எண்ணமெல்லாம் நீ 10 – 1

அத்தியாயம் 10

 

 

அன்றைக்குப் பிறகு அதிகரித்துவிட்ட அழுத்தத்தால் உதயனால் வேலையில் கூடக் கவனம் செலுத்த முடியவில்லை. சுவிஸிலேயே மாப்பிள்ளை பார் என்று சீராளனிடம் அவள் சொன்னதே அவனுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியிருந்தது. ஆனாலும் அவள் கோபத்தில் இருக்கும் நியாயமும், அவன் நடந்துகொண்ட முறையில் இருந்த தவறும் அவனைப் பொறுமையாக இருக்க வைத்திருந்தன.

 

அதைவிட, கொஞ்ச நாள்கள் போக அவள் கோபம் குறையும், அப்போது பேசுவோம், இறப்பு வீட்டிலேயே அப்படி அவனைச் சுற்றி சுற்றி வந்தவள் அவனைத் தாண்டிப் போக மாட்டாள் என்றுதான் எண்ணியிருந்தான்.

 

ஆனால், அன்றைய அவளின் செய்கை, இல்லை, இது பேசித் தீர்த்தே ஆகவேண்டிய விடயம் என்று அழுத்திச் சொல்லிற்று.

 

இதற்குள் ஷர்மி வேறு அபிக்கு ஒரு சம்மந்தம் சரியாக வரும் போலிருக்கிறது என்றும், பெடியனின் புகைப்படத்தை அவளுக்கு அனுப்பிக் கேட்டபோது, மேலே பேசச் சொல்லி அவளும் சொன்னாளாம் என்று சொன்னதும் கொதித்துப்போனான்.

 

அதற்குமேல் தாமதிக்க விரும்பாமல் இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு அபி வேலை செய்யும் அலுவலகத்துக்கே வந்து சேர்ந்தான்.

 

அப்படி அலுவலகத்துக்கே வந்து நிற்பான் என்று அபிராமி எதிர்பார்க்கவே இல்லை. திகைத்து நின்றவளிடம், “உன்னோட எனக்குக் கதச்சே ஆகோணும் அபி. கதைக்காமப் போகமாட்டன். அதால சொல்லிப்போட்டு வா!” என்றான் உறுதியான குரலில்.

 

அது அலுவலகமாகப் போனதாலும், அங்கிருந்தவர்கள் இவர்களைக் கவனிப்பதாலும் அவளால் தவிர்க்க முடியாமல் போனது. அதில், அவனை அழைத்துக்கொண்டு கண்டீனுக்குச் சென்றாள்.

 

“சொல்லுங்க, என்னத்துக்கு என்னைப் பாக்க இங்க வந்திருக்கிறீங்க.” எதிரெதிர் இருக்கையில் அமர்ந்துகொண்டதும் தேநீருக்குச் சொல்லிவிட்டு நேராக வினவினாள்.

 

அவளின் அந்த நேர் பார்வையும், ஒட்டாத குரலும் அவனுக்குப் பிடிக்கவில்லை. இந்தளவில் அவனைத் தள்ளி நிறுத்த அவளால் முடிகிறதா என்ன? அவளையே பார்த்தான். அவளும் பார்வையை அகற்றிக்கொள்ளவில்லை. தேநீர் வந்தது. அவன் புறமாக ஒரு கோப்பையை நகர்த்தி வைத்துவிட்டுத் தன்னுடையதை எடுத்து அருந்தத் தொடங்கினாள்.

 

அவளின் ஒவ்வொரு செய்கையும் நீயோ, உன் வரவோ என்னைப் பாதிக்கவே இல்லை என்று பறைசாற்ற முயன்று கொண்டிருந்தன.

 

ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “உனக்குக் கலியாணம் பேசுப்படுதாம். நீயும் ஃபோட்டோ பாத்து ஓம் எண்டு சொல்லிட்டியாம்.” என்றான் அவன்.

 

“ஓம், உண்மைதான். இப்ப என்ன அதுக்கு?” இலேசான புருவச் சுளிப்புடன் அவள் கேட்ட விதம், அவன் பொறுமையைப் பறிக்கப் பார்த்தது.

 

அவனிடமே இப்படிச் சொல்ல என்ன தைரியம் இவளுக்கு?

 

“அப்ப நான்?” என்றான் சீற்றத்தை அடக்கி.

 

 

“உங்களுக்கு என்ன? நேர்மையான, நியாயமான, நாடகம் போடாத, ஆணவம் இல்லாத நல்ல ஒருத்தி வருவாள். அவளைக் கட்டி நல்லா இருப்பீங்க.” உதட்டோரம் வளையச் சொன்னாள் அவள்.

 

அவன் தடுமாறிப்போனான். “அபி, அண்டைக்கு ஏதோ கோவத்துல…” என்றவனைக் கையை உயர்த்தித் தடுத்தாள் அபிராமி.

 

“அதெல்லாம் முடிஞ்ச கதை. அதைப் பற்றிக் கதைக்க எனக்கு விருப்பம் இல்ல. எனக்கும் உங்கட நண்பின்ர வயசுதான். அவளுக்குப் பிள்ளையே இருக்கு. எனக்கு இன்னும் கலியாணமே ஆகேல்ல. அதால இப்பவும் கலியாணம் பேசாம வேற எப்ப பேசுறது?” என்று கேட்டவளின் கழுத்தைப் பிடிக்கலாமா என்கிற அளவுக்கு அவன் கொதித்துப் போனான்.

 

“அதுசரி! வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மட்டுமே கழுத்த நீட்டுவம் எண்டு சபதம் எடுத்த ஆக்கள்தானே நீங்க எல்லாம்.” என்றான் எரிச்சலோடு.

 

“ஓம் தான். இப்ப என்ன அதுக்கு?”

 

அவள் எதற்கும் அசருவதாக இல்லை என்று புரிந்தது. சில கணங்களுக்கு அவளையே பார்த்தவனுக்கு இப்படி மாறி மாறி மல்லுக்கட்டுவதில் அர்த்தம் இல்லை என்று விளங்கிற்று. அதில், “நீ என்னட்ட சொன்ன விருப்பம்? எனக்கும் உன்னப் பிடிச்சிருக்கு எண்டு சொன்னேனே.” என்றான் தன்மையாக

 

அவ்வளவு நேரமாக இல்லாமல் அவள் முகம் உணர்வுகளின் பேரலையில் சிவந்தது. சில நொடிகளுக்கு அருந்திக்கொண்டிருந்த கோப்பையிலேயே பார்வையைப் பதித்திருந்தவள் நிமிர்ந்து, “நீங்க அது மட்டுமா சொன்னனீங்க உதயன்?” என்றாள் அவன் விழிகளையே பார்த்து.

 

“அபி…”

 

“நடந்தது எல்லாமே நல்லதுக்குத்தான். இல்லாம நீங்க என்னைப் பற்றி என்ன நினைச்சு வச்சிருந்திருக்கிறீங்க எண்டு எனக்குத் தெரிய வந்திருக்காதுதானே?” என்றவள், “அண்டைக்கு நீங்க சொன்ன பதிலிலேயே என்ர விருப்பமும் காணாமப் போயிற்றுது. அதுதான் அண்ணா பாத்த பெடியனுக்கு ஓம் எண்டு சொன்னனான். சோ, நான் எல்லாத்தையும் கடந்து வந்திட்டன்.” என்றாள் பிசுறு தட்டாத குரலில்.

 

“ஓ! அப்ப நீ எல்ல்லாத்தையும் கடந்து வந்திட்டாய்?”

 

அவன் இழுத்து வினவிய விதத்தில் அவள் முகம் மாறப் பார்த்தது. ஆனாலும் அடக்கி அமர்ந்திருந்தாள்.

 

“அப்ப உனக்கு என்னைப் பிடிக்கேல்ல?”

 

“இல்ல!”

 

“நான் வேண்டாம் உனக்கு?”

 

“வேண்டாம்.”

 

அவளின் ஒவ்வொரு மறுப்பும் அவனுக்குள் அனலைப் பரப்ப ஆரம்பித்திருந்தன.

 

“சொல்லுறதை என்னைப் பாத்துச் சொல்லு!” என்றான் எரிச்சலோடு.

 

விலுக்கென்று நிமிர்ந்து, “எனக்கு உங்களப் பிடிக்கேல்ல. நீங்க எனக்கு…” எனும்போதே அவள் விழிகள் கரித்தன. முகத்தைத் திருப்பிக்கொண்டாள். உள்ளத்தில் பெரும் இரைச்சல். இன்னும் அவன் மனத்தை நோகடிக்க வேண்டும் என்றுதான் ஆவேசம் எழுந்தது. அதோடு சேர்த்துத் தொண்டை அடைத்து, சுவாசமும் தடைப்படும் உணர்வு அவளுக்கு.

 

அவளையே பார்த்திருந்தவனுக்கும் உள்ளத்தில் பெரும் தவிப்புத்தான். மேசையில் இருந்த அவள் கரத்தை மெல்லப் பற்றினான்.

 

படக்கென்று இழுத்துக்கொண்டாள் அபிராமி. இப்போது அழுகை போய்க் கோபம் வந்தது.

 

உன்னைப் பிடிக்கும், ஆனால், கட்டமாட்டேன் என்றால் ஒரு பெண்ணை எந்தளவில் பாதிக்கும் என்று தெரியாதா இவனுக்கு? இப்போது வந்து கையைப் பிடிக்கிறான்!

 

அவள் விருட்டென்று எழுந்துகொள்ள, “அபி ப்ளீஸ்! நான் உனக்கும் சேர்த்துத்தான் கதைக்க வந்திருக்கிறன். நான் அவசரப்பட்டு, கோபப்பட்டு, வார்த்தைகளை விட்டதால இப்பிடி ரெண்டு பேரும் காயப்பட்டு நிக்கிற மாதிரி நீயும் நடக்காத. பழைய உன்னப் பற்றின பயம் எனக்கு இருந்தது உண்மைதான். ஆனா, அது பிழை எண்டு அண்டைக்கே விளங்கிட்டுது. நான் கதைச்சது எல்லாம் எவ்வளவு பெரிய பிழை எண்டுறதும்…” என்றவனை இப்போதும் இடைமறித்து, “உங்களை எனக்குப் பிடிக்கும், உங்களை மிஸ் பண்ணிடவே கூடாது எண்டு நினைச்சனான் எண்டு உங்களுக்குத் தெரியுமா, இல்லையா?” என்று தீர்க்கமாய் வினவினாள் அவள்.

 

“தெரியும்.”

 

“அப்பிடியான என்னட்ட வந்து உன்னப் பிடிக்கும், ஆனாலும் கட்ட மாட்டன் எண்டு சொல்லுறீங்க. அது என்னை எவ்வளவுக்கு வருத்தும் எண்டு யோசிக்கவே இல்லையா நீங்க?”

 

“…”

 

“அது எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் எண்டு தெரியுமா உங்களுக்கு?”

 

“அபி”

 

“இல்ல, நானா வந்து விருப்பத்தைச் சொன்னதால குறைஞ்சு போய்ட்டேனா?”

 

“அபி ப்ளீஸ்…” அவனுக்கே தாங்க முடியவில்லை.

 

“இதையே உங்கட நண்பிக்கு ஆராவது சொன்னா சும்மா விடுவீங்களா?”

 

சட்டென்று அவன் தாடை இறுகி, முகத்தில் கோபம் படர்ந்தது. “உன்னைப் பற்றி மட்டும் கதை!” என்றான் அழுத்தமாக.

 

அவள் வறட்சியாகச் சிறு புன்னகை சிந்தினாள். “அவளைப் பற்றிச் சொல்லவே உங்களுக்குக் கோவம் வருது. ஆனா, உங்களுக்குப் பிடிச்ச ஒருத்திய உதாரணமாச் சொல்லித்தான் என்னை உங்களுக்கு விளங்க வைக்கோணும் எண்டுறதே எனக்கு வலிக்குது. அப்பிடியான ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம்.” என்று உறுதியாகச் சொன்னவளையே இமைக்காது பார்த்தான் உதயன்.

 

நீ வேண்டாம் என்று அவள் மறுக்கிற ஒவ்வொரு முறையும் அவன் உள்ளம் பெரிதாகக் காயப்பட்டுக்கொண்டே போயிற்று.

 

error: Alert: Content selection is disabled!!