“நீ வர்ற வரைக்கும் நான் இங்கதான் இருப்பேன். பயப்படாம போ. சப்போஸ் ஏதாவதுனா ஒரு மிஸ் கோல் குடு. அடுத்த செக்கன் உன் முன்னாடி நிப்பேன்.” என்று அவன் சொல்ல, கண்களைத் துடைத்துக்கொண்டு தைரியமாக இறங்கிப் போனாள் அனன்யா.
அங்கே ஹோட்டல் லாபியில் அர்ஜுன் காத்திருப்பது தூரப்புள்ளியாய் தெரிந்தது. ஒரு படபடப்பு நெஞ்சுக்குள் குடிபுக மெல்ல அவனை நெருங்கினாள்.
அவனும் கண்டுவிட்டு அவளை நோக்கி முகம் முழுக்கச் சிரிப்புடன் வந்து கொண்டிருந்தான்.
இருவரும் நெருங்க நெருங்க, இருந்த படபடப்பு எல்லாம் குறைந்துகொண்டே போய், இவனைப் பார்க்கவா இவ்வளவு பாடுபட்டோம் என்றாயிற்று!
ஆறு வருடத்துக்கு முதல் பார்த்த இளமை தொலைந்து, அங்காங்கே நரை முடிகள் வெளிப்பட்டிருக்க, சற்றே தொந்தி உள்ளேன் ஐயா என்று சமிக்ஜை செய்து கொண்டிருந்தது.
இதெல்லாம் இயற்கைதான். என்றாலும், பார்த்த கணமே தோன்றியது; இவனைப் பார்த்தா மயங்கினோம் என்று. ‘நம்ம டேஸ்ட் இவ்வளவு மட்டமாவா இருந்தது’ என்றுதான்.
கட்டுக்குளையாத உடற்கட்டுடன் வேகநடை பயிலும் ஜேகே கண்ணுக்குள் வந்து போனான்.
கடவுளே.. அவன் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை. போயும் போயும் இவனையா காதலிச்சோம். ஆளும் வண்டியும் தொந்தியும்! தோற்றத்தை வைத்து ஒருவரைக் கணிப்பிடுவது கூடாதுதான். அதே தோற்றத்தை வைத்துத்தானே அவனும் அவளை மயக்கினான். அதோடு, இயற்கையில் அவர்களின் தோற்றம் எதுவாக இருந்தாலும் அதைவைத்துக் கணிப்பதுதானே தவறு. இயற்கையில் அவன் அழகன்தான். ஆனால், குடி கூத்து என்று தன்னைத்தானே கெடுத்து வைத்திருக்கிறான் என்று தெரிய அவளுக்குள் ஒருவித குரூர திருப்தி.
சொல்ல முடியாத சுகம் இதயத்தில் பரவியது.
“வாவா! எப்படா வருவன்னு காத்திட்டே இருந்தேன். அப்பப் பாத்ததை விட சூப்பரா இருக்க! உக்காரு!” இன்றும் வெட்கமே இல்லாமல் அவளைப் புகழ்கிறவனின் மீதான வெறுப்பை விழிகளில் காட்டிவிடாமலிருக்க பெரும் பிரயத்தனப்பட்டாள் அனன்யா.
ஒன்றும் சொல்லாமல் உதடுகளை இறுக்கமாக மூடிக்கொண்டு அமர்ந்துகொண்டாள்.
“சொல்லு, எப்படி இருக்க? பாத்து எவ்வளவு காலமாச்சு. மறுபடியும் உன்னைப் பாப்பேன் என்று நினைச்சே பார்க்கல. பர்ஸ்ட் என்ன பாக்க வந்ததுக்குத் தேங்க்ஸ்!” என்றவனின் விழிகள் அவள் மேலே இருந்ததில் அசூசையாக உணர்ந்தாள் அவள்.
“ஒரு ஆறு வருசம் இருக்குமில்லையா, நாம பாத்து? என்ன பண்ணிட்டு இருக்க அர்ஜுன்?” வேண்டுமென்றேதான் கேட்டாள். நீ எப்படி இருக்கிறாய் என்கிற கேள்வியைச் சம்பிரதாயத்திற்குக் கூட கேட்கவேயில்லை.
“பெருசா ஒண்ணுமில்ல. சான்ஸ் எதுவும் கிடைக்கல. சோ.. கிடைக்கிற சீரியல்ல சின்ன சின்ன ரோல் போயிட்டு இருக்கு..” அதைச் சொல்லும்போது அவன் முகமலர்ச்சி கொஞ்சம் குன்றிப் போயிற்று.
பின்னே, தான் நல்ல நிலையில் இல்லை என்பதைச் சொல்வது யாருக்குத்தான் பிடிக்கும்? தனக்குள் சிரித்துக்கொண்டாள் அனன்யா.
ஏற்கனவே சொல்லி வைத்திருந்தான் போலும், ஆவி பறக்கும் இரண்டு கோப்பிக் கப்புகள் மேசையில் வந்து அமர்ந்தன. கூடவே பிஸ்கட்டும்.
“நீ கை நிறைய படம் வச்சிருக்கப் போல…” என்று வழிந்தபடி ஒன்றை எடுத்து அவள் புறமாக நீட்டினான்.
“யா… இருக்கு! அடுத்த அஞ்சு வருசத்துக்கு பிசி. அதுக்குப் பிறகும் டேட்ஸ் கேக்கறாங்க, நான்தான் இருக்கிற புராஜெக்ட்ஸ முதல்ல முடிச்சிட்டு பாப்போம்னு இருக்கேன்.” உண்மையைத்தான் சொன்னாள். ஆனால், பெருமையாகச் சொன்னாள். ஜேகே சொன்னதுபோல, என் இடம் என்ன உன் இடம் என்ன பார், நன்றாகப் பார் என்று உறைக்கும்படி சொன்னாள்.
“செம போ! அப்ப அடுத்த பத்து வருசத்துக்கும் நீதான் தமிழ் நாட்டுல கொடிகட்டிப் பறக்கப்போற என்று சொல்லு!”
அதற்கு ஒரு புன்னகையோடு நிறுத்திக்கொண்டாள். கோப்பியை மெல்லப் பருகினாள். வேறு என்ன கதைப்பது? ஒரு காலத்தில் வாய் ஓயாமல் அவனிடம் பேசிக்கொண்டிருந்தவளிடம் இப்போது சொல்ல ஒன்றுமேயில்லை.
அதை அவனும் உணர்ந்திருக்க வேண்டும்.
“உனக்கு என்மேல கோவம் போல… ஆக்சுவலி அது நியாயமும் தானே? அப்போ, அதோட சீரியஸ்னெஸ் புரியல அனு. அதுக்குப்பிறகு.. ரொம்பவே கில்டி பீலிங்கா இருந்தது.”
அனுவா? பார்வை ஒருமுறை அவனில் நிலைத்து விலகியது.
“பழசெல்லாம் பேசவேண்டாம் அர்ஜுன். அதையெல்லாம் நான் நினைக்கிறது கூட இல்ல! பாக்கணும்னு சொன்னியாம். அதான், வந்தேன்.”
இதற்குமேலும் அவனுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கதைத்துக்கொண்டிருக்க விருப்பமில்லை அவளுக்கு. முடித்துக்கொண்டு எழுந்து போ என்றுதான் மனம் உந்திக்கொண்டிருந்தது.
“எவ்வளவு நாளுக்குப் பிறகு பாக்கறோம், ஆசையா உன் கூட நிறைய பேசணும்னு நினைச்சேன். நீ என்னடானா…” என்று, ஏமாற்றத்தை முகத்தில் காட்டினான் அவன்.
“காலைல இருந்து ஷூட்டிங் அர்ஜுன். முடிச்ச கையோட இங்கதான் வரேன். நாளைக்கும் ஷூட் இருக்கு. இனிமேதான் காட்டேஜுக்குப்போய் ரெஸ்ட் எடுக்கணும்!” வெற்றுக்கோப்பையை மேசையில் வைத்தபடி சொன்னாள்.
“ஓ.. சாரிமா. அப்போ நீ கிளம்பு. நான் நாளைக்கு காட்டேஜுக்கு வந்து பாக்கறேன்.” என்றான் அக்கறையாக அவன்.
அவளும் எழுந்துகொண்டாள். “அது சரியா வராது அர்ஜுன். இந்த டைமுக்கு மேலதான் எப்பவுமே அங்க போவேன். எது என்றாலும் ஷூட்டிங் ஸ்பாட்க்கு வா!” என்றுவிட்டு விடைபெற்றுக்கொண்டாள்.
வீட்டுக்கு வராதே என்பதோடு, உன்னைச் சந்திக்க எனக்கு எந்தவிதமான தடுமாற்றமும் இல்லை என்றும் நிமிர்ந்து சொல்லிவிட்டுப் போகிறவளையே பார்த்திருந்தான் அர்ஜுன்.
‘என்ன அழகுடா சாமி!’ அவளைத் தூரத்திலேயே பார்த்தக்கனம் தோன்றியது இதுதான். அத்தனை அழகாய் இருந்தாள். ‘இவளுக்கு வயசே போகாதோ..’ அவனுக்குத் தெரியவில்லை.
அவனும் அழகன் தான். ஆனால் இன்று.. தன்னை ஒருமுறை குனிந்து பார்த்துக்கொண்டான். ‘கொஞ்சம் கவனிச்சு ட்ரெஸ் பண்ணினா ஓகே!’ அவனே அவனுக்குள் சொல்லிக்கொண்டான்.
ஆனாலும், ‘ச்சே! மிஸ் பண்ணிட்டமோ..’ என்றுதான் அவள் வந்துவிட்டுப் போனதிலிருந்து தோன்றிக்கொண்டே இருந்தது.
அன்று அழகு மட்டுமே கொட்டிக்கிடந்தது. இன்று அழகோடு பணமும்.. காலத்துக்கும் காலாட்டிக்கொண்டு வாழலாம். அதற்கு அவளைக் கவரவேண்டும். முன்னர் போல பாட்டில் வசியம் செய்யக் கூடியவள் அல்ல என்று அவள் வந்திருந்த கொஞ்ச நேரத்திலேயே உணர்ந்துகொண்டான். அதுதான் நல்ல கனவானைப்போன்று நல்லபடியாக கதைத்து அனுப்பினான்.
பேசித்தான் கரைக்க வேண்டும்.
அங்கே வாசல் நோக்கி நடந்துகொண்டிருந்த அனன்யா, முன்பக்கம் இருந்த கஃபேடேரியாவில் அமர்ந்திருந்து கஃபே அருந்திக்கொண்டு இருந்தவனைக் கண்டதும், ஒருகணம் நடை நிற்க விழிகளை விரித்துவிட்டு, ஓடிப்போய் அவன் முன்னால் அமர்ந்துகொண்டாள்.
“ஹாய்! அயம் அனன்யா ஆதிரையன். அண்ட் யூ?” உற்சாகமாய் சொன்னபடி அவனிடம் கையை நீட்டினாள்.
அவளின் கையை மட்டும் ஒருமுறை பார்த்துவிட்டு நிதானமாகக் கஃபேயை அருந்தியவனின் விழிகள் இப்போது ஃபோனில் மெசேஜ் செக் செய்துகொண்டிருந்தது.
“ஹல்லோ பாஸ்! கை குடுத்தா நீங்களும் தரணும். பெயரைச் சொன்னா நீங்களும் சொல்லணும். அதுதான் நாகரீகம். இதெல்லாம் உங்க வீட்டுல சொல்லித் தரலையா?” முறைத்துக்கொண்டு கேட்டாள்.
“இல்ல!” என்றான் அவன் தலையை நிமிர்த்தாமல்.
இவனையெல்லாம் திருத்தவே முடியாது. பல்லைக் கடித்தாள் அனன்யா.
“எனக்கும் ஒரு தீராமிசு சொல்லுங்க!” என்றுவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அந்தக் கோபத்தை ஒரு வினாடிக்கு கூட அவளால் பிடித்துவைத்திருக்க முடியவில்லை. மனதில் பொங்கும் சந்தோசத்தை அவனிடம் பகிராவிட்டால் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது.
“இப்ப நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என்னவோ, இத்தனை நாளா கட்டி வச்சிருந்த சிறகை அவுத்து விட்டு பறந்துபோன்னு சொன்னா எப்படி இருக்கும்? அந்தப் பறவையும் எங்க பறக்கிறோம் என்று தெரியாம அங்கேயும் இங்கயுமா பறக்குமே அப்படி ஒரு பீல்! என்னோட இதயம் லா.. லலா.. லா.. அப்படின்னு பாடிட்டே பறந்திட்டு இருக்கு! அனன்யா செம ஹாப்பி அண்ணாச்சி!” என்று கைகளை விரித்தாள் அவள்.
சுற்றி இருப்பவர்களை ஒருமுறை விழிகளைச் சுழற்றிப் பார்த்துவிட்டு எழுந்து நடந்தான் அவன்.
“ஹா.. எனக்கு தீராமிசு?” அவளின் கேள்வி காற்றில் கரைந்தது. அவன் போய்க்கொண்டே இருந்தான்.
“அடப்பாவி மனுசா? உன்னையெல்லாம் நம்பி வந்தன் பாத்தியா என்னைச் சொல்லணும்!” பல்கலைக் கடித்துவிட்டு வேறு வழியில்லாமல் ஓடிப்போய் அவன் காரில் ஏறிக்கொண்டாள் அனன்யா.
“உங்களை எல்லாம் என்ன செய்யணும் தெரியுமா? காருக்கு முன்னால கட்டி வச்சிட்டு அந்தக் காரைக் கொண்டுபோய் மரத்துல நங்கு நங்குன்னு மோதணும். எங்க இருந்து வந்தீங்களோ.. என்னால முடியல சாமி!” என்று குறைபாடிக்கொண்டே வந்தவளை சட்டையே செய்யவில்லை அவன்.
அவளின் வீட்டின் முன்னே கொண்டுசென்று காரை நிறுத்தினான்.
அதிலிருந்து இறங்கிக்கொண்டு, “மிஸ்டர் முசுட்டு மாமா! தயவுசெய்து எங்கயாவது மனுசங்க கூட பேசுற தெரபிக்கு போங்க. சத்தியமா என்னால முடில!” என்றுவிட்டு, கதவை அறைந்து சாத்திவிட்டுப் போனாள் அவள்.
காட்டேஜுக்குள் புகுந்து கதவடைத்ததும் சவீதாவுக்குத்தான் அழைத்து நடந்ததைச் சொன்னாள்.
“அவன்மேல இன்னும் ஏதாவது பீலிங்ஸ் இருக்கா அனு.” அவள் சொன்னவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டுக் கேட்டாள் சவீதா.
“அக்கா! என்ன கேக்கறீங்க நீங்க?”
“நீ முதல்ல பதில் சொல்லு!” என்றாள் அவள்.
“சீரியஸா இல்லக்கா. உண்மைய சொல்லனும்னா எனக்கு அவன் முகமே பார்க்க பிடிக்கலக்கா.” என்று உள்ளதைச் சொன்னாள் அனன்யா.
“அப்போ இதையும் கேட்டுக்கோ. அவன் அவ்வளவா நல்லமில்ல அனு. பல பொண்ணுங்களோட பிரச்சனைன்னு முன்னமே கேள்விப்பட்டிருக்கேன். உன்கிட்ட சொல்லி, அவனை நினைவு படுத்த வேண்டாமேன்னு சொல்லலை. சினிமா, டிவி சீரியல் எதுலயும் பெரிய சான்ஸ் இல்ல. ஒரே குடிபோல, ஷூட்டிங்குக்கும் ஒழுங்கா போறதில்லையாம். நல்லா கடனையும் சேர்த்து வச்சிருக்கான். நீ இப்ப வசதியாவும் இருக்க இல்லையா.. சோ பழைய விஷயத்தை பேசி உன்னை வளைக்கப் பாப்பான். யோசிச்சு நடந்துக்கோ! உனக்கு இப்பவும் அவன்மேல் ஏதாவது இருந்தாலும் அவன் வேணாம் உனக்கு.” என்று தெளிவாகவே சொன்னாள் அவள்.
“இவனைப்போய் காதலிச்சோமே என்கிற நினைப்புதான் இருக்குக்கா. அவன் நினைப்பு இல்ல!” தெளிவாகவே தன் மனத்தைச் சொல்லிவிட்டு வைத்தவளுக்கு, அவன் தன்னைத் தேடிவந்த காரணம் புரிந்துபோனதில் அவள் உதடுகள் ஏளனமாக வளைந்தன.
என்ன மனிதன்.. இவனைப்போய் செய்!

