அத்தியாயம் 3
வெண்மேகங்கள் குடைபிடிக்க, பனிப்போர்வை போர்த்தி, பச்சைப் பட்டுடுத்தி பார்ப்பவர்களைத் தன் அழகில் மயங்கவைத்துக்கொண்டிருந்தாள் இலங்கையின் மலையழகி! வளைந்து நெளிந்து ஓடும் பாம்பினைப்போன்று பாதை மேல்நோக்கி ஓடிக்கொண்டிருக்க, அதிலே நுவரெலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது விக்ரமனின் கூட்டணி. நுவரெலியாவில் சற்றே உள்ளே அமைந்திருந்தது அசோகவனம். அங்கிருந்த சீத்தா எலிய கிராமத்தைத்தான் தன் படத்துக்கான கிராமமாகத் தேர்ந்தெடுத்திருந்தார் விக்ரமன்.
யன்னல்கள் சாத்தப்பட்ட பஸ்ஸினுள்ளும் சிலிர்த்தது அனன்யாவுக்கு! தேனருந்தும் வண்டாய் இயற்கையின் அழகைப் பருகிப் போதையேறிப்போயிருந்த விழிகளில் மெல்லிய நீர்க்கசிவு!
எல்லாப் பயணங்களும் நாம் நினைத்த இடத்தில் போய் முடிவதில்லை. வழி மாறிப்போகும் பயணங்கள்தான் வாழ்க்கையின் ஆழமான பாடங்களை நமக்குக் கற்றுத் தந்துவிடுகிறது! அப்படித்தான் அவள் மேற்கொண்ட ஒவ்வொரு பயணத்திலும் பாதைகள் மட்டுமல்ல அவள் வாழ்க்கையும் மிகப்பெரிய திருப்பங்களைச் சந்தித்து இருக்கிறது! அப்படி, இந்தப் பயணம் அவளுக்கு என்ன வைத்திருக்கிறது?
கடல் தூக்கி எறிந்தபோதும், மீண்டும் தாய்மடி நாடும் அலையைப்போல அவள் எடுத்த முடிவு சரிதானா?
கேள்விகளுடன் அவள் இறங்க, அவளின் பெட்டிகளுடன் மீனா இறங்கினாள். அவர்களுக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடில் போன்ற அமைப்பிலான தனித்தனியான காட்டேஜ்ஜில் தன்னுடையதுக்குள் அடைந்துகொண்டாள் அனன்யா. மீனாவுக்கும் மேக்கப் ஆர்ட்டிஸ்டுக்கும் அடுத்த காட்டேஜ் கொடுக்கப் பட்டிருந்தது.
இன்றைக்கும் நாளைக்கும் அவளுக்கு எந்த வேலைகளும் இல்லை. சிங்கப்பூரில் இருக்கும் ஷியாம் அவர்களோடு வரவில்லை. அவனை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்கிற சங்கடம் நிறைய இருந்தாலும், நாளாக நாளாக ஒரு ஆர்வம் உருவாகி எப்போதடா அவனைப் பார்ப்போம் என்றாகிப்போயிருந்தாள். அவனிருந்தாலாவது இந்த மலையகத்தைச் சும்மா சுற்றிக்கொண்டு வரலாம் என்று எண்ணியவள், விக்ரமனிடம் சென்று எப்போது வருவான் என்று வினவினாள்.
“அவன் நாளைக்கு இரவுதான் வருவான். ஹீரோ இன்னும் கொஞ்சநேரத்தில வந்திடுவார்.”
‘அப்ப அவன் ஹீரோ இல்லையா? பிறகு அவன் எதற்கு? ப்ச்! கதையே தெரியாது. இதில் யாரெல்லாம் என்னவாக நடிக்கிறார்கள் என்று என்ன தெரியும்?’ அதைக்கேட்டு தனக்கு இந்தப் படத்தில் துளியளவேணும் ஆர்வம் இருப்பதாய்க் காட்டிக்கொள்ளப் பிடிக்காமல் மௌனமாகிப்போனாள் அனன்யா.
அவளைப் படித்தவர் போல, மெலிதாகத் தயங்கிவிட்டு அவரே சொன்னார்.
“ரெயின்போ பிலிம் புரடெக்சன் தெரியும் தானே உனக்கு? அதோட ஓனரோட மகன்தான் ஹீரோவா நடிக்கப்போறார். இதுதான் அவருக்கு முதல் படம்.”
அவரை நேராகப் பார்த்தாள் அனன்யா.
“நம்பிக்கை இருந்தா வாழ்க்கைல முன்னுக்கு வரலாம் என்று சொல்லித் தந்த ரெயின்போ மீடியாவை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்!” என்றுவிட்டு வந்துவிட்டாள்.
திரைத்துறையில் தனக்கு வாழ்வளித்த நிறுவனத்தின் சொந்தக்காரனைப் பார்க்க ஆர்வம் கொண்டிருந்தாள் அனன்யா.
அன்றுமாலை, சும்மா சோம்பி இருக்கப்பிடிக்காமல் வாடகைக்கு ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு மலைப்பாதை வழியே சுற்றிவிட்டு வந்தவளை, ஹீரோ வந்துவிட்டான் என்கிற செய்தி எட்டியது. முகம் மலர, ஓடிப்போய்த் தன்னைக் கொஞ்சம் திருத்திக்கொண்டு அவனைச் சந்திக்கச் சென்றாள்.
அவர்களது நிறுவனம் தான் அவள் சினி உலகத்துக்குள் காலடி எடுத்துவைக்கக் காரணமே. அப்படியானவனை புதுமுகம் என்று ஒதுக்காமல் அவளே சென்று அறிமுகம் செய்துகொள்வது தானே முறை. முன்னணி நடிகை என்று அவன் தயங்கலாம் இல்லையா? நன்றி மறப்பவள் அல்ல என்று காட்ட வேண்டும்.
அங்கே, காட்டேஜின் முன்னே அமர்ந்திருந்தவனைக் கண்டதுமே அவளின் நடை நின்றுபோயிற்று. இவனுக்குத் தயக்கம் வருமா? புதுமுகமாக சினிமாவுக்குள் நுழையும் தயக்கம் நிறைந்த புதியவனின் தோற்றமல்ல அது! இளமை ஊஞ்சலாடும் இளைஞனும் அல்ல! இறுக்கமான உடற்கட்டுடன் வலிமை மிகுந்த முழுமையான மனிதனாக ஒரு காலை மற்றக்காலின் மீது மடித்துப் போட்டபடி அமர்ந்திருந்து, ஃபோனில் வெகு மும்முரமாய் என்னவோ செய்து கொண்டிருந்தான்.
இவனிடம் போய் எப்படி அறிமுகம் செய்து கொள்வது? ஆளுமையான தோற்றமும் அசட்டுத்தனங்களற்ற அந்த முகமும் அவளுக்குள் தான் தயக்கத்தை விதைத்தது.
தைரியத்தை மெல்ல வரவழைத்துக்கொண்டு அவனை நெருங்கி, “ஹலோ சேர்! ஹவ் ஆர் யு?” என்று, இனிய முறுவலை இதழ்களில் தவழவிட்டபடி இன்முகமாக வினவினாள்.
ஃபோனிலிருந்து பார்வையை அகற்றி யார் நீ என்பதாகப் பார்த்தான் அவன். சிரிப்பற்ற முகம், நட்பைக் காட்டாத கண்கள். சுழித்துக்கொண்ட புருவங்கள் அவளின் பிரசன்னத்தை விரும்பவில்லை என்று உணர்த்த, முதல் பார்வையிலேயே அவனைப் பிடிக்கவில்லை அவளுக்கு.
“ஐம் அனன்யா ஆதிரையன்!” என்றபடி அவன்புறமாகக் கையை நீட்ட, “வாட்? கம் எகைன்!” என்றான் அவன். கூடவே அவளின் கரத்தைப் பற்றிக்கொள்ளவேயில்லை.
திடுக்கிட்டாள் அனன்யா. அதுவரையிருந்த நட்புணர்வு அகன்றது. அவமானக் கண்றலுடன் அவளின் கையும் வேகமாகக் கீழே இறங்கிக்கொண்டது!
இந்த ‘வாட்? கம் எகைன்’ னுக்கான பொருளை என்னவென்று கொள்வது? ஒரு அறிமுகப் படலத்தை மீண்டும் சொல் என்று, அதுவும் அதிகாரத் தொனியில் யாராவது கேட்பார்களா? முகம் மாறாமல் காக்க வெகுவாகவே சிரமப்பட்டாள் அனன்யா.
செய்த உதவியை மறக்கக் கூடாதே!
“ஐம் அனன்யா ஆதிரையன் சேர்! இந்தப் படத்துல உங்களுக்குச் சோடியா நான்தான் நடிக்கறேன்!” இன்முகமாகவே இன்னுமொருமுறை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
“ஓ! எனக்குச் சோடியா… நடிக்கப் போறீங்களா அனன்யா ஆதிரையன்?”
அந்த கேட்ட விதத்தில் என்ன இருந்தது. அவளுக்குப் பிடிபடவில்லை. ஆனால், என்னவோ இருந்தது! ஏதோ பொருள்படப் பேசுகிறான் என்று மட்டும் விளங்கியது.
இரண்டே இரண்டு வசனங்கள் தான் பேசினான். இரண்டுமே அவளைத் தலையால் தண்ணி குடிக்க வைத்தன. ‘ஓ மை கடவுளே!’ அவளுக்குத் தொண்டைத் தண்ணி வற்றிப் போயிற்று!
எந்தக் கிரகத்திலிருந்தது வந்திருக்கிறான் இந்தப் பிரகதி.
போடா டேய்! என்றுவிட்டுப் போய்விடுவாள். நன்றி உணர்வு தடுத்தது.
“உங்களோட ரெயின்போ மீடியா தான் நான் நடிச்ச முதல் படத்தைத் தயாரிச்சது சேர். அதுக்குப் பிறகும் நிறையப்படம் உங்க அப்பாவோட தயாரிப்பில நான் வேக் பண்ணியிருக்கேன். அதுதான், ஒரு தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சேன்!”
நான் ஒன்றும் உன்னோடு கதைக்க ஆசைப்பட்டு வரவில்லையடா மரமண்டையா என்று உணர்த்துவதுபோல சிரித்த முகமாகவே அவள் சொல்ல, சற்றே தள்ளி கால்களை அகற்றி, கைகட்டி இங்கேயே பார்வையைப் பதித்தபடி நின்ற அவனின் துவாரபாலகனை விரல் சுண்டி அழைத்தான் அவன்.
மின்னலே வாம்மா என்பதைப்போல அடுத்த நொடியே காலடியில் நின்றவனிடம், “இத டிஸ்போஸ் பண்ணு!” என்றான், அவளை ஒற்றை விரலால் காட்டி.
‘இத டிஸ்போஸ் பண்றதா?’ அதிர்ந்து நின்றுவிட்டாள் அனன்யா. என்ன அகங்காரம்! எத்தனை திமிர்! இவனெல்லாம் அவளின் உலகில் கழுமரமேற்றிக் கொல்லப்பட வேண்டியவன்.
‘போடா இவனே! உன் திமிரும் திண்ணக்கமும் உன்னோட! நீ பெரிய பருப்பா இருந்தா இந்தச் சினிமாவில உன்னையே வச்சு செய்த சாம்பாருடா நான்!’ அவனை நன்றாகமுறைத்துவிட்டு விறுவிறு என்று திரும்பி வந்துவிட்டாள் அனன்யா.

