அத்தியாயம் 2
இளம் வயதிலேயே கணவர் இறந்துவிட்டதால் பிள்ளைகளுக்காகவே ஓடியவர் தயாபரி. ஒரு கட்டத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு மிகவுமே அவதிப்பட்டார். சயந்தனும் ஷர்மினியும் தலையெடுத்ததிலிருந்து தம்மால் முடிந்தவரையில் அவருக்கு வைத்தியம் செய்துதான் பார்த்தார்கள். எதுவுமே பயனளிக்கவில்லை.
சயந்தனுக்கு மகிழினியைப் பேசி, திருமணம் செய்து வைத்தபோது, ‘அம்மாவைப் பார்த்துக்கொள்வது உன் பொறுப்பு அண்ணா, அதற்கான செலவுகள் எல்லாம் என் பொறுப்பு’ என்று சொல்லியிருந்தாள் ஷர்மினி.
அதெல்லாம் தேவையில்லை, அம்மாவை முற்றுமுழுதாக நானே கவனித்துக்கொள்வேன் என்று சயந்தன் சொன்னதை அவள் கேட்கவே இல்லை. சொன்ன சொல் மாறாமல், இன்றுவரை அவருக்கான அத்தனை செலவுகளையும் பார்த்துக்கொண்டாள். அப்படி அவள் பார்த்துக்கொள்ளக் காரணமாக இருந்தவன் அவள் கணவன் சீராளன். அவன், மனைவியின் வார்த்தைகளைப் பொய்க்க விட்டதே இல்லை.
சயந்தன் என்ன சொல்லியும் கேளாமல், அவர்களின் வீட்டைத் திருத்தியமைத்து, தயாபரி அம்மாவுக்கென்றே ஒரு அறை சேர்த்துக் கட்டி, அங்கே அவருக்கான அத்தனை வசதிகளையும் செய்துகொடுத்து, முடிந்தவரையில் நோயின் வலிகளைக் குறைக்கும் மருத்துவம் பார்த்து என்று அவருக்குக் குறை என்று எதுவுமில்லை.
ஆனாலும் கூட நாளுக்கு நாள் அவரின் உத்தரிப்பு அதிகமானதே தவிர்த்துக் குறைந்ததில்லை. சில நேரங்களில் அவர் அனுபவிக்கிற சிரமங்களையும் வலிகளையும் பார்க்கையில் இந்தளவுக்கெல்லாம் வாழவே கூடாது என்று அபிராமி நினைத்திருக்கிறாள்.
ஆனால் இன்று, அவர் உறக்கத்திலேயே உயிர் நீத்துவிட்டாராம் என்று அறிந்ததும் கொஞ்ச நேரத்துக்கு அவளால் அசையவே முடியாமல் போனது. விடுமுறை எடுத்துக்கொண்டு நேராக ஷர்மி வீட்டுக்கு ஓடி வந்தாள்.
இதற்குள் அயலட்டைச் சனங்கள் அங்குக் கூடியிருந்தார்கள். சடங்குகள் ஆயத்தமாவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
அவள் தந்தை முற்றத்தில் ஒருசில ஆண்களோடு அமர்ந்திருந்தார்.
தயாபரியின் பூதவுடல் அவர்களின் விறாந்தையில் கிடத்திவைக்கப்பட்டிருந்தது. சட்டென்று வீட்டுக்குள் உள்ளிட்டதும் அவரைப் பார்த்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.
அவரில் உயிர் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. வயதும் நோயும் அவரைப் படாத பாடு படுத்தியிருந்ததுதான். ஒரு வகையில் இது அவருக்கான விடுதலையும் கூடத்தான். ஆனாலும் என்னவோ நெஞ்சை அடைத்தது.
அவள் இந்த வீட்டுக்கு வந்தால் அருகில் இருத்தி வைத்து, கரத்தைப் பற்றிக்கொண்டு கனிவாய் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார். ஒரு திருமணத்தைச் செய்துகொள்ளும்படி அவருமே வற்புறுத்தியிருக்கிறார்.
அப்படியானவர் இனி இல்லை. மனம் ஏற்க மாட்டேன் என்றது.
அன்னையைத் தேடிக்கொண்டு போனாள். அங்கே அழுதுகொண்டிருந்த சயந்தனின் மனைவி மகிழினியின் அருகில் அமர்ந்திருந்தார் அவர்.
அவர் அருகில் சென்று அமர்ந்துகொண்டு, “அண்ணாவும் ஷர்மியும் என்னவாம் அம்மா?” என்று மெல்லிய குரலில் விசாரித்தாள்.
“உடனேயே வெளிக்கிட்டு வருகினமாம். டிக்கட் போட்டாச்சாம். நாளைக்கு விடிய கொழும்புக்கு வந்திடுவீனமாம். உதயன் அங்கேயே நிண்டு கூட்டிக்கொண்டு வாறாராம்.” என்று தகவல் சொன்னார் அவர்.
உதயன் என்கிற பெயர் அந்த நேரத்திலும் உள்ளே புகுந்து அவளை என்னவோ செய்தது. அவனும் கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பதால் கையோடு அவர்களையும் அழைத்துக்கொண்டு வரப்போகிறான் போலும்.
பொழுது எப்படி என்றில்லாமல் ஓடி, இரவும் வந்து சேர்ந்தது. அன்று இரவு யாரும் உறங்கவில்லை, எழுந்து போகவும் இல்லை. அங்கேயே ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் இருந்துகொண்டார்கள். விடியல் புலர்ந்த பின்னர் சீராளன் அழைத்து, கொழும்புக்கு வந்து சேர்ந்துவிட்டதைச் சொன்னான்.
ஷர்மினி அழுதுகொண்டே இருந்தாள். அவளுக்கு அன்னை என்றால் உயிர் என்று தெரியும். “அழாத ஷர்மி. தம்பியப் பார், பயப்பிடுறான்.” என்று இவள் சொல்வதற்கிடையில், “இப்ப அழுறத நிப்பாட்டப் போறியா, இல்லையா நீ?” என்கிற கோபக் குரல் ஒன்று சட்டென்று செவியில் விழுந்து, இவளை அதிர வைத்தது. மூச்செடுக்கவும் முடியாதவளாய் அமர்ந்திருந்தாள்.
“இந்தா, இதக் குடி முதல். பிறகு கதைக்கலாம்!” என்று சொல்லி அவன் அழைப்பைத் துண்டித்துவிடவும் இவள் முகம் கறுத்துப் போயிற்று.
இன்னுமே அவள் மீது அவனுக்கு வெறுப்பா? அதுதான் அழைப்பைத் துண்டித்தானா? இந்த அண்ணா கூட எதுவும் சொல்லவில்லையே. கொஞ்ச நேரத்துக்கு அவளால் அந்தப் பாதிப்பிலிருந்து வெளியே வரமுடியவில்லை.
ஒரு வழியாகக் கொழும்பிலிருந்து வந்து சேர்ந்தார்கள். ஷர்மினி அன்னையின் காலடியிலேயே விழுந்துகிடந்து கதறினாள். அதுவரையில் மெல்லிய சோகம் இழையோட அமைதியில் கிடந்த மொத்த வீடும் அவள் துடிப்பதைக் கண்டு கண்ணீர் வடித்தது.
இத்தனை வருடங்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தவரைச் சுமையாக எண்ணாமல், சலிக்காமல், சினக்காமல் சயந்தனும் ஷர்மினியும் எப்படிப் பாசமாகப் பார்த்துக்கொண்டார்கள் என்று அங்கிருந்த எல்லோருக்குமே தெரியும்.
அப்படி இருக்க, கடந்த ஐந்து வருடங்களாகப் பிரிந்தே இருந்த ஷர்மியால், இன்று மொத்தமாய்த் தன்னை விட்டுப் போய்விட்ட அன்னையின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
சயந்தனும் தங்கையின் அருகில் நின்று மௌனமாய்க் கண்ணீர் உகுத்தான்.
இத்தனைக்கு மத்தியிலும் தோழியின் அருகில் செல்லக்கூட முடியாமல் நின்றிருந்தாள் அபிராமி. அந்தளவில் உதயனின் வருகை அவளைப் பாதித்திருந்தது. இறப்பு வீடு என்பதையும் மறந்து அவனையே பார்த்தாள்.
யாரையும் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. கையைக் கட்டிக்கொண்டு சிலைபோல் இறுகி நின்றிருந்தவன், பெரும் துக்கத்தை விழுங்கிக்கொண்டு தயாபரி அம்மாவையே பார்த்திருந்தான்.
தேவகி அம்மா ஓடிப்போய் மகன் கையில் இருந்த பேரனை வாங்கிக் கண்ணீருடன் உச்சி முகர்ந்தார். அவன் பிறந்ததில் இருந்து இந்த ஒரு கணத்துக்காகவே தவம் கிடந்தவர். அவரைப்போல்தான் தயாபரி அம்மாவும். கடைசியில் அவரின் இறுதி யாத்திரைக்குத்தான் அவர் பேரன் வந்திருக்கிறான்.
சீராளன் மனைவியைத் தாங்கி, என்ன ஆற்றுப்படுத்தியும் முடியாமல் கதறித் தீர்த்தாள் ஷர்மினி. அன்னை அழுவதைப் பார்த்த ஆரூரனும் உதடு பிதுக்க, அவனை வாங்கிக்கொண்டு வீட்டின் பின்னால் விரைந்த அபிராமிக்கு முதலில் தன்னை நிதானப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
ஆரூரன் முதன் முதலாக நேரில் பார்க்கும் அத்தையை இனம் கண்டுகொண்டு அவள் கழுத்தை கட்டிக்கொண்டான். அந்தப் பிஞ்சின் அந்தப் பாசச் செய்கை அவள் விழிகளைக் கசிய வைக்க, அவன் முதுகை ஆதூரத்துடன் வருடிக்கொடுத்தாள்.
வீட்டுக்குள் போகவே பயந்தாள். அந்தளவில் அவனும் அங்கே நிற்கிறான் என்கிற அந்த ஒரு எண்ணமே அவளை ஆட்டிப்படைத்தது. அதைவிட அவன் தோற்றம் அவள் கண்களையும் மனத்தையும் நிறைத்து, அவளை மிகவுமே பாதித்தது.
ஒரு துக்க வீட்டில் உன் நினைப்பெல்லாம் எப்படிப் போகிறது என்று அறிவு அதட்டினாலும் முடியவில்லை.
ஏன் இப்படி அவன் முன்னால் இத்தனை பலகீனமாக நிற்கிறோம் என்றும் பிடிபட மாட்டேன் என்றது. நேரிடையாகப் பழகியது இல்லையே தவிர்த்து, அவனுக்கு மீசை அரும்புவதற்கு முதலான காலத்தில் இருந்தே அவனை அவளுக்குத் தெரியும். அப்படி இருந்தும் என்ன இது?

