அத்தியாயம் 19
தாய் தொலைபேசியை வைத்துவிட்ட பிறகு என்ன செய்வது எங்கு போவது என்று தெரியாமல் அழுகையில் கரைந்தவளை அந்த அறையின் தொலைபேசி அழைத்தது.
நடுங்கியது அவளுக்கு. வெளியேறச் சொல்லப் போகிறார்களோ? எங்கே போவாள்? யாரைத் தெரியும்?
நெஞ்சு நடுங்க காதுக்குக் கொடுத்தாள்.
“ஹலோ மேடம். நாங்க சித்தாரா டீவில இருந்து பேசறோம். நீங்க எப்ப லீவ் ஆகறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்றது ஒரு குரல்.
அந்தக்குரலில் உடைந்து அழப்பார்த்தாள். எவ்வளவு கேவலம். இன்னும் எத்தனையை அனுபவிக்க வேண்டுமோ?
“எப்ப லீவ் ஆக வேணும்?” அழுகையை அடக்கியபடி கேட்டாள்.
அந்தப் பக்கத்திலிருந்து உடனே பதில் வரவில்லை.
அவள் பயத்துடன் காத்திருக்க, “வன் வீக் டைமிருக்கு. அதுக்குள்ளே எப்ப வேணும்னாலும் நீங்க லீவ் ஆகலாம்.” என்றுவிட்டு அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
‘கடவுளே.. ஒரு கிழமைக்குப் பிரச்சனையில்ல.’ அப்படியே தொய்ந்தவள், ஒதுங்க ஒரு கூரையற்ற தன்நிலை உணர்ந்து முற்றிலும் உடைந்துபோய்க் கதறினாள்.
இந்த அழுகை எதையும் சாதித்துவிடாது என்பது மெல்ல மெல்ல விளங்க, எழுந்து தயாராகி கீழே வந்து ரிஷப்சனில் மற்றவர்களை விசாரித்தபோது, அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள் என்று தெரிய வந்தது.
அவர்களுக்கு எல்லாம் வீடு என்று ஒன்று உண்டே. அவள்தான் அனாதையாகிப் போனாள். விரக்தியோடு வெளியே வந்தவளை ஓடிவந்து கட்டிக்கொண்டாள் சவீதா. இந்தச் சவீதாவைத்தான் சாந்தினி என்கிற பாத்திரத்தில் கொண்டு வந்திருந்தார் விக்ரமன்.
“ஹேய்.. பிருந்து எப்படி இருக்க?”
“நான் நல்லாருக்கேன் கா. நீங்க?” அந்த வீட்டுக்குள் இருக்கும்வரை அவள் வெறுத்த ஒருத்தி. இன்முகமாய் ஓடிவந்து கட்டிக்கொள்ளவும் நம்ப முடியாமல் பார்த்தாள்.
சவீதாவுக்கும் புரிந்திருக்க வேண்டும். “அது கேம் ஷோ. அந்த வீட்டோட முடிஞ்சுபோச்சு. இப்ப நாம பிரெண்ட்ஸ். ஓகே?” என்று கையை நீட்டினாள்.
கண்கள் கலங்கிப்போயிற்று அவளுக்கு. அவசரமாக, “பிரெண்ட்ஸ்!” என்றபடி கையைக் கொடுத்தாள்.
தகப்பனுக்குச் சமனாய் நினைத்தவர் வரவில்லை. எதிர்காலம் என்று நம்பிய அவனும் வரவில்லை. வெளியில் இவளைப் பார்க்கவே கூடாது என்று நினைத்தவள் தான் வந்திருக்கிறாள். காலத்தை என்னவென்று சொல்வது?
“இன்னுமே இங்க ஏன் இருக்க? எங்க வீட்டுக்கு வாயேன். உன்ன பாத்தா என் பொண்ணுங்க சந்தோசப்படுவாங்க.” என்று படபடத்தாள் சவீதா .
“இல்லக்கா.. நான் ஊருக்கு போகணும். டிக்கட் கிடைக்கல..” மென்று விழுங்கினாள் பிருந்தா.
“விளையாடாத பிருந்து. உனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்குன்னு சந்தோசமா சொல்ல வந்தா ஊருக்குப் போறேன்னு சொல்லுற?”
“என்னக்கா சொல்லுறீங்க?” ஒருகாலத்தில் அந்த ஆசையெல்லாம் இருந்ததுதான். நடிக்க வேண்டும்; நட்சத்திரமாக மின்ன வேண்டும், பெயரும் புகழும் பணமும் சம்பாதிக்க வேண்டும். இன்னும் என்னென்னவோ.. அவள் செய்துவைத்த அசட்டுத்தனங்களுக்கெல்லாம், இனி எதிர்காலம் என்பதே கிடையாதே. பிறகு எப்படி அதையெல்லாம் நினைத்துப் பார்ப்பாள்? இவளானால் சான்ஸ் கிடைத்திருக்கிறது என்கிறாள்.
“ஹேய் என்ன நீ. எவ்வளவு சந்தோசமான விசயம் சொல்லுறேன். யாருக்கு வந்த விருந்தோன்னு கேக்கிற.”
“எனக்குலாம் யாருக்கா சான்ஸ் தரப்போறாங்க. அதுவும் எதுக்கு? அதுதான், ஊரு முழுக்க நாறிப்போய் இருக்கேனே..” சூடான கண்ணீர் துளிகள் மளுக்கென்று கன்னங்களை நனைத்துப் போனது.
இந்தப்புத்தி முதலே வரவில்லையே! அப்பா படித்துப் படித்துச் சொன்னாரே. எல்லாம் அசட்டுத் தைரியம். வீட்டுக்குள் இருந்துகொண்டு வேலைக்குப்போய் வந்து சம்பளத்தை வாங்கி குடும்பத்தைப் பார்த்ததும், எனக்குத் தெரியாதா என்கிற அசட்டுத் துணிச்சல். எல்லாவற்றையும் என்னால் வெட்டியால முடியும் என்கிற மமதை! அதெல்லாம் எங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டது அவளை. அடிவாங்கிப் பெற்றுக்கொள்ளாத அனுபவம் இன்றி, வெளியுலகத்தின் கோரமுகம் தெரியாது, அவள் வாழ்ந்த சமுதாயம் மட்டுமே உலகம் என்று நம்பி எனக்கு எல்லாம் தெரியும், என்னால் முடியும் என்கிற அசட்டு நம்பிக்கையோடு வந்தவளை வாழ்க்கை பந்தாடி விட்டதே!
எல்லாம் தெரிந்த அப்பா சும்மா சொல்லுவாரா என்று சிந்திக்க மறந்தாளே. பட்டபிறகு இதையெல்லாம் நினைத்து என்ன பயன்?
“உனக்கு என்ன? அழகில்லையா? வயதில்லையா? என்ன பேசுற நீ. சும்மா இல்ல ஹீரோயினா. ஹீரோ யார் தெரியுமா? நம்ம சந்துரு தான்.” அவள் சிந்தனையைக் குறுக்கிட்டது சவீதாவின் பேச்சு.
இதெல்லாம் நடக்கிற கதையா? எத்தனையோ நாயகிகள், நடிப்பில் தேர்ந்தவர்கள் இருக்க, அவளைத் தேடிவந்து யாரவது சான்ஸ் தருவார்களா?
அதுவும் சந்துரு, எளிமையான இயல்பான நடிப்பில் தன்னை நல்ல கலைஞனாக வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல பெயர் எடுத்த அருமையான நடிகர். அவருடன் நடிப்பது என்பது..
“விளையாடாதீங்க அக்கா. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.” சலிப்புடன் சொன்னாள் பிருந்தா.
“ஆண்டவா! உனக்கு வேற எப்படிச் சொல்லுறது? நீ முதல் வீட்ட வா!” என்றாள் சவீதா .
“இல்லக்கா. அது நிஜமா இருந்தாக்கூட எனக்கு எந்த சான்ஸும் வேணாம். அப்பாட்ட போனாப் போதும். இனியாவது அவர் சொல்லுறதைத் தட்டாமக் கேட்டுக்கொண்டு அவர் காலடியிலேயே இருக்கப் போறன்.” என்றவளுக்கு என்ன முயன்றும் கண்ணீரை அடக்க முடியவில்லை.
“லூசு! தோத்துப்போன ஒருத்தியா எதுக்கு அவங்க முன்ன போக நினைக்கிற? வெற்றி நாயகியா போய் நில்லு. அதுவே செய்த தப்புக்கெல்லாம் பிராயச்சித்தமா இருக்கும்.”
மறுத்துத் தலையசைத்தவளை, “நீ முதல் வா என்கூட!” என்று பிடிவாதமாக ஹோட்டல் ரூமைக் காலி செய்து அவளைக் கூட்டிக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள் சவீதா.
அவளை இருக்க நிற்க விடாமல், கையுடனே புது உடை ஒன்றைக் கொடுத்து, அழகாக மேக்கப் போட்டு அவளே கூட்டிக்கொண்டு எங்கோ போனாள்.
‘ரெயின்போ பிலிம் புரடக்ஸன்!’ மலைபோல் நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது.
மூன்று தலைமுறையாக வெற்றி நடை போடுகிறது. அந்த நிறுவனத்துக்குள் தான் நுழைந்துகொண்டு இருக்கிறோம் என்பதையே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் பிருந்தா. அங்கே சென்றதையோ அவள் தான் நாயகி என்றதையோ சந்துருவோடுதான் நடிக்கப் போகிறாள் என்பதையோ நம்ப முடியாமல் ஒருவித மோனநிலையில் அனைத்தையும் நடத்தி முடித்து அவளுக்கான அறைக்குள் முடங்கியவள் அந்த அக்ரிமெண்ட்டையே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தாள் சவீதா. அவள் எதிர்பார்த்ததுபோல்தான் பிருந்தாவின் நிலை இருந்தது.
அழுகையில் உதடுகள் துடிக்க, முகம் முழுக்க வேதனையைச் சுமந்தபடி சிலைபோல அமர்ந்திருந்தாள்.
“இங்க பார், பிருந்து! நடந்து முடிஞ்சதை உன்னால மாத்த முடியாது. ஆனா, கெட்டதுலையும் ஒரு நல்லதைத் தேடணும்னு சொல்லுவாங்க. சோ, உனக்கு நடந்ததில இருந்து நீ படிக்கவேண்டியது நல்ல பாடத்தை மட்டும் தான். உன்னோட லைஃப்ல புது அத்தியாயம் தொடங்கப் போகுது!” என்றவளைக் கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தாள் பிருந்தா. அவள் விழிகளில் பயம் தெரிந்தது.
“இப்படி பயந்தேன்னு வை. உன் வீட்டை விட்டு வெளில காலை வைக்கவும் பயப்படுவ. நீ ஒரு பொண்ணு! பவர்புல் கேள்! அத மறந்துடாத. நீயே கண்டு பிடிக்காத தைரியமும், துணிச்சலும் உன்கிட்ட நிறைய இருக்கு. டாஸ்க்ல எல்லாம் நான் பாத்திருக்கேன். நீ செம பிரில்லியண்ட். என்ன, அது உனக்குப் புரியல. அதைப் புரிஞ்சிக்கிற வழியை பாரு.
முதல்ல உன் பலம் உனக்குப் புரியனும். அப்போதான் லைஃப்ல சாதிக்க முடியும். ஏன்னா, நீ போகப்போற இந்தச் சினிமா உலகம் ஒன்னும் அழகானதில்ல. இப்ப நீ இருந்திட்டு வந்தியே ஒரு கேம் ஷோ. அதைவிட ஆயிரம் மடங்கு ஆபத்தான உலகம் தான் இது.
அங்க விளையாடின விளையாட்டு மாதிரி ஆயிரம் மடங்கு விளையாட்டு இப்ப நீ போகப்போற இந்த உலகத்துக்க இருக்கு. நீதான் கவனமா இருக்கணும். அதுக்குத் துணிச்சல் வேணும். அங்க நீ தடுமாறினது, சலனப்பட்டது, அடுத்தவங்க உன்ன வச்சு விளையாடியது எல்லாம் இனி ஒரு முறை நடக்கக் கூடாது. புரிஞ்சுதா?” அதட்டலாக அவள் கேட்டபோது, கண்ணீர் வழிய ஆம் என்று தலையசைத்தாள் அவள் .

