‘ஓ… எனக்குச் சோடியா… நடிக்கப் போறீங்களா அனன்யா ஆதிரையன்?’ என்று அன்று கேட்டது இன்று வேறு அர்த்தத்தில் புரிந்தது.
“உங்க மனச நீங்க சொல்லியிருக்கலாம் தானே ஜேகே?” அதைக் கேட்கும்போதே கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்தது.
“நான் ஏன் சொல்லணும்?” வேகமாக எதிர்கேள்வி கேட்டான் அவன்.
விளங்காமல் பார்த்தாள் அவள். அவன் சொல்லாமல் அவளுக்கு எப்படித் தெரியவருமாம்?
“ஏன்? நீ சொல்லித்தான் நான் உன்னக் காதலிச்சனா?” என்று பதில் கேள்வி கேட்டான் அவன்.
விழிகளை விரித்தாள் அவள். என்னவிதமான கோபம் இது?
“நானாத்தான் உன்ன காதலிச்சேன். அதேமாதிரி நீயா என்னைக் காதலிக்கனும்!” உறுதியாகச் சொன்னான் அவன். அவளின் இடையில் அழுந்திய கை அவன் கோபத்தைச் சொன்னது!
“நீங்க சொல்லாம உங்க மனசை நான் எப்படி ஜேகே தெரிஞ்சுகொள்ள முடியும்? காதலிக்க முடியும்?”
“இப்ப எப்படி தெரிஞ்சிக்கிட்ட?” ஒற்றைப்புருவம் உயர்த்தி நிதானமாகக் கேட்டான் அவன்.
அதுதானே! அசந்துபோனாள் அவள். முகம் திருப்பி, அலட்சியம் செய்து, அவளுக்குள் கோபத்தைக் கிளறி, எதற்கு இப்படிச் செய்கிறான் என்று அல்லும் பகலும் சிந்திக்க வைத்து என்று நினைவுகளால் அவனை அவளுக்குள் நிரப்பியிருக்கிறான்.
“எனக்குள்ள காதலை வரவச்சவளுக்குள்ள என் மேல காதலை வரவைக்கலனா நான் என்ன ஆம்பிள? வரவச்சன் பாத்தியா?” என்று மீசையை நீவிவிட்டுக்கொண்டான் அவன்.
இமைதட்ட மறந்து பார்த்தாள் அனன்யா. இவன் ஒரு காதல் அசுரன்! அப்படித்தான் தெரிந்தான் அவள் கண்களிற்கு!
“என்ன பாக்கிற. நான் ஒருத்தன் லூசன் மாதிரிக் காத்திட்டு இருப்பனாம். அவரு, எவனோ ஒருத்தனை உனக்கு மாப்பிள்ளையா சிங்கபூர்ல இருந்து இறக்குவாராமா?”
விக்ரமனைச் சொல்கிறான்! அவள் இதழ்களில் சின்னப் புன்னகை அரும்பிற்று! அதுதான் அவரை வற்புறுத்தி நாயகனாக நடிக்க வந்திருக்கிறான். எத்தனை திருகுதாளங்கள்!
“சிரிக்காதடி!” என்றபடி மீண்டும் இதழ்களைச் சிறை செய்தான் அவன்.
“ஜேகே! கொஞ்ச நேரமாச்சும் சும்மா இருங்க! எனக்கு நிறையக் கேக்கவேணும்!” என்று அதட்டிவிட்டு,
“ஆனா ஆறு வருசம் தானே? ஏழு வருசம் எண்டு சொன்னீங்க.” என்றாள்.
“ஒரு வருசம் முதலே உன்னோட டீடெய்ல்ஸ் வீடியோஸ் எல்லாம் என் கைக்கு வந்தாச்சு. அந்த ஷோ பைனல் லிஸ்ட்ல உன்னப் போட்டவன் நான்தான்.” என்றான் அவன்.
‘அடப்பாவி!’ என்று பார்த்தாள் அவள்.
“எதுக்கு இந்தப் பார்வை? அந்த ஷோவை எந்த மீடியா நடத்திச்சு?” நிதானமாகக் கேட்டான் அவன்.
“ரெயின்போ மீ… அடப்பாவி! அதுவும் உங்களோடதுதானே? அப்போ ரெயின்போ பிலிம் புரடக்க்ஷன்..” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள். “எனக்குப் பட வாய்ப்புத் தந்தது கூட நீங்கதான் இல்லையா?” குரல் கரகரக்கக் கேட்டவளுக்குக் கண்ணீர் நின்றபாடில்லை.
“ப்ச்! எதுக்கு எப்ப பாத்தாலும் கண்ணீர் வடிக்கிற?” என்று அதட்டினான் அவன்.
“வாய்ப்புத் தந்தது மட்டும்தான் நான். அதைப் பிடிச்சிட்டு உச்சியைத் தொட்டது நீ!” என்றான் பெருமையோடு.
“அத விடுங்க ஜேகே. அதென்ன அனன்யா ஆதிரையன்? அப்போ ஜேகே? ஜெயகாந்தன்? அது யாரு?”
“ஆதிரையன் உன் புருஷன் பேரு. ஜெயகாந்தன் உன்னோட மாமனார் பெயர்.” என்றான் அமர்த்தலாக. மேலதிக விளக்கத்தைச் சொல்லவில்லை.
அந்தக் குரலுக்குரியவன் அவன்தான் என்று என்றைக்கும் சொல்லக்கூடாது! அதுதான் அவனுடைய அக்ரிமெண்ட். அதனால்தான் ஆதிரையன் என்கிற இயற்பெயரைக் கொண்டிருந்தும் அப்பாவின் பெயரான ஜெயகாந்தனை தன் பெயாராக்கி ஊருக்கே அறிய விட்டிருந்தான். அவளுக்கும் புரிந்தது.
ஆனால், அதை எப்படிச் சொன்னான். ‘புருஷனாம்! இவன..’ அவளுக்குச் சிரிப்பு வந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டாள். இல்லையென்றால் இன்னொருமுறை என்னடி சிரிப்பு என்று ஆரம்பித்துவிடுவான்.
அவனோ எப்போதடா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருப்பவன் அல்லவா. “சிரிப்பை மறைக்கிற நீ?” என்றபடி அவளை ஆக்கிரமித்திருந்தான் மீண்டும்.
“படுத்தாதீங்க ஜேகே!” என்று அவள் தள்ளிவிட, “இதுக்கேவா!” என்று மீண்டும் அங்குதான் வந்து நின்றான் அவன்.
“விக்ரமன் சேர் உங்க குடும்ப நண்பர் ஆச்சே. அவருக்குமா உங்க பெயர் தெரியாது?”
“எப்பவுமே தாத்தாக்குச் சின்னக்கண்ணன் தான் நான். அதனால எல்லோருக்குமே என்னைக் கண்ணனாத்தான் தெரியும்.”
“சவீதா அக்காக்கு இதெல்லாம் தெரியுமா?” அவளுக்குக் கேட்க நிறையக் கேள்விகள் இருந்தது.
அவனோ, அவளோடு சென்று சோபாவில் அமர்ந்துகொண்டான்.
“இல்ல. ஆனா, இந்தப் பெயரை நான் குடுத்துத் தாத்தா இது ராசியான பெயர் என்று சவீதாக்கு சொன்னாங்க.” என்றான் அவன்.
“ஓ!” என்று கேட்டுக்கொண்டவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது. சினிமாவில் மாற்றுப்பெயர் வைப்பது வழமைதான். ஆனால், காரணமே இல்லாமல் இரு பெயர் உள்ள பெயர் எதற்கு என்று கேட்டபோது, “கீர்த்தி சுரேஷ் மாதிரி அனன்யா ஆதிரையன். அப்படினா, யாரோ ஒரு ஆண் உனக்குப் பின்னால இருக்கிறான் என்கிற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்ன்னு ரெயின்போ எம்டி சொன்னாரு.” என்று விளக்கம் வேறு சொல்லியிருந்தாள் சவீதா.
“அப்போ அப்பவே உங்க வீட்டுல எல்லாருக்கும் தெரியுமா?”
“பின்ன, தெரியாமத்தான் தாத்தா தன் பேரனோட பெயரை உன் பெயருக்குப் பின்னால வச்சாரா?” எதற்கும் அவனிடம் பதில் இருந்தது.
அவனை விழிகள் அகலப் பார்த்தாள் அனன்யா. தனக்குள் முடங்கியிருந்தவளைச் சீண்டிவிட்டு, கோபமேற்றி, வெறுப்பேற்றி இறுகிப்போயிருந்த அவளின் இயல்புகளை வெளிக்கொணர்ந்திருக்கிறான்.
சிதைந்து போயிருந்தவளை சீரமைத்து அவளை அவளுக்கே பரிசளித்திருக்கிறான். நெகிழ்ந்த மனதின் வெளிப்பாடாய் கண்ணோரங்களில் கண்ணீர் பூக்கள் பூத்தன.
என்ன மாதிரியான காதல் இது? அவன் கன்னங்களைப் பற்றி அவன் உதடுகளைத் தன் உதடுகளால் நனைத்தவளுக்குக் கண்ணீர் பெருகியது!
அப்படியே அவனைக் கட்டிக்கொண்டு அவன் கழுத்துக்குள் குழந்தையைப் போன்று முகம் புதைத்தவள் உடைந்து அழுதாள்.
கறை படிந்த ஓவியமாய் அவளை அப்படியே விட்டுவிடாமல், இன்னுமே பொலிவேற்றி வானத்து நட்சத்திரமாய் ஜொலிக்க விட்டிருக்கிறான். என்ன தவம் செய்தாளோ இந்த அன்பு கிடைக்க? கண்ணீர் நிற்கமாட்டேன் என்றது அவளுக்கு.
“அழாதடி! கடுப்பாகுது! நீ அழுறதுக்குத்தான் நான் இந்தப்பாடு பட்டேனா?” என்று கோபப்பட்டான் அவன்.
“அது சந்தோசத்துல வருது. அதுக்கு நான் என்ன செய்ய?” என்று கண்களைத் துடைத்தவளை முறைத்தான் அவன்.
அதற்கும் தாடையில் ஒரு முத்தம் பதித்துச் சமாதானம் செய்தவள், “எதுக்கு ஜேகே இவ்வளவு நாளும் என்னைத் தேடி வரேல்ல நீங்க? இப்ப செய்த மாதிரி எப்பவோ எதையாவது செய்திருக்கலாமே!” என்று கேட்டாள்.
“அதான் சொன்னேனே… நீயாத் தேடி வரணும்னு ஒரு ஆசை. எதிர்பார்ப்பு. நாம இவ்வளவு செய்திருக்கோமே… அந்தப் பக்கமிருந்து ஏதாவது வரவேணாமான்னு காத்திட்டே இருந்தேன். அதைவிட, உன்னப் பாக்கிற வரைக்கும் நானும் விளையாட்டுப்பையன் தான். தாத்தாதான் அந்த ஷோவை நான்தான் பண்ணனும்னு கட்டாயப்படுத்தினார். சும்மா வாய்ஸ் தானேன்னு வந்தேன். அதுவரைக்கும் நானும் அப்பாக்கும் தாத்தாக்கும் செல்லப்பிள்ளை மட்டும் தான். பிறகு நீ ஒரு நிலைக்கு வர்றப்போ நானும் ஒரு நிலைக்கு வந்திடணும்னு நினச்சேன். ஓகே இனி ஏதாவது ஸ்டெப் எடுக்கணும்ன்னு நினச்சப்போதான் இந்தப் படம் பத்திக் கேள்விப்பட்டேன். பிறகு என்ன அப்படியே அதையே பிடிச்சிட்டேன்.” என்றான் அவன் கண்ணடித்து.
இதனால் தான் அவளே உணராத அவளின் மனநிலையை அவ்வளவு தெளிவாக அர்ஜுனிடம் எடுத்துவைக்க அவனால் முடிந்திருக்கிறது. அவளுக்கே தெரியாத அவளைக்கூட அவன் அறிந்து வைத்திருப்பான்! அன்று இருந்த மனநிலையில் இதை எப்படிக் கண்டுபிடித்தான் என்று யோசிக்காமல் விட்டிருந்த விடயம் இன்று விளங்கியது.
ஆசையோடு விழிகளை அகற்றாமல் அவள் பார்க்க, “அவ்வளவு தைரியமா?” என்றபடி அவளை நெருங்கினான் அவன். அவளும் விலகவில்லை. “கிஸ்ஸ மிஸ் பண்றியா?” என்றான் காதோரமாக. ஆரம்பிக்கப் போகிறான் என்று தெரிந்துபோயிற்று! அவளுக்குச் சிரிப்பில் இதழ்கள் துடித்தன.
அவன் கரங்களோ அவள் இடையில் அழுத்தமாய் பதிந்தன. “ஜேகே!” எல்லை தாண்டப் பார்க்காதே என்று அவள் எச்சரிக்க, அதற்கு அடங்குவானா அவன்? இதழோடு இதழ் சேர்த்தான். கைகள் கட்டுப்பாடுகளை மீறியது. அவள் விதித்த தடைகளைத் தாண்டியது. விழிகளை விரித்து அதட்டியவளின் விழியோடு தன் விழிகளைக் கலந்தான் அவன். முத்தம் யுத்தமாய் மாற, அவள் விழிகளில் மயக்கம்.. மயக்கமே தெரிய மெல்லக் கிறங்கியவளை வாழும் உலகையே மறக்க வைத்தான் அவளின் மனதுக்கினியவன்!
முற்றும்!

