அவருக்கு உண்மையிலேயே தெரியவில்லை, எப்படி அவளுக்கு ஒருவனைத் தேடுவது என்று.
மெல்லத் தாயின் மடியில் சுகமாகச் சரிந்துகொண்டவளுக்கும், என்ன சொல்வது என்று தெரியவில்லை. முகமறியாத அவளின் எதிர்காலத் துணை யார்? இருபத்தியிரண்டு வயதில் போன்று அவன் பற்றிய கனவுகள் வரவில்லை அவளுக்கு. தெளிவாகச் சிந்திக்கத்தான் வந்தது.
அவளைப் புரிந்தவனாக, அவள் பார்க்கும் தொழிலை விளங்கியவனாக அவளின் குடும்பத்தையும் அனுசரித்துப் போகிறவனாக இருக்கவேண்டுமே.
மெல்ல விழிகளை மூடியபோது கண்களுக்குள் வந்துநின்று முறைத்தான் ஜேகே!
இதை டிபோஸ் பண்ணு என்றான்!
நாகரீகம் தெரியாதா என்று கேட்டான்.
புள்ள பூச்சியை நசுக்கு என்றான்!
விருட்டென்று எழுந்து அமர்ந்தாள் அனன்யா.
“என்னம்மா?” தாய் குழப்பத்துடன் கேட்க, “ஒண்டுமில்லமா…” என்று முணுமுணுத்துவிட்டு எழுந்துபோனவளை பார்த்துவிட்டுக் கணவரைக் கேள்வியாக நோக்கினார் சுபாகரி.
“தனியா விடு, யோசிக்கட்டும்!” என்றவரும், ஃபோனை எடுத்துக்கொண்டு விக்ரமனுக்கு அழைக்க என்று தனியாகச் சென்றார்.
யாருமே அதன்பிறகு அவளைத் தொல்லை செய்யவில்லை. அவளும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது.
‘அவன் முகம் எதுக்குக் கண்ணுக்க வந்தது?’ கோபக்காரன், அகம்பாவம் பிடித்தவன், அவளை மதிக்காதவன். இல்லையே… அவளைத்தான் அவன் மதிக்கவில்லை. ஆனால், அவளின் உணர்வுகள் ஒவ்வொன்றையும் மதித்து இருக்கிறான். உன்னிப்பாகக் கவனித்தும் இருக்கிறான். கலங்கியபோது தேற்றி இருக்கிறான். துன்பத்தில் துவண்டபோது அதட்டியிருக்கிறான். பயந்தபோது துணையாக நின்றிருக்கிறான். ஆபத்துக்களின்போது உதவக் காத்திருந்து இருக்கிறான்.
ஷியாமிடம் கூடப் பகிராதவற்றை அவனிடம் பகிர்ந்து இருக்கிறாள். எப்போதெல்லாம் துணை தேடினாளோ அப்போதெல்லாம் அவனிடம் தான் ஓடி இருக்கிறாள்.
அவனை நேசிக்கிறாளா? தெரியாது. ஆனால், அவனை மிகவுமே பிடிக்கும்! அவனோடு இருந்தால் நிம்மதியாக வாழ்வேன் என்கிற நம்பிக்கையை அவன் மட்டுமே கொடுத்தான்.
அந்தத் துறையிலேயே இருக்கிறவளுக்கு, அவனது பலமான பின்னணி நன்றாகவே தெரியும். ஆனாலும், ஒருநாள் கூடத் தவறாகப் பார்த்ததும் இல்லை நடந்ததும் இல்லை. நெருக்கமாக நடித்த பாடல் காட்சிகளில் கூடப் பாதுகாப்பாக உணரவைத்திருக்கிறான். அவளை உதாசீனம் செய்தாலும், பயமின்றி அவனோடு அவள் மல்லுக்கட்டக் காரணமே அவன் நல்லவன் என்று மனது ஆழமாக நம்பியதால் தான்.
யோசித்துப்பார்க்கையில் பலநேரங்களில் அவள்தான் அந்நிய ஆண் என்கிற எல்லையைத் தாண்டி அவனைச் சீண்டியும் இருக்கிறாள். அப்போதெல்லாம் எத்தனை கண்ணியமாக அவளைக் கையாண்டிருக்கிறான்.
கண்களில் கண்ணீர் பூக்க இதழ்கள் புன்னகையைச் சிந்தின.
அவனையன்றி இன்னொருவரால் அவள் வாழ்வில் அமைதியையும் சந்தோசத்தையும் தரமுடியும் போல் தோன்றவில்லை. அனன்யா முடிவு செய்துவிட்டாள்!
வேகமாக அவனுக்கு அழைத்தாள்.
அவன் இலக்கங்கள் அவளிடம் உண்டே!
“ஜேகே!” அந்தப்புறத்திலிருந்து கம்பீரக் குரல் ஒன்று கவர்ச்சியாகச் சொன்னது.
சிலிர்த்தது அவளுக்கு! பெயரைக்கூட இவ்வளவு திமிராச் சொல்ல இவனால் மட்டும் தான் முடியும்!
“ஹாய் ஜேகே, அயம் அனன்யா ஆதிரையன்!” விசமச் சிரிப்புடன் வேண்டுமென்றே அவளும் சொன்னாள்.
“இருக்கட்டும்!” என்றான் அவனும் அமர்த்தலாக.
‘இதோடு நான்காவது முறை. அவளின் அறிமுகத்தை அவன் தட்டிக் கழிப்பது!’
“உங்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!” என்றாள் அவள்.
“என்னது?”
“நான் நினைக்கிறன், எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு எண்டு. நீங்க என்ன நினைக்கிறீங்க?”
அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ‘இவ திமிருக்கு அளவே இல்லாம போகுது. இதுல என்னைச் சொல்லுறது!’
“இது எனக்கு ஹாப்பி நியூஸா?” நக்கல் குரலில் கேட்டான் அவன்.
“பின்ன இல்லையா?” என்றாள் அவளும் விடாமல். உண்மையிலேயே தன் மனத்தை எப்படிச் சொல்வது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை அவளுக்கு. விளையாட்டுப்போல ஒரே போடாகப் போட்டு உடைத்துவிட்டாள்.
அவனும் விடுவதாயில்லை. “சந்தோசம்!” என்றுவிட்டு வைக்கப்போக,
“கேட்டத்துக்குப் பதில் சொல்லுங்க ஜேகே!” என்று அவசரமாக இடைமறித்தாள் அவள்.
“உனக்கு என்னைப் பிடிச்சிருக்கிறதுக்கு நான் என்ன சொல்ல இருக்கு?” அவனும் அவளுக்குச் சளைத்தவன் இல்லையே!
“அடி பின்னிருவன் கள்ளா! மரியாதையா வந்து வீட்டுல சம்மந்தம் பேசுங்க!”
அவன் உதட்டினில் இளநகை மின்னியது. வயசுக்காவது மரியாதை தராளா! எதுவுமில்லை. இதுல உத்தரவு போடுறாங்களாம் மகாராணி!
“எனக்கு உன்ன பிடிக்க வேணாமா?” நமட்டுச் சிரிப்புடன் கேட்டான் அவன்.
“ஓ! உங்களுக்கு அந்த ஆசை வேற இருக்கா? உங்களை எவளும் கட்டமாட்டாள். பாவப்பட்டு நான் வாழ்க்கை தரேன். சான்ஸ மிஸ் பண்ணாம வந்து பொண்ணு கேளுங்க!” என்றுவிட்டு வைத்தவளை என்ன செய்வது என்றே தெரியவில்லை அவனுக்கு!
வருவானா வரமாட்டானா? முதலில் அவனுக்கும் இதில் விருப்பமா? இல்லையா? எதைப்பற்றியும் அவள் யோசிக்கவில்லை.
எந்த நம்பிக்கை இப்படித் துணிச்சலாகக் கேட்க வைத்தது என்று கேட்டால் அவன் தந்த நம்பிக்கைதான் என்பாள் அவள்.
சொல்லத் தெரியாதபோதும், உணர்ந்திருக்கிறாள். ஒரு பாதுகாப்பை, பயமற்ற தன்மையை, நிம்மதியை அவனிடம் உணர்ந்து இருக்கிறாள். அவன் என் வாழ்வில் வந்தால் நானும் என் குடும்பமும் நிம்மதியாக வாழுவோம் என்கிற நம்பிக்கையைத் தந்திருக்கிறான். அதை அவனுக்குத் தெரியப்படுத்தியும் விட்டாள். இனி அவன் முடிவெடுக்கட்டும்!
நல்ல முடிவோடு, வருவான் என்று மனம் நம்பியது!
அடுத்தநாள், வந்திறங்கிய விக்ரமனுக்குப் பின்னாலேயே அவனது காரும் வந்து நின்றது!
உள்ளம் துள்ள உதட்டில் மலர்ந்துவிட்ட சிரிப்போடு பார்த்திருந்தாள் அனன்யா.
காரில் இருந்து இறங்கியவனின் கண்களும் அவளைத்தான் மொய்த்திருந்தன. அவளுக்குள் திடீரென ஒரு தடுமாற்றம்! “வாங்க சேர்! வாங்க தம்பி!” என்று அப்பா வரவேற்பது புறக்கண்ணில் தெரிந்தாலும், அவளின் முழுக்கவனமும் அவன் மீதில்தான். அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான். பார்வையை விலக்கவே இல்லை. அவளைத் தடம் புரளவைக்கும் அந்தப் பார்வையை இரசித்தாள் அனன்யா. ஆனால், அவளோடு ஒரு வார்த்தை பேசவில்லை அவன். அவளின் உதடுகள் புன்னகையில் நெளிந்தன. வாசலிலேயே நின்றிருந்தாள். அவளை நெருங்கி, அவளைக் கடக்கையில் அவன் விழிகள் ஒருமுறை முழுமையாக அவளை உள்வாங்கிவிட்டுக் கடந்தது!
‘என்ன கண்ணுடா!’ சிலிர்த்தது அவளுக்கு. இப்படியெல்லாம் பாக்கிறானே, இதுக்கு என்ன அர்த்தம்? ஆவலோடு, பார்த்தபோது அப்பாவோடு அமர்ந்திருந்து என்னவோ உரையாடிக்கொண்டிருந்தான். தான்யா, கூல் ட்ரிங்ஸ் பரிமாறுவதும் தெரிந்தது.
‘என்னட்ட ஏதாவது கதைப்பானா?’ ஆவலோடு காத்திருக்க, கதைக்கவே இல்லை அவன்.
‘இவன.. ஆட்டுக்கல்லுக்க போட்டு தலையைப் பிடிச்சு ஆட்டு ஆட்டு எண்டு ஆட்ட வேணும்!’ நன்றாக ஒருமுறை அவனை முறைத்துவிட்டுப் போனாள் அவள்.
வந்தவர்களை எல்லாம் சந்தோசமாக உபசரித்தனர் அவள் வீட்டினர். மதிய உணவும் தடல்புடலாக வழங்கப்பட்டது. மாலை நேரத்துக் காற்றை வாங்கியபடி, முற்றத்தில் அமர்ந்திருந்தனர் எல்லோரும். ஆண்கள் நால்வரும் நாற்காலியில் சுற்றி அமர்ந்திருக்க, கொஞ்சம் தள்ளி, நிலத்தில் பெண்கள் நால்வரும் அமர்ந்திருந்தனர்.
“என்மேல இருந்த கோபம் போச்சா அனு?” தயங்கிவிட்டுக் கேட்டார் விக்ரமன். ‘லிசா’ என்கிற அழைப்பு அவரிடமிருந்து நிரந்தரமாகப் போயிருந்தது.
“எப்பவோ நடந்ததை இப்பவும் ஏன் பேசணும்? விடுங்க சார்! அதெல்லாம் முடிஞ்ச கதை.” என்றாள் அவள்.
“இன்னுமே சார்ன்னு தானே கூப்பிடுற!” குறையோடு சொன்னார் விக்ரமன்.
அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அன்று நெஞ்சிலிருந்து சுரந்த பாசம் அப்பாவாகப் பார்க்க வைத்தது. இன்று அது முடியவில்லை. அவள் விழிகள் ஜேகேயின் விழிகளைச் சந்தித்துத் தேங்கி நின்றது.
வந்ததில் இருந்து அவன் ஒரே பிசி. தங்கைகள் அவனை அழைத்துப்போய் யாழ்ப்பாண லைப்ரரி, யாழ்ப்பாணக் கோட்டை, டவுன், மணிக்கூட்டுக் கோபுரம், செல்வச் சந்நிதி, புதிதாக எழுந்து நிற்கும் மால்களை எல்லாம் காட்டிக்கொண்டு வந்தனர். அவனும் நன்றாகவே அவர்களோடு பாசப்பயிறு வளர்த்துக்கொண்டிருந்தான்.
அவளிடம் மட்டும் இன்னும் ஒன்றுமே சொல்லவில்லை.
நிழல்போல ஜேகேயைத் தொடரும் விமலும் அன்று என்று பார்த்து நல்ல பிள்ளையாக அமைதியாக அமர்ந்திருந்தான்.
“என்னம்மா, பதில் சொல்லு!” என்று ஊக்கினார் சுந்தரேஸ்வர். அவருக்குச் சங்கடம். மிகப் பெரிய இயக்குனர். மகளிடம் பாசத்துக்காக ஏங்கும்போது அவள் பழசையெல்லாம் விட்டுவிடலாம் என்பது அவர் எண்ணமாயிருந்தது.
“அப்பா பிளீஸ்! அவர் சொல்லியோ இல்ல வேற யாரும் சொல்லியோ நான் கூப்பிடேல்ல. அப்படி ஒரு பாசத்தை அவரிட்ட உணர்ந்து நானா கூப்பிட்டது. இப்ப வருதில்ல. ஒரு கட்டாயத்தில வேணும் எண்டால் கூப்பிடுவேனே தவிர, முந்தி மாதிரி அது தானா வருமா தெரியாது. என்னை என் பாட்டுக்கு விடுங்க. என்றைக்கு தோணுதோ அன்றைக்கு கூப்பிடுவன். சாரி சார்!” என்றாள் அவள்.
அவருக்கு மனவருத்தம் தான். ஆனால், என்ன செய்ய முடியும்? இந்தளவுக்கு அவள் கதைப்பதே பெரிது என்று நினைத்துக்கொண்டார்.
“சரிம்மா, கல்யாண விசயம் என்ன முடிவு பண்ணியிருக்க?” விக்ரமனின் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை அனன்யா.
“உலகமே பார்த்த ஷோ அது அனு. ஆறு வருசத்துக்கு மேல ஆச்சுதான். என்றாலும், அந்த மூணு மாசமும் நம்மகூட இருந்த ஒருத்தனுக்குத்தான் மத்தவங்களை விட உன்னப்பத்தி நல்லா தெரியும். உன்ன நல்லா புரிஞ்சும் வச்சிருப்பான். அங்க என்னலாம் நடந்ததுன்னும் தெரியும். அதனாலதான் ஷியாமைச் சொன்னேன். அவனும் நல்ல பையன். நீங்க ரெண்டுபேரும் நல்ல பிரெண்ட்ஸ்ஸும் கூட. லைஃப் நல்லாருக்கும்மா!” சுந்தரேஸ்வர் மூலம் விசயம் அறிந்திருந்த விக்ரமன் எடுத்துச் சொன்னார்.
“எனக்கும் அதுதான் பிள்ளை சரி எண்டு படுது.” தன் விருப்பத்தையும் சொன்னார் தகப்பன்.
“எங்கள் எல்லாருக்கும் விருப்பம் இருந்தா காணுமோ? அவவுக்கு பிடிக்க வேணும் எல்லா. நீ சொல்லம்மா.” என்ற அம்மாவும் தன் மனத்தைக் கோடு காட்டினார்.
அனன்யா ஜேகேயையே பார்த்தாள். ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். இவன் என்ன சொல்லுகிறான் என்று பார்க்க, அவளைச் சிந்திக்க விடாமல் அவன் பார்வை அவளிடமே இருந்தது.
‘இத்தனை நாளாப் பாக்காம சாகடிச்சான். இப்ப கண்வெட்டாமப் பாத்துச் சாகடிக்கிறான்.’ அவள் முறைத்தும் அவன் அகற்றிக்கொள்ளவில்லை. பதிலைச் சொல்லு என்பதாகப் பார்த்திருந்தான்.
பார்வையால் அவனை வெட்டிவிட்டு எழுந்தாள் அனன்யா. “அப்பா, எனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு. அவருக்கு என்னவாம் எண்டு கேட்டுட்டுச் சொல்லுங்கோ!” என்று ஜேகேயைக் காட்டிச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.
உதட்டில் அவனையும் மீறி மலர்ந்த சிரிப்பை அடக்கமுடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் ஜேகே. இதை அவள் வீட்டினர் யாருமேஎதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது.
விக்ரமன் மட்டும் புருவங்கள் சுருங்க ஜேகேயைப் பார்த்தார்.

