ஆனால் விக்ரமன் விடவில்லை.
“என் மனசுல இருந்து சொல்லுறேன் சார், ஒரு வார்த்த பொய் இல்ல. உங்க பொண்ணு அருமையான பொண்ணு. அருமையான வளப்பு உங்களோடது. சின்னப்பொண்ணு இல்லையா, அந்த வயசுல எல்லாரையும் நல்லவங்கன்னு நம்பிட்டா.
“மத்தபடி, என்னசார் தப்புப் பண்ணினா அவ? கமெரா வச்சு எல்லாமே ரெக்கார்ட் ஆகிறதால, அதை பாத்திட்டு என்னவோ பண்ணக்கூடாததை பண்ணிட்ட மாதிரி நம்ம மக்கள் பேசுவாங்க. பேசினாங்க. அவ்ளோதான். அதுவே அவங்க வீட்டுல எத்தனைபேர் அவங்க அப்பாவை மதிக்கிறாங்க சொல்லுங்க? அம்மாவைப் பாத்துக்கிறாங்க? கணவனுக்கு நல்ல மனைவியாவும் மனைவிக்கு நல்ல கணவனாவும் எத்தனைபேர் இருக்காங்க சொல்லுங்க.
“ஒரு பக்கம் துணைகூட வாழ்ந்திட்டு இன்னொரு பக்கம் போன்ல கண்டதையும் பாக்கிற உலகம் தானே இது?
“வீட்டுல நல்ல பிள்ளைக்கு வெளில இல்லாத அத்தனை கெட்ட பழக்கமும் இருக்கே அதையெல்லாம் என்ன சொல்லுறது?
“எல்லாருக்குமே ஒரு இருட்டான பக்கம் இருக்கு சார். அவங்களுக்கு கமரா வைக்கலை. அதனால தப்பிச்சுட்டாங்க. நாம மாட்டிக்கிட்டோம். அவ்வளவுதான்.”
இதையேதான் சுந்தரேஸ்வரும் காலப்போக்கில் உணர்ந்துகொண்டிருந்தார். இன்று விக்ரமனும் அதையே சொல்ல கேட்டுக்கொண்டிருந்தார்.
“அதுவும், குடும்பம் பக்கத்துல இல்லாம ஒரே வீட்டுல அடைஞ்சு கிடக்கிறப்போ மனசு ரீதியா ரொம்பவே பாதிக்கப்படுவாங்க மனுசங்க. அதை அனுபவிச்சவன் நான். எனக்குத் தெரியும். அந்த மன அழுத்தத்துக்கு ஒரு வடிகால் வேணும். அம்மா, அப்பா, அண்ணா, தங்கை, சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, பிரெண்ட்ஸ் என்று சுத்திவர பாசம் வச்ச மனுசங்களோட வாழ்ந்த மனுசன் பக்கத்துல இருக்கிறவன் மேல அவனே அறியாம பாசம் வைப்பான். அது இயல்பு.
“அப்பா வயசுல இருக்கிறவனை அப்பாவாவும், அண்ணா வயசுல இருக்கிறவனை அண்ணாவாவும், தனக்கு ஏத்த வயசில இருக்கிறவனக் காதலனாவும் பாக்கும். அது அவங்க தப்பு இல்ல சார், அவங்க வயசோட தப்பு.
“நாங்க கொஞ்சம் வாழ்க்கையை கத்துக்கிட்டதால அதுல இருந்து வெளில வந்து பாத்து யோசிச்சுக் காய் நகர்த்தரோம். முடியாதவங்க மாட்டிக்கிறாங்க, நம்ம அனு மாதிரி.” என்று, விக்ரமன் சொன்னதை தலையாட்டிக் கேட்டுக்கொண்டார் சுந்தரேஸ்வர்.
“இப்பல்லாம் அவ தனியா இருக்கிறதை நினைச்சு மனசு குடையுது சார். தப்பு பண்ணிட்டனே பெரிய தப்பு பண்ணிட்டனே என்று சிலநேரம் வாழ்க்கையே வெறுத்துப் போகுது. நானும் ஒரு பொண்ணை பெத்தவன் இல்லையா. அவளுக்கே குழந்தை இருக்கு. ஆனாலும் இப்பவும் அவளுக்கு நான்வேணும். ஆனா அனு.. அவளோட அப்பாவை, குடும்பத்தை பிரிச்சிட்டேனேன்னு துடிச்சிட்டு இருக்கேன். நீங்க வந்தப்புறம் தான் கொஞ்சமாவது மூச்சு விடுறேன் சார்! என் பேச்சை மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றி சார்.”
“நானும் தான் நன்றி சொல்லவேணும். நீங்க வராட்டி, நாங்க வந்திருப்பமா தெரியாது. எனக்கு இந்தத் துணிவும் வந்திருக்காது.” என்றவரும், தன் மனத்தைச் சொன்னார்.
“நானும் நிதானமா நடக்கத் தவறிட்டனே எண்டுறதுதான் என்ர கவலை. இந்த உலகமே தூற்றினாலும் என்ர பிள்ளைக்குத் துணையா நான் நிண்டிருக்க வேணும். அதைச் செய்யாம விட்டு அவளுக்குப் பெரிய பிழை செய்திட்டன் சேர். என்னாலையே என்னை மன்னிக்க முடியேல்ல.
“எனக்கு வீட்டுல கஷ்டம் வந்த நேரம், மோனா எங்களைக் கைவிடேல்ல. தானும் வேலைக்குப்போய் குடும்பத்தைப் பாத்தவள். அதே அவளுக்கு ஒரு கஷ்டம் வந்தநேரம் நான் கைவிட்டுட்டன். நினைக்கவே வெக்கமா இருக்கு சேர்! அந்த வயசில அவளுக்கு இருந்த பக்குவம் எனக்கு இல்லாம போச்சே எண்டு..” தன்னை மறந்து தன் மனவேதனைகளைக் கொட்டினார் சுந்தரேஸ்வர்.
இங்கே அனன்யா சலுகையுடன் தாயின் தோளில் சாய்ந்துகொண்டு தங்கைகளோடு அளவளாவிக்கொண்டிருந்தாள்.
“என்னெண்டு உங்களுக்கு நான் இங்க இருக்கிறது தெரியும்?”
விக்ரமன் சொல்லியிருப்பார் என்று எண்ணிக்கொண்டு கேட்டாள் அனன்யா.
“எப்படியோ தெரிய வந்திட்டுது எண்டு நினையன். ஏன் நாங்க வந்தது பிடிக்கேல்லையா” என்ற தாயை முறைத்தாள் அவள்.
“ஒருத்தரிட்டையும் சொல்லமாட்டன். ஆனா இவ்வளவு கிட்ட வந்தும் உங்களை எல்லாம் பாக்க முடியேல்லையே எண்டு அழுகை அழுகையா வரும் அம்மா. என்ன இருந்து என்ன பிரயோசனம். அம்மா அப்பாவைப் பாக்கேல்லையே எண்டு இருக்கும்.” என்றவளின் கன்னங்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டார் தாயார்.
“விடம்மா. இதெல்லாம் நடக்கோணும் எண்டு இருந்திருக்குப் போல… எல்லாம் விதி!” என்றவர், எதற்கோ ஆரம்பத்தில் இருந்தே தயங்கிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
“என்னம்மா? ஏதும் என்னட்டக் கேக்க வேணுமா? சும்மா கேளுங்க.” என்று ஊக்கினாள் பெண்.
“இல்லையாச்சி அண்டைக்கு வராத எண்டு சொல்லிப்போட்டன். அம்மா என்னைத் தூக்கி எறிஞ்சுபோட்டா எண்டு நீ நினைச்சிருப்ப என்ன? ஆனா, நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டுதான் சொன்னனான். சொன்ன நிமிசத்தில இருந்து என்ர மனம் செத்துப் போச்சம்மா. ஒரு வயசுக்கு வந்த பொம்பிளைப் பிள்ளையை நடுத்தெருவில் விட்டுப்போட்டமே எண்டு.
“கடவுளே, இண்டைக்கு உன்னைப் பாக்கிற வரைக்கும் என்ர உயிர் என்னட்ட இல்லம்மா. உன்ர மூத்த தங்கச்சியும் பெரியபிள்ளை ஆகிட்டாள். உன்னைப்பற்றி தெரிஞ்சா சம்மதிக்க மாட்டினமாம் எண்டு உன்ர அண்ணா காதலிச்ச பெட்டையைக் கட்டப்போறன் எண்டு அவளக் கூட்டிக்கொண்டு வந்து நிக்கிறான். உன்ர அப்பா, வெறி வந்த ஆள் மாதிரி, ‘அவள் வரட்டும், வெட்டிப்போட்டு ஜெயிலுக்கு போறன்’ எண்டு நிக்கிறார். இதுக்க ஊர் சனம், காசுக்கு மகளை அனுப்புனீங்களோ? கல்யாணம் நடக்குமோ இல்ல அப்படியே வாழுவீனமோ எண்டு.. அப்பப்பா காதால கேக்க முடியாத கதையெல்லாம் கதைச்சுப் போட்டுது.
தங்கச்சியாக்கள், பள்ளிக்கூடத்தில எல்லாரும் பகடி பண்ணுறாங்களாம் எண்டு போகமாட்டன் எண்டு ஒரே அழுகை. நரகமாப் போச்சுது அந்தக் கொஞ்ச நாளும்..” என்றவர், அன்றைய கனமான நாட்களின் நினைவில் பெரிய மூச்சு ஒன்றை இழுத்துவிட்டார்.
“நீ வந்தா இருக்கிற கோபத்துக்கு அப்பாவே உன்னை ஏதும் செய்து போடுவாரோ எண்டு பயந்திட்டன் அம்மாச்சி. அப்படி ஏதும் செய்து உனக்கும் ஒண்டு நடந்து உன்ர அப்பாக்கும் ஒண்டு நடந்தா நான் என்ன செய்வன் சொல்லு. அதுதான், நீ தைரியமானவள் எண்டு தெரியும். கெட்டிக்காரி, சமாளிச்சிடுவாய் எண்டுற நம்பிக்கைல, எங்க இருந்தாலும் நீ உயிரோடையாவது இருக்கோணும் எண்டு நினைச்சுத்தான் பிள்ளை அப்படிச் சொன்னனான். அந்த நேரம் நீ அங்க யாழ்ப்பாணம் வந்திருந்தா சனம் தூற்றியே உன்னச் சாகடிச்சிருக்கும். நீ தாங்கியே இருக்கமாட்டாய். அவ்வளவு மோசமாத் தூற்றினதுகள்.”
அவர் சொல்லச் சொல்லத்தான், அவள் செய்த செயலின் இன்னொரு விதமான விபரீதத்தை உணர்ந்தாள் அனன்யா.
அவளாவது தவறு இழைத்தாள் அனுபவித்தாள் என்று சொல்லலாம். அவளின் குடும்பம் என்ன பாவம் செய்தது? அவளின் விருப்பத்தை மதித்துச் சம்மதித்ததை தவிர?
“சொரி அம்மா. இப்படியெல்லாம் நடக்கும் எண்டு நினைக்கேல்ல நான்.” கண்ணீருடன் சொன்னவளை அணைத்துக்கொண்டார் அன்னை.
“நீ ஏன் பிள்ளை மன்னிப்புக் கேக்கிற? நீ பிழையே செய்தாலும் உன்னோட நிண்டு எல்லாத்தையும் சமாளிச்சு இருக்க வேணும் நாங்கள். நாங்க ஊர் வாயில இருந்து தப்புறதுக்காக உன்னப் பலி குடுத்திட்டம்.” என்று அழுதவரை இப்போது பெண் தேற்றினாள்.
“அழாதீங்கம்மா. அதெல்லாம் முடிஞ்சு போன கதை! அதுதான் எல்லாரும் திரும்பச் சேர்ந்திட்டமே.”
“எண்டாலும் அந்த நேரம் படாத பாடு பட்டிருப்ப என்ன?” மனம் ஆறாமல் கேட்டார் சுபாகரி.
‘படாத பாடா.. இருக்க ஒரு வீடு கூட இல்லாமல் நின்றாளே! நினைவுகள் அன்றைய நாளுக்கு ஓடியது.

