அத்தியாயம் 18
காட்சி நாற்பத்தியொன்று
அவள் நம்பிய அத்தனைபேரும் ஏமாற்றியிருப்பது விளங்க அந்தக்கணமே தகப்பனின் மடி சாய்ந்து கதறவேண்டும் போலிருக்க, அவர்களின் தெருவில் இருக்கும் கடைக்கு அழைத்து, “அப்பாவை கதைக்கச் சொல்லுங்க அண்ணா. அவசரமாம் எண்டு சொல்லுங்கோ. அங்க எடுக்க எடுக்க யாருமே கதைக்கினம் இல்ல.” என்று கெஞ்சிக் கேட்டாள் பிருந்தா.
அவர்கள் போய்ச் சொல்லியிருக்க வேண்டும். புது நம்பர் ஒன்றிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
மின்னல் வேகத்தில் எடுத்து, “அப்பா!” என்று அவள் கதறிய போது, “ஃபோன் எடுக்காட்டி கதைக்க விருப்பம் இல்லை எண்டு விளங்காதா உனக்கு?” என்று, அந்தப் பக்கமிருந்து சீறியது தமையனின் குரல்.
திடுக்கிட்டுப் போனாள் பிருந்தா. ஆனாலும் தகப்பனின் குரலைக் கேட்டுவிடத் துடித்தவள், “ஐயோ அண்ணா, உன்னோட பிறகு கதைக்கிறன். இப்ப அப்பாட்ட ஃபோனைக் குடு! எனக்குக் கதைக்கோணும்.” என்று கேவினாள்.
“எதுக்கு? அவரின்ர மானம் மரியாதை எல்லாத்தையும் வாங்கினது போதாது எண்டு உயிரையும் வாங்கப் போறியா? என்ன பெண் நீ? கண்டவனோடையும் காமெராக்கு முன்னால நிண்டு ஆடிப்போட்டு அப்பாவாம் அப்பா. சை! உன்னோட கதைக்கவே அருவருப்பா இருக்கு. வை போன!” ஆத்திரத்தோடு சீறினான் அவன்.
கூடப்பிறந்த தமையனின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளில் அவள் உயிர் பறவை துடிதுடித்தது.
“அண்ணா… சாரிடா அண்ணா. அப்பாட்ட… இல்ல நீ அம்மாட்ட குடு பிளீஸ்டா. நான் கதைக்க வேணும்.”
“யாருமே உன்னோட கதைக்க ரெடியா இல்ல. இனி வேற யாருக்கும் ஃபோனை போட்டு எங்கட மானத்த வாங்காத. ஊரே காறித்துப்புது எங்களை. என்ன பொம்பிளையடி நீ? இப்படி வெளில தலையே காட்டமுடியாம செய்து போட்டியே!”
“அண்ணா நீ முதல் அம்மாட்டக் குடு!. இல்லாட்டி விடு. நாளைக்கே டிக்கெட்டை போட்டுக்கொண்டு வாறன்.” என்று கதறியவளை, “பிருந்தா..” என்று ஒரு கண்ணீர் குரல் அழைத்தது.
“அம்மா!” விழுக்கென்று நிமிர்ந்தவளின் புலன்கள் அனைத்தும் அந்தக் குரலில் குவிய, “அம்மா… ஏனம்மா என்னப்பாக்க வரேல்ல நீங்க. ஏனம்மா என்னோட கதைக்கேல்ல. என்னம்மா என்னில கோவம்?” அவரைக் கதைக்கவிடாமல் குழந்தையாய் மாறிக் கதறினாள்.
அந்தத் தாயாலும் சட்டென்று பதிலிருக்க முடியவில்லை. பெற்ற மகள் அல்லவா? இத்தனை நாட்களாக இன்னொரு தாயாய் மாறி அவரையும் தாங்கியவள். சேலைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சொன்னார்.
“தயவு செய்து இங்க வந்திடாதயம்மா. அப்பா பெரும் கோபத்தில இருக்கிறார். இப்போதைக்கு கொஞ்சம் அங்கேயே இருக்கப்பார் செல்லம். நீ தைரியசாலி. கவனமா இரம்மா. உன்னை மட்டுமே நினைக்க முடியாம நாலுபேரை பெத்துப்போட்டனே அம்மாச்சி. அம்மாவைக் கோவிக்காதம்மா. அண்ணாக்குக் கல்யாணம் நடக்கப் போகுது. பொம்பிளை வீட்டாரிட்ட உன்னைக் கை கழுவிட்டோம் எண்டு சொல்லிப்போட்டம். வந்து மற்ற பிள்ளைகளின்ர வாழ்க்கையையும் கெடுத்துப்போடாத!” என்று, கண்ணீரோடு சொன்ன அன்னையின் வார்த்தைகளைக் கேட்டுக் கதறிவிட்டாள் பிருந்தா.
“என்னம்மா இப்படிச் சொல்லுறீங்க? நான் எங்கம்மா போவன்? யாரையம்மா எனக்குத் தெரியும்? உங்கள விட்டா வேற யாரம்மா எனக்கு எண்டு இருக்கீனம். அம்மா… அம்மா.. என்ன வெறுத்திடாதீங்க அம்மா. அய்யோம்மா… அப்பா… அப்பா எங்க? என்ர அப்பாவோட நான் கதைக்கோணும்! அப்பா… அப்பா…” மடிந்து விழுந்து கதறினாள் பிருந்தா.
விக்ரமன் இருமுறை சொன்ன, “கட் கட்!” அவள் காதில் விழவே இல்லை. தன்னையே மறந்திருந்தாள். விக்ரமனால் அவளைப் பார்க்கவே முடியவில்லை. குற்ற உணர்ச்சி அவரைக் கொன்றது! ஷியாமின் கண்களும் கலங்கிப் போயிற்று! ஜேகே அந்த இடத்தை விட்டே அகன்றிருந்தான்.
அப்போது தோளைப் பற்றியது ஒரு கரம்.
“அப்பா!” தனக்கு உயிர்கொடுத்த உருவத்தின் தொடுகையையும் வாசத்தையும் உணர்ந்தவளின் தேகம் ஒருமுறை துடித்துச் சிலிர்த்தது.
“அப்பா!” என்றபடி விழுக்கென்று நிமிர்ந்தவளின் கண்முன்னே அப்பாவேதான்! அவளின் அப்பாவேதான்! ஆறு வருடங்களுக்குப் பிறகு நிற்பது அவரேதான்.
அவளின் கண்கள் பொய் சொல்லவில்லை.
நம்ப முடியாத அதிர்ச்சியில் இதயம் நின்றுவிடும் போலிருந்தது.
“அப்பா…” மெல்ல அவரைத் தொட்டுப் பார்த்தாள்.
அவரேதான்.
“ஐயோ அப்பா.. அ..ப்பா.. அ…ப்பா..”
அப்படியே அவரைக் கட்டிக்கொண்டு கதறியவளுக்கு அப்பாவைத் தவிர வேறு வார்த்தைகள் எதுவுமே கிடைக்கவில்லை.
சுந்தரேஸ்வர் கண்களிலும் கட்டுப்படுத்த முடியாத கண்ணீர். “மோனம்மா.. அழுதது போதும். எழும்பு செல்லம்!” மகளை அப்படியே வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டார் சுந்தரேஸ்வர்.
சுந்தரேஸ்வர் ஒரு ஓவியர். ஓவியர் சுந்தர் என்றால் இலங்கை முழுவதுமே பிரபல்யம். ஓவியக்கல்லூரி வைத்திருக்கிறார். வாழ்க்கையும் அவர் தீட்டும் ஓவியங்கள் போல வர்ணத்துடனும் நேர்த்தியுடனும் இருக்கவேண்டும் என்று நினைக்கும் மனிதர். அதனாலேயே அவருக்கு மிகவுமே பிடித்த ஓவியமான மோனலிசாவின் பெயரையே தன் பெண்ணுக்கும் வைத்திருந்தார்.
மோனம் கலைந்த பெண் வீட்டின் குத்துவிளக்காக இல்லாமல், வானின் நட்சத்திரமாக ஜொலிக்கப் போனது அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.
ஆனால் இன்றோ அந்தப் பெண் கதறும் கதறலைக் காதால் கேட்க முடியாமல் கலங்கிப்போனார்.
அத்தனை வருடங்களாக அவளுக்குள் அடங்கிக்கிடந்த அத்தனை உள்ளக்குமுறல்களும் அந்த இடத்தில் வெளிவரத் தொடங்கியிருந்தது.
“நானே எதிர்பாக்கேல்லப்பா. அப்படியெல்லாம் நடக்கும் எண்டு நினைக்கேல்லப்பா. என்ன வச்சு எல்லாரும் கேம் விளையாடுவீனம் எண்டு நம்பவே இல்லப்பா. உங்களை நம்புற மாதிரி கண்ணை மூடிக்கொண்டு அவே காட்டின பாசமும் உண்மை எண்டு நம்பிட்டன் அப்பா. என்ன மன்னிச்சிடுங்கப்பா.. அப்பா அப்பா.. ப்பா..” தகப்பனின் நெஞ்சுக்கு கூட்டுக்குள் புகுந்துகொண்டு, அன்று சொல்ல முடியாமல் போன விளக்கத்தையெல்லாம் சொல்லி கதறித்துடித்தாள்.
“சரி அம்மாச்சி! அப்பா உன்னை மன்னிச்சிட்டன். இங்க பார்.. மோனம்மா.. என்ர பிள்ளை எல்லா. அப்பாவைப் பார். அழாத!” அவர் எவ்வளவோ சொல்லியும் இலேசில் அடங்கவில்லை அவள் அழுகை.
“மோனா! அழாத பிள்ளை!” தலையைத் தடவிக்கொடுத்த தாயின் தொடுகையில், “அம்மா..” என்றபடி அவரிடம் தாவினாள் அனன்யா.
“வரவேணாம் எண்டு ஏனம்மா சொன்னீங்க? அந்தளவுக்கு என்னை வெறுத்திட்டிங்களா?”
அவள் எந்தக் கேள்வியைக் கேட்டால் தன்னால் பதில் சொல்ல முடியாதோ அதை அவள் கேட்டுவிட, தானும் சேர்ந்து கண்ணீர் வடித்தார் சுபாகரி.
“அண்டைக்கு வேற வழி தெரியாம சொல்லிப்போட்டனம்மா. அம்மாவை கோவிக்காத செல்லம்!” அவர்களின் பாசப்போராட்டம் ஓய நீண்ட நேரம் எடுத்தது.
ஒருவழியாக கட்டுக்கு வரவும், “அண்ணா வரேல்லையாம்மா?” என்று விசாரித்தாள் அனன்யா.
“இல்லையம்மா. உன்ர அண்ணிக்கு மூண்டாவது பிள்ளை பிறக்கப் போகுது. இண்டைக்கோ நாளைக்கோ எண்டு இருக்கு. அதுதான் அவன் வரேல்ல.” என்றவர், தன் பெண்ணை ஆசை தீரப் பார்த்தார்.
தலைமுடியைக் கோதிவிட்டார். கையைப் பிடித்துத் தடவிக்கொடுத்தார். அவளைத் தொட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது அன்னைக்கு.
அருகிலேயே இருந்து கண்வெட்டாமல் மகளைப் பார்த்திருந்த சுந்தரேஸ்வரின் விழிகளும் பனித்துக்கொண்டே இருந்தது.
என்ன சொல்லி மன்னிப்புக் கேட்பார்? அன்று கொஞ்சம் பரந்த மனதுடன் நடக்காமல் போனாரே. இத்தனை வருடங்கள் கழித்து இப்படிக் கதறியவள் அன்று என்ன பாடு பட்டிருப்பாள்?
அவளை பார்த்துக்கொண்டே இருந்தால் உடைந்துபோய் அழுதுவிடுவோமோ என்று பயந்து எழுந்து வெளியே வந்தவரை அழைத்துக்கொண்டு போனார் விக்ரமன்.
“என்ன மன்னிச்சிடுங்க சார்!” தனிமை கிடைத்ததும் சுந்தரேஸ்வரின் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டார் விக்ரமன்.
“நீங்க எதுக்கு சேர், மன்னிப்பெல்லாம் கேக்கிறீங்க? அவளை இங்க நீங்க கூட்டிக்கொண்டு வராட்டி இப்பவும் நாங்க சந்திச்சு இருப்பமோ தெரியாது!” என்றவரை குற்ற உணர்ச்சியுடன் பார்த்தார் விக்ரமன்.
“என்னத் தெரியலையா சார்? நானும் அவளோட அந்த ஷோவுல இருந்தேன். அவளை வச்சு கேம் விளையாடின ஒருத்தன் நான்தான். உங்க இடத்துல வச்சு என்னைப் பாத்தா. ஆனா நான் என்னோட வெற்றிக்கான படியாத்தான் அவளை பாத்தேன்.” அவர் கண்களை எதிர்கொள்ள முடியாமல் சொன்னார் விக்ரமன்.
அதைக் கேட்டவரின் முகம் கறுத்துக் போயிற்று! மனதில் ஆத்திரம் கொழுந்துவிட்டு எரிந்தது. அதைக் காட்டுவதில் என்ன பிரயோசனம்? இன்று அந்த ஷோ முடிந்து ஆறு வருடங்களுக்கு மேலாயிற்று. இப்போதுபோய் சரி பிழைகளைப் பேசி என்ன வரப் போகிறது? அதைவிட, எந்தப் பேச்சும் மகளின் காயத்தை ஆற்றிவிடுமா என்ன? வார்த்தைகள் நுனிநாக்கு வரை துடித்தும் ஊமையைப் போன்று நின்றார் சுந்தரேஸ்வர்..

