“முன்னுக்கு இருக்கிற கண்ணே வேலை செய்து இல்ல. இதுல பின்னுக்கு வேற வேணுமா?”
பட்டென்று திருப்பிக் கொடுத்தாலும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெறுக்கிறவனை ஏன் மறையும்வரை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்? என்று அவள் மீதும் கோபம் வந்தது.
‘கொஞ்சமாவது சோத்துல போடுற உப்புக்கு விசுவாசமா நடடி!’ தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.
“மேம் வேற ஏதாவது வேணுமா?”
“ஆ… உப்பு ஒரு பத்துக்கிலோ வேணும். இருக்கா?”
“சாரி மேம். ஸ்டாக் இல்ல. புளி இருக்கு, தரவா?”
‘அதுசரி! அவனோட எடுபுடிதானே நீ!’ தீ பறந்தது அவள் பார்வையில்.
“பாய் மேம்!” என்றுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான் அவன்.
இந்தச் சண்டையில் அவளின் மன அழுத்தங்கள் அத்தனையும் பறந்து போயிருந்தது.
காட்சி இருபது
இப்போதெல்லாம் மெல்லிய புரிந்துணர்வுடன் கூடிய நட்பு அவர்களுக்குள் இளையோடத் தொடங்கியிருந்தது. சிறை போன்று தோன்றிய அந்த வீட்டின் மீதான அந்நியத்தனம் அகன்று, அதற்குள், மற்றவர்களோடு இணைந்து வாழ்வதற்குக் கற்றுக்கொண்டிருந்தனர். ஆட்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு வாரமும் குறையக் குறைய எஞ்சியவர்களிடம் நெருக்கமும் அதிகரித்தது.
அவரவரின் அலைவரிசையில் பொருந்தாதவர்களோடு மெல்லிய முறுகல் நிலையும் சின்னச் சின்ன சண்டைகளும் கூட வந்துபோயின.
அன்று மதியச் சமையலுக்குக் காய்கறிகளை நறுக்கும் பொறுப்பை வைதேகி பிருந்தாவிடம் ஒப்படைத்திருந்தார்.
தாராவோடு வளவளத்தபடி வெங்காயம் நறுக்கியவள் கவனிக்காமல் தன் விரலின் மீதே வைத்து அழுத்திவிட, “அம்மா!” என்ற அவளின் சத்தத்தோடு குபீர் என்று இரத்தமும் பாய்ந்தது.
அருகில் ரதனோடு சேர்ந்து பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்த அஜய், “லூசு! பாத்து வெட்டமாட்டியா?” என்று கடிந்தபடி வேகமாக அவள் விரலை எடுத்துத் தன் வாயில் வைத்து உறிஞ்சினான்.
அதிர்ச்சியில் விழிகள் விரிய அப்படியே நின்றுவிட்டாள் பிருந்தா. உள்ளத்தைத் தொட்ட ஒரு ஆணின் முதல் தொடுகை! அவளுக்குள் பல பூகம்பங்களைக் கிளப்பியது!
அவளை இழுத்துப்போய் தண்ணீரின் அடியில் விரலைப் பிடிக்க, வலியில் முகத்தைச் சுருக்கியவளைக் கண்டு, “கண்ண எங்க வச்சிட்டு வேல பாத்த? பாரு எவ்ளோ ஆழமா கீறி இருக்குன்னு!” என்று எரிந்து விழுந்தான் அஜய்.
முகம் சிவந்து அழுகை வந்தது அவளுக்கு. அதைப் பார்த்துவிட்டு, “சரி விடு! வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா! சமையலில் விழுப்புண் வாங்கிய பிருந்தா இன்றுமுதல் வீரத்தழும்பி என்று அழைக்கப்படுவாள்.” என்று என்னென்னவோ சொல்லிச் சமாதானம் செய்தான் அவன்.
ஓடிப்போய் ஒரு துணியை கிழித்துக்கொண்டு ஓடிவந்து கொடுத்தான் ரதன். அதைச் சுற்றிக் கட்டிவிட்டான் அஜய்.
காட்சி முடிந்துபோயிற்று. அவளின் தேகத்தின் நடுக்கம் மட்டும் நின்றபாடில்லை. சும்மா கத்தியை வைக்கத்தான் சொன்னார் விக்ரமன். அவளுக்கு மெய்யாகவே கீறிவிட்டிருந்தது. அவனும் உடனேயே வாயில் விரலை வைத்ததும், என்னவிதமாக உணர்ந்தாள் என்று அவளாலே இனம்காண முடியவில்லை.
கீறிய விரலை வருடிக்கொடுத்தபடி நிமிர்ந்தவளின் விழிகள் ஜேகேயின் விழிகளை சிலகணங்கள் நேர்கோட்டில் சந்தித்துவிட்டிருந்தது. படபடத்துப்போய் வேகமாக பார்வையை அகற்றிக்கொண்டாள் அனன்யா.
காட்சி இருபத்தியொன்று
“கை எப்படி இருக்கு?” அவளருகில் தோளை உரசியபடி வந்து அமர்ந்துகொண்டு கேட்டான் அஜய்.
மெல்லிய திடுக்கிடலோடு, உணர்ந்துதான் செய்கிறானா என்று பார்த்தாள் பிருந்தா. அவன் எப்போதும்போல்தான் இருப்பது போலிருந்தது.
“விரல்ல தானே காயம்? வாய் எதுக்கு பேசாமஇருக்கு?” என்றபடி, அவளின் மெல்லிய விரல்களைப் பற்றி மென்மையாக வருடிக் கொடுத்தான். சிலிர்த்தது அவளுக்கு.
அவள் அதுவரை அறிந்திராத நுண்ணிய உணர்வுகளை தட்டிவிட்டுக்கொண்டிருந்தான் அவன்.
“நோவுதா?” அந்தக் குரலில் அத்தனை மென்மை. ஏனோ தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. இல்லை என்று தலையை மட்டும் அசைத்தாள்.
“ரெண்டு நாள்ல சரியாயிடும், கவலைப்படாத என்ன.” அவளின் தலை வருடி அவன் சொன்னபோது, அப்பாதான் கண்ணுக்குள் வந்து நின்றார் அவளுக்கு. கண்கள் கலங்கிப் போயிற்று!
“செல்லப்பாப்பா, நல்லபிள்ளையா அழாம இருப்பாங்களாம் . நான் ஓடிப்போய் அவங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்திட்டு வருவேனாம். சரியா?” என்று சிரிப்புடன் தலைசரித்துக் கேட்க, அவளின் செவ்விதழ்களில் அழகிய புன்னகை ஒன்று மலர்ந்தது.
“இதுதான் உனக்கு அழகு. எப்பவும் போல ஆடு, பாடு, சிரி , சந்தோசமா இரு! ஓகே டார்லிங்?” என்றுவிட்டு எழுந்துபோனான் அவன்.
போகிறவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் பிருந்தா.
அனன்யாவுக்கு அந்தக் காட்சியின் ஆதிக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை. எத்தனை மென்மையாக விரல்களைப் பற்றி வருடிக்கொடுத்தான். நோவுதா என்று கேட்டபோது குரலில் வழிந்த மென்மை..
அதைக் காட்சிக்காக மட்டுமே கேட்டான் என்று நம்பமுடியவில்லை. உண்மையான அக்கறையை அந்தக் கண்களில் கண்டாளே! ஏக்கத்துடன் அவனிடம் ஓடின அவள் விழிகள். அதை உண்மையா என்று அறியவேண்டும் போலிருந்தது.
அவன் அங்கேயே இல்லை. யாரோ அவனைத்தேடி வந்திருந்தார்கள். அவர்களோடு மும்முரமாக எதையோ கதைத்துக்கொண்டிருந்தான். கண்ணைக் கரித்தது அவளுக்கு. அவன் நடிக்க மட்டும் தான் செய்திருக்கிறான். அவள்தான் உண்மையோ என்று நம்பிக் கலங்கிக்கொண்டிருக்கிறாள்.
இப்படியான ஒரு அன்பு நிஜ வாழ்வில் அவளுக்கு ஏன் அமையவில்லை?
அவனும் ஏன் அவளை ஒதுக்குகிறான்? நட்பு பாராட்ட முடியாத அளவில் அவளின் தரம் தாழ்ந்து போயிற்றா? இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் ஆழமாக வலித்தது. கண்ணோரமாகப் பூத்துவிட்ட கண்ணீர் பூக்களை மெல்லச் சுண்டிவிட்டாள்.
அவளின் முகம் பார்த்து டயலாக்ஸ் அவன் சொல்கையில், அவனது விழிகளை நேராக எதிர்கொள்வதே அவளுக்கான மிகப்பெரிய சவாலாக மாறிக்கொண்டிருந்தது. இது தொடர்ந்தால் அவளால்தான் அவனோடு நடிக்க முடியாமல் போய்விடும்.
நனைந்திருந்த விழிகளை மெல்ல அவன் புறமாகத் திருப்பினாள். இப்போதெல்லாம் காரணமே இல்லாத போதும் அவள் விழிகள் அவனைத்தான் தேடி ஓடுகின்றன.
ஏன் இப்படிச் செய்கிறாய் என்று நேரே சென்று கேட்டுவிடுவோமா? எதையாவது கடுமையாகச் சொல்லி நோகடித்துவிடுவானோ?
புருவங்களைச் சுளித்துக்கொண்டு அவன் எதையாவது சிந்திக்கையில், யாருடனும் போனில் அழுத்தம் திருத்தமாகப் பேசும்போது எல்லாம் அழுத்தமானவன்தான் என்று உணர்ந்திருக்கிறாள். அதைத்தாண்டிய பொழுதுகளில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவனுடைய கலாட்டாவில் சிறு குழந்தைகள் தோற்றுவிடுவார்கள். அப்படியானவனுக்கு அவளோடு என்ன கோபம்? கேட்டுவிடலாமா?
“விக்ரமன் அண்ணா கட் சொல்லி ஒருமணி நேரமாகுது. ஆனா நீ இன்னும் அவரையே பாத்திட்டு இருக்க டார்லிங்!” என்றபடி அவளருகில் வந்து அமர்ந்தான் ஷியாம்.
“அந்த ஆள பாத்திட்டாலும்! லூசு மாதிரி எதையாவது சொல்லாத!” அன்று விக்ரமனும் அதையே சொன்ன சினத்தில் சீறிவிட்டு, விரல் வெட்டிய சீனுக்குச் சுற்றிய துணியைக் கழற்றி எறிந்தாள் அனன்யா.
“எனக்கு என்னவோ அவர் ரொம்ப நல்லமாதிரித்தான் தோணுது. நீ மட்டும் தான் என்னன்னவோ சொல்லுற.”
‘அவன் என்னட்ட மட்டும் தானே சீன் போடுறான்..’
“அவன் நல்லவனா இருந்தா எனக்கென்ன இல்ல கெட்டவனா இருந்தா எனக்கென்ன. பாக்கிற வேலைய பாரு ஷியாம்!” என்றுவிட்டு எழுந்து சென்றவளையே புதிராகப் பார்த்துக்கொண்டிருந்தான் ஷியாம்.
காட்சி இருபத்தியிரண்டு
அதன்பிறகு அவனே அவளுடைய வேலைகளையும் சேர்த்துப் பார்த்துக்கொண்டான். “நான் செய்வன். நீ விடு!” என்று அவள் சொன்னபோது, “ஆமாமா! நீ செய்ததை தான் இந்த உலகமே பாத்திச்சே! போடி பேசாம!” என்றான்.
“டி போடாதடா!”
“ஓ..! இன்னும் வேற என்னல்லாம் செய்யக்கூடாது மேடம்!” என்றபடி அவளை அவன் நெருங்க, ஒருகணம் தடுமாறிவிட்டு, “போடா!” என்றுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள் பிருந்தா.
இந்தக் காட்சிக்குப் பிறகு சற்றே இலகுவாகியிருந்தாள் அனன்யா. ஜேகேயும் அங்கே அமர்ந்திருந்து என்னவோ பருகிக்கொண்டு இருந்தான். ‘நம்மள இந்தப்பாடு படுத்திறவனை சும்மா விடக்கூடாதே!’
உடனேயே விமலை அழைத்தாள். அவன் திரும்பிப் பார்க்க,
“உங்க பாஸ் உடம்புல ஓடுறது முழுக்க என்னோட ரத்தம்!” என்றாள்.
குடித்துக்கொண்டிருந்ததை வேகமாக முன்னிருந்த குட்டி டீப்போவில் ஜேகே வைப்பது தெரிந்தது.
ஏதும் சொல்லப்போகிறானோ என்று பார்க்க, அதன்பிறகு அசைவில்லை அவனிடம்.
‘கல்லுளி மங்கா! உன் தலையை கொண்டுபோய் கல்லோட மோதினா கல்லுத்தான்டா உடையும்!’
“ஏன், நீங்களாஅவரை பெத்தீங்க?” நக்கலாகக் கேட்டான் விமல்.
“இந்த சைஸ்ல ஆர்டர் குடுத்தாலும் கிடைக்காது. இதுல பெத்துட்டாலும்!” என்றாள் அவள்.
“பிறகு எப்படி உங்க ரெத்தம் எங்க பாஸ் உடம்புல ஓடும்!”
“கை வெட்டினப்போ வச்சு உறிஞ்சினார்ல. மரியாதையா அத திருப்பித் தர சொல்லுங்க!” என்றாள் அவள்.
“அதெப்படி..” ஆனானப்பட்ட விமலையே தண்ணி குடிக்க வைத்தாள் அனன்யா.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. என் ரெத்தம் எனக்கு வேணும். சும்மா கீறினத்துக்கு நடிக்கிறேன்னு பத்து லிட்டரை ஒரே உறிஞ்சா உறிஞ்சிட்டார் உங்க பாஸ். ரெத்தக் காட்டேரியா இருப்பார் போலவே!” ஜேகே அவசரமாக ஃபோனை எடுத்துக்கொண்டு எழுந்துபோகவும் புரியாமல் பார்த்தாள் அனன்யா.
‘தக்காளி மண்டையன்! என்ன சொன்னாலும் அசரமாட்டான்!’ பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு.
அங்கே அவனோ சும்மா காதுக்கு ஃபோனைக் கொடுத்திருந்தாலும் சிரிப்பை அடக்கப் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான்.
பத்து லிட்டர் ரெத்தமாமே. ரெத்தக் காட்டேரியா அவன்? இவ வாய.. வச்சுத் தைக்கணும்! ஹாஹா… சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டான்.

