண்டிருந்த கப்பை மேசையில் வைத்துவிட்டு, “விமல், இது அவங்க டீயாம். அவங்களே குடிக்கட்டும். நீ எனக்கு ஒன்னு சொல்லு.” என்றான் காவலனிடம்.
‘என்னது, அவன் குடிச்சதை நான் குடிக்கிறதா?’
கோபத்துடன் திரும்பி, “எக்ஸ்கியூஸ்மி விமல்! எனக்கும் சேர்த்து ஒரு டீ சொல்லுங்க! விஷ ஜந்து குடிச்சதை எல்லாம் என்னால குடிக்க முடியாது!” என்றுவிட்டு, கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்துகொண்டாள் அனன்யா.
‘என்ன நினைச்சிட்டு இருக்கான் என்னப்பத்தி! ஹா!’ அவளின் தலை தானாக ஒருமுறை சிலுப்பிக்கொண்டது.
டீயும் வந்தது. மூவருமாகப் பருகினர். அவன் இப்போது போனில் பேசிக்கொண்டே பருகினான்.
அவனைப்போலவே அவளும் வேண்டுமென்றே அவனையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டே இருந்தாள்.
ஆனால் என்ன, அவளைப்போல அவன் அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அருந்தி முடித்ததும் அவன் பாட்டுக்கு எழுந்துபோனான்.
‘நீ காலத்துக்கும் திருந்த மாட்டடா. பரதேசி!’ வந்த ஆத்திரத்துக்கு அவனது உச்சி முடியைப் பற்றி ஒரு ஆட்டு ஆட்டிவிடக் கை பரபரத்தது.
‘இவன…’
அவன் தன் பார்வையில் மறையும்வரை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
என்னவிதமான தயாரிப்பு இவன்? கொஞ்சமும் இன்முகம் காட்டியதில்லை. அவளைச் சக மனுசியாக மதித்ததே இல்லை. ஒரு பாசம், ஒரு பரிதாபம், ஒரு புரிந்துணர்வு என்று எதையுமே காட்டாத ஜடம். படத்தில் மட்டும் நடிப்பில் பின்னிப் பெடலெடுப்பான். பலமுறைகள் பார்வையை அவளால் தான் விலக்கிக்கொள்ள முடிந்ததே இல்லை. அந்தளவில் இருக்கும் அவனின் நடிப்பு. அத்தனை இலாவகமாக, நடிப்பில் தேர்ந்த அவளே அசந்துபோகுமளவில் பாவங்களைக் காட்டுவான்.
அவளுக்குத்தான் அவளை மீட்டுக்கொள்ளச் சிலபல கணங்கள் எடுக்கும். ‘கட்’ சொன்ன அடுத்த கணமே இரும்பாகிவிடுவான் அவன்.
“பாஸுக்கு முதுகுல கண் இல்ல!”
சரக்கென்று திரும்பி அந்த விமலாகப்பட்டவனை முறைத்தாள் அனன்யா.

