உயிரைத் திருடும் அழகியே 13 – 2

இதையெல்லாம் பாத்துக்கொண்டிருந்த சாந்தினிக்குச் சினம்தான் வந்தது.

 

விறுவிறு என்று அவன் முன்னே வந்து நின்றாள்.

 

“அவங்கவங்க வீட்டுல எல்லாரும் செல்லமாத்தான் வளந்தோம். ஆனாலும் இங்க வந்ததும் அவங்களுக்கு என்று பிரிச்சுத் தந்த வேலையைப் பாத்திட்டுத்தான் இருக்கோம். அவளுக்கு மட்டும் எப்பப் பாத்தாலும் நீ ஹெல்ப் பண்ணுவியா? அப்ப அவ என்ன, ஆடுறதும் பாடுறதும் மட்டும் தான் செய்வாளா?” என்றாள் அஜய்யிடம்.

 

அவமானத்தில் முகம் சிவக்க, “நீ தள்ளு. நானே செய்றன்.” என்று பிருந்தா வர, “என்கிட்டத் திட்டு வாங்காமப் போ அந்தப்பக்கம்!” என்றான் அவளிடம்.

 

“உங்களுக்குத் தேவ மதியச் சாப்பாடு. யாரு செய்தாங்க என்றது இல்ல. சாப்பாடு வரும், இப்ப போங்கக்கா.” என்றான் சாந்தினியிடம்.

 

“அப்படிலாம் போக முடியாதுடா. இவ என்ன லவ் சீன கிரியேட் பண்ணத்தான் இங்க வந்தாளா? அதுக்குத்தான் அவங்கப்பா இங்க அனுப்பி வச்சாரா? இவ ஈ னு இளிச்சிட்டு பாட்டு பாடிட்டு ஆடுவாளாம், நீயும் அவ பின்னாடியே சுத்துவியாம். நல்லாருக்குடா உங்க பெர்போமான்ஸ் எல்லாம். பாத்துட்டு இருக்க நாங்கல்லாம் லூசா? அம்மாடியம்மா, எத்தனையோ படத்துல நடிச்ச என்னால கூட இவ்ளோ அழகா நடிக்க முடியாதுடா!” என்றுவிட, அவமானத்தில் முகம் சிவக்க அப்படியே உறைந்தாள் பிருந்தா.

 

“அக்கா! தேவையில்லாம பேசாதீங்க. என்ன சொல்லுறதா இருந்தாலும் என்னைச் சொல்லுங்க. அவளும் உங்களை மாதிரி ஒரு பொண்ணுதான். பேசறதை யோசிச்சுப் பேசுங்க. உங்களை யாராவது ஆடவேணாம் பாடவேணாம் என்று சொன்னார்களா? அவ லவ் சீன் கிரியேட் பண்ணினதா நீங்க பாத்திங்களா?” என்று ஒரு வாங்கு வாங்கினான் அஜய்.

 

சாந்தினி என்னவோ சொல்ல வர, “அது எனக்கும் அவளுக்குமான விசயம். இதுல நீங்க தலையிடாதீங்க. அவளுக்கோ எனக்கோ தந்த வேலை ஏதாவது நடக்காம இருந்தா அப்ப மட்டும் வாங்க. இப்ப போங்க!” என்று அவனும் ஆண்பிள்ளையாக குரலை உயர்த்திவிட, எக்கேடாவது கெட்டுத் தொலைங்கடா என்பதுபோல் பார்த்துவிட்டுப் போய்விட்டாள் சாந்தினி.

 

குறுகிப்போனாள் பிருந்தா. ஒரு பெண்ணாக இருந்துகொண்டு எவ்வளவு மோசமாக அவளைச் சித்தரித்துவிட்டாள். ஆடுவதும் பாடுவதும் அவளுக்கு மிகவுமே பிடித்தமான ஒன்று. ரதனும் அஜயுமாக பாடும்போது அவள் ஆடுவாள் தான். அது அவர்களின் இனிய பொழுதுபோக்கு. அதற்குப்போய்..

 

கண்களில் கண்ணீர் வழிய ராகவனைப் பார்த்தாள். அவர் ஏதாவது சொல்லமாட்டாரா என்று மனம் ஏங்கியது.

 

அப்பாவைப்போல மதிக்கும் மனிதர். ‘நீ அப்படி இல்லடா. உன்னப்பத்தி எனக்குத் தெரியும் கண்ணா!’ என்று ஒரு வார்த்தை சொன்னால் அவள் மனம் பெரிதும் ஆறுதலடையுமே.

 

ஆனால், அவரோ கண்ணாடி துடைத்துக்கொண்டிருந்தார். ஒன்றுமே சொல்லவில்லை. அப்போ, சாந்தினி சொன்னதை அவரும் ஏற்கிறார் என்றுதானே பொருள்.

 

முற்றிலும் உடைந்து போயிருந்தாள் பிருந்தா. அஜய்க்கும் முகம் கோபத்தில் சிவந்து இறுகிப்போயிருந்தது.

 

இருந்த சினத்தில், “எதுக்குப் பக்கத்திலேயே நிக்கிற. அதான் உங்கப்பா பாக்கிறார்ல. அவருக்குத்தான் நீ என்கூடப் பேசுறதே பிடிக்காதே. போ… போய் அவர் கூட பேசு!” என்றான்.

 

கண்ணீருடன் அவனைப் பார்த்தாள் பிருந்தா.

 

“ஏன்டா இப்படிலாம் பேசுற? அவர் சொன்னதுக்கு நான் என்ன செய்ய?”

 

“நீ ஒண்ணுமே செய்யாதம்மா. ஆள விடு சாமி. போய் அவர் கூட இரு. அவருக்கு ரொம்பவே குளுகுளுனு இருக்கும்.” என்று துரத்திவிட்டான்.

 

 

காட்சி முப்பத்துஇரண்டு:

 

தன் சந்தோசம் மொத்தத்தையும் தொலைத்திருந்தாள் பிருந்தா. மனதுக்குள் பெரும் போராட்டமே நடந்துகொண்டிருந்தது. சாந்தினியும் மற்ற ஹவுஸ்சமேட்ஸும் சேர்ந்து கதைத்தவை நெஞ்சுக்குள்ளேயே நின்று வதைத்தது.

 

அவர்கள் என்னவாவது சொல்லட்டும். நான் நானாகவே இருந்திட்டு போறேன் என்று நினைத்தாலும், அந்தக் குறுகிய வீட்டுக்குள் அதே முகங்களைப் பார்த்துக்கொண்டு, இவளைக் காணும் பொழுதுகளில் அவர்கள் கண்களில் தென்படும் பாவங்களை உள்வாங்கிக்கொண்டு இருக்க முடியவில்லை. வெளியில் பாய்ந்து ஓடிவிடலாமா என்றிருந்தது.

 

போதாக்குறைக்கு அஜய் முகம் பார்க்கவே மறுத்தான். அவளாகவே தேடிப்போனாலும் அலட்சியம் செய்தான். “என்னைக் கொஞ்சம் பிரியா விடுறியா!” என்றான், முகத்தில் அடித்தாற்போல்.

 

எல்லோருமே அவளை ஒதுக்குவது போலிருந்தது. அவளாலும் அவர்களோடு சேர்ந்துகொள்ள முடியவில்லை.

 

இதில் தினமும் வரும் டாஸ்க்குகள் வேறு அவள் உடலின் வலிமையைச் சோதித்துப் பார்த்தன. மனநிலை நன்றாக இருந்திருக்க ஒரு கை நிச்சயம் பார்த்திருப்பாள். இப்போதோ எதுவுமே முடியவில்லை. டாஸ்க்குகள் மீதான பங்களிப்பு மெல்ல மெல்லக் குறைந்து போயிற்று!

 

நரகத்தை அனுபவித்தாள். எதற்கடா இங்கு வந்தோம் என்று நினைக்காத பொழுது இல்லை. கண்ணீர் பூக்கள் கண்ணோரம் பூத்துக்கொண்டே இருந்தன. மன அழுத்தம் தாங்காமல் நெஞ்சு வெடித்துவோடுமோ என்று பயந்து, அவளைக் காக்கும் குரலோனிடம் தஞ்சம் புகுந்தாள்.

 

“என்னால முடியேல்ல.. பிளீஸ் வீட்டுக்கு அனுப்புங்கோ.. நான் வீட்ட போகப்போறன். இங்க யாருக்குமே என்ன பிடிக்கேல்ல.. பிளீஸ் பிளீஸ்.. என்ன விட்டுடுங்கோ…” என்று கெஞ்சிக் கதறியவளை அதட்டுவது தெரியாமல் அதட்டியது குரல்.

 

“இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கிறதுக்காக எத்தனையோ பேர் காத்திட்டு இருக்காங்க. ஆனா, அது உங்களுக்கு கிடைச்சிருக்கு. அதைச் சரியாப் பயன்படுத்தாம வீட்ட போகப்போறேன்னு நீங்க சொல்லுறது, நல்லா இருக்கா?” தான் சொன்னது அவளின் மூளைக்குப் போய்ச் சேர்வதற்காக இடைவெளி விட்டது குரல்.

 

“ஆரம்பமே நீங்க வராம இருந்திருந்தா உங்க இடம் இன்னொருத்தங்களுக்குக் கிடைச்சிருக்கும். இன்னொருவரின் சான்ஸை நீங்க எடுத்திட்டு அதைச் சரியாப் பயன்படுத்தாமையும் இருக்கிறது எவ்வளவு பெரிய தப்பு என்று தெரியுதா உங்களுக்கு?” என்று எடுத்துச் சொன்னதும் கொஞ்சம் தெளிந்தாள் அவள்.

 

அவளும் இங்கே வருவதற்கு என்னவெல்லாம் பாடுபட்டாள்.

 

“இன்னும் கொஞ்ச நாள் தான். நீங்க எவ்வளவு திடமான பெண் என்று காட்டுங்க. எல்லாத்தையும் விட நீங்க உங்களை நிரூபிக்கணும். உங்களோட திறமைகளை வெளியே காட்டுறதுக்கு இதைவிட நல்லதொரு மேடை கிடைக்காது. பயன்படுத்துங்க.” என்றபோது, கண்ணீர் நின்று இருந்தது.

 

“உங்களுக்குத் தெரியுமா? நீங்க சிரிச்சா அவ்வளவு அழகா இருப்பீங்க!” அதைச் சொல்லும்போது கொஞ்சமே கொஞ்சம் குறும்பு வழிந்ததோ? தன் துயரம் மறந்து கண்ணீருடன் சிரித்தாள் அவள்.

 

“இதுதான் நல்லாருக்கு. இப்படியே போங்க!” உருவமின்றி உணர்வுகளால் மட்டுமே அவளுடன் கலந்திருந்த குரல் அனுப்பி வைத்தது.

 

 

காட்சி முப்பத்துமூன்று

 

அஜய் பேசாவிட்டால் தன்னால் இனியும் அந்த வீட்டில் இருக்க முடியாது என்று நன்றாகவே உணர்ந்துகொண்டிருந்தாள் பிருந்தா. அவன் கதைக்க வேண்டும். அவளைக் கேலி கிண்டல் செய்ய வேண்டும். அவளோடு சிரிக்க வேண்டும். மூச்சுக்காற்றுக்குத் திணறுவது போல அவனுடைய அருகாமை இல்லாமல் திணறினாள்.

 

அவனைத் தாண்டிய உலகத்தை சிந்திக்கவே மறந்தாள். வெளியே இருக்கும் அம்மா அப்பாவை மறந்தாள். இது உலகமே பார்க்கும் ஷோ என்பதையும் மறந்தாள்.

கண்முன்னே நடமாடுகிறவன் மீதே ஏக்கத்துடன் விழிகள் படிந்திருந்தது.

 

“அழுதுட்டே இருக்கா. பேசுடா!” அவளைக் கவனித்துவிட்டு அஜய்யிடம் சொன்னான் ரதன்.

 

“விடு மச்சி நல்லா அழட்டும். சொல் புத்தியும் இல்லாம சுய புத்தியும் இல்லாம இருந்தா இப்படித்தான். அவரு பெருசுனா எதுக்கு என்னோட பேசணும்? அவர் கூடவே இருக்கட்டும். நான் ஒதுங்கிக்கறேன்.” என்றுவிட்டான் அவன்.

 

 

 

காட்சி முப்பத்துநான்கு

 

 

அழுதுகொண்டு இருந்தவளின் அருகில் சென்று அமர்ந்தார் ராகவன். அவள் திரும்பிப் பார்க்கவில்லை. ஆதரவு தரவேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு இப்போது எதற்கு வந்திருக்கிறாராம்? ஊமையாகக் கோபம் கொண்டது அவள் மனது.

 

“நான் சொன்னப்போலாம் நீ கேக்கவே இல்ல. இப்ப பாத்தியா எல்லாருமே சொல்லுற மாதிரி வச்சிட்ட. இதெல்லாம் தேவையா உனக்கு?”

 

கன்னங்களை நனைத்த கண்ணீரை துடைத்துக்கொண்டு பேசாமல் இருந்தாள்.

 

“எதுக்குடா இங்க வந்த நீ? காதலிக்கவா? உன்ன நிரூபிக்கத் தானே. வந்த வேலையைப் பாக்கிறதை விட்டுட்டு இதெல்லாம் என்னம்மா?” அவர் வார்த்தைகளில் இருந்த உண்மை சுட்டதில் அவள் விழிகளில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.

error: Alert: Content selection is disabled!!