அத்தியாயம் 11
அலுவலகத்தை விட்டு வெளியே வரும் வரையில் அமைதியாக அவனோடு வந்தவள், வெளியே வந்த கணத்தில், “விடுங்க நீங்க. எனக்கு மாப்பிள்ளை பாத்தாச்சு. நான் இப்ப கமிட்டட்!” என்று அவனிடமிருந்து தன் கையை உருவ முயன்றாள்.
“அதுக்கு முதலே என்னோட கமிட் ஆயிட்டாய். உன்ர பழைய காதலனும் நான்தான். முதல் காதலும் நான்தான்.” என்றதும் அவளுக்குக் கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தன.
ஆனாலும் அவன் மீதிருந்த ஆதங்கம் இன்னுமே மறையாததில், “இன்னும் எனக்கு உங்களில கோபம் போகேல்ல. அவன் என்ன கதைச்சான், என்ன நடந்தது எண்டுறது வேற. அவன் பொறுக்கி. நல்லவன் மாதிரி நடிக்கிறவன். ஆனா, நீங்க கதைச்சது? அண்டைக்கு எனக்கு, அவனுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் தெரியேல்ல. அவன் என்ர உடம்பக் காயப்படுத்தினான். நீங்க மனதை. அவ்வளவுதான் வித்தியாசம்.” என்றதும் நின்றுவிட்டான் உதயன்.
உடம்பைக் காயப்படுத்தினான் என்ற வார்த்தைகள் திரும்பிச் சென்று மாதவனை நொறுக்கிப் போடும் அளவுக்கு வெறியைக் கிளப்பிய அதே வேளை, நீயும் அப்படித்தான் என்றது இன்னுமே சுட்டது. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் மீண்டும் இழுத்துக்கொண்டு நடந்தான்.
“ஏறு!” என்றான் தன் பைக்கை காட்டி.
“அப்பிடி எல்லாம் வரேலாது!” முகம் திரும்பியபடி சொன்னாள். அவளுக்கு அவள் வெளிப்படையாகச் சொல்லியும் அதற்கு ஒன்றும் சொல்லாதவனின் செய்கையில் மனம் சுணங்கிப் போயிற்று.
“எனக்கு உன்னோட கதைக்கோணும் அபி. அதுக்குப் பிறகுதான் ரெண்டு வீட்டிலயும் கதைக்கோணும். ப்ளீஸ்மா!” அவளின் மனச் சுணக்கத்தை உணர்ந்தவன் கெஞ்சினான்.
“என்ர ஸ்கூட்டி நிக்குது.”
“திரும்பி வீட்டை போகேக்க வந்து எடுத்துக்கொண்டு போவம். இப்ப என்னோட வா.”
அதற்குமேல் அவளும் மறுக்கவில்லை. அவன் பைக் புறப்பட்டது. இதுவரையில் தந்தையைத் தவிர்த்து இப்படி ஒரு ஆணின் பைக்கில் அவள் பயணித்ததில்லை. சீராளன் உட்பட!
அவன் எங்குச் செல்கிறான் என்று தெரியாததால், “எனக்குப் பயமா இருக்கு. எங்க கடத்திக்கொண்டு போறீங்க?” என்றாள் அவன் காதோரமாக.
“மாதவனுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை எண்டு சொன்னியே. அதான் அவன் பாத்த அதே வேலையப் பாப்பம் எண்டு கூட்டிக்கொண்டு போறன்.” அவன் சொல்லி முடிக்க முதலே படார் என்று அவன் முதுகில் ஒன்று போட்டாள் அபிராமி.
“அவனும் நீங்களும் ஒண்டு எண்டு சொல்லேல்ல. அவன் செய்ததுக்கும் நீங்க செய்ததுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை எண்டு சொன்னனான்.”
“எல்லாம் ஒண்டுதான்.”
“ப்ச்! ஹெல்மெட் வேற இல்ல. என்ரய எடுத்துக்கொண்டு வர விடவும் இல்ல. பயமா இருக்கு. ஆரும் பாத்தாலும் உங்களத் தெரியாது. சீராளன்ர தங்கச்சி ஆரோ ஒருத்தனோட பைக்ல போறா எண்டு என்னைத்தான் சொல்லுவீனம்.”
அவள் தந்த விடாத தொந்தரவில் ‘இவள் ஒருத்தி!’ என்று சலித்தாலும் அவள் சொன்னதில் இருந்த நியாயத்தில் அப்படியே பைக்கை திருப்பி, ஒரு கடையில் ஹெல்மெட் ஒன்றை வாங்கி, அவள் தலையில் மாட்டிவிட்டான்.
அவன் அழைத்துச் சென்றது வவுனியா, பாவற்குளத்துக்கு.
“இவ்வளவு தூரம் என்னத்துக்கு?” என்ற அவளின் புறுபுறுப்பை அவன் காதில் விழுத்தவேயில்லை.
ஆழம் மிகுந்த அந்தக் குளம், சத்தம் சாவடியின்றி மிகுந்த அமைதியோடு இருந்தது. கருங்கற் பாறைகளால் அமைந்த கரையும், அதனிடையே வளர்ந்து நின்று காற்று வீசிய மரங்களும் அமைதியான அழகைத் தந்தபோது மெல்லிய அச்சத்தையும் தந்தது.
என்னதான் அவன் மனம் கவர்ந்தவன் என்றாலும் அவனோடு தனியாக வந்ததும், அந்த ஆளரவமற்ற குளத்துக்கரையும் அவளைப் படபடக்க வைத்தன.
“இஞ்ச ஏன் வந்திருக்கிறம்?” என்று மெல்ல வினவினாள்.
“சும்மா பைக்ல வாறதுக்கே அவ்வளவு பயந்த உம்மை வேற எங்க கூட்டிக்கொண்டு போய்க் கதைக்கிறது?” என்று திருப்பிக் கேட்டுவிட்டு, மர நிழல் நன்றாகப் படும் ஒரு கருங்கல் பாறையில் அமர்ந்துகொண்டு, அவளுக்கும் தட்டிக் காட்டினான்.
போதியளவு இடைவெளி விட்டு அமர்ந்தவளால் அவன் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை. கூச்சமா, தடுமாற்றமா சொல்லத் தெரியவில்லை. முதல் தனிமை கொஞ்சம் தடுமாற வைத்தது.
அவனுக்கும் அதே மாதிரியான ஒரு நூதன உணர்வுதான். அதை அனுபவித்தபடி மென் சிரிப்புடன் அவளையே பார்த்திருந்துவிட்டு, “அபி!” என்று மெல்ல அழைத்தான்.
அவள் திரும்பிப் பார்த்தாள்.
“அண்டைக்கு நடந்ததுக்கு உண்மையா சொறி!”
அவள் முகம் மாறியது. ஒன்றுமே சொல்லாமல் பார்வையைத் திருப்பிக் குளத்தில் அலையவிட்டாள்.
“இன்னும் கோவமா?”
“கோவமா எண்டு தெரியாது. ஆனா… என்னட்ட முதல் இருந்த ஏதோ ஒண்டு இப்ப இல்ல உதயன். அது உங்களில இருந்த மலையளவு நம்பிக்கையா, இல்ல தங்கு தடையில்லாத விருப்பமா எண்டு சொல்லத் தெரியேல்ல.” அவளால் அதை இயல்பாகச் சொல்ல முடியாதபோதும் சொன்னாள்.
அவன் முகம் மாறிப்போனது. ஆனால், அவள் சும்மா சொல்லவில்லை. இறப்பு வீடாக இருந்தபோதிலும் அவனைக் கண்டதும் அவள் கண்களில் வரும் அந்த மின்னலும் பளபளப்பும் இப்போது இல்லை என்பதை அவனும் உணர்ந்துதான் இருந்தான்.
அதை ஜீரணித்து உள்வாங்குகிறவன் போன்று தலையை இரண்டு கைகளாலும் கோதிக்கொடுத்தபடி ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டான்.
“ஷர்மிய முதல் முதல் பயணம் அனுப்பிப்போட்டு வரேக்க வெறுப்போட என்னை ஒரு பார்வை பாத்தனீங்க. அந்தப் பார்வை ‘நீ எல்லாம் என்ன பொம்பிளை’ எண்டு கேட்ட மாதிரியே இருந்தது. அந்தப் பார்வைதான் என்னை ஒரு கலியாண வாழ்க்கைக்க போக விடாம தடுத்துக்கொண்டே இருந்ததும்.” எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னவளை அதிர்ந்துபோய்ப் பார்த்தான் உதயன்.
அந்த நாள்களில் அவள் மீது அதீத வெறுப்புக் கொண்டிருந்தான்தான். ஆனால், அவள் சொல்லும் பார்வை எல்லாம் அவன் நினைவிலேயே இல்லை.
“பிறகு எத்தினையோ வருசத்துக்குப் பிறகு தயாபரி மாமின்ர செத்தவீட்டில வச்சுத்தான் உங்களை முதல் முதல் பாத்தனான். அது வரைக்கும் நீங்க நிக்கிறீங்க எண்டு தெரிஞ்சாலே சயந்தன் அண்ணா வீட்டுக்கு வரவே மாட்டன். அப்பிடியே வந்தாலும் உங்களுக்கு முன்னால வரமாட்டன். திரும்பவும் அப்பிடி என்னைப் பாத்திடுவீங்களோ எண்டு அவ்வளவு பயம்.”
அவனால் அவள் சொல்வதை எல்லாம் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சி விலகாமல் அவளையே தொடர்ந்து பார்த்திருந்தான்.
“செத்த வீட்டில மாமியத் தூக்கேக்க நீங்க அழுதது… எப்பிடிச் சொல்ல? ஓடி வந்து ‘அழாதீங்க ப்ளீஸ்’ எண்டு உங்கள என்ர தோள்ல சாய்க்கோணும் மாதிரி இருந்தது. எனக்கே என்னை நினைச்சு அதிர்ச்சியாப் போச்சு…” என்று அவள் சொல்லி முடிக்க முதலே எழுந்து வந்து, அவளோடு நெருக்கத்தில் அமர்ந்து, அவள் கரம் பற்றி, “சொறி!” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.
விழிகளில் மெல்லிய கோடாகக் கண்ணீர் அரும்ப, “அதே நீங்க உங்களுக்குச் சாப்பாடு கொண்டுவந்து தந்த நேரம் இயல்பா பாத்துச் சிரிச்சீங்க, என்னோட நல்ல மாதிரிக் கதைச்சீங்க. நன்றி கூடச் சொன்னனீங்க உதயன். அண்டைக்கு எனக்கு அழோணும் மாதிரி, சிரிக்கோணும் மாதிரி… எனக்குச் சொல்லத் தெரியேல்ல, அப்பிடி ஒரு சந்தோசம். என்னவோ அவ்வளவு காலமும் என்னப் போட்டுக் கட்டி வச்ச தளை எல்லாம் அறுந்துபோன மாதிரி.” என்று அவன் முகம் பார்த்தபடியே அவள் சொன்னபோது, அவனுக்குப் பேச்சே வரமாட்டேன் என்றது.
தன்னை மீறி அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான். கூடவே, எப்படி இப்படித் திடீர் என்று நேசம் சொன்னாள் என்கிற கேள்விக்கான பதிலும் கிடைத்திருந்தது.
“ஆனா நீங்க எவ்வளவு ஈஸியா என்னத் தூக்கி எறிஞ்சிட்டீங்க…” அழுகையும் ஆற்றாமையுமாக அவன் மீதே பார்வையைப் பதித்து அவள் சொன்னபோது, “அபி ப்ளீஸ்!” என்றபடி இன்னும் இறுக்கமாக அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான் உதயன்.
“இதெல்லாம் எனக்கு எப்பிடித் தெரியும் சொல்லு? ஆனாலும் சொறி.”
ஒரு கணம் அவன் தோளில் சாய்ந்து அழ வேண்டும் போல் தோன்றினாலும் தன்னை அடக்கிக்கொண்டு, வேகமாக அவனிடமிருந்து விலக முயன்றாள்.
அவன் விடவில்லை. “கைக்கையே இரு. இனி உன்னைத் தள்ளி இருக்க விடமாட்டன்!” என்றான் பிடிவாதத்துடன்.
“என்ன இது? பொது இடத்தில வச்சு…” முதல் தனிமையிலேயே அவன் காட்டும் இந்த நெருக்கம் அவளால் முழுமனத்தோடு அனுபவிக்க முடியவில்லை. ஏதோ ஒரு தடுமாற்றம்.
“எங்களைச் சுத்தி ஒருக்காப் பார். காக்கா குருவி கூட இல்ல.”
“அதுக்காக இப்பிடி இருக்கிறதா?” என்று அவள் விலகி அமர, அவனும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், அவள் கரத்தைத் தன் இரு கரங்களுக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்.
இருவருக்கும் மேலே பேச வரவில்லை. உள்ளங்கள் நிறையப் பேசின. மனங்களின் பிணைப்பு நெருக்கமாயிற்று. அவனுடைய கதகதப்பான கரங்கள் அவள் கரம் வழியே தரும் அந்த ஆறுதலில் அவள் காயங்கள் கூட மெல்ல மெல்ல ஆறும் உணர்வு. மெல்லத் திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
புருவங்களை மாத்திரம் உயர்த்தி என்ன என்று வினவினான் அவன்.
ஒன்றுமில்லை என்று வேகமாகத் தலையசைத்துவிட்டு அவள் முகம் திருப்ப முயல, அவள் கரத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான் அவன்.
“உதயன்!” அதட்டியபடி கையைப் பிடுங்கிக்கொள்ள முயன்றவளின் செவி மடல்கள் சூடாகிப் போயின.
“இந்த உதயனைப் பிடிச்சிருக்கா?” மென் சிரிப்பில் உதடுகள் விரிய வினவினான் அவன்.
“பிடிக்காமத்தான் இவ்வளவு தூரம் தனியா உங்களோட வந்திருக்கிறனா?”
“எனக்கு நேரடியாப் பதில் சொல்லு அபி.”
“சும்மா தந்தாலும் வேண்டாம் எண்டு சொன்னீங்க.”
“கட்டினா உங்களைத்தான் கட்டுவன் எண்டு சொல்லுற அளவுக்கெல்லாம் நீங்க பெறுமதியே இல்ல எண்டு நீயும்தான் சொன்னனீ.”
“அது கோவத்துல.”
“அதேதான் எனக்கும்.”
இருவர் முகத்திலும் மங்காத சிரிப்பு. ஆனாலும் மாறி மாறிச் சண்டையிட்டார்கள்.
“அண்ணா ஓம் எண்டு சொல்லுவார்தானே உதயன்?” என்று எதிர்பார்ப்புடன் வினவினாள்.
“மறுக்கிறதுக்கு அவர் எனக்கு நியாயமான காரணம் சொல்லோணும் அபி!”
அவன் குரலில் தெரிந்த அழுத்தத்தில் கலக்கத்தோடு அவனைப் பார்த்தாள் அபிராமி.
“நானும் நீயும் ஸ்கூல் படிக்கிற பிள்ளைகள் இல்ல. இல்ல, எதிர்காலத் துணையைத் தெரிவு செய்யத் தெரியாத வயதிலயும் இல்ல. படிச்சிருக்கிறம், வயது காணும். வேல இருக்கு, குறை சொல்லுறதுக்கு ஒண்டும் இல்ல. என்ர குடும்பமும் மரியாதையான குடும்பம்தான். இவ்வளவும்தான் ஒரு கலியாணத்துக்கு அடிப்படை எண்டு நான் நினைக்கிறன். அதத் தாண்டி உன்ர அம்மாவோ அண்ணாவோ காசு வேணும், வசதி வேணும், வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத்தான் குடுப்பம் எண்டு எதையாவது சொன்னா நீ என்னோட வந்திடோணும் அபி.” என்று அவன் சொல்ல சொல்ல அவளுக்குப் பயத்தில் அடி வயிறு கலங்கும் உணர்வு.
“என்ன பார்வை பிழையா இருக்கு?”
“நீங்க சொல்லுறது எல்லாமே சரிதான். அதே நேரம், என்னால வீட்டை விட்டு வெளில வரேலாது உதயன். கட்டினா உங்களத்தான் கட்டுவன், இல்லையா கலியாணம் இல்ல என்ர வாழ்க்கையில.” கலக்கத்துடன் சொன்னாள் அவள்.
“கடைசி வரைக்கும் உன்ர வீட்டில ஓம் எண்டு சொல்லாட்டி?” புருவங்கள் ஒரு மாதிரியாகச் சுளிக்க வினவினான் அவன்.
“ப்ளீஸ் உதயன். இப்பிடி எல்லாம் சொல்லாதீங்க. சம்மதிப்பீனம் எண்டுதான் நம்புறன். இல்லாட்டியும் சண்டை பிடிக்காம, எப்பிடியாவது கதைச்சு ஓம் எண்டு சொல்ல வைங்க.” என்றாள் இரைஞ்சலாக.
அவன் முகம் திருப்பி, ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டான்.
“அண்ணா மறுப்பார் எண்டு நான் நினைக்கேல்ல. அப்பாவும் அப்பிடித்தான். ஷர்மிக்குச் சந்தோசமா இருக்கும். அம்மாதான் ஏதாவது சொல்லுவா. ஆனா நாங்க பயப்பிடுற அளவுக்குப் பெருசா எதுவும் நடக்காது எண்டுதான் நினைக்கிறன். ஷர்மியை விருப்பம் இல்லாட்டியும் அண்ணாக்காக ஓம் எண்டுதான் சொன்னவா. எனக்கும் அதேதான் நடக்கும். அதால நீங்க சண்டைக்குப் போகக் கூடாது.”
“போனா என்ன செய்வாய்?” அவனுக்கும் வில்லங்கமாகச் சண்டைக்குப் போக ஆசையா என்ன? அவள் திரும்ப திரும்ப சொன்ன விதம் அப்படிக் கேட்க வைத்தது.
“போனா பேசாம வெளிநாட்டு மாப்…ம்ம்ம்…” அதற்குமேல் அவளால் பேச முடியாமல் போயிற்று. அமர்ந்திருந்த அந்தக் கல்லிலேயே அவளைச் சாய்த்து, அவள் இதழ்களைக் கொய்திருந்தான் அவன்.
திகைத்து விழித்தவள் அவனைத் தள்ள எவ்வளவோ முயன்றும் முடியாமல் துவண்டாள்.
அவனாக விடுவித்து, “இப்ப சொல்லு! சண்டைக்குப் போனா என்ன செய்வாய்?” என்று அவள் மூக்கோடு மூக்குரசும் தூரத்தில் முகத்தை நிறுத்தி வினவினான்.
அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. கூடவே அவன் வேகத்தையும். ஆனாலும் அவனிடம் தோற்கப் பிடிக்காமல், “போனா வெளிநா…” என்றவளை இப்போதும் சொல்லி முடிக்க விடவில்லை அவன்.
“உதயன், இது பப்ளிக் பிளேஸ்.” அவன் விடுவித்தபோது அதட்ட முயன்றாள்.
“திரும்பச் சொல்லு! சண்டைக்குப் போனா என்ன செய்வாய்?” இப்போது அவனிடத்தில் அதற்கான கோபமே இல்லை. கள்ளுண்ட வண்டின் மயக்கத்தில் குரல் கிறங்கி ஒலித்தது.
அவன் போக்குப் புரிந்துவிட்டதில் அவன் தோளில் ஒரு அடியைப் போட்டுவிட்டு, அந்தத் தோளிலேயே முகத்தை மறைத்துக்கொண்டாள் அவள்.

