அத்தியாயம் 23
மனைவி மூலம் மகளின் மனதை அறிந்துகொண்ட சுந்தரேஸ்வரர் விக்ரமனோடு ஜேகேயையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணக் கோட்டைக்கு வந்திருந்தார். புறப்படும்போது கவலையோடு பார்த்த அனன்யாவைக் கண்களால் தேற்றிவிட்டுப் புறப்பட்டான் ஜேகே.
அவன் எதற்கும் தயங்கவில்லை. இதற்காகத்தானே காத்தும் இருந்தான்.
எனவே, “சொல்லுங்க..” என்றான் இருவரையும் பார்த்து.
தடுமாறாமல் திடமாக நின்று கேட்டவனின் தைரியம் மிகவுமே பிடித்தது சுந்தரேஸ்வரருக்கு.
“நேற்று உங்களுக்கு முன்னுக்கு வச்சுத்தான் மகள் ஒரு விசயம் சொன்னவா தம்பி. அதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“உங்க விருப்பம் என்ன அங்கிள்?” அவன் திருப்பிக் கேட்டான்.
அவன் அப்படிக்கேட்டது அவருக்குப் பிடித்திருந்தது. மகள் எல்லோருக்கும் முன்னுக்கும் தன் விருப்பத்தை மட்டுமே சொல்லிவிட்டுப்போக, அவன் அவரின் விருப்பத்தைக் கேட்கிறானே.
“என்ர மகள் சந்தோசமா இருக்கவேணும் தம்பி. அது மட்டும் தான் என்ர விருப்பம்.” என்றார் அவர்.
“அப்ப அவளை எனக்கே குடுத்திடுங்க அங்கிள். நீங்க ஆசைப்பட்ட மாதிரியே அவ சந்தோசமா இருப்பா. என்கிட்ட மட்டும் தான் சந்தோசமா இருப்பா!” என்றான் அவன் தெளிவாக.
அவனுடைய விருப்பம் அறிந்து அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி! அனன்யா சொன்னபோது, அவன் சத்தமில்லாமல் இருந்ததில் உள்ளுக்குள் கலங்கிப்போயிருந்தார் அவர்.
“உங்க வீட்டுல பேசணுமே ஜேகே. அவங்க சம்மதிப்பாங்களா?” விக்ரமன் இதை எதிர்பார்த்ததில் அடுத்த கட்டத்துக்குத் தாவினார்.
“கண்டிப்பா! அவங்க சம்மதம் இல்லாம நானும் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன்!” என்றவன், “என் மனசு, என்னோட ஆசை எல்லாமே தாத்தாக்கும் அப்பாக்கும் தெரியும். அவங்க கூட இப்பவே பேசுங்க. தாத்தாவைப் பத்தி தெரியும் தானே? சொன்ன சொல்லும் குடுத்த வாக்கும் மாறமாட்டார். தப்புப் பண்ணுறவனும் வீட்டுல சொல்லிட்டுப் பண்ணமாட்டான்.” என்று அவன் சொன்னபோதே விக்ரமனுக்கு அத்தனை பயமும் தெளிந்து போயிருந்தது.
வீடியோ காலில் ஜானகிராமனுக்கு அழைத்தான் ஜேகே.
“சின்னக்கண்ணா! எங்கடா இருக்க? எப்படி இருக்க?” கம்பீரக் குரல் ஒன்று தன் வயோதிபத்தைச் சொல்லும் மெல்லிய நடுக்கத்தோடு பாசத்தைக் கொட்டியது.
ஜேகே வயதானால் இப்படித்தான் இருப்பான் என்று அடித்துச் சொல்லும் தோற்றம். வெள்ளிக் கம்பிகளால் ஆன கேசம்! நெற்றி முழுக்கச் சந்தனம். அவரின் கட்சித் துண்டு தோளில் இருக்க, வெள்ளை வேட்டி சட்டையில் கனகம்பீரமாக அமர்ந்திருந்தார் ஜானகிராமன்.
“ஸ்ரீ லங்காலதான் தாத்தா. நீங்க எப்படி இருக்கீங்க?”
“எனக்கு என்னடா நல்லாருக்கேன். அது சரி என் பேத்தி வீட்டுல பேசிட்டியா? இன்னும் எத்தனை நாளைக்கு தள்ளிப்போடப்போற? இனியாவது பேசு கண்ணா!” என்றார் அவர்.
அவர் அப்படிக் கேட்டதே விக்ரமனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் ஆனந்த அதிர்ச்சியாய் இருந்தது.
“பேசிட்டேன் தாத்தா. நீங்களும் ஒரு வாட்டி பேசறீங்களா?”
“ஓ! அவங்க கூட பேசிட்டியா நீ? வெரிகுட் வெரிகுட்! அப்போ என் பேத்தி சீக்கிரம் இங்க வந்திடுவான்னு சொல்லு! குடுடா பேசறேன்!”
“வணக்கம் சார்!” ஆனானப்பட்ட விக்ரமனின் குரலிலேயே அத்தனை பணிவு. “அந்தப் பொண்ணு எனக்கும் பொண்ணுதான் சார். நல்ல பொண்ணு. அவ அப்பாக்கு நம்ம குடும்பத்தைப் பத்தித் தெரியாது இல்லையா? அதான் கொஞ்சம் பயப்படறார். பெரிய குடும்பம், அரசியல்ல இருக்காங்க… அவங்களுக்கு நாம சரியா வருவோமான்னு யோசிக்கிறார்.” என்று விசயத்தைச் சொன்னார் விக்ரமன்.
“நியாயமான பயம் தானே விக்ரமா? வசதிலையும் செல்வாக்குலையும் என்ன இருக்கு சொல்லு? இத்தனை இருந்தும் நேர்ல பேசினாத்தான் பொண்ணு குடுப்பேன்னு சொல்லுறார் பாத்தியா? அந்தக்குணம் தான் பெருசு. அதுக்கு முன்னால எதுவும் நிக்காது. நீ அவர்கிட்ட குடு, நான் பேசறேன்.” என்றார் பெரியவர்.
“வணக்கம் ஐயா!” என்றார் சுந்தரேஸ்வர். அத்தனை பெரிய மனிதர், தன் மனதைத் தெளிவாகப் புரிந்துகொண்டார் என்கிற நெகிழ்ச்சி அவரிடம்.
“ஒண்ணுக்கும் யோசிக்காதிங்க தம்பி. என் பேரன் ஒழுங்கு செய்வான்; நேரா இங்க வாங்க. வந்து கொஞ்ச நாளைக்கு எங்கக் கூட இருங்க. பாருங்க. உங்களுக்குப் பிடிச்சிருந்தா கல்யாணத்தை வச்சிப்போம். சரியா?” என்றவரின் பேச்சில் அப்போதே விழுந்திருந்தார் சுந்தரேஸ்வர்.
“என் பேரன் ஆசைப்பட்டு அவனாக் கேட்ட ஒரே விசயம் உங்க பொண்ணு. அப்பவே சொல்லிட்டேன்; அவதான் எங்க வீட்டு மருமகன்னு! நீங்க முதல்ல நேர்ல வாங்க, மீதி எல்லாத்தையும் நாம நேர்ல பேசுவோம்!” என்றவர், ஒரு கட்சி மீட்டிங்க்கு போகவேண்டும் என்று வைத்துவிட மனமெங்கும் மகிழ்ச்சி பொங்கிற்று அந்தத் தகப்பனுக்கு.
அந்த மனிதரைப் பல போராட்டங்களில் சுந்தரேஸ்வரரும் இந்தியச் செய்திகள் வாயிலாகப் பார்த்திருக்கிறார். நியாயமாகப் பேசி நேர்மையாக நடக்கும் மனிதர் என்று அவருக்கே தெரியும். ஜானகிராமன் என்று பெயரைச் சொன்னபோது இனம் கண்டுகொள்ள முடியாது இருந்தாலும் அவரை நேரில் பார்த்ததும் கண்டு பிடித்திருந்தார்.
அவர் வீட்டுக்கு என் மகள் போகப்போகிறாளா? அப்போதே பூரித்துப்போயிற்று பெற்றவர் மனது.
வீட்டுக்கு வந்த அப்பாவின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியிலேயே அவன் சாதித்துவிட்டான் என்று புரிந்துபோயிற்று அவளுக்கு.
கள்ளன்! சொன்னதைச் செய்துவிட்டானே! ஆசையாக அவள் பார்க்க சட்டென்று கண்ணடித்துவிட்டுப் போனான் அவன்.
மனம் ஜிவ் என்று ஆகாயத்தில் பறந்தது.
“எச்சுகிச்சுமீ! என்னைக் கொஞ்சம் தனியாக் கடத்திட்டுப் போக முடியுமா?” அவனது வாட்ஸ்அப்புக்குப் பறந்தது செய்தி.
பார்த்தவனின் முகத்தில் சிரிப்பு!
நிமிர்ந்து அவளைப் பார்க்க, ‘பிளீஸ்!’ என்று உதடுகளை அசைத்துக் கெஞ்சினாள் அவள். அவன் பார்வை அந்தச் சிவந்த இதழ்களுக்குப் பாய்ந்தது. இப்போதெல்லாம் அனுமதியே இல்லாமல் அவன் கண்கள் அத்துமீறுவதை உணர்ந்து தனக்குள் வெட்கியவளின் விழிகள் பொய்யாக அவனை அதட்டியது!
அதை இரசித்துச் சிரித்தான் அவன்.
விமலிடம் அவன் கண்ணைக் காட்ட, “வெளில எங்கயாவது போவமா மேம்? வந்ததுல இருந்து வீட்டுக்கையே அடைச்சு வச்சிருக்கீங்க!” என்றான் அவன்.
அவள் தகப்பனைக் கேள்வியாக நோக்க, “நல்லூர் கோயில் பாக்கேல்லை எல்லா? அங்க போயிட்டு வரட்டுமன்.” என்று கணவரிடம் சொன்ன சுபாகரி, “நீங்களும் அக்காக்குத் துணைக்குப் போயிட்டு வாங்கோ பிள்ளைகள்!” என்று இளையவர்களையும் சேர்த்து அனுப்பிவைத்தார்.
காரில் ஏறியதும், அவன் திறப்பைச் செருகியபோதுதான் கவனித்தாள் அனன்யா. அந்தக் கீயில் மோனலிசா ஓவியம் தொங்கிக்கொண்டு இருந்தது.
இதைத்தானா மறைத்து மறைத்து வைத்தான்? அவள் கேள்வியும் வியப்புமாக அவனைப் பார்க்க, குறும்புடன் கண்ணடித்துவிட்டுக் காரை எடுத்தான் ஜேகே.
அங்கே கோயிலடியில் ஒரு பக்கமாக இருந்த லிங்கம் கூல்பாரைக் கண்டதும், “பாஸ் நீங்க முருகனைக் கவனிங்க, நாங்க ஐஸ கவனிக்கிறோம்!” என்றான் விமல்.
ஜேகேயின் உதடுகள் மலர்ந்ததில் அவர்களின் திட்டம் தான்யாவுக்குப் புரிந்து போயிற்று! அவளும் திருமண வயதை எட்டிய இளமங்கை தானே!
“அத்தான்! அக்கா கவனம். உங்களை நம்பி அனுப்புறோம்!” என்று பொய்யாக மிரட்டினாள் அவள்.
“நீ வேற! விசயமே தெரியாம பேசாதமா! பாஸ் கவனம் மேம். உங்களை நம்பி அனுப்புறேன். பத்திரமா பாத்துக்கோங்க!” என்றான் விமல், வேண்டுமென்றே.
“பாக்கலைனா என்ன பண்ணுவீங்க?” நின்று திரும்பி அவள் முறைக்க, “நோ கமெண்ட்ஸ்!” என்று கைகளை விரித்தவன் பெண்களைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து மாயமாகியிருந்தான்.
அவர்கள் மறைந்ததும் நெருங்கி அவளின் கரத்தோடு கரம் கோர்த்துக்கொண்டிருந்தான் ஜேகே. வலிமையான விரல்கள் அவளின் மென்மையான விரல்களோடு பின்னிப் பிணைந்தபோது, கீழுதட்டைக் கடித்துக்கொண்டாள் அனன்யா.
“அடிக்கடி இப்படிச் செய்வியோ?” அவளின் இதழ்களைப் பார்த்து விஷமத்துடன் கேட்டான் அவன்.
அவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் முகம் சிவந்தது. ஏன் இப்படித் தடுமாறுகிறாள் என்று விளங்கவே இல்லை. அவனோடு முழுமையாக ஒரு திரைப்படமே நடித்து முடித்திருக்கிறாள். இருந்தும் அவனுடைய அருகாமை, சின்னச் சிரிப்பு, அந்தப் பார்வை எல்லாமே அவளை இனம்புரியாத கிளர்ச்சிக்குள் தள்ளிக்கொண்டிருந்தது.
கோயிலுக்குள் சென்றதும் கண்களை மூடி மனமுருகி வேண்டிக்கொண்டாள் அனன்யா. ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கப்போகும் சந்தோசத்தில் விழியோரங்கள் கசிந்தன.
அப்போது அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டான் ஜேகே! ஆனந்த அதிர்ச்சியோடு பார்த்தவளின் விழிகள் பனித்துப்போயிற்று! கரை சேர்ந்த ஓடம் போன்று, அவன் கைகளுக்குள் அவள் மனமும் அமைதியாகக் கரை சேர்ந்திருந்தது!
அந்தக்கணத்தில், அவள் நெஞ்சில் என்னவோ மாலை மாற்றித் தாலி கட்டிக்கொண்டது போன்று சொந்தமே உருவாகிப் போயிற்று.
நேசம் பொங்க உரிமையோடு நெருங்கி நின்றவளை, “வா!” என்று விரல் பற்றி கோயிலைச் சுற்றி அழைத்துச் சென்றான் அவன்.
அப்படியே ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டார்கள். “ஓகே! தனியாக் கடத்திட்டு வந்தாச்சு. என்ன சொல்லணும்?” அவளருகில் அமர்ந்திருந்தவன் இளஞ்சிரிப்புடன் கேட்டான்.
விழிகளை அவன் முகத்தில் பதித்தாள் அனன்யா. நெற்றியில் திருநீறு சந்தானத்தோடு, உதட்டில் மின்னும் சிரிப்போடு, கண்களில் நேசத்தைத் தேக்கி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

