அத்தியாயம் 8
இந்தியத் தொலைகாட்சி ஒன்று நடாத்தும் பிரபலமான கேம் ஷோவுக்கே வந்திருந்தாள் பிருந்தா. மூன்று மாதங்கள் வெளியுலகத் தொடர்பு எதுவும் இல்லாமல் குறிப்பிட்ட நபர்களோடு ஒரே வீட்டிலேயே இருக்க வேண்டும். வாரா வாரம், வெளியேற்றத்துக்காகச் சக போட்டியாளர்களால் தெரிவாகும் போட்டியாளர்கள், பின்னர், மக்களின் விருப்புக்கேற்பப் போட்டியிலிருந்து வெளியேறுவர், அதாவது, மக்களின் வாக்கெடுப்பின் படி குறைவான வாக்குகளைப் பெற்ற ஒருவர் வெளியேறுவார். இந்தவகையில், கடைசிவரை யார் நின்று பிடிக்கிறாரோ அவரே வெற்றியாளர். இதுதான் அந்த ஷோவின் சாராம்சம்.
எப்போது வேண்டுமானாலும் எப்படியும் மாற்றியமைக்கக் கூடிய விதிமுறைகள் கொண்டதுதான் இந்த கேம் ஷோ! யாரும் யாரையும் பகடையாக்கி விளையாடலாம். எப்படியும் காய் நகர்த்தலாம். வெளி உலகத்தின் தொடர்பு இன்றி, அந்த வீடு மட்டுமே அவர்களுக்கான இடம் என்று சுருங்கி, டீவி, போன், கடிகாரம் என்று வசதிகள் எதுவுமின்றி இருக்க வேண்டும். அதைவிட, அவர்கள் பேசுவதை, சிரிப்பதை, நடப்பதை, உறங்குவதை என்று அனைத்தையுமே அந்த வீடு முழுக்க பூட்டியிருக்கும் கமராக்கள் பதிவு செய்துகொண்டே இருக்கும்.
ஒருவரைப் பிடிக்கவில்லை என்று விலகி இருக்க முடியாது. இரகசியமாக ஒருவரிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ளும் எதுவும் இரகசியம் அல்ல. வெளிவிடும் ஒவ்வொரு வார்த்தைகளும் கவனிக்கப்படும். ஒவ்வொரு சின்ன அசைவுகளும் பதிவாகும். பத்திருபது பேர்களுக்கு மத்தியில் தான் அழுதாலும், சிரித்தாலும், உண்டாலும், உறங்கினாலும் என்று ஒரு வாழ்க்கை.
இது ஒரு ரியாலிட்டி ஷோ. அவரவரின் மனத்தின் திடத்தை சோதிக்கும் விளையாட்டு. ஒவ்வொரு போட்டியாளனும் தானே தன் மனத்தோடு போராடவேண்டும். போட்டியாளர்களும் ஒருவரோடு மற்றவர் விளையாடவேண்டும். இதில் போட்டி வைப்பவரும் அருவமாக நின்று தன் குரல் வழியே அவர்களோடு விளையாடிப் பார்ப்பார்.
திரும்பும் திசைகளில் இருந்தெல்லாம் நெருக்கடிகள் கொடுக்கப்படும்போது, யார் ஒருவர் தன் இயல்பைத் தொலைக்காமல், தன்னைத் தொலைக்காமல் நிலைத்து நிற்கிறாரோ அவரே வெற்றியாளர்!
காட்சி பத்து
அந்த வீட்டுக்குள் மனமெங்கும் மெல்லிய பயம் வியாப்பித்திருக்க, நுழைந்தாள் பிருந்தா. தனி ஒருத்தியாக இலங்கையில் இருந்து தைரியமாக இந்தியா வந்து இதோ இப்போது வீட்டுக்குள்ளும் வந்துவிட்டாள் தான்.
இனி அம்மா அப்பாவோடு கதைக்க முடியாது, வெளியுலகத்தைப் பார்க்க முடியாது என்று உணர்ந்த கணத்தில் என்னவோ புலிக் கூண்டுக்குள் அகப்பட்டுக்கொண்டது போலவும், புன்னகைத்து வரவேற்ற மற்றப் போட்டியாளர்கள் அவள் மீது பாயக் காத்திருக்கும் புலிகள் போலவும் தோன்றிவிட, இப்படியே திரும்பி ஓடிவிடுவோமா என்றுதான் சிந்தனை ஓடியது!
“ஹாய்! வெல்கம்! வெல்கம் ஹோம்!” என்றபடி வந்து அணைத்துக்கொண்டார் ஒரு மத்திய வயதுப்பெண்.
அவரை உடனேயே பிடித்துப்போக, “ஹாய் மேம்!” என்றபடி, தானும் அணைத்துக்கொண்டாள் பிருந்தா.
“நான் வைதேகி. நீங்க? உங்க நேம் என்ன?”
“என்ர பெயர் பிருந்தா.”
“ஓ..! நீங்க ஸ்ரீ லங்கனா?” முகமெல்லாம் புன்னகையாகக் கேட்டார் அவர்.
“ஓம்! நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நுவரெலியா.”
“ஆகா! காதுல தேன் வந்து பாயுதும்மா. நம்ம பக்கமும் பேசுவாங்க பாருங்க ஒரு தமிழ்.. தமிழையே கொலை செய்யுற தமிழ்.” என்று சலசலத்தபடி அவளை உள்ளே அழைத்துப்போக, அங்கிருந்த ஒருவன் இவளைக் கண்டதுமே கண்களில் இரசனை மின்ன, பெரும் சத்தமாய் விசிலடித்தான்.
“அழகே ஆராதிக்கும் அழகியே, உன் பெயர் என்ன?”
அவன் கேட்ட விதத்தில் மெல்லப் புன்னகைத்தாள் பிருந்தா. பொன் மஞ்சள் நிறமும், கொடிபோன்ற தேகமுமாகத் தான் நல்ல அழகி என்பது அவளே அறிந்ததுதான். அதைக்குறித்து அவளுக்குப் பெருமையும் உண்டு. வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாள். அவளைக் கடக்கும் ஒவ்வொரு இளவட்டமும், அவள் மீது இப்படியான பார்வையைத்தான் வீசிச் செல்வர். அதனால் இது ஒன்றும் புதிதல்ல என்பதால் மென் சிரிப்பைத் தன் உதடுகளில் தவழவிட்டாள் அவள்.
“வாவ்! ஸ்மைலுக்கே ஸ்மையில் கத்துக்குடுக்கும் பேரழகியே! இந்த மூன்று மாதங்களும் உன்னோடு செலவு செய்யக் காத்திருக்கிறேன்!” என்று மேடை வசனம் பேசிக்கொண்டிருந்தான் அஜய் என்று நாமம் சூட்டப் பெற்ற அவன். சாந்தினி, ரதன், ராகவன், தாரா என்று இன்னும் பலமுகங்கள் அடுத்தடுத்து வந்து சேர்ந்தன.
அத்தனைபேரும் கமராக் கண்களுக்கும் திரை வெளிச்சத்துக்கும் பரிச்சயமானவர்கள் என்பது பார்த்ததுமே தெரிந்தது. அவர்களுக்குள் பரிட்சயமும் இருந்தது. ஒரு சிலரை மட்டும் விளம்பரங்களிலும் சீரியல்களிலும் கண்டிருக்கிறாள். மற்றும்படி அவள் ஒருத்திதான் அங்கே புதுப்பூ.
அவர்கள்தான் இனிமேல் அவளுக்கு நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லாமே. சற்றே நடுக்கமாகத்தான் உணர்ந்தாள். அவர்களைப்போல நுனி நாக்கில் ஆங்கிலம் வராது. தன்னை அலங்கரித்துக்கொள்ளத் தெரியாது. ஆனால், அவர்களுக்குச் சமனாக ஈடுகொடுக்க வந்திருக்கிறாள். அதற்குக் காரணம் அவளின் தன்னம்பிக்கை, என்னால் முடியும் என்கிற தைரியம்.
வேலைக்கு என்று போய் வந்தாலும், இதுவரை வீட்டைத் தாண்டித் தங்கியதில்லை. எதுவானாலும் அப்பா வருவார் என்கிற ஒரு நம்பிக்கை பின்னணியில் இருந்திருக்கிறது. இங்கே அதற்குச் சாத்தியமில்லை. எதுவானாலும் அவளே எதிர்கொள்ள வேண்டும். அவளே அவளுக்குப் பாதுகாப்பு, துணை, ஆசான் எல்லாம். இங்கிருப்பவர்களில் எத்தனைபேர் அவளின் அலைவரிசையில் பொருந்தி வருவார்கள்?
மனம் முழுக்க ஒருவிதப் பயமும் தடுமாற்றமும் நிறைந்திருந்தாலும், காட்டிக்கொள்ளாமல் வளைய வந்தாள் பிருந்தா.
அதோடு அந்தக் காட்சி முடிந்திருந்தது.
இதற்காக என்றே பிரத்தியேகமாக வீடு போன்று அற்புதமான ஒரு செட் போட்டிருந்தார் விக்ரமன். அஜய் என்கிற பாத்திரமாக ஜேகேயும், ரதன் என்று ஷியாமும் வந்தான். மற்றைய பாத்திரங்களாகத் துணை நடிகர்கள் வந்தார்கள்.
அக்காட்சியை நடித்து முடிப்பதற்குள் பெரும்பாடு பட்டுப்போனாள் அனன்யா. அழுத்தக்காரனாக அகம்பாவம் நிறைந்தவனாகப் பார்த்தவனை விளையாட்டுப் பிள்ளையாக பார்த்தபோது அவளால் சிரிப்பை அடக்கவே முடியவேயில்லை. அதுவும், கை தரத் தயங்கியவன் அவளின் அழகில் மயங்கி அவளைசி சுற்றிச் சுற்றி வரவேண்டும்.
அடக்கமுடியாத சிரிப்பில் இதழ்கள் விரிந்திருக்க, அவனைப் பார்த்தாள். வெகு மும்முரமாக யாருடனோ புளூடூத்தில் என்னவோ பிஸ்னஸ் பேசிக்கொண்டு இருந்தான் அவன். வெளிநாடுகளின் பெயரெல்லாம் அடிபட்டது.
அப்படியானவன் ஏன் நடிக்க வந்தான்?
என்னவோ சொல்லிக்கொண்டு திரும்பியவன், அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து புருவம் சுருக்கினான். சட்டென்று கையிலிருந்த காரின் கீயை ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டான்.
அடப்பாவி! என்னை என்ன கார் திருடி என்று நினைச்சானா? இவனை.. ஏதாவது செய்யவேண்டும் என்று அப்போதே முடிவு கட்டிக்கொண்டாள் அனன்யா.
காட்சி பதினொன்று
அவள்தான் அங்கிருப்பவர்களிலேயே சின்னவள். அதனாலோ என்னவோ, அவளை நன்றாகவே வேலை வாங்கினர் மற்றவர்கள். எதிர்த்துக் கதைக்க மனம் உந்தினாலும், சமாளித்துப் போக வேண்டும்; அதுதானே அவளுக்கான சவால் என்று பொறுத்துக்கொண்டாள்.
அங்கு வந்து ஐந்து நாட்கள் கடந்திருந்தது.
ஆர்வமாக வந்தது போல் அல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுகொண்டிருந்தாள் பிருந்தா. மனம் திறந்து யாருடனும் கதைக்கப் பயந்தாள். முதலில் அப்படிக் கதைக்கும் அளவுக்கு மனதுக்கு நெருக்கமாக அவர்களை உணர முடியவில்லை. பெண்கள் கூடப் புகைத்தனர். சுற்றிச் சுற்றி வட்டமடிக்கும் கேமராக்களைப் பார்த்தாலே, ஆடை விலகிவிடுமோ, எதுவும் தெரிந்து விடுமோ என்று பயந்தாள். உலகம் முழுக்கப் பரவியிருக்கும் தமிழர்கள் பார்க்கும் ஷோ ஆயிற்றே. அப்பாவும் பார்ப்பார். அண்ணா பார்ப்பான். தம்பி தங்கைகள் பார்ப்பார்கள். எதைச் செய்தாலும் பின்னணி இசைபோல, ‘கவனமா இரு கவனமா இரு’ என்று அபாயமணி அடித்துக்கொண்டே இருந்தது.
பார்வையில், பேச்சில், சிரிப்பில், நடத்தையில் என்று அனைத்திலும் எப்போதும் கவனமாக இருப்பது அவ்வளவு இலகுவாகவே இல்லை. பெரும் கொடுமையாகத் தெரிந்தது அந்த வீடு. வீட்டுக்கு ஓடிவிட முடிந்தால்? ‘அப்பா…’ மனம் தனிமைக் கொடுமையில் துடித்தது.
அன்று, தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பிருந்தா. அருகில் உதவிக்கொண்டிருந்த ரதன், கோப்பைத் தண்ணீரை தட்டி விட்டுவிடவும், “ஹேய்! என்ன செய்ற?” என்றபடி, பாட்டா செருப்போடு நின்றவள் வழுக்கி விடுவோமோ என்று பயந்து, மெல்ல நடக்க,
“ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
ஆஹா மெல்ல நட மெல்ல நடமேனி என்னாகும்” என்று, கையால் தாளம் போட்டபடி பாடிக்கொண்டிருந்தான் அஜய்.

