காட்சி இருபத்துமூன்று
அன்று, அஜய்யைப் பற்றி அறிந்தபிறகு பெயர் சூட்டப்படாத உணர்வு ஒன்று அவன் மீது அவளுக்குள் உருவாகிவிட்டிருந்தது. அதனாலோ என்னவோ அவனது கேலிகளை நல்லவிதமாகவே எடுத்துக்கொள்ளப் பழகியிருந்தாள். அதுவே இரசனையாக மாறி, இன்று என்ன சொல்லுவான்? என்று இரகசியமாக எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தது மனது.
அதன் நீட்சியாக அவனருகில் தான் இருக்கும்படியாகப் பார்த்துக்கொண்டாள் பிருந்தா.
எது எப்படியானாலும், அவளின் குறிக்கோள் என்ன என்று அவளுக்குத் தெரியும். அதனால் அடுத்தடுத்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ‘டாஸ்க்’க்குகளில் மிகச் சிறப்பாகவே விளையாடினாள். பலவற்றில் அவளே வெற்றிவாகை சூடியும் கொண்டாள். இல்லாவிட்டாலும், உங்களில் யாருக்கும் நான் சளைத்தவள் அல்ல என்பதையாவது நிரூபித்தாள்.
“கடுகா இருந்தாலும் காரமாத்தான் இருக்கா இவ!” என்று அவள் தலையைக் கலைத்துவிட்டுப் போனான் ரதன்.
அடுத்து, ஒரு பாடல் காட்சியை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் விக்ரமன். இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலையின் நிலாவெளி கடற்கரையைத் தெரிவு செய்திருந்தார். அங்கும், அங்கிருந்து படகில் பயணித்து புறாமலை என்கிற தீவிலும் எடுக்க அனுமதி வாங்கப்பட்டது.
படகுப்பயணம், அழகிய முருங்கைக் கற்கள் தெரியும் புறாமலைக் கடல், சூரியக்கதிர் மின்னும் கடற்பரப்பு, வகை வகையான பவளப்பாறைகள், பவளப்பாறை மீன்கள், வெண்மணலின் மீது நீந்திவிளையாடும் கடல் நீரினுள் நீந்திச் செல்லும் வண்ண வண்ண மீன்கள் கால்களையும் தொட்டுச் சுவைத்துச் செல்லும் அழகு என்று ஒன்றையும் விடாமல், அன்று அதிகாலையிலேயே ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டிருந்தார் விக்ரமன்.
அப்படியே பின்னணியில் இசைத்துக்கொண்டிருந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப, இருவரும் காதலில் உருகிக் கரைந்தனர். நீரில் ஆடிப்பாடினார். நீந்தி விளையாடினர். இதையெல்லாம் செய்து முடிப்பதற்குள் அனன்யா கொஞ்சம் நஞ்சமல்ல நன்றாகவே திணறிப்போனாள். அதுவும் அவன் பார்த்த பார்வைகள், பின்னணியில் இசைத்த வரிகளோடு அவனும் பாடியது… அந்தக்குரல்…அவளுக்குள் என்னென்னவோ உணர்வுகளைத் தூண்டின.
நிஜத்தில் முற்றிலும் வெறுக்கும் ஒருவன் கற்பனை உலகில் அவளைத் தன் புறமாய் இழுத்துக்கொண்டிருந்தான். அவன் விழிகளைப் பார்த்துக் காதலில் கசிந்துருகுவது போன்று நடிக்க முடியாமல், அன்று மட்டும் கவனச் சிதறல்கள் அவளுக்குள் ஓராயிரம் முறை நிகழ்ந்து போயின.
விக்ரமன் கூட, “ஆர் யு ஓகே அனு?” என்று கேட்குமளவில் தன்னிலை இழந்து கொண்டிருந்தாள்.
என்ன நடந்து கொண்டிருக்கிறது அவளுக்கு?
வார்த்தைகளைக் கொண்டு உணர்த்திவிட முடியாத உள்ளுணர்வின் உந்துதலில் தானே வாழ்க்கையின் பெரும்பான்மை நகர்கிறது. அப்படித்தான் அவளின் ஆழ்மனத்தில் தேங்கிப்போயிருந்த ஏதோ ஒன்று அவளை அவன்புறமாக உந்திக்கொண்டிருந்தது; அவளுக்குப் பிடிக்காமலேயே.
தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத அந்த நிலையை முற்றிலும் வெறுத்தாள் அனன்யா. அவளுடைய மனதுக்கும் மூளைக்கும் சண்டை மூட்டிவிட்டிருந்தான் அவன், ஜேகே. எப்போதடா இந்த ஷூட்டிங் முடியும் என்று ஆகிப்போனாள் அவள்.
அவளை இன்னுமே சோதிப்பது போல, முத்தக்காட்சி ஒன்றை வைக்க வேண்டும் என்றார் விக்ரமன்.
“பட்டும் படாமல் ஒற்றி எடுக்கணும் ஜேகே. செக்கண்டுக்கும் குறைவான டைம்ல. அவ எதிர்பாக்காதப்போ மாதிரி இருக்கணும்..”
“நோ!” என்று ஒற்றைச் சொல்லில் மறுத்தான் அவன். “அதெல்லாம் அவசியமில்லை சார். வேற யோசிங்க.” அவன் குரலில் தெரிந்த அழுத்தத்தில் கோபம் கொண்டார் விக்ரமன்.
இப்படித்தான் நடிக்கவும் வந்தான்.
அவனுக்கு நான் பணிவதா என்று அவருக்குள் இருந்த இயக்குனர் உறுமினாலும், “நோ ஜேகே! அது எனக்கு வேணும்!” என்று, அழுத்தமாகச் சொன்னார் அவரும்.
அவரவர் தங்களின் முடிவிலிருந்து மாறாமல் நிற்க, “வேணாம் என்று சொன்னா விடுங்களேன். அந்த சீன் வச்சா மட்டும்தான் உங்க படம் ஓடுமா?” என்று, சினத்தில் பொங்கியவளை அதிர்வோடு பார்த்தார் விக்ரமன்.
அவளை யோசிக்கவில்லையே அவர்.
மெலிதாகக் கலங்கிச் சிவந்துவிட்ட விழிகளை வேகமாக அவள் திருப்பிக்கொண்டபோதுதான் அவளின் மனநிலையைச் சட்டெனக் கணித்தார்.
“ஓகே! அதை விட்டுடலாம்!” என்று முடித்துக்கொண்டார் விக்ரமன்.
காட்சி இருபத்திநான்கு
படகு நீரைக்கிழித்துக்கொண்டு வேகமாக வந்துகொண்டிருக்கும். அதிலே அவனும் அவளும் மட்டும்தான். நடன அசைவுகளோடு அவன் அவளிடம் வருவான். இவள் ஆடிக்கொண்டே பின்பக்கமாக வளைகையில் அவன் இடையிலே கைகொடுத்து அவளை ஏந்த வேண்டும்.
அவர்களைச் சுற்றிச் சுற்றி எடுப்பதற்கு இன்னொரு படகிலும், அவர்களது படகின் முகப்பிலும் கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. பாடல் பின்னணியில் இசைக்கத் தொடங்கியது. சற்றே தள்ளி நின்ற படகில் இருந்த விக்ரமன், “ஆக்க்ஷன்!” என்றதும் அவள் ஆடத்தொடங்க, அவனும் அவளை நோக்கி வரத்தொடங்கினான். இவள் வளைய அவன் இடையில் கைகொடுக்க, ஆடைகளின்றி வெறுமையாயிருந்த இடையில் அவன் கை அழுந்திய கணத்தில் மின்சாரம் தாக்கியதுபோல் தன் பாலன்ஸ் இழந்து அப்படியே வழுக்கி தண்ணிக்குள் விழுந்தாள் அனன்யா.
ஓரளவுக்கு நீச்சல் தெரியும் தான். என்றாலும், காயப்பட்டுப் போயிருந்த மனது சட்டென்று விழித்துக்கொள்ள முடியாமல் முடங்கிப்போக, ஆழம்வரை எதிர்ப்பின்றியே சென்றவள் மூச்சுத்திணறி நன்றாகவே நீரையும் அருந்தி மயங்கிப்போனாள்.
ஒருகணம் திடுக்கிட்டாலும் அடுத்த நொடியே நீருக்குள் பாய்ந்திருந்தான் ஜேகே.
மற்றவர்கள் நீருக்குள் பாய்ந்து நீந்தி வந்தபோது, அவளைத் தன் தோளில் ஏந்திக்கொண்டு மேலே வந்திருந்தவன், படகில் கிடத்தி, வயிற்றை மெல்ல மெல்ல அழுத்தி அவள் குடித்த நீரை வெளிவரச் செய்தான். அதற்குள் வந்துவிட்ட மற்றவர்களும் அவளின் கால் கைகளை பரபரவென்று தேய்த்துவிட்டனர்.
விக்ரமன் பதறிப்போனார். “அனு… அனன்யா… எழுந்திரு!” என்று கன்னத்தில் தட்ட, அடிவயிற்றிலிருந்து புறப்பட்ட பெரிய மூச்சு ஒன்றோடு திணறி இருமிக்கொண்டு கண் விழித்தவள் கண்டது பதறிப்போயிருந்த ஜேகேயின் முகத்தைத்தான்.
அவனைக் கண்ட கனம் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள் அனன்யா.
உயிர்ப்பயம் அத்தனை சாதாரணமானதா என்ன? அவனுக்கும் அப்போதுதான் உயிர் வந்தது.
“ஹேய் ரிலாக்ஸ்! உனக்கு ஒண்ணுமில்ல! நீ நல்லாத்தான் இருக்க! இங்கபாரு… அனன்யா கண்ணைத் திற!” அவள் கன்னம் தட்டி அவன் தேற்றியபோது, கண்களைத் திறந்து ஒருமுறை நன்றாக அவனைப் பார்த்துவிட்டு ஆசுவாசத்தோடு மீண்டும் அவனில் சாய்ந்துகொண்டவளின் விசும்பல் எளிதில் நின்றுவிடவில்லை.
சுற்றியிருந்தவர்களின் பார்வையில் அப்பிக்கிடந்த கவலையோடு மெல்லிய சுவாரசியமும் தெரிய, மெல்ல அவளை விலக்கி இருத்தினான் ஜேகே.
பொம்மையைப் பறிகொடுத்த குழந்தையாக தவிப்புடன் அவன் முகம் நோக்கியவள், அங்கே தெரிந்த சங்கடத்தில் நிகழ்காலம் உணர்ந்து முகம் கன்ற வேகமாக அவனிடமிருந்து தள்ளி அமர்ந்துகொண்டவளுக்கு கண்ணீர் பெருகியது.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த விக்ரமன் இறுகிப்போய் நின்றிருந்தார். நட்ட நடுக் கடலில் வைத்து யாரிடம் என்ன பேசுவது? எல்லோரின் படகுகளும் புறப்பட்டது. ஒருவரோடு மற்றவர் தொட்டுக்கொள்ளாத தூரத்தில் அவர்களின் படகில் அவன் அவளருகிலேயே அமர்ந்து கொண்டான்.
அந்தச் செய்கையில் இன்னுமே குன்றிப் போனாள் அனன்யா. வெட்கமே இல்லாமல், வெறுத்து ஒதுக்குகிறவனைக் கட்டிக்கொண்டு அழுதோமே…ச்சே! சும்மாவே மதிக்கமாட்டான். இனி? நினைக்க நினைக்க கண்ணீரை அடக்க முடியவில்லை. முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டு கண்ணீர் உகுக்க, “ப்ச்! இப்ப எதுக்கு அழுற?” என்று கடிந்தான் அவன்.
“எதுக்கோ நான் அழுறன்! உங்களுக்கு என்ன?” சொல்லி முடிக்க முதலே கேவலும் வெடித்தது.
“என்னப் பிடிக்கலைன்னா எதுக்கு நடிக்க வந்தீங்க? கொஞ்சம் கொஞ்சமா என்னைச் சாகடிக்கிறீங்க நீங்க. இத்தனை வருசத்துல என் தொழிலை இந்தளவுக்கு நான் வெறுத்ததே இல்ல. இன்னைக்கு… ஏன்டா நடிக்க வந்தோம்னு இருக்கு. அதுவும் உங்க கூட எதுக்குடா நடிக்க சைன் பண்ணினேன்னு இருக்கு! அப்படி என்னதான் செய்தேன் நான் உங்களுக்கு. அதையாவது சொல்லுங்க!”
விம்மலினூடு அவள் சொன்ன எதற்கும் பதில் சொல்லாமல் எழுந்து அவளுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டான் அவன்.
கண்ணீருடன் அவனைப்பார்த்தாள் அனன்யா. இவ்வளவு சொன்னபிறகும், உயிர் போகும் நிலைக்கு அவள் போய்வந்த பிறகும் கூட அவன் மாறவே இல்லையே! இரும்பாகத்தானே இறுகிப்போய் நிற்கிறான்!
“என்ன பிரச்சனைன்னு சொல்லவே மாட்டீங்களா?” கேட்டு முடிக்க முதலே கேவல் வெடிக்க,
“இப்ப அழுறதை நிறுத்தப்போறியா இல்லையா?” என்று, அவன் போட்ட அதட்டலிலா, நீரைக் கிழித்துக்கொண்டு சென்ற படகின் வேகத்திலா திடுக்கிட்டுப்போய் அவனைப் பார்த்தாள் அனன்யா. அவள் தேகம் நடுங்கியது!
சட்டென்று தான் அணிந்திருந்த கோர்ட்டை கழற்றி, “இதப் போடு!” என்று அவன் நீட்ட, அவள் வாங்கவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு விறைப்புடன் அமர்ந்திருந்தவளை ஒருமுறை பார்த்துவிட்டு, அவளைச் சுற்றிப் போர்த்திவிட்டான் அவன்.
அதற்கும் அழுகைதான் வந்தது அவளுக்கு. அவனுக்குப் பயந்து அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
நல்லகாலம் போட்டினை செலுத்திக்கொண்டிருந்தவன் ஒரு சிங்களவன். என்னவோ சரியில்லை என்று உணர்ந்தாலும் மொழி விளங்காததில் அவர்களை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுப் படகோட்டுவதில் கவனம் செலுத்தினான்.

