அத்தியாயம் 5
தேவகி அம்மாவுக்கு மனமே சரியில்லை. தயாபரி அம்மாவின் இறப்புத் தந்த அழுத்தத்திலிருந்து வெளிவந்து மகள் வாழ்க்கையை எண்ணிக் கலங்கினார். முதன் முதலாகக் கையில் ஏந்திய பேரனோடு ஆசை தீரக் கொஞ்சி மகிழ முடியாமல் அல்லாடினார்.
அவருக்குத் தெரிந்த அளவில் உதயன் நல்ல பிள்ளைதான். ஆனால், அவன் தலையெடுத்த பிறகுதான் அவன் குடும்பம் மத்திய தரத்தையே எட்டியிருக்கிறது.
வயதான தாய் தகப்பன். அவர்களுக்கு அவன் ஒற்றை மகன்தான் என்றாலும் அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரி, நாட்டுப் பிரச்சனையில் தாய் தந்தையரை இழந்திருந்தாலும் கணவன், ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள் என்று நன்றாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தாள்.
திடீரென்று பார்த்தால் அவள் கணவன் சொல்லாமல் கொள்ளாமல் யாரோ ஒரு பெண்ணுடன் ஓடிப்போய்விட்டானாம். அதிலிருந்து அவளின் வாசமும் இவர்கள் வீட்டில்தான். அவள் வேலைக்குப் போகிறாள் என்றாலும் அவள் பொறுப்பு, அவள் பிள்ளைகளின் பொறுப்பு எல்லாம் அவன் தலையில்தான்.
இப்படி, காலத்துக்கும் பொறுப்பைச் சுமக்கப்போகும் ஒருவனோடு மகளின் வாழ்க்கை பிணைக்கப்படுவதில் அவருக்கு மருந்துக்கும் உடன்பாடில்லை.
மகனைத் தனியாகப் பிடித்து, மகளோடு கதைக்கச் சொன்னார். முக்கியமாக வெளிநாட்டில்தான் அவள் வாழ்க்கை என்று சொல்லும்படி சொன்னார்.
அவனுக்கு அதில் உடன்பாடில்லை. எங்கே என்றாலும் அவள் சந்தோசமாக வாழ்ந்தால் போதும் என்றுதான் நினைத்தான்.
தூரம் அவனை என்ன செய்துவிடும்? அவள் எங்கிருந்தாலும் அவன் பார்த்துக்கொள்வான் என்று சொன்னதை அவர் கேட்பதாக இல்லை.
உதயனுக்கும் மகளுக்குமிடையில் மெய்யாகவே ஏதும் இருக்கிறதா என்று தெரியாமல் மகனிடம் எதையும் சொல்லவும் பயந்தார். எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்று என்று வாழ்கிறவர்கள். புத்தி சாதுர்யமாகத்தான் காய் நகர்த்தவேண்டி இருந்தது.
அதில், “இல்லயப்பு, அதெல்லாம் சும்மா பேச்சுக்குச் சொல்லலாம். ஆம்பிளைப் பிள்ளை எண்டாலும் பரவாயில்லை. நாளைக்கு அவாக்கு வாறவன் எப்பிடி இருப்பான், அவன்ர வீட்டு ஆக்கள் எப்பிடி எண்டெல்லாம் தெரியாது. கலியாணம், குழந்தை குட்டி எண்டு வந்த பிறகு, தூரத்தில இருக்கிற உன்னட்ட எல்லாம் சொல்லுவா எண்டு சொல்லுறதுக்கும் இல்ல. நாங்களும் இல்லாத காலத்தில எல்லாத்தையும் தனக்குள்ள வச்சுக்கொண்டு அவா கஷடப்படவா இவ்வளவு பாடு பட்டு வளத்து வச்சிருக்கிறம். அதால அவாக்கு வெளிநாட்டிலதான் மாப்பிள்ளை எண்டு அழுத்திச் சொல்லப்பு.” என்றார் அவர்.
“அப்பிடி எப்பிடி அம்மா சொல்லுறது? அவளுக்கு இஞ்ச ஆரையும் பிடிச்சிருந்தா?”
அவன் கேள்வியே அவரின் வயிற்றைக் கலக்கியது. “தம்பி, நீயாவது ஆம்பிளைப் பிள்ளை. வெளிநாட்டில இருந்தாய். ஷர்மியைக் கட்டி எதுவும் கூடிக் குறையேல்ல. அதுவே இங்க கஷ்டப்படுற ஒருத்தனை அவா கட்டினா எப்பிடி இருக்கும் சொல்லு? எவ்வளவுக்கு எண்டு நீயும் உதவி செய்வாய்? முதல் அவாவும் அண்ணா செய்றான் எண்டு வாங்கிக்கொண்டே இருப்பா எண்டு நினைக்கிறியா?” என்று படபடத்தார் அவர்.
“அப்பிடி ஏதும் எண்டால் அவளுக்கு மனுசனா வாறவனை வெளிநாட்டுக்குக் கூப்பிட்டு விடுவன் தானேம்மா.”
அப்படி அவனும் தடுத்து தடுத்துப் பேச அவருக்குச் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாத நிலை. அதில், “தம்பி, சும்மா சும்மா நீயும் எதையும் சொல்லாத அப்பு. நீ சொன்னா அவா கேப்பா. நீயும் அங்க ஆரோ நல்ல பெடியன் இருக்கிறான் எண்டு சொன்னனீ தானே. அதச் சொல்லி அங்கதான் அவாக்குக் கலியாணம் எண்டு அழுத்திச் சொல்லப்பு.” என்றார் கெஞ்சலாக.
அப்போதும் அவர் பேச்சில் முழு உடன்பாடு இல்லாத போதிலும் அவர் நினைப்பதிலும் தவறில்லை என்றே அவனும் நினைத்தான். இன்று அவனும் அவளும் அண்ணனும் தங்கையும் மட்டுமே. அவள் மீது அவனுக்கு அத்தனை உரிமையும் உண்டு. அவளுக்கும் திருமணமான பிறகு அவர்கள் வெவ்வேறு இரண்டு குடும்பங்கள் ஆகிவிடுவார்கள். அவரவருக்கு என்று புதுப்புதுச் சொந்தங்களும், அவர்களை அனுசரித்துப் போகும் நிலையும் உருவாகிவிடும். அப்படி இருக்க வாழ்க்கை எப்படி மாறும், சூழ்நிலைகள் எப்படி வந்து நிற்கும் என்று தெரியாதே.
அதில் தங்கையை அழைத்துப் பேசினான். மனைவி அவளைப் பற்றிக் கோடி காட்டிச் சொல்லியிருந்ததும் நினைவில் இருந்ததில், “வேலை செய்ற இடத்தில, இல்ல வெளில எங்க எண்டாலும் உனக்கு ஏதும் பிரச்சினையா? நீ என்னவோ சரியில்லையாம் எண்டு ஷர்மி சொன்னாள்.” என்றான்.
“அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லை அண்ணா.” தமையன் திடீரென்று அப்படிக் கேட்டதில் கொஞ்சம் தடுமாறினாலும் சமாளித்துப் பதில் சொன்னாள் அபிராமி.
“பின்ன ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்? எப்பவும் எதையாவது யோசிச்சுக்கொண்டு, எதையோ பறி குடுத்தவள் மாதிரி.”
“அச்சோ அண்ணா. நீங்களா ஏதாவது கற்பனை செய்யாதீங்க. அது சில நேரங்களில் வேலை கூடவா இருக்கும். அந்த அலுப்புத்தான்.”
“அப்பிடி ஒரு வேலைக்குப் போய்த்தான் ஆகோணும் எண்டு…” என்ற தமையனை வேகமாக இடையிட்டு, “அண்ணா ப்ளீஸ், வேண்டாம் எண்டு சொல்லாதீங்கோ. அது சில நேரம் மட்டும்தான். மற்றும்படி பிடிச்சுத்தான் போறன். எனக்குப் பொழுதும் போகோணும்தானே.” என்றாள் கெஞ்சலாக.
“சரி விடு. ஆனா ஏற்கனவே சொன்ன மாதிரி அங்க ஒரு பெடியன் இருக்கிறான். அவனைத்தான் உனக்குப் பேசுவம் எண்டு இருக்கிறன். மாமிக்கு ஒரு ஆறுமாதம் போகட்டும். பிறகு கலியாணம்தான் சரியா?”
ஆம் என்று சொல்லமுடியாமல் அவள் தவிக்க, அவன் விழிகள் கூர்மையாயின.
“என்ன ஒண்டுமே சொல்லாம நிக்கிறாய்? இல்ல ஆரையாவது பிடிச்சிருக்கா, நாங்க ஏதும் சொல்லுவம் எண்டு யோசிக்கிறியா?” என்றதும் அவளுக்கு விழிகள் கலங்கும் போலானது.
உதயன் ஒரு பதிலைச் சொல்லியிருக்க தமையனோடு கதைத்திருக்கலாம். இப்போது அப்படி எதுவும் இல்லை என்று சொல்லவும் முடியாமல், ஆம் எனவும் முடியாமல் தத்தளித்தாள்.
“என்ன அபி? என்ன எண்டு வாயத் திறந்து சொன்னாத்தானே தெரியும். அம்மாவும் உன்னால எவ்வளவு கவலைப்படுறா எண்டு உனக்கு விளங்குதா, இல்லையா?” என்று அவன் அதட்டவும், “இல்லை அண்ணா. அப்பிடி ஒண்டும் இல்ல.” என்றாள் அவசரமாக.
“இங்க பார் அபி. நீ ஆரையும் விரும்பக் கூடாது எண்டு நான் சொல்ல மாட்டன். ஆனா, அவன் நல்லவனா, உன்ன நல்லா வச்சுப் பாக்கிறவனா இருக்கோணும். எல்லாத்தையும் விட அங்க எனக்குப் பக்கத்தில இருக்கிற மாதிரி நீ வந்தா சந்தோசப்படுவன். அம்மா அப்பாக்கும் அதுதான் விருப்பம். எதுவா இருந்தாலும் யோசிச்சு, கெதியா ஒரு பதிலைச் சொல்லு. அதுவும் உனக்கு மாமின்ர அலுவல்கள் முடியிற வரைக்கும்தான் டைம்.” என்றுவிட்டுப் போனான் அவன்.
அவள் சொல்ல என்ன இருக்கிறது? சொல்ல வேண்டியவன் முழு அமைதி காக்கிறானே.
அடுத்தநாள் மனத்தில் சோர்வுடனேயே வேலைக்கு வந்திருந்தாள் அபிராமி. அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. நெஞ்சம் முழுக்க உதயன்தான் நிறைந்து கிடந்தான். இந்தளவு வேகமாய் அவன் தன் உள்ளத்தை முற்று முழுதாக ஆக்கிரமிப்பான் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.
அந்தக் காலத்திலேயே அடி நெஞ்சில் விழுந்த விதை இத்தனை காலமாய் உயிர்ப்புடன் கிடந்திருக்க வேண்டும். இன்று அவனைக் கண்டதும் அது அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டது போலும். இதையெல்லாம் அவனிடம் யார் சொல்வது? முதலில் அப்படி அவனோடு மனம் விட்டு அவளால் கதைக்க முடியுமா? அதற்கான சூழ்நிலைதான் அமையுமா?
இப்படி அல்லும் பகலும் அவன் பற்றிய சிந்தனையிலேயே கழிந்தாலும் அவனைப் பார்க்க அவள் முயலவில்லை.
என்னவோ ஒரு பயம். அவனிடமிருந்து மறுப்பை வாங்கிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தாள். அன்று தாடியை எடுக்கச் சொல்லி அவள் சொன்னபோது, அவன் கண்களில் தென்பட்ட முறைப்பும் சிரிப்பும் மட்டுமே மெல்லிய ஆறுதல். வெறுப்பையோ சினத்தையோ அவன் காட்டவில்லை.
அவள் சேட்டைகளை ரசிக்கிறானோ? ஆனாலும் அவளுக்குக் காட்டிவிடக் கூடாது என்று கவனமாக இருக்கிறானோ? பிடித்திருந்தால் பிடித்திருக்கிறது என்று சொல்லாமல் ஏன் இழுத்தடிக்கிறான்?
தன் மிகுதி வாழ்க்கை மொத்தமாய்த் தங்கியிருக்கும் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, பதிலுக்காகக் காத்திருக்கும் இந்தக் காத்திருப்பு நரகமாய்த் தெரிந்தது. அவன் நம்பர் அவளிடம் உண்டு. எழுதிக் கேட்போமா என்று எண்ணியபடி நடந்துகொண்டிருந்தவளின் தோளை யாரோ பலமாக இடித்திருந்தார்கள்.
“அம்மா!” எதிர்பாராமல் நடந்த சம்பவத்தில் அதிர்ந்து திரும்பியவள் எதிரில் நின்ற மாதவனைக் கண்டு கோபத்தில் முகம் இறுகினாள்.
அவள் வாயைத் திறக்க முதல், “எங்க கவனத்தை வச்சுக்கொண்டு வாறீங்க அபி? ஐஸ் கட்டி ஒண்டு வந்து மோதின மாதிரி இருக்கு.” என்று தன் தோளைத் தடவிக்கொடுத்தான் மாதவன்.
அவன் தடவவில்லை. அவள் தேகம் பட்ட இடத்தை வருடுகிறான் என்று அவன் பார்வையும் வருடிய விதமும் சொல்ல, “அந்தளவுக்குக் கவனம் இல்லாம நடக்கிறவள் நான் இல்ல. ஆனா, எதுக்கும் ஒரு அளவு இருக்கு. அது தாண்டினா மரியாதை கெட்டுடும்!” என்று விரல் நீட்டிச் சொல்லிவிட்டு விறுவிறு என்று நடந்துபோனாள்.
அவன் முகம் கன்றிப்போனது. கூடவே ஒரு ஆத்திரமும். அப்படி என்ன செய்துவிடுவாளாம்? அவனுக்குள் அதைச் சோதித்துப் பார்க்கும் வேகம் எழுந்தது.
அதன் பிறகு உதயனைப் பார்க்க அபிராமிக்குக் கிடைக்கவில்லை. முதல் ஒரு வாரம் அவள் தவிர்த்தால் என்றால் அடுத்த வாரம் அவன் கொழும்புக்கு வேலைக்குச் சென்றிருந்தான். மிகவுமே தவித்துப்போனாள். ஒன்றுமே சொல்லவில்லையே.
அந்தளவில் அலட்சியமா, இல்லை அவளை முற்றிலுமாகத் தவிர்க்கிறானா? வார இறுதியிலாவது வருவான் என்கிற எதிர்பார்ப்புடன் அங்குப் போனால், அந்தியேட்டிக்கு வர வேண்டும் என்பதிலும் ஏற்கனவே எடுத்த விடுமுறைகளாலும் அவன் வரவில்லையாம் என்றாள் ஷர்மினி.
அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலானது. அடக்கிக்கொண்டு இருந்துவிட்டு வந்தாள்.
இப்படி அவன் பின்னால் அலைந்துகொண்டே இருக்கப் போகிறாயா என்று ஒரு கோபமும் வந்தது. ஆனால், கேட்ட கேள்விக்கும் சொன்ன விருப்பத்துக்கும் ஒரு பதில் வேண்டுமே. தயாபரி அம்மாவின் முப்பத்தியொராவது நாளுக்காகக் காத்திருந்தாள்.
ஒரு வழியாக அந்த நாளும் வந்து சேர்ந்தது.
அதற்கு முதல்நாள் இரவே படையலுகுத் தேவையான பொருள்களை ஆயத்தம் செய்வது, வெங்காயம், உள்ளி போன்றவற்றை உடைத்து வைப்பது என்று வேலைகள் சூடு பிடித்திருந்தன.
அப்போதுதான் அவன் வீட்டுக்கு வந்து இறங்கினான் உதயன். அவன் வந்துவிட்டானாம் என்று செய்தி வந்ததில் இருந்தே இவள் இவளாக இல்லை. உள்ளம் படபடத்தபடியே இருந்தது. கூடவே ஒரு கோபமும்.
பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்பது அடுத்தது. ஒரு பெண் தைரியமாகத் தன் மனத்தைச் சொல்லியிருக்கிறாள். குறைந்தபட்சமாக அவளை மதித்து ஒரு பதிலை அவன் சொல்லியிருக்க வேண்டாமா?
அப்படி, ஒரு பதில் கூடச் சொல்ல முடியாத அளவில் அவள் குறைந்துபோனாளா என்ன? உள்ளே இத்தனை குமுறல்களும் ஓடிக்கொண்டிருந்தாலும் பக்கத்து வீட்டுக்கு வந்துவிட்டவனின் வருகைக்காக அவள் உடலின் அத்தனை புலன்களும் காத்திருந்தன.
பயணம் செய்த களைக்குக் குளித்து, உடை மாற்றிக்கொண்டு அவனும் வந்தான். உள்ளி உடைத்துக்கொண்டு இருந்தவள் தலையை நிமிர்த்தவே இல்லை. அழுகையா, ஆத்திரமா, இல்லை குமுறலா அவளுக்குச் சொல்ல முடியவில்லை. அவனை நிமிர்ந்து பார்த்தால் ரோசம் கெட்டு உடைந்துவிடுவோம் என்று தெரிந்து அவள் அசையவேயில்லை.
ஷர்மினி அவனுக்குத் தேநீர் கொண்டு வந்து கொடுப்பது தெரிந்தது. நாளைய படையல் முடிந்த பிறகு, இரண்டு நாள்கள் கழித்துச் சீராளனும் ஷர்மினியும் புறப்படுகிறார்கள் என்று அவளுக்கும் தெரியும். அன்றே அவனும் அவர்களோடு கொழும்பு சென்றுவிடுவானாம் என்று, அவன், சயந்தன், இவள் தமையன் மூவரும் பேசிக்கொண்டதிலிருந்து அறிந்துகொண்டாள்.
ஆக, இந்த மூன்று நாள்களுக்குள் அவன் ஏதாவது சொன்னால்தான் உண்டு. அப்படிச் சொல்லாமல் போய்விட்டான் என்றால்? மேலே யோசிக்கக் கூட முடியவில்லை.
இவர்களின் பேச்சுச் சத்தத்துக்குப் போலும் ஆரூரன் சிணுங்கினான். மகிழினி எழும்பப் போக, “நீங்க இருங்க அக்கா. நான் பாக்கிறன்.” என்றுவிட்டு எழுந்து உள்ளே சென்று அமர்ந்துகொண்டாள்.
அவன் வரும்வரையில் எப்போது வருவான், எப்போது வருவான் என்று தவித்த அவள்தான் அவன் முன்னால் இருக்க முடியாமல் எழுந்து ஓடி வந்தும் இருக்கிறாள். இந்த மனத்துக்கு என்னதான் வேண்டும் என்று அவளுக்கு விளங்கவேயில்லை.

