உயிரைத் திருடும் அழகியே 24 – 1

அத்தியாயம் 24

 

 

 

‘அப்படி… அவளிடம் இருக்கும் ரகசியம் என்ன?’ அன்று இரவு மட்டுமல்ல அடுத்தநாள் முழுவதுமே அவளின் சிந்தனைகள் முழுக்க அந்தக் கேள்வியின் பின்னேயே சுற்றியது. அவளின் மனக்கண்கள் பலமுறை பரபர என்று தமிழ்நாட்டில் இருக்கும் அவளின் வீடு முழுக்கத் தேடி அலைந்தது.

 

எவ்வளவு யோசித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. “ஜேகே பிளீஸ் பிளீஸ்! என்ன எண்டு சொல்லுங்கோவன். எனக்கு மண்டையே வெடிச்சிடும் மாதிரி இருக்கு.” இந்தியாவுக்கான விமானத்தில் அமர்ந்திருந்தபோதும் விடாமல் கெஞ்சினாள் அனன்யா.

 

அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் ஒரு துண்டை எடுத்து அவளுக்கும் ஊட்டிவிட்டானே தவிர வாயைத் திறந்தான் இல்லை!

 

“என்னைப் பாத்தாப் பாவமா இல்லையா உங்களுக்கு?” அப்பாவிபோல் கெஞ்சியவளை ஒருகணம் திரும்பிப்பார்த்தான் அவன்.

 

அவள் விழிகளில் தெரிந்த தவிப்பும் துடிப்பும் அவனை அசைத்தது. ஒரு கையால் அவளை அணைத்து நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “இந்த ஒரு விசயத்துல மட்டும் என்கிட்டே இருந்து எந்த உதவியையும் எதிர்பாக்காத. நீயாத்தான் கண்டு பிடிக்கணும்!” என்றவன், இந்தியா போயிறங்கும் வரையில் ஒரு வார்த்தை அதைப்பற்றி விடவில்லை.

 

விமலை அவனுடைய வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அவன் ஏற்பாடு செய்த டாக்சியிலேயே இருவரும் அவள் வீட்டுக்குப் புறப்பட்டனர்.

 

வீட்டு வாசலில் இறங்கிக்கொண்டு, “நீங்களும் வாங்கோவன்!” என்று எதிர்பார்ப்புடன் அழைத்தாள் அவள்.

 

“முதல்ல கண்டுபிடி! அப்புறமா வரேன்!” என்றான் அவன். ஏமாற்றத்துடன் தலை அசைத்துவிட்டு அவள் திரும்ப, அவளின் கரம் பற்றி, “சீக்கிரமா கண்டு பிடி. எனக்காக!” என்றான் அவனும், ஆழ்ந்த குரலில்.

 

அவனின் எதிர்பார்ப்பையும் மனம் உணர்ந்துகொள்ள, தலையசைத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தவளுக்கு, வேறு எந்தச் சிந்தனையும் இல்லை. என்ன அது? எங்கே இருக்கிறது? வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். பொக்கிசமாக அவள் எதைப் பாதுகாக்கிறாள்?

 

ஹாலில், அவளுக்குக் கிடைத்த விருதுகள் இருந்தது. அதையெல்லாம் ஒன்றுவிடாமல் தடவிப்பார்த்தாள். ஒருசில மூத்த நடிகர்கள் நடிகைகள் வாழ்த்து மடல்களைத் தந்திருந்தார்கள். அதையெல்லாம் எடுத்துப்பார்த்தாள்.

 

அளவான பெரிய வீடுதான் என்றாலும் அனாவசியமாக எதையுமே அவள் சேர்த்து வைத்தது கிடையாது. யாருக்காக எதற்காக என்கிற ஒரு விரக்தியில் அத்தியாவசியம் தாண்டி அவளிடம் எதுவுமே இல்லை.

 

நேரம் செல்லச் செல்ல தேடிக் களைத்தவளுக்கு இப்போது கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.

 

அவன் கேட்கும் ஒன்றை அவளால் கொடுக்க முடியவில்லையே! என்ன அது? கடவுளே என்ர கண்ணில காட்டு.. அவன் என்ன தந்தவன் என்னட்ட?

 

கிட்சன், பாத்ரூம் கூடத் தடவிவிட்டவளுக்கு இனித்தேட எதுவுமே இல்லை என்றானதும் அழுகை வெடிக்க, ஓடிப்போய் கட்டிலில் விழுந்து அழுகையில் குலுங்கினாள்.

 

இனியும் முடியாது! தான் தோற்றுவிட்டதை அவனிடம் சொல்லிக் கேட்கவேண்டியதுதான் என்று நிமிர்ந்தவளின் கண்ணில் பட்டது அது!

 

அது ஒரு ஓவியம்! அவளின் மனம் எப்போதெல்லாம் அலைபாயுமோ அப்போதெல்லாம் அவளை அமைதிப்படுத்தும் ஓவியம்! அவளின் படுக்கையறைச் சுவரில் தொங்கிக்கொண்டு இருந்தது.

 

இப்போதும் அலைபாய்ந்த மனதோடு அதைப் பார்த்தாள்.

 

அதிலே, திரும்பும் திசை எங்கும் பூக்கள் மலர்ந்திருந்தது. அதிலிருந்து ஒற்றை மலர் ஒன்று மலர்ந்திருந்த கொடியை விட்டுக் கண்ணீருடன் விழுகிறது. அதை ஏந்தி நிற்கின்றன, இரு கரங்கள். அருகிலேயே மோனலிசா ஓவியம் ஒன்று. கீழே ‘ஹாப்பி ஜேர்னி!’ என்று கையெழுத்து ஒன்று!

 

அந்த ஷோ முடிந்த கடைசி நாளில் அவளுக்குக் கிடைத்த நினைவுப் பரிசு அது! ஷோ முடிந்து வீட்டுக்குப் போவதால் ‘ஹாப்பி ஜேர்னி!’ என்று, எழுதப்பட்டிருக்கிறது என்றுதான் அப்போது நினைத்திருந்தாள். சவீதா மூலம் படவாய்ப்புக் கிடைத்தபிறகு, ‘எதிர்காலம் மீதான உன் பயணம் சந்தோசமாக அமையட்டும்!’ என்று வாழ்த்துவதுபோல மனதில் பட்டுவிடவே அதை அவளுடைய அறையிலேயே மாட்டி வைத்திருந்தாள்.

 

இப்போதும் அவளுக்கு புதுப் பாதை அமையப்போகிறது. அதற்கும் வாழ்த்துகிறதா இந்த ஓவியம்?

 

அதையே பார்த்திருந்தாள். விழும் ஒற்றைப்பூ… ஏந்தும் இரு கரங்கள்… அருகிலேயே மோனலிசா ஓவியம். ஹாப்பி ஜேர்னி!

 

மோனலிசா ஓவியம்… அவனுடை கார் கீயிலும் மோனலிசா… மோனலிசா… அவள்தான்! அந்தக் கைகள் அவனுடையவை… அதேதான்! திடீரென நெஞ்சில் தொற்றிக்கொண்ட பரபரப்புடன் ஓடிப்போய் அந்த பிரேமை எடுத்துக்கொண்டு வந்து முன்னும் பின்னும் பார்த்தாள்.

 

ஒன்றுமே இல்லையே! ஆனால், அதில்தான் ஏதோ இருக்கிறது என்று மனம் அடித்துச் சொன்னது.

 

எங்கே… எங்கே இருக்கிறது? மனதின் அவசரம் தாளாமல், வேகமாக அந்தப் பிரேமைக் கழற்றினாள்.

 

அங்கும் ஒன்றுமில்லை என்று சோரும்போதுதான் அந்த ஓவியத்தின் பின்னே ஏதோ எழுதப்பட்டிருந்தது கண்ணில் பட்டது.

 

கணத்தில் பூத்துவிட்ட கண்ணீருடன் அதை பார்த்தாள்.

 

ஒற்றை புன்னகையில்

 

உயிரைத் திருடும் அழகியே,

 

காத்திருக்கிறேன் காதலுடன்

 

இப்படிக்கு ஆதிரையன்!

 

என்று எழுதப்பட்டிருந்தது அதில்.

 

ஆதிரையன்… அனன்யா ஆதிரையன்… கடவுளே! அவனா அது?

 

அப்போ… அந்தக் குரலோன்… அவனா? அவன்தானே அவளுக்கு இந்த நினைவுப்பரிசை வழங்கினான்.

 

இன்னுமே அவளுக்கு அது பசுமையாக நினைவில் உண்டே! கடைசியாக இருந்த ஐவரிடமும், “என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?” என்று அந்தக் குரல் கேட்டதும், “உங்களுக்குப் பிடித்த ஒன்றை எனக்குப் பரிசாகத் தாருங்கள்.” என்று அவள் கேட்டதும், அதற்குப் பதிலாக அவன் இதைத் தந்ததும்!

 

கடவுளே! இதயத்தைப் பரிசளித்திருக்கிறான்! அது தெரியாமல்…

 

ஜேகேயின் குரல்… பலநேரங்களில் அவளுள் ஆளப் பாய்ந்தது போல் உணர்ந்திருக்கிறாளே!

 

அந்தப் போட்டியிலிருந்த அந்த மூன்று மாதங்களில் எல்லாவுமாக இருந்த அந்தக் குரல், அதன் முழுச் சாயலை வெளிக்காட்டவில்லையென்றாலும், இப்போது யோசிக்கையில் அவளால் இரண்டு குரல்களையும் ஒன்றெனெப் பிணைத்தறிய முடிந்தது.

 

அழுகையும் சிரிப்புமாக ஓடிப்போய் அவசரமாக அவனுக்கு அழைத்தாள்.

 

“ஜேகே… அனன்யா ஆதிரையன்… இட்ஸ் மீ! உங்க மனைவி… ஆதிரையனின் காதலி… எனக்கு உங்களை இப்பவே பாக்கணும்..”

 

“கதவைத் திற!” என்றது அந்தப்பக்கம்.

 

“ஜேகே?”

 

“திறடி!” அவன் குரலிலும் அத்தனை வேகம்.

 

பட்டாம்பூச்சியாய் பறந்துபோய் திறந்தவளை அப்படியே உள்ளுக்குத் தள்ளிக் கதவடைத்துவிட்டு அப்படியே அவளைக் கதவோடு கதவாகச் சாத்தியிருந்தான் ஜேகே.

 

“இதக் கண்டுபிடிக்க இத்தனை வருசமா உனக்கு?” கேட்டவனின் வார்த்தைகளிலும் கைகளிலும் என்றுமில்லாத நெருக்கமும் உரிமையும் இப்போது வந்திருந்தது.

 

“ஜேகே!” அழுகையோடு சிரிப்பும் பொங்கியது அவளுக்குள். அன்றிலிருந்து இன்றுவரை அவளின் ஆழ்மனது தேடும் அந்த ஒற்றை விரல் அவன்தான். அருவமாக மட்டுமே இருந்து உணர்வுகளால் அவளோடு கலந்திருந்த அந்த ஜீவனைக் கண்கள் நிறையப் பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

 

அவனோ அதற்கு விடாமல், “பைத்தியக்காரன் கணக்கா வருசக்கணக்குல காத்திட்டு இருக்கேன் நான், என்கிட்டயே வந்து அயம் அனன்யா ஆதிரையன்னு அறிமுகம் செய்றியா நீ? உன்ன…” என்று கேட்டவனின் கைகள் அன்றைய தவறுக்கு இன்று அவளின் பொன்மேனியில் தண்டனை கொடுக்கத் தொடங்கியிருந்தது.

 

“ஜேகே!” அவனின் அத்துமீறல்களில் அவள் துடிதுடித்துப்போனாள். இத்தனை வருடங்களாக அவளுக்கு மட்டுமே சொந்தமாயிருந்த பொன்மேனியில் உரிமையுடன் அவன் கைகள் உலாவந்தபோது எழும்பிய உணர்வுகளில் மயக்கமே வந்துவிடும் போலாயிற்று அவளுக்கு!

 

“ஜேகே! என்ன பண்ணுறீங்க?” அவன் கைகளைத் தடுக்கமுயன்று தோற்றுச் சிணுங்கியவளைப் பார்த்து இரசித்தான் அவன்.

 

“இனி என்னவும் பண்ணுவேன்! நீ என்ன கேக்கிறது?” என்றான், செல்ல முரடனாய் மாறி.

 

“நேத்து என்ன சொன்ன? கிஸ் பண்ணத் தைரியம் இல்லையா? என் கிஸ் எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியுமா? இல்ல உன்ன எப்படிக் கிஸ் பண்ணனும்னு நான் நினைச்சிருந்தேன்னு தெரியுமா?” என்றவன், அவள் முகம் பற்றிக் கொடுத்த இதழ் ஒற்றுதலில் அவள் விழிகள் விரிந்து வியப்பும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தன. அவன் விழிகளும் சளைக்கவில்லை. அவளையே பார்த்தன. விரிந்த விழிகளில் மெல்ல மெல்ல மயக்கம்… மயக்கமே தோன்ற மெல்ல மெல்ல அவள் விழிகள் மூடியபோது அந்த முத்தம் தன் இலக்கை அடைந்து வெற்றி பெற்றிருந்தது.

 

“மனசுக்கு பிடிச்சவளுக்கு கொடுக்குற முத்தத்துல அவ மயங்கணும், இனி நான் இல்லாம அவ இல்லனு அந்த முத்தம் அவளுக்குச் சொல்லணும். புரிஞ்சுதா உனக்கு?” கேட்டவனின் கைகளில் அப்படியே தன்னைக் கொடுத்திருந்தாள் அனன்யா.

 

“இந்த உலகத்துக்கே என் பொண்டாட்டியா உன்ன நான் அறிமுகப்படுத்தினா, நீ எனக்கே உன்ன அறிமுகம் செய்வியா? உன்ன என்னடி செய்யலாம்?” கேட்டுக் கேட்டுத் தண்டனைகள் கொடுத்தான் அவன்.

 

முகமெல்லாம் சிவந்து, தலை கலைந்து, அவனைத் தடுக்கமுடியாது என்று தெரிந்து அப்படியே அவன் மார்போடு அவள் ஒட்டிக்கொள்ள, அவனும் அவளைத் தன்னோடு இறுக்கிக்கொண்டான்.

 

“கனவு மாதிரி இருக்குடா!” என்றான், காதோரமாய்.

 

அவள் விழிகளும் கலங்கிற்று! நேசம் பெருக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். காதல் நிறைந்திருந்த அந்த முகத்தை அப்படியே நெஞ்சுக்குள் பொத்திவைத்துக்கொண்டாள். கரமுயர்த்தி மென்மையாக அவன் கன்னம் வருடினாள்.

 

error: Alert: Content selection is disabled!!