அத்தியாயம் 13
காட்சி இருபத்தியாறு
அவர்களின் பாத்ரூமில் சாந்தினி அண்ட் கோ அமர்ந்திருந்தது.
“பிரெண்ட்ஸ்ஸாம். பக்கத்துல இருந்து பாக்கிற நாம முட்டாளா இல்ல மக்கள் முட்டாளா? இவ கைய நறுக்கினா அவன் வாயில வைக்கறான். இவ வேலையை அவன் பாக்கறான். அவன் தனியா இருந்தா இவ போய் பேசிட்டு இருக்கா. கேட்டா பிரெண்ட்ஸ்ஸாம். அவகிட்ட சொல்லணும் சின்ன வயசிலேயே எங்களுக்கெல்லாம் காது குத்திட்டாங்கனு.” என்றாள் சாந்தினி மற்றவரிடம்.
“அதுதானேக்கா. அன்னைக்கு அவன் ட்ரெஸ்ஸ இவ அயர்ன் பண்ணிக் குடுக்கிறா. இவளோட ஹேர்பின் சரியா குத்தலையாம்னு அவன் குத்தி விடுறான். கேட்டா மட்டும் நாங்க பிரெண்ட்ஸ். நல்லா விடுறாங்க கதை.” என்று நொடித்தாள் மற்றவள்.
“அழகா இருக்கிற திமிரு. அதுதான் அவனைப் பின்னால சுத்தவிட்டுட்டு இவ சுத்துறா!” என்று வெகு சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
காட்சி இருபத்தியேழு
தன்னைப்பற்றிய கிசுகிசுக்களை அறிந்துக்கொண்ட பிருந்தா துடித்துப்போனாள்.
மக்களின் பிரதிநி கேட்டபோதுகூட பெரிதாக அவள் எடுக்கவில்லை. இளம் வயதினர் அருகருகே இருந்தால், இப்படியான கேலி கிண்டல்கள் வரும் தானே என்றுதான் நினைத்தாள். ஆனால், பக்கத்தில் இருந்து பார்ப்பவர்கள் இப்படிச் சொல்வது நியாயமா? கூடவே இருக்கும் ஒருவனோடு நட்போடு பழகுவது அவ்வளவு பெரிய குற்றமா?
அப்போது அருகில் வந்து அமர்ந்தார் ராகவன். “என்னம்மா?” கேட்டதுதான் தாமதம் அவரின் தோளில் சாய்ந்து விம்மிவிட்டாள் பிருந்தா.
“எல்லாரும் சொன்னதைக் கேட்டிங்க தானப்பா? நான் அப்படியா… சொல்லுங்க?”
“அவங்க சொன்னா அது உண்மை ஆகிடுமா? அப்பா சொல்றேன், எனக்கு உன்னைத் தெரியும். நீ அப்படி இல்லமா. பாக்கிறவன் தப்பா புரிஞ்சிக்கிட்டா அதுக்கு நீ என்ன செய்வ? முதல்ல அழுறத நிறுத்து!” என்று அவள் கண்களைத் துடைத்துவிட்டார் அவர்.
“இல்லப்பா. ஆரம்பத்தில அவனை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. போகப்போக அவன்ர குணமே அதுதான் எண்டு விளங்கிட்டுது. சோ பிரெண்ட்ஸ்ஸா பழகறோம். அது தப்பா? ஒரே வீட்டுல இருந்துகொண்டு எத்தனை நாளைக்குப்பா தள்ளித்தள்ளி இருக்கிறது. முதல் ஏன் அப்படி இருக்கோணும். அவன் நல்லவன். எனக்குத் தெரியும். சோ… நான் பழகறேன். அதுல இவங்களுக்கு என்ன பிரச்சனை?”
“புரியுதுடா. ஆனா, வெளில இருந்து பாக்கிற மக்களுக்கும் ஏதோ தெரியப்போய்த்தானே அந்தளவு கத்தினாங்க. சோ… உங்க ரிலேஷன்ஷிப்ப எப்படிக் கொண்டுபோகணும் என்று நீதான் தீர்மானிக்கனும்.”
“இதுல தீர்மானிக்க எதுவுமே இல்லப்பா. நான் நானா இருக்கிறன். அவன் அவனா இருக்கிறான். எங்களுக்குள்ள இருக்க பிரென்ட்ஷிப் எப்படியானதுன்னு எங்களுக்குத் தெரியும். இதுல அடுத்தவங்க நினைக்கிறதுக்கு எல்லாம் நான் மாறமுடியாது”
“அப்படிச் சொல்லாதம்மா. உன்னோட நல்லதுக்குத்தான் சொல்லுறேன். தனியா வீட்டை விட்டுட்டு வந்திருக்கிறப்போ மனம் அலைபாயத்தான் செய்யும். ஆனா, கட்டுப்படுத்த நாமதான் பழகணும். மனம் போற போக்கில போகாத. அப்பா சொல்லுறேன் கேளு கண்ணம்மா..”
அவர் சொல்வதையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுடைய பேச்சையும் சிரிப்பையும் இரசிக்கிறாள். அவனைப் பிடிக்கிறது. அவனாலேயே இந்த வீட்டின் மீதான அந்நியத்தனம் விலகி இயல்பாக வளையவருகிறாள். ஆயினும், அவள் அப்படி ஒன்றும் மனம்போன போக்கில் போகவில்லையே. மனத்தைக் கட்டுப்பாடில்லாமல் அலைய விடவில்லையே! ஆனாலும், அவரிடம் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டாள்.
“இங்க பாரு, நீ கெட்டிக்காரி. உனக்கு நான் சொல்லத் தேவையில்லை. நாம எல்லாத்திலையும் கவனமா இருக்கிறதுல தப்பில்லை. பாத்து நடந்துக்கடா! கேம்ல மட்டும் கான்சன்ரேட் பண்ணு.” என்றுவிட்டு எழுந்துபோனார் அவர்.
இன்னுமே மனம் குழம்பிப் போயிற்று! அவள் எல்லை தாண்டிப் போகிறாளா? அவர் சொல்வதுபோல அவளிடம் ஏதும் தவறு இருக்கிறதா? யாரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது? அந்த வீட்டில் மனம்விட்டு பேசக்கூடிய ஒற்றை உறவான அந்தக் குரலிடம் ஓடிப்போய்த் தன் குழப்பத்தை அப்படியே கொட்டினாள் பிருந்தா.
“யார் என்ன சொல்லுறாங்க என்றது முக்கியமில்லை. உங்க மனசு என்ன சொல்லுது என்று கேளுங்க. அதன்படி நடவுங்க. மனசு என்னைக்குமே தப்பு வழி காட்டாது.” நான்கு வரியில் பளிச்சென்று அவளின் குழப்பத்தைத் தீர்த்து வைத்தது அந்தக் குரல்.
எல்லை தாண்டிப் பழகாத போதும் மற்றவர்கள் பார்வையில் பிழையாகப் படுகிறது என்றால், கொஞ்சம் விலகித்தான் இருப்போமே என்று தோன்ற தெளிவுடன் வெளியேறினாள்.
காட்சி இருபத்தியெட்டு
எல்லோரும் உறங்கிவிட, உறக்கமின்றித் தனிமையில் அமர்ந்திருந்தாள் பிருந்தா. அப்பாவைப் பார்க்கவேண்டும் போல் மனம் பெரிதும் ஏங்கியது. “இன்னைக்கு என்ன சிவராத்திரியா?” என்றபடி வந்து அவளருகில் அமர்ந்தான் அஜய்.
“ப்ச்! இப்ப எதுக்கு நீ வந்த அஜய். என்னத் தனியா விடு!” என்றாள் பிருந்தா , அவன் முகம் பாராமல்.
“இந்தளவுக்கெல்லாம் சீன் இல்ல மேடம். நமக்குத் தெரியும் நாம என்ன பண்றோம்னு. சும்மா அப்செட் ஆகாம பேசாம இரு!” என்று அதட்டினான் அவன்.
“ஆனா… ராகவ் அப்பா கவனமா இருக்கச் சொல்லுறார். நம்ம ரிலேஷன்ஷிப்பை அளவா வச்சிருக்கச் சொல்லுறார். அவர் சொல்லுறதும் சரியோ எண்டு தோணுதுடா.”
“ஓ! நம்ம ரிலேஷன்ஷிப் எந்தளவுல இருக்கணும்னு அவர்தான் டிசைட் பண்ணுவாரா? அப்போ அவர் சொல்றதைத்தான் நீ கேப்ப. நாங்கல்லாம் யாரு உனக்கு? போ… போய் அவர் பேச்சையே கேளு.” என்றவன் விருட்டென்று எழுந்து உறங்கச் சென்றுவிட்டான்.
அவனுடைய முதல் கோபம். மளுக்கென்று கண்ணீர் பொங்கி வழிந்தது அவளுக்கு.
என்ன சொல்லிவிட்டேன் என்று இவ்வளவு கோபம்? அன்று முழுக்க உறங்கவே இல்லை அவள். கண்ணீரிலேயே கரைந்தவளை, அந்தக்குரல் தான் அழைத்துப்பேசி ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தது.
காட்சி இருபத்தி ஒன்பது
அடுத்தநாள் காலையில் அவனுக்கும் கோப்பி கொண்டுவந்து வைத்துவிட்டு அவனருகில் அமர்ந்தாள் பிருந்தா. விருட்டென்று எழுந்து சென்றுவிட்டான் அவன். விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள் அவள். அவனது முகத்திருப்பல் இத்தனை தூரத்துக்குத் தன்னைப் பாதிக்கும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.
இதைக் கவனித்துவிட்டு அஜய்யை அழைத்துப் பேசினார் ராகவன்.
“அந்தப்பொண்ணு உலகம் தெரியாதது அஜய். ரொம்ப ஆட்டுவிக்காத. அவளை விட்டுடு.”
“அவ என்ன உங்க சொந்தப் பொண்ணா சார்? எனக்குத் தெரியும், நான் என்ன பண்ணனும்னு. தயவுசெய்து எனக்கும் அவளுக்கும் நடுவுல நீங்க வராதீங்க.” முகத்தில் அடித்ததுபோன்று சொல்லிவிட்டுப் போய்விட்டான் அவன்.
காட்சி முப்பது
“அவன் என்கூட பேசுறானே இல்லப்பா..” அவர் தோளில் சாய்ந்து கண்ணீர் உகுத்தாள் பிருந்தா.
“அவனைக் கொஞ்சம் தள்ளி வைமா என்று இதுக்குத்தானேம்மா சொன்னேன். இப்ப மனசப் பறிகொடுத்திட்டு அழுதிட்டு இருக்கியே. இனியாச்சும் இந்த அப்பா சொல்லுறதை கேளுடா. அவன் அப்படியே இருக்கட்டும். நீயும் அவனை விட்டு விலகி இரு. உனக்குப் பேசுறதுக்கு ஆக்களா இல்ல சொல்லு? வைதேகி மேடம் இருக்கிறாங்க. ரதன் இருக்கான். நான் இருக்கேன். பிறகு என்ன?”
அவர் சொன்னவைகள் அவள் செவியில் விழவேயில்லை. மனதைப் பறிகொடுத்துவிட்டாளா அவள்? அந்தக் கேள்வியிலேயே அவள் சிந்தனைகள் நின்றுபோயிற்று.
ஆம் போலும் இருந்தது இல்லை போலும் இருந்தது.
காட்சி முப்பத்துஒன்று
அன்று அவள் சமைக்கும் நாள். “எப்படிச் செய்யணும்னு நான் சொல்லுறேன். நீ செய். பழகத்தானே வேணும்!” என்றுவிட்டிருந்தாள் சாந்தினி.
ரதன் முதற்கொண்டு ராகவன் அஜய் என்று எல்லோருமே அவளுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்வது பிடிப்பதில்லை சாந்தினிக்கு. தன்னிடம் சிக்கினால் முடிந்தவரை நன்றாக வேலை வாங்கிவிடுவாள்.
சமைக்கவே தெரியாமல் தடுமாறி, தாளிக்கையில் கையைச் சுட்டுக்கொண்டிருந்தாள் பிருந்தா. அங்கேயே இருந்து பார்க்காததுபோல் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த அஜய், பொறுமை இழந்து எழுந்து வந்தான்.
“தள்ளு!”
இத்தனை நாளாக் கதைக்காம இருந்திட்டு இப்ப மட்டும் எதுக்கு வறானாம்.
“நானே சமைப்பன். நீ தள்ளு!” என்றாள் ரோசத்தோடு.
“கடுப்பக் கிளப்பாம போ!” கோபத்தில் கத்திவிட்டு, அவன் சமையலைப் பார்க்க, அவளோ இப்பவாவது மலையிறங்கி வந்தானே என்கிற மனநிறைவோடு அவன் பக்கத்திலேயே நின்று சட்டியைக் கிண்டிக்கொண்டிருந்தாள்.

