எண்ணமெல்லாம் நீ – 13

அத்தியாயம் 13

 

 

உதயன் உச்சக்கட்டச் சினத்தில் இருந்தான். சீராளன் எடுத்துத் தேவகி அம்மாவின் விருப்பம்பற்றிச் சொல்லவும், “நான் உங்கட தங்கச்சியக் கட்டி வாழ ஆசைப்படுறனே தவிர, உங்கட வீட்டுக்கு விலைபோக இல்ல. என்ர இடத்தில நீங்க இருந்தா உங்கட சுயமரியாதை, தன்மானம் எல்லாம் என்ன சொல்லும் எண்டு சொல்லுங்கோ சீராளன்.” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி.

 

சீராளனுக்குக் கோபம்தான் வந்தது. ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்தியபடி, “என்னைப் பற்றின கதை இஞ்ச தேவை இல்ல உதயன். ஒரு தாயா அம்மா எதிர்பாக்கிறதில பிழை இல்லையே. அதவிட சுயமரியாதை, தன்மானம் எல்லாம் அடி வாங்கிற அளவுக்கு நாங்க என்ன உங்களை எங்களுக்கு அடிமையா இருங்கோ எண்டா சொல்லுறோம்? வெளிநாட்டுக்குத்தானே கூப்பிடுறம். நீங்க வெளிநாட்டுக்கு வர ஓம் எண்டு சொன்னா மட்டும்தான் இந்தக் கலியாணம் எண்டு அம்மா முடிவாச் சொல்லிட்டா. எனக்கும் அதில பிழை இருக்கிற மாதிரித் தெரியேல்ல. இனி நீங்கதான் உங்கட முடிவைச் சொல்லோணும் உதயன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

 

அவனுக்குப் பேச்சை வளர்த்து வார்த்தைகளைத் தடிக்க விடுவதில் உடன்பாடில்லை.

 

இரண்டு நாள்களாகியிருந்தன. உதயன் எந்த முடிவையும் சொல்லவே இல்லை. முதலில் அவர்களின் பெண்ணை விரும்பியதால் அவர்கள் கூப்பிட்டு விட, அவன் போவது ஏதோ ஒரு வகையில் தான் அவர்களுக்கு விலை போவது போன்ற ஒரு உணர்வைத் தந்தது. அடுத்து அவன் வீட்டினர். அப்பா வயதான மனிதன். அவனும் போனால் ஆண் துணை இல்லாமல் என்ன செய்வார்கள்?

 

“நிறைய யோசிக்காத தம்பி. இது எங்கட சொந்த ஊர். சுத்தவர தெரிஞ்ச அறிஞ்ச சனம்தான் இருக்கு. பக்கத்தில சயந்தன் வேற இருக்கிறான். இன்னும் என்ன துணை வேணும் எங்களுக்கு? நீ போய்யா. அந்தப் பிள்ளையும் பாவம் எல்லா.” என்றுதான் அவன் அன்னை சொன்னார். அவனுடைய அப்பா, ஒன்றுவிட்ட தமக்கை எல்லோருக்குமே அதில் முழுமையான உடன்பாடுதான்.

 

“டேய், தேவகி மாமி இந்தளவில ஓம் எண்டு சொன்னதே பெருசு. அபிய யோசி. அந்தப் பிள்ளை பாவம் எல்லா. முதல் ஏன் நீ நிறைய யோசிக்கிறாய்? அங்க போனதும் உழைச்சு, சீராளன் உன்னக் கூப்பிடக் குடுத்த காசத் திருப்பிக் குடு. முடிஞ்சுது அலுவல்.” என்று சயந்தனும் எடுத்துச் சொன்னான்.

 

ஷர்மினியும் அழைத்துப் பேசியபோது அதையேதான் சொன்னாள். அவனால்தான் சம்மதிக்க முடியவில்லை. ஏதோ ஒரு முனையில் சிக்குண்டு நின்றான். அபி பலமுறை அழைத்தபோதும் அவன் ஏற்கவில்லை. ஏதோ ஒரு கோபம். அன்று இரவு அவன் கொழும்புக்குப் புறப்பட வேண்டும்.

 

எதுவும் செய்யத் தோன்றாமல் கட்டிலில் மல்லாக்காக விழுந்து கிடந்தான். திடீர் என்று பார்த்தால் அவன் முன்னால் அபிராமி நின்றிருந்தாள். கனவா நனவா என்று பிரித்தறிய முடியாமல் சில கணங்களுக்கு அவளையே பார்த்தவன் வேகமாக எழுந்து அமர்ந்தான்.

 

அப்படி, அவன் எதிர்பாரா நேரத்தில் அவனைத் தேடி வந்தவளின் செய்கை, மனத்துக்கு இதம் சேர்த்தபோதும் ஒருவிதக் கோபமும் வந்தது.

 

முகத்தைத் திருப்பிக்கொண்டு பேசாமல் இருந்தான்.

 

“ஒரு பொம்பிளைப் பிள்ளை. நானா தேடி உங்கட அறை வரைக்கும் வந்திருக்கிறன். ஆனா நீங்க முகத்தைத் திருப்புறீங்க என்ன?” என்றபடி வந்து அவன் மண்டையில் குட்டினாள் அபிராமி.

 

“ப்ச்! விளையாடுற மூட்ல நான் இல்ல அபி. பேசாம நீ வீட்டுக்கு நட. பிறகு இதுக்கும் ஏதாவது சொல்லுவா உன்ர அம்மா.” என்றான் ஒருவிதச் சினத்துடன்

 

“ஓ! பாவக்குளத்துக்குக் கூட்டிக்கொண்டு போய்ச் சேட்டை விடேக்க இந்த அறிவு இருக்கேல்லையோ?” என்றவள் கேள்வியில் திரும்பி முறைத்தான்.

 

“என்ன முறைப்பு? எத்தின தரம் உங்களுக்கு எடுத்தனான். ஃபோன பக்கத்தில வச்சுக்கொண்டு எடுக்கேல்ல என்ன?” என்றபடி அவனருகில் சென்று அவள் அமர, அவன் வேகமாக அறை வாசலைத்தான் பார்த்தான்.

 

“உங்கட அக்கான்ர பிள்ளைகள் ரெண்டு பேரும் டியூஷனுக்கு போயிட்டினம். அக்கா வேலை. மாமா, மாமி வாசல்ல இருக்கினம். அவேட்ட சொல்லிப்போட்டுத்தான் வந்தனான். அறைக் கதவும் திறந்துதான் இருக்கு.” என்றாள் அவள் முறைப்புடன்.

 

இருந்த சினமான மனநிலை மாறி, அவன் உதட்டோரம் சிரிப்பில் துடித்தது. அதைக் காட்டாதிருக்க முயன்றபடி திரும்பி அவளைப் பார்த்தான்.

 

அவள் இப்போது விளையாட்டுப் பேச்சை நிறுத்திவிட்டு, “என்ன யோசின?” என்றாள் இதமான குரலில்.

 

அவன் முகம் மீண்டும் மாறியது. முகத்தைத் திருப்பப் போக, அதற்கு விடாமல் அவன் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தாள்.

 

இருவர் பார்வையும் கலந்தன. “படிச்ச படிப்பு, பாக்கிற வேலை, குடும்பம் எல்லாத்தையும் விட்டுட்டு வெளிநாட்டுக்குப் போவம் எண்டு முடிவு எடுக்கிறது ஈஸி இல்லை எண்டு எனக்குத் தெரியும் உதயன். ஆனா, மிடில் கிளாஸ்ல இருக்கிற எல்லாரும் மேல வாறதுக்கு ஏதோ ஒரு கை தேவையாத்தான் இருக்கு. அது பிழையும் இல்ல உதயன்.” என்று இதமாய் அவள் எடுத்துச் சொன்னபோது அவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டான்.

 

“இத உதவி எண்டு சொல்லவும் ஏலாது. இதே உங்கட மாமாவோ சித்தப்பாவோ வெளிநாட்டில இருந்து கூப்பிட்டா போவீங்களா, மாட்டீங்களா? அப்பிடி யோசிங்க. சயந்தன் அண்ணா சொன்ன மாதிரி அங்க போனதும் உழைச்சு அண்ணான்ர காசத் திருப்பிக் குடுங்க. வேணுமெண்டா உங்கட அக்கான்ர மூத்தவா படிச்சு முடிச்சு, அவாக்கு ஒரு கலியாணம் நடக்கிற வரைக்கும் நான் இஞ்ச இருக்கிறன். நான் பாப்பன் உங்கட குடும்பத்தை.” என்று அவள் சொன்னதும் ஒரு கணம் அவள் முகத்தையே பார்த்தவன், தன்னை மறந்து அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

 

இப்படிச் சொல்கிற இவளைப் பற்றித்தான் அவன் அன்று அப்படிப் பேசினான். “சொறி!” என்றான் அவள் முகம் பார்த்து.

 

ஏன் சொல்கிறான் என்று புரிந்ததில் அவள் உள்ளமும் நெகிழ்ந்தது. ஆசையாக அவன் கன்னம் வருடி, கேசம் கோதிவிட்டபடி, “இந்தக் கோலத்தை ஒருத்தரும் பாக்காயினமா?” என்று, கிட்டத்தட்ட அவன் மடியில் அவள் என்பதுபோல் அவன் கைகளுக்குள் அவள் இருக்கும் நிலையைக் கண்களால் காட்டி வினவினாள் அவள்.

 

அவள் விரல்களின் மாயத்தில் உள்ளம் மயங்க, “பாத்தா பாக்கட்டும். எனக்கு மனுசியா வரப் போறவளைத்தான் நான் கொஞ்சுறன்.” என்று அவள் மூக்கோடு மூக்கை உரசி, கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு அவளை நிமிர்த்தி, அருகில் அமர்த்திக்கொண்டான் அவன்.

 

“நீ இப்பிடிச் சொன்னதே நிம்மதியா இருக்கு அபி. ஆனா, அப்பா இருக்கிறார். சயந்தனும் இருக்கிறான்தானே. என்னவோ எனக்குத்தான் மனமே பாரமா இருக்கு.”

 

“அது அப்பிடித்தான். உங்கட வாழ்க்கைல வரப்போற மிகப்பெரிய திருப்பம் இது. அத டக்கெண்டு ஏற்கேலாமத்தான் இருக்கும். ஆனா நீங்க வெளிநாடு போனா நாங்க மட்டும் நல்லா இருக்கப் போறேல்ல உதயன். அக்கான்ர பிள்ளைகளுக்கும் நல்ல வாழ்க்கை அமையும். அதையும் யோசிங்கோ.” என்று நல்ல விதமாகவே எடுத்துச் சொன்னாள்.

 

கொஞ்ச நேரம் அவன் ஒன்றுமே சொல்லவில்லை. பயணத்துக்குத் தயாராவதற்கு தன்னை மனத்தளவில் தயார் படுத்துகிறான் என்று புரிந்தது. அவனின் ஒரு கையைத் தன் இரு கைகளாலும் கோர்த்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

 

“அப்பிடியே நான் அங்க போனாலும் எனக்கு விசா கிடைச்சு, உன்னக் கூப்பிட எத்தின வருசம் ஆகுமோ தெரியா அபி. அதுவரைக்கும் நீயும் நானும் பிரிஞ்சுதான் இருக்கோணும்.” என்றான் அவன் கனத்த குரலில்.

 

இவளுக்குச் சட்டென்று கண்களில் கண்ணீர் தேங்கிப் போனது. நிமிர்ந்து அதோடு அவனைப் பார்த்து முறுவலித்தாள். “கடந்துபோன அஞ்சு வருசம் மாதிரி இன்னொரு அஞ்சு வருசம். நான் இருப்பன் உதயன். என்னைப் பற்றி யோசிக்காதீங்க.” என்று சொன்னவள் ஈர விழிகளின் மீதே தன் உதடுகளை ஒற்றி எடுத்தான் அவன்.

 

“என்னால நீ இல்லாம இருக்கேலாது அபி. இந்த மூண்டு மாதமும் உன்னோட கதைக்காம இருக்க நான் பட்ட பாடு என்ன எண்டு எனக்குத்தான் தெரியும். வெளிநாடு போய் என்ன செய்யப்போறனோ தெரியா.” என்றான் அவன் தவிப்புடன்.

 

அவளுக்கும் நெஞ்சை அடைத்தது. ஆனாலும், “உடனே பயணம் சரிவரப்போறேல்ல தானே?” என்றாள் ஆறுதலாக.

 

ஆம் என்பதுபோல் தலையசைத்தவன், “மாமி செத்து ஆறு மாதமும் முடியாம தாலி கட்டுறது சரியா வராது. அதால ஏலுமான வரைக்கும் கெதியா ரெஜிஸ்ட்ரேஷனை முடிச்சுக்கொண்டு என்னோட வந்து நீ கொழும்பில இருக்கோணும்.” என்றான் உத்தரவு போன்று.

 

அதைவிட அவளுக்கும் வேறு என்னதான் வேண்டும்? சரி என்று தலையசைத்தாள்.

 

அதன் பிறகு எல்லாம் வேகம்தான். இன்னொரு முறை சீராளனும் ஷர்மினியும் இலங்கை வந்தார்கள். அவன் சொன்னதுபோலப் பதிவுத் திருமணம் வீட்டில் வைத்தே நடந்தது. எல்லோருக்கும் மிகுந்த சந்தோசம். தேவகி அம்மாவுக்கு இன்னுமே மெல்லிய மனச்சிணுக்கம் இருந்தாலும் மகளை அவள் துணையுடன் பூரித்த முகமாய்ப் பார்க்கையில் அவர் உள்ளம் நெகிழ்ந்து, விழிகள் கசிந்தன.

 

மனமார வாழ்த்தினார். போன முறை போலவே சீராளன் சுவிஸ் புறப்படுகையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே புறப்பட்டனர்.

 

அதற்கு முதல், “அபி, இன்னும் தாலியும் கட்டேல்ல. அதோட நீ இஞ்ச அவர் அங்க எண்டு இருக்கப் போறியள். அதால இப்போதைக்குப் பிள்ளை எதுவும் வேண்டாம்.” என்று தேவகி என்னவோ குரலைத் தணித்துத்தான் சொன்னார்.

 

ஆனாலும் அங்கே பக்கத்தில் அமர்ந்திருந்த உதயனின் காதிலும் விழுந்துவிட்டதில் விருட்டென்று எழுந்துவிட்டான். அவன் முகம் சினத்தில் சிவந்து போயிற்று. இதே விசயத்தை ஷர்மி சீராளன் திருமணத்திலும் சொல்லி, அவர் செய்த பிரச்சனைகள் வேறு நினைவில் வந்துவிட, “உனக்கும் எனக்கும் வயது காணும் அபி. எங்களுக்கு என்ன வேணும், எப்ப வேணும் எண்டு நாங்களே முடிவு செய்துகொள்ளுவம் எண்டு உன்ர அம்மாட்டச் சொல்லிவிடு!” என்றுவிட்டு வெளியே வந்து நின்றுகொண்டான்.

 

சீராளனும் அன்னையின் பேச்சை அந்த இடத்தில் ரசிக்கவில்லை. அதே நேரம், எல்லோர் முன்னும் உதயன் பட்டென்று அப்படிச் சொன்னதும், அவமானப்பட்டுக் கலங்கி நின்ற அன்னையின் தோற்றமும் அவனைப் பாதித்தன.

 

“என்ன தம்பி, அப்பிடி என்ன பிழையா நான் சொல்லிட்டன். அவேன்ர நல்லதுக்குத்தானே?” என்று தேவகி கலங்கவும், சீராளன் பதில் சொல்ல முதல் இடையிட்டாள் அபிராமி.

 

“அத நீங்க என்னைத் தனியாக் கூட்டிக்கொண்டு போய்ச் சொல்லி இருக்கோணும் அம்மா. இப்பிடித்தான் எல்லாருக்கும் முன்னால வச்சுச் சொல்லுவீங்களா? உங்களுக்கு மரியாதை வேணுமெண்டா அதுக்கு ஏற்ற மாதிரி நீங்க நடக்கோணும். நான் என்னவும் கதைப்பன், எப்பிடியும் நடப்பன், ஆனா நீங்க எல்லாரும் எனக்கான மரியாதையக் கொஞ்சமும் குறையாமத் தாங்க எண்டா எப்பிடி? அவர் சொன்ன மாதிரி எங்களுக்கு இது தெரியாதா? இனி நீங்க என்ன கதைக்கிறதா இருந்தாலும் என்னட்ட மட்டும் கதைங்க.” என்றுவிட்டு அவளும் வெளியே சென்றுவிட, சீராளனால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று.

 

கடைசியில் அவரைத்தான் சமாதானம் செய்துவிட்டுப் புறப்பட்டான்.

 

 

 

 

 

error: Alert: Content selection is disabled!!