உயிரைத் திருடும் அழகியே 7 – 1

அத்தியாயம் 7

 

 

இரவின் போர்வை அவளை மறைத்திருக்க, உடலை ஊடுருவி நடுங்கச் செய்யும் குளிருக்குள் கைகளைக் கட்டியபடி அப்படியே நின்றிருந்தாள் அனன்யா. இந்தப் படத்தில் நடிக்கத்தான் வேண்டுமா? ஓராயிரம் முறையாக அவள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும் கேள்வி இது! என்னால் முடியாது என்று இதயம் ஓங்கிக் குரல் கொடுக்கும்போதெல்லாம் ஏன் முடியாது நடித்துக் காட்டுகிறேன் என்கிற பிடிவாதமும் அவளுக்குள் வந்து அமர்ந்துகொள்ளும்! எதைக் கண்டும் ஓடி ஒழிய அவளுக்கு என்று பாதுகாப்பான இடம் இல்லாதபோது வருவதை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்!

 

சவீதாவுக்கு அழைத்து விவரத்தைச் சொன்னாள்.

 

“இது உனக்கான சாலஞ் என்று எடுத்துக்கோ அனு. நீ எந்தளவுக்கு மனத்திடமானவள் என்று நீயே அறிஞ்சிக்க ஒரு சான்ஸ். விட்டுடாத. இது வெறும் நடிப்பு. நீ நடிக்கணும். அதை நான் பெரிய திரைல பாக்கணும். எனக்கு ஏதாவது நீ செய்யணும்னு நினைச்சா இந்தப் படத்தை நடிச்சுது தா. அப்படி ஒன்னும் நான் சாதாரணமான பொண்ணு இல்லன்னு காட்டு!” என்றுவிட்டாள் அவள்.

 

காட்டுறேன்! முடிவெடுத்துக்கொண்டாள் அனன்யா.

 

 

 

காட்சி நான்கு

 

கண்டியில் தான் பிருந்தாவின் பத்திரிக்கை நிறுவனம் அமைந்திருந்தது. வீட்டிலிருந்து நுவெரெலியா டவுன் வரை சைக்கிளில் சென்று அங்கு தெரிந்தவரின் கடையில் சைக்கிளை நிறுத்திவிட்டு பஸ்ஸில் கண்டிக்குச் செல்வாள். திரும்புவதும் அப்படித்தான். அன்றும் வேலை முடிந்து நுவரெலியா வந்திறங்கி சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தவளின் முகத்தில் மெல்லிய பதட்டம் முளைத்திருந்தது.

 

மனித வாழ்க்கை தனக்குள் புதைத்து வைத்திருக்கும் இரகசியங்களை எல்லாம் துணிந்து திறந்து பார்த்துவிட வேண்டும் என்பது அவளுக்கு மிகவுமே பிடித்தமான விளையாட்டு. ஒரே வட்டத்தில் சுழல்வதை விரும்பாதவள். வாழ்க்கை ஒருமுறைதான். விதிமுறைகளைத் தாண்டாமல் ‘வாழ்ந்து’ பார்த்துவிடுவோம் என்பாள்! இன்று அதற்கு ஒரு வாய்ப்பு!

 

எட்டவே முடியாது என்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ஒரு உலகம் அவளுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கக் காத்திருக்கிறதாம் என்று அறிந்த கணத்திலிருந்து அதற்குள் புகுந்து பார்த்துவிட வேண்டும் என்கிற பரபரப்பு அவளுக்குள் தொற்றிக் கொண்டிருந்தது. அப்பா சம்மதிப்பாரா? அவள் ஒன்று கேட்டு இன்றுவரை மறுத்ததில்லை. ஆனால் இதற்கு? நிச்சயம் மறுப்பார்.

 

ஆனால், விளங்கப்படுத்தினால் விளங்கிக்கொள்ளுவார். அவளால் அது முடியும்! அவள் மீது நிறையவே நம்பிக்கை அவளுக்கு உண்டு! தன்னம்பிக்கை நிறைந்தவள்.

 

என்றாலும் மெல்லிய பதட்டம்! கூடவே அந்த உலகம் எப்படி இருக்கும்? ஒரு கை பார்ப்போமே என்கிற ஆர்வமும் கூடவே இருந்ததில் அவளின் சைக்கிள் அசோகவனம் நோக்கி வேகமாகவே ஏறத் தொடங்கியிருந்தது!

 

அவளுக்கு முன்னே சென்றுகொண்டிருந்த காரிலும் அருகில் வந்துகொண்டிருந்த மோட்டார் வண்டியிலும் வேகுவம் பேஸ் (Vacuum Base) பொறுத்தப்பட்டிருக்க, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் வழியே அவள் சைக்கிளில் மலை ஏறுவதைப் பக்க வாட்டிலும் முன்னிருந்தும் உள்வாங்கியபடி சென்றுகொண்டிருந்தார் கேமராமேன்.

 

வேலைக்குப் பொருத்தமாய் ஒரு ஜீன்ஸ், முழுக்கை டீ ஷர்ட் அணிந்திருந்தாள். முடிக்கற்றைகள் அனைத்தையும் ஒன்றாக்கி, காலையில் உச்சியில் போனிடெயிலாக போட்டிருந்தது இப்போது மாடர்ன் ‘மண்டைமேல கொண்டை’ யாக உருப்பெற்றிருந்தது. வளைந்து வளைந்து மேலேறிய மலைப்பாதையில் வியர்வைப் பூக்கள் மேலுதட்டிலும் மல்லிகை மொட்டு மூக்கு நுனியிலும் இயற்கையாகவே பூத்திருக்க, முழு வேகத்தில் சைக்கிளை அசோகவனம் நோக்கி மிதித்துக்கொண்டிருந்தாள். சைக்கிளின் முன் பாஸ்கெட்டில் பூக்கள் சிரித்துக்கொண்டிருந்தன.

 

அது ராசப்புவின் சம்மதம் கிடைப்பதற்காக சீதையம்மனுக்குக் கொடுக்கும் லஞ்சம்!

 

 

காட்சி ஐந்து

 

என்றும் ராசப்பு வீடு வந்தபிறகு கோவிலுக்குச் செல்கிறவள் இன்று அவர் வர முதலே போய் வந்து அவருக்கு மிகவுமே பிடித்தமான, ‘பயற்றம் பணியாரம்’ வேக வேகமாகச் செய்தாள்.

 

‘கடவுளே..! இன்றைக்கு அப்பா நிதானத்தோடு வரவேணும்!’ சீதையிடம் வேண்டியது போதாது என்று பெரிய அறைக்குள் இருந்த சுவாமிப் படங்களை எட்டிப்பார்த்து கன்னங்களில் போட்டுக்கொண்டாள். அவளின் கனவு கைகூடுவதற்கான கதவைக் கண்டுபிடித்திருக்கிறாள். அதைத் திறந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆனால், திறப்பதற்கு அப்பாவின் சம்மதம் வேண்டும்!

 

அவளின் பொறுமையைச் சோதித்துவிட்டு ராசப்பு மிதமான மப்பில் படலையைத் திறந்துகொண்டு வந்துகொண்டிருந்தார். மனம் சோர்ந்தாலும் நம்பிக்கையைக் கைவிடவில்லை அவள். குளித்து முடித்து வந்தவரிடம் பலகாரத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

 

அவர் முகம் மலர்ந்து போயிற்று!

 

“என்னம்மா விசேசம்? பலகாரம் எல்லாம் செய்திருக்கிறாய்?” தரையிலேயே அப்பாடா என்று அமர்ந்துகொண்டு ஆர்வமாக ஒன்றை வாயில் போட்டபடி மகளிடம் கேட்டார் ராசப்பு.

 

சற்றுத் தள்ளி மூளையாக அமர்ந்திருந்து சுளகில் இருந்த அரிசியில் இருக்கும் கற்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தார் கொடிமலர்.

 

தகப்பனின் அருகிலேயே அமர்ந்து தானும் ஒன்றை வாயில் போட்டபடி, “சும்மா தானப்பா. எப்படி இருக்கு?” என்று கேட்டாள் பிருந்தா.

 

“என்ர பிள்ளை செய்தாக் கேட்கவும் வேணுமோ?”

 

“இன்னும் ரெண்டு சாப்பிடுங்கப்பா!”

 

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கொடிமலருக்கு மகள் எதற்கோ அடிகோலுகிறாள் என்று புரிந்துபோயிற்று! அறிந்துகொள்ளப் பொறுமையாகக் காத்திருந்தார்.

 

“அப்பா…” அவர் தோளில் சலுகையோடு சாய்ந்துகொண்டு அழைத்தாள் பிருந்தா.

 

பூனைக்குட்டி வெளியே வரப்போகிறது! வெற்று மார்பின் அங்கங்கே நரைத்திருந்த முடிக்கற்றைகளைத் தடவியபடி உதட்டில் புன்சிரிப்பு அரும்ப மகளைப் பார்த்தார் ராசப்பு.

 

“என்ன விசயம்?”

 

“அப்பா! சிரிக்காதிங்கப்பா!” மகள் சிணுங்க, அவரின் முறுவல் விரிந்துபோயிற்று!

 

“சிரிக்கேல்ல, நீ விசயத்தை சொல்லு!”

 

“அது அப்பா.. எனக்கு ஒரு சான்ஸ் வந்திருக்கு. அது நடந்தா, நம்மட குடும்பமே நல்லா வந்திடும். அண்ணா ஆசைப்படுற மாதிரி கடை போடலாம். அவன் விரும்பிற பெட்டையையே கட்டியும் வைக்கலாம். தம்பி தங்கச்சியை நல்லா படிப்பிக்கலாம். அம்மா பிறகு வேலைக்குப் போகத் தேவையில்லை. நீங்க விரும்பினா மட்டும் போகலாம். எல்லாரையும் நான் பாப்பன்!” என்று, கண்கள் மின்ன லாபக்கணக்கை அடுக்கியவளிடம் “எல்லாம் சரியம்மா! முதல் இதெல்லாம் எப்படி நடக்கும் எண்டு சொல்லு!” என்று, தான் அவளுக்கு அப்பா என்று காட்டினார் அவர்.

 

“அதுக்கு நான் இந்தியாக்கு போகோணும் அப்பா. அங்க ஒரு போட்டி நடக்கப்போகுது. அதுல நானும் கலந்துகொள்ளப்போறன்.” என்று, ‘மறுப்பார்’ என்பது உறுதியாகத் தெரிந்ததால் மெல்லச் சொன்னாள்.

 

அதிர்ந்துபோனார் ராசப்பு! இலங்கையிலேயே வேறு ஊருக்கு என்றாலே அவரால் மகளைப் பிரிந்திருக்க முடியாது. அவளோ இந்தியா என்கிறாள்.

 

“அவ்வளவு தூரமெல்லாம் தனியா விடேலாது பிள்ளை. நீ இங்கயே உனக்கு விருப்பமானத்தைச் செய்!”

 

“நல்ல சந்தர்ப்பம் அப்பா. எல்லாருக்கும் கிடைக்காது!”

 

“பராவாயில்லை. எல்லாத்தையும் விட நீதான் முக்கியம்!”

 

“எனக்கு என்னப்பா நடக்கப்போகுது? ஒரு மூண்டு மாசம். டக்கென்று போய்டும். நானும் கவனமா இருந்திட்டு ஓடி வந்திடுவன்.”

 

அவள் எவ்வளவு சொல்லியும் மறுத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார் ராசப்பு.

 

ஏமாற்றத்தில் விளைந்த கண்ணீருடன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு முகத்தை அதற்குள் புதைத்துக்கொண்டாள் பிருந்தா.

 

 

காட்சி ஆறு

 

எழுந்து நிற்க முடியாத அளவில் பதிவான குட்டிச் சமையல் கட்டு. ஒரு பலகைக்கட்டையில் அமர்ந்திருந்து, குளிருக்குச் சோர்ந்துகிடந்த விறகுகளை உள்ளே தள்ளி சோற்றடுப்பை ஊதிக்கொண்டிருந்தார் கொடிமலர்.

 

“நீங்களாவது சொல்லுங்கோவன் அம்மா!” வெங்காயத்தை உரித்தபடி தாயிடம் கெஞ்சினாள் பிருந்தா.

 

“நான் சொல்ல என்ன கிடக்கு? அப்பா சொன்னாச் சரியாத்தான் இருக்கும்! தனியா உன்ன விடேலாது பிருந்தா!”

 

“என்னம்மா தனி? மனிசரே இல்லாத அடுத்த கிரகத்துக்கா போகப்போறன்? பக்கத்து நாடு. தமிழ் நாடு வேற. அங்க இருக்கிறதும் நம்மளைப் போல மனுசர் தான்!”

 

“ஆனா தெரியாத மனுஷர். தெரியாத ஊர். அங்க போய் என்னெண்டு தனியா இருப்பாய்? ஒரு பிரச்சனை வந்தால் யாரைப்போய்ப் பார்ப்பாய்? யார் உதவிக்கு வருவீனம்? எங்களால வர ஏலுமா சொல்லு. இல்ல, உன்னை அனுப்பிப்போட்டு நாங்க இங்க நிம்மதியா இருக்க ஏலுமா? கஞ்சி குடிச்சாலும் நிம்மதியாக் குடிக்கவேணும். காசு வசதி ஒண்டும் தேவையில்லை. வீட்டுல நல்ல பிள்ளையா இரு. கல்யாணம் பாத்துக் கட்டி வைக்கிறம்!” தன்மையாக எடுத்துச் சொன்னார் கொடிமலர்.

 

“ஓம் அம்மா! யார் எண்டே தெரியாத ஒருத்தன் கையில பிடிச்சுக்குடுத்துப் போய்த்துலை எண்டு அனுப்புவீங்க. ஆனா, நான் ஆசைப்பட்டுக் கேக்கிற ஒரு இடத்துக்கு அனுப்ப மாட்டிங்க!” என்று வெடித்துவிட்டுப் போனாள் பெண்.

 

காட்சி ஏழு

 

 

பிருந்தா சோர்ந்துவிடவுமில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அடுத்தடுத்த நாட்களும் தகப்பனிடம் கெஞ்சிக்கொண்டு வந்து நின்றாள்.

 

“அப்பா சொல்லுறதை கேளு பிள்ளை. இது சரியாவே வராது! உன்ன வீட்டுக்க அடைச்சு வச்சு பழங்கால மனுசனா இருக்க நானும் விரும்பேல்ல. பொம்பிளைப் பிள்ளைகள் சுயமா, சொந்தக் காலில தைரியமா நிக்கவேணும் எண்டு ஆசைப்படுற அப்பன் தான் நானும். அதுக்காகக் கண் காணாத தேசத்துக்கு எல்லாம் அனுப்ப ஏலாது. காதுல வந்து விழுகிற செய்தி எல்லாமே கெட்டதாத்தான் இருக்கு. பிறகும் எப்படி உன்னத் தனியா அனுப்பச் சொல்லுறாய்?”

 

“அப்பா ப்ளீஸ் பா. ஒரு மூண்டு மாதம் தானப்பா. கண் மூடி முழிக்க முதல் ஓடிப்போயிடும். எந்த வம்பு தும்புக்கும் போகாம போன வேலையை மட்டும் பாத்திட்டு ஓடி வந்துடுவன் அப்பா.”

 

அவர் அதற்குமேல் பேசவில்லை. ஆனால், உறுதியாக மறுத்தார். கொடிமலருக்கும் கணவனின் மறுப்பில் ஆட்சேபனை இல்லாததால் அவரும் எதுவும் பேசவில்லை.

error: Alert: Content selection is disabled!!