உயிரைத் திருடும் அழகியே – 2

அத்தியாயம் 2

 

 

அன்று அதிகாலையிலேயே அனன்யாவுக்கு ஷூட்டிங் இருந்தது. ஆறு மணிக்கு நிற்கவேண்டும் என்று இயக்குனர் சொல்லியிருந்ததில் ஐந்தரைக்கே பிரசன்னமாகியிருந்தாள். அவள் எப்போதுமே அப்படித்தான்.

 

ஒரு பாடல் காட்சி. மலையடிவாரத்தில் ஷூட் செய்துகொண்டிருந்தார்கள். வேறு வேறு ஆடைகள், அதற்கேற்ற மேக்கப்புகள், அதனோடு நடனம் என்று ஓர்வழியாகிப் போயிருந்தாள் அனன்யா. கிடைத்த சின்ன இடைவெளிக்குள் காரவனுக்குள் புகுந்தவளை தொல்லைச்செய்தது செல்பேசி.

 

அதைச் சிரத்தை எடுக்காமல், தொப்பென்று இருக்கையில் தொய்ந்தவளுக்கு வியர்த்துக் கொட்டியதை ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தாள் உதவியாளினி மீனா.

 

மெல்லிய ஏசியைப் போட்டு, ஒரு கோப்பை ஃபிரெஷ் ஆப்பிள் ஜூஸினை மீனா கொண்டுவந்து வைக்க, மீண்டும் அழைத்தது செல்பேசி.

 

இப்படியான பொழுதுகளில் அனன்யா யாருடனும் கதைக்கமாட்டாள் என்று தெரிந்து ஃபோனை மீனா எடுத்தாள். அழைப்பது விக்ரமனின் உதவியாளன் கண்ணன் என்றதும் தயங்க, கேள்வியாக ஏறிட்டாள் அனன்யா.

 

“கண்ணன் சேர் மேம். விக்ரமன் சேரோட அஸீஸ்டென்ட்.”

 

இன்னும் மூன்று மாதம் கழித்துதான் அவருக்கு கொடுத்த டேட்ஸ் ஆரபிக்கிறது. இப்போது எதற்கு அழைக்கிறார்? எதற்காக என்றாலும் அவளால் இப்போது கதைக்க முடியாது!

 

“என்ன எண்டு கேளு!” என்றவள், உடலைத் தளரவிட்டு அப்படியே கண்களை மூடிக்கொண்டாள். அதன்பிறகு அவள் சிந்தையில் எதுவுமில்லை. இந்த மனக்கட்டுப்பாடுதான் அவளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது! அதை பயிற்றுவித்தவர் சவீதா. அவளின் உடன்பிறவாச் சகோதரி, தாய் எல்லாமே!

 

அரைமணி நேரம் மனத்துக்கு கொடுத்த அமைதி உடலிலும் பரவி இதமளிக்க எழுந்து அமர்ந்துகொண்டவள், அடுத்த காட்ச்சிக்கான மேக்கப்பை ஆரம்பிக்கச் சொன்னாள்.

 

மேக்கப் ஆர்டிஸ்ட்டுடன் வந்த மீனா, “விக்ரமன் சேர் படம்

இலங்கையிலயாம். விசா எடுக்கிறதுக்கு எங்கட பாஸ்போர்ட் கேட்டவர் மேம்.” என்றாள் தயக்கத்துடன்.

 

மீனா அவளின் வேலையாள் தான். ஆனால், அவளைப் புரிந்துவைத்திருக்கும் சொந்தக்காரிக்குச் சமன். அனன்யாவும் அப்படித்தான் நடத்துவாள், ஆனால் காட்டிக்கொள்ள மாட்டாள். அவள் போட்டுவைத்திருக்கும் வேலியைத் தாண்டி தன்னை யாரும் நெருங்குவதை விரும்புவதே இல்லை அவள். ஆனால், சொல்லிக்கொள்ளப்படாத பாசமும் புரிதலும் அவர்களுக்குள் தெரிந்தும் தெரியாதது போலவே இழையோடிக்கொண்டிருந்தது.

 

“என்னது இலங்கையோ?” என்றவளுக்கு, எப்படிப் பிரதிபலிப்பது என்றுகூடத் தெரியாத அதிர்வு தாக்கியது.

 

கதையே தெரியாது. அவள் வெறுக்கும் இயக்குனர். அதைவிட அவளை அசையமுடியாதபடிக்கு வியூகம் வகுத்து அக்ரிமெண்டில் சைன் பண்ண வைத்ததையே இன்னும் மறக்க முடியவில்லை. ஆனாலும் அவரால் அவளுக்கு அப்படி என்ன செய்துவிடமுடியும்? அதையும் பார்ப்போமே என்று ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டிருந்தாள். அதோடு, இதுவரை அவர் எடுத்த கதைக் கருக்கள் சோரம் போனதில்லை. அப்படித்தான் இதுவும். நிச்சயமாக அவளுக்கு ஒரு முத்திரை பதிக்கப்போகும் திரைப்படமாக இது அமையும் என்று தேற்றிக்கொண்டு இருக்கையில், இது என்ன புதுப் பிரச்சனை?

 

“பத்து நிமிசம் வெளில இருங்க!” என்றுவிட்டு உடனேயே விக்ரமனுக்கு அழைத்தாள்.

 

மனங்களைப் படிப்பதில் வல்லவரான அவருக்குத் தெரியாதா அவள் அழைப்பாள் என்று. உதட்டோரம் அரும்பிய நகைப்புடன் ஃபோனைக் காதுக்குள் கொடுத்ததும், “இங்க இல்லாத அப்படி என்ன இலங்கைல இருக்கு எண்டு அங்க ஷூட்டிங் வைக்கிறீங்க?” என்று அவளின் சிடுசிடுப்புத்தான் மோதியது.

 

“இலங்கை வாழ் தமிழ் குடும்பம் ஒண்டோட கதைதான் இது. பக்கத்து நாடு. அங்கேயே எடுக்கிறதுதானே பெஸ்ட் ரிசெல்ஸ் தரும். இது தெரியாதா உனக்கு?” இலகுவான குரலில் அவர் கேட்டதில் பல்கலைக் கடித்தாள் அனன்யா.

 

“ஆனா அங்க நாட்டுப் பிரச்சனை, குண்டுவெடிப்பு, ஆள் கடத்தல் எண்டு எல்லாமே ஏராளம். அங்கபோய் நாங்க ரிஸ்க் எடுக்கவேணுமா? அதுசரி, அடுத்தவனுக்கு என்ன ஆனாலும் அதைப்பற்றி எண்டைக்கு நீங்க கவலைப்பட்டு இருக்கிறீங்க. உங்கட காரியம் ஆகவேணும். அதுக்கு யாரையும் பலிகொடுக்கத் தயங்காத மனுசன் நீங்க. உங்கள நம்பி அங்கேயெல்லாம் என்னால வரமுடியாது. எனக்கு என்ர உயிர் முக்கியம்.” சைன் பண்ணிய நாளில் இருந்து வெளிவராமல் அவளுக்குள் கிடந்த குமுறல் தனியாக அவர் அகப்பட்டுக் கொண்டதும் சுதந்திரமாக வெளியேறியது.

 

“லா..”

 

“ஷட் அப்! ஐயாம் அனன்யா ஆதிரையன் ஒன்லி! ஆர் யு அண்டஸ்டாண்ட்!” கிறீச்சிட்டது அவள் குரல்.

 

விக்ரமன் ஒருகணம் அப்படியே உறைந்துபோனார். அவளின் கோபத்தின் ஆழத்தை உணர்ந்து ஆழ மூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு, “ஓகே! ஓகே! காம் டவுன் அனன்யா ஆதிரையன், நவ் லிசன் டு மி! நீ நம்பினாலும் நம்பாட்டியும் உன்னைவிட உன்ர உயிர்ல எனக்கு அக்கறை இருக்கு. அதோட நீ மட்டும் வரேல்ல. எங்கட டீம் முழுக்கத்தான் போகப்போறோம். உங்க எல்லாரையும் பத்திரமா கொண்டுவந்து சேர்க்கிறது என்ர பொறுப்பு. ஆர் யு ஓகே நவ்?” என்கிறார் தன்மையாக.

 

தான் தன்னிலை இழந்து கத்திய கணத்திலேயே வெட்கி அப்படியே அடங்கிப்போயிருந்தாள் அனன்யா. அவரும் தணிந்து அழுத்தமாக விளக்கம் சொல்ல, அதற்குமேல் எதிர்க்க முடியாமல் மௌனமாகிப்போனாள். நடப்பதைக் கண்டுகொள்வோம், சமாளிப்போம் என்று நினைத்துவிட்டு எதற்குப் பதறுவான்?

 

“யார் ஹீரோ? அவருக்கு ஓகேயாமா?” அவளின் தொனியிலேயே சமாளித்துக்கொண்டாள் என்று தெரிந்துபோயிற்று விக்ரமனுக்கு.

 

“அவன் சம்மதிப்பான். உன்னோடையும் என்னோடையும் எண்டால் அவன் எங்கயும் வருவான்.”

 

‘அப்படி யார் அதுவும் அவன் என்று சொல்லுகிற நெருக்கத்தில்’ என்று அவள் சிந்திக்கும் போதே, “ஷியாம்.. நினைவிருக்கா நம்மட ஷியாம்?” என்று சங்கடம் நிரம்பிய குரலில் கேட்டர் விக்ரமன்.

 

என்ன முயன்றும் அவர் குரலில் தோன்றிய பேதத்தை அவரால் மறைக்க முடியவில்லை. இந்தப் பேச்சை அவரையும் அவளையும் தாண்டிக் கேட்க வேறு யாரும் இல்லை என்பதால் மறைக்க முயற்சி செய்யவுமில்லை அவர்.

 

அடங்கிக் கிடந்த எரிமலைக்குழம்பு குபுகுபுவென மேலெழும்புவது போல், அந்தப் பெயர் பழைய நினைவுகளை அவளுக்குள் அனலைப் பரப்பிக்கொண்டு மேலே எழுப்ப, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் அந்த மனிதனின் குரலைக்கூட கேட்கப் பிடிக்காமல் பட்டென்று தொடர்பைத் துண்டித்துவிட்டாள் அனன்யா.

 

ஷியாம்.. அவன் முகம் எப்படிப் பார்ப்பாள்? அவளின் அறிவிலித் தனங்களை எல்லாம் அறிந்தவனின் முகத்தை எப்படி நிமிர்ந்து பார்ப்பாள்?

 

இந்த மனிதர் எதற்காக இறந்தகாலத்தைத் தோண்டித் துடிக்க வைக்கிறார். அவரின் திசைக்கே அவள் போவதில்லையே. காயப்பட்டுக் கதறத் தொடங்கிய இதயத்துக்கு மருந்திட நேரமில்லாமல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை உள்ளே வரச்சொன்னாள். போட்ட மேக்கப்பில் வலியை மறைத்துக்கொண்டு முகத்தில் சிரிப்பைப் பூசிக்கொண்டு அடுத்த காட்சியை நடித்துக்கொடுக்க காரவனை விட்டு இறங்கினாள் அனன்யா.

 

ஒரு நடிகை எந்தச் சூழ்நிலையிலும் நடிக்கவேண்டாமா!

 

error: Alert: Content selection is disabled!!