அதன்பிறகு அவள் ஆரூரனை இறக்கி விடவேயில்லை. அவனைப் பார்க்கிறேன் என்கிற பெயரில் அனைத்திலிருந்தும் ஒதுங்கி நின்றுகொண்டாள். அவனும் புதுக் காலநிலை, புது மனிதர்கள், சோகமும் துயரும் அப்பிக்கிடந்த வீடு, இதுவரை கண்ணுக்குள்ளேயே வைத்துப் பார்த்துக்கொண்ட அன்னையும் தந்தையும் வேறு விடயங்களில் கவனமாகிப் போனது என்று அபிராமியின் கையை விட்டு இறங்க மாட்டேன் என்று நின்றான்.
ஷர்மினி அழுதழுது ஓய்ந்திருந்தாள். சடங்குகள் ஆரம்பமாகியிருந்தன. மூத்த மகனாய் அவருக்குக் கொள்ளி வைக்கத் தயாராகினான் சயந்தன். சீராளனும் உதயனும் அவனுக்குத் துணையாக நின்றார்கள்.
ஒரு வழியாகத் தயாபரி அம்மாவின் பூதவுடல் வீட்டிலிருந்து ஒப்பாரி ஓலத்துடன் எடுத்துச் செல்லப்பட்டது. அவர் உடலைத் தூக்கியபோது என்ன முயன்றும் முடியாமல் உதயனின் விழிகள் கலங்கிப் போயின. அதைக் கண்ட அபிராமி, ஓடிப்போய் அவனைத் தன் தோளில் சாய்த்து, ஆற்றுப்படுத்த வேண்டும் போல் எழுந்த உணர்வில் திடுக்கிட்டுப் போனாள்.
என்ன இது? என்னவாக ஆகிக்கொண்டு இருக்கிறாள் அவள்? இன்னுமே அவன் இருக்குமிடத்திலிருந்து ஒதுங்க ஆரம்பித்தாள்.
மூன்று நாள்கள் கடந்திருந்தன. அதுவரையில் அபிராமி என்று ஒருத்தி அங்குதான் இருக்கிறாள் என்பதை உதயன் கவனிக்கவே இல்லை. தேவகி அம்மா கண்ணில் பட்டுக்கொண்டு இருந்தபோதிலும் அவள் பற்றின யோசனை அவனுக்கு வரவில்லை.
அன்று வெளியில் சென்றுவிட்டு வந்து, காற்றாட முற்றத்தில் அமர்ந்திருந்தான். அப்போது, “அபி!” என்று எதற்கோ ஷர்மி அழைக்கும் குரலில் திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் விழுந்தாள் அபிராமி.
அவன் அங்கு இருப்பதை அறியாமல், “என்ன ஷர்மி?” என்றுகொண்டு வந்த அபிராமியும் அவனை எதிர்பார்க்கவில்லை. அவன் பார்வையை நேருக்கு நேராக எதிர்கொண்டிருந்தாள். உடனேயே பார்வையை விலக்கிக்கொள்ளத்தான் நினைத்தாள். முடியாமல் அவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவளை ஈர்த்தது.
முக்கியமாக அந்த விழிகளில் அன்று போன்று வெறுப்போ, கசப்போ, அவள்பற்றிய குறைவான எண்ணமோ இல்லை. இது எல்லாவற்றுக்கும் மாறாக ஒருவித ஆச்சரியத்துடன் நடந்து வந்துகொண்டிருந்தவளையே பார்த்திருந்தான்.
அதுவே அவளுக்குள் பறக்கும் ஒரு உணர்வைத் தந்தது. பழைய மின்னல் வெட்டிப்போனது. எல்லாவற்றையும் விட இந்த ஐந்து வருடங்களாக அவளைப் போட்டு ஆட்டிய அவன் முன்னே சிறுத்துப் போனோமே என்கிற அந்த உணர்வு உடைந்துபோயிற்று.
இந்த ஒரு விடுதலை உணர்வுக்காகத்தான் இத்தனை காலமும் காத்திருந்தாளோ?
உள்ளே உள்ளம் துள்ள, “என்னடி?” என்றாள் ஷர்மியிடம்.
“எங்க தம்பி? சாப்பிட்டானா?”
பொழுது மாலையைத் தொடும் இந்த நேரத்தில் கேட்கிறவளை முறைத்தாள். “நீயெல்லாம் ஒரு அம்மாவாடி? இந்த மூண்டு நாளும் தம்பி என்ன செய்றார், ஏது செய்றார் எண்டு கவனிக்காம இருந்து அழுதுபோட்டு இப்ப வந்து கேக்கிறாய்!”
“என்னவோ அடுத்தவேட்ட விட்ட மாதிரிச் சொல்லுறா உன்ர நண்பி. அவா அவனுக்கு அத்தைதானே. அவா கவனிச்சுப் பாக்க மாட்டாவாமா?” ஷர்மி பதில் சொல்வதற்குள் இடையிட்டு வேகமாகச் சொன்னான் உதயன்.
இதை நிச்சயமாக அபிராமி எதிர்பார்க்கவில்லை. அவளுக்குத் தெரிந்து அவன் அவளோடு பேசிய முதல் முறை இதுதான். அதனாலேயே அவளுக்குப் பதில் வரவில்லை. கூடவே, ஷர்மி என்றால் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுவானே என்று மனம் பொறுமியது.
“அதுதானே. சொந்த அத்தை நீ இருக்கேக்க நான் ஏன் அவனைப் பற்றிக் கவலைப்பட?” என்று ஷர்மியும் கேட்க, “நல்லாத்தான்டி கதைக்கிறாய்.” என்று சமாளித்துவிட்டு வேகமாக வீட்டுக்குள் வந்துவிட்டவளுக்கு இனிய அதிர்ச்சியா, ஆனந்தமா என்று சொல்லத் தெரியா நிலை.
பெரிய பெரிய மூச்சுகளை எடுத்துவிட்டுத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, திரும்பி வெளியே சென்றவளின் ஒரு கையில் உணவுத் தட்டும் இன்னொரு கையில் தேநீரும் இருந்தன.
“ஆருக்கடி?”
“உன்ர நண்பர் கடைசியா எப்ப சாப்பிட்டவராம் எண்டு கேள்!” அவனைப் பாராமல் எதிர்கேள்வி கேட்டபடி அவனுக்கு உணவையும் ஷர்மிக்குத் தேநீரையும் கொடுத்தாள்.
“என்னடா நீ, சாப்பிடவே இல்லையா?” நம்ப முடியாமல் ஷர்மி அவனைப் பார்க்க, அவன் பார்வையோ இப்போதும் மெல்லிய வியப்புடன் அபியில் இருந்தது.
அந்தளவில் அவனைக் கவனித்தாளா என்ன?
அவன் சாப்பிடாமலேயே இல்லைதான் என்றாலும் கவனித்து நேரா நேரத்துக்கு வயிற்றை நிரப்பவில்லை என்பது உண்மைதான். அதில் எழுந்துபோய், அங்கே பூக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுவதற்காக ஒரு பக்கமாய் இருந்த பைப்பில் கையைக் கழுவிக்கொண்டு வந்து சாப்பிட்டான்.
சாப்பிட்டு முடித்து, தட்டினையும் அதே பைப்பில் கழுவிட்டு உள்ளே கொண்டு வந்து வைக்கையில், “தேங்க்ஸ்! சாப்பிடேக்கதான் எவ்வளவு பசில இருந்திருக்கிறன் எண்டே தெரிஞ்சது.” என்று சொன்னான்.
அதனால்தானே அவனைக் கேளாமலேயே போட்டுக்கொண்டு போய்க் கொடுத்தாள். உள்ளே உள்ளம் நெகிழ்ந்து நிறைந்தாலும், “இருக்கட்டும் இருக்கட்டும்!” என்றுவிட்டு அவள் அறைக்குள் சென்றுவிட, நின்ற இடத்திலேயே நின்று போகிறவளையே பார்த்தவனின் உதட்டில் மெல்லிய சிரிப்பு.
அவள் ஷர்மிக்குச் செய்தவைகளை அவன் மறக்கவில்லை. அந்த நாள்களில் அவள்மீது மிகுந்த வெறுப்பும் கொண்டிருந்தான். அதன் பிறகு இத்தனை வருட இடைவெளியில் மெல்ல மெல்ல அவள்பற்றிய நினைவுகள் மக்கியிருந்தன.
ஷர்மிக்குத் தொடர்ந்து இவர்களால் துன்ப துயரங்கள் நடந்திருக்க நினைவில் இருந்திருக்குமோ என்னவோ. அவள் மிக நன்றாய் வாழ்வதும், அவர்கள் வீட்டினரோடு நல்லதொரு உறவைப் பேணுவதும் காரணமாயிற்று.
இன்னுமே திருமணம் செய்துகொள்ளாமல் வேலைக்குப் போகிறாளாம் என்று எதேற்சையாக ஒருமுறை ஷர்மி சொன்னபோது, அவள் எல்லாம் இப்படியான ரகம் கிடையாதே என்று எண்ணியிருக்கிறான்.
நல்ல பணக்கார, வெளிநாட்டு மாப்பிள்ளையாகப் பார்த்துக் கட்டிக்கொண்டு, ‘நான் வாழும் வாழ்க்கையைப் பார்’ என்று பெருமை பாடுகிறாள் என்று சொல்லியிருந்தால் நம்பியிருப்பான். அவனுக்குத் தெரிந்த அவள் அப்படித்தானே.
ஆனால் இன்று, நளினம் மிகுந்த பெண்ணாக மாறி, அவன் சாப்பிடாததைக் கூடக் கவனித்து, உணவு தந்தது மாத்திரமல்லாமல், பார்த்து பார்த்துப் பரிமாறியவள் அவனுக்கு வியப்பூட்டினாள். அதனால்தான் நன்றியும் சொன்னான். அவளானால் அது இருக்கட்டுமாம்.
வெளியே வந்து ஷர்மினியிடம், “என்ன உன்ர நண்பி புதுசா தெரியிறா.” என்றான் தன் எண்ணப்பாட்டை மறையாமல்.
“டேய், அவள் எப்பவோ மாறிட்டாள் எண்டு உனக்கு நான் சொல்லேல்லையா.”
“சொன்னனிதான். என்ன எனக்குத்தான் நம்பேலாம இருந்தது. அப்பிடி என்ன நடந்ததாம்?”
“என்ன எண்டு ஒண்டும் சொல்லுறாள் இல்லையடா. ஆனா முந்தியுமே அவள் நல்லாத்தானே என்னோட பழகினவள். படிக்கிற நேரம் நிறைய ஹெல்ப்பும் செய்து இருக்கிறாள். திடீர் எண்டு இவர் என்னைப் பிடிச்சிருக்கு எண்டு சொல்லி, பிடிவாதமா நிண்டு கட்டினதால வந்த கோவம்தான். அதுவும் கொஞ்ச நாள்தானே. இப்ப இன்னும் நல்லமாதிரியடா.”
“சரி விடு. நல்லமாதிரி இருந்தா எல்லாருக்கும் நல்லம்தான்.” என்றதோடு முடித்துக்கொண்டான் அவன்.

