எண்ணமெல்லாம் நீ 6 – 1

அத்தியாயம் 6

 

 

உதயனுக்கும் அவளைப் பாராமல் இருந்த இந்த இரண்டரை வாரங்களும் இலகுவாய்க் கழியவில்லை. அவனே எதிர்பாரா வகையில் அவனை மிகவுமே தொந்தரவு செய்தாள். இப்படி ஒருவகை ஈர்ப்பு அவள்மீது வந்திருந்ததுதான். அதைத் தாண்டி இதை நகர்த்த அவன் அறிந்த அவளும் அவளின் அன்னையும் அவனைத் தடுத்தனர்.

 

ஆனாலுமே திரும்பவும் ஊருக்குச் செல்லப் போகிறோம், அங்கே அவள் இருப்பாள் என்கிற நினைவே அவனுக்குள் மெல்லிய குறுகுறுப்பை உண்டாக்காமல் இல்லை.

 

அப்படித்தான் வந்து, குளித்து, உடை மாற்றிக்கொண்டு இங்கு வந்தான். அவளானால் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. சயந்தன் குடும்பம், சீராளன் குடும்பம், அவனுடைய மொத்த வீடு, அயலட்டையினர் என்று எல்லோரும் கூடி இருக்கும் இடத்தில் வைத்து அவனால் என்ன செய்ய முடியும்? இல்லையானாலும் என்னதான் அவளோடு பேச?

 

அவள் அப்படி உள்ளே சென்று அமர்ந்துகொண்டது மனத்தை என்னவோ செய்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு வேலைகளில் மூழ்கிப்போனான். அடுத்த நாளும் விடிந்து, ஆளாளுக்கு இருக்க நிற்க நேரம் இல்லாமல் ஒவ்வொரு வேலையாகப் பார்த்து, மாலைப்பொழுதில் விளக்கேற்றி, இறந்தவருக்குப் படையலிட்டு, வந்திருந்த எல்லோரும் உண்டு என்று தயாபரி அம்மாவின் அந்தியேட்டி நல்லபடியாக முடிந்தது.

 

அதுவரையிலும் கூட அபிராமி அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. உள்ளத்தில் மட்டும் பொழுது நகர நகர அப்படி ஒரு துடிப்பு.

 

உதயனும் அவளைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அப்படி என்ன நடந்துவிட்டது என்று முகம் திருப்புகிறாள் என்று ஒரு கோபமும் முளைத்தது. இதில் தேவகி அம்மா வேறு கையில் என்ன வேலையாக இருந்தாலும் கண்கொத்திப் பாம்பாக இவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டே இருந்தார்.

 

அவனுக்கு எரிச்சல்தான் வந்தது. காட்டிக்கொள்ளாமல் நடமாடினான்.

 

*****

 

தயாபரி அம்மா பெரிதாக நடமாடியது இல்லைதான் என்றாலும் அவர் இல்லை என்கிற எண்ணமே ஷர்மினியின் மனத்தில் அத்தனை வெறுமையை உண்டாக்கிற்று. என்ன முயன்றும் அந்த வீட்டில் அவரோடு கழித்த இனிய பொழுதுகளை மறக்க முடியவில்லை.

 

படுக்கையிலேயே கிடந்தாலும் தன் அழைப்பு வந்ததும் மலர்ந்து, மகனின் சின்ன சின்ன சேட்டைகளிலும் குறும்பிலும் ரசித்துச் சிரிக்கும் அவர், இனி இல்லவே இல்லை என்பது பெரும் கொடுமையாய்த் தோன்றிற்று.

 

அவர்களுக்கான அறையில் கட்டிலில் கூட அமராமல், தரையில் ஒரு மூலையில் முடங்கி அமர்ந்திருந்தவளைத் தேடிக்கொண்டு வந்தான் சீராளன். அவள் அமர்ந்திருந்த விதமே என்னவோ சரியில்லை என்று சொல்ல, அவளருகில் அமர்ந்து, “என்ன?” என்றான்.

 

“இனி அம்மா வரவே போறது இல்லை என்ன?” எனும்போதே அவள் தொண்டை அடைத்துக்கொண்டது.

 

அவன் மனத்திலும் மெல்லிய பாரம்தான். அருமையான பெண்மணி. அவருக்குத் தான் இப்படி நோய்வாய்ப்பட்டுப் போனோமே என்பதை விடவும் பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்கிறோமே என்கிற கவலைதான் அதிகமாய் இருந்தது. யார் எவ்வளவு ஆறுதல் வார்த்தைகள் சொன்னபோதும் அவர் அதிலிருந்து வெளியே வரவில்லை.

 

அது எதையும் அவளிடம் சொல்லாமல், “இது எப்பவோ ஒரு நாள் நடக்கும் எண்டு தெரிஞ்சதுதானே ஷர்மி. அவா இருந்த காலத்தில எங்களால முடிஞ்ச எல்லாம் செய்து, அவாவை நல்லாத்தானே வச்சிருந்தனாங்க.” என்று அவள் மனத்தை ஆற்ற முயன்றான்.

 

“உண்மைதான். ஆனா, தம்பிய அவா இருக்கேக்கையே கொண்டுவந்து காட்டி இருக்கலாம். அதச் செய்யாம விட்டுட்டம்.” என்றவள் கன்னங்களில் கண்ணீர் வேகமாய் இறங்கிற்று.

 

“போதும் ஷர்மி. சும்மா சும்மா எதையாவது யோசிச்சு அழாத. நேர்ல காட்டேல்லையே தவிர வீடியோ கோலில பாக்கிறவா தானே.” என்று அவள் கன்னங்களைத் துடைத்துவிட்டவன் கதவுப் பக்கம் ஒருமுறை பார்த்துவிட்டு, அவள் முகத்தை இழுத்து, நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான்.

 

உண்மையிலேயே கணவனின் ஆறுதலான பேச்சும் அந்த முத்தமும் பெரும் ஆறுதலைத் தர, அவளும் தன் கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டாள்.

 

“இனி அழுறேல்ல! வந்த நாளில இருந்து அழுதழுது இது என்ன முகம்? எல்லாம் முடிஞ்சுது. நாங்களும் எங்களால முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையும் சிறப்பாச் செய்துதான் இருக்கிறம். மனதில எந்தக் குறையும் இல்லாமத்தான் மாமியும் போயிருப்பா. நீ எழும்பு. வீட்டைக் கொஞ்சம் ஒதுக்குவம் வா. அங்க உன்ர அண்ணி உடம்பு ஏலாததோட எல்லா வேலையையும் பாத்துக்கொண்டு இருக்கிறா.” என்றதும் வேகமாக எழுந்துகொண்டாள்.

 

இத்தனைக்கு மத்தியிலும் மகிழினி மீண்டும் தாய்மை உற்றிருப்பதில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

அறையிலிருந்து வெளியே வந்து முதல் வேலையாக மகிழினியைச் சென்று படுக்கச் சொன்னாள்.

 

நேற்றிலிருந்தே அவளுக்குப் போதுமான ஓய்வோ உறக்கமோ இல்லை. முழுவதுமாகச் சோர்ந்திருந்தாள். ஆனாலும் மகளை எண்ணி அவள் தயங்க, “இத்தின பேர் இருக்கிறம் அண்ணி, அண்ணா இருக்கிறார். கவனிக்க மாட்டமா? நீங்க போங்க!” என்று வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்தாள்.

 

இன்னும் இரண்டே நாள்கள். பிறகு அவள் புறப்பட வேண்டும். அதற்கு முதல் அத்தனை வேலைகளையும் முடித்து, மகிழினிக்கு ஓய்வு கொடுக்க எண்ணி, அப்போதே இருந்த எல்லோரையும் சேர்த்துக்கொண்டு வீட்டை ஒதுக்க ஆரம்பித்தாள்.

 

அன்றைய சமையலுக்காக அயலட்டையில் வாங்கிய பாத்திரங்களை எல்லாம் கழுவித் துடைத்து, தனித்தனியாக எடுத்து வைத்தாள். உதயன் வீட்டிலிருந்து எடுத்த பாத்திரங்களை எல்லாம் கழுவித் துடைத்து உதயனிடம் கொடுத்துவிட்டாள்.

 

அவனும் அவற்றைக் கொண்டுபோய்த் தங்கள் வீட்டில் வைத்துவிட்டுத் திரும்புகையில் அங்கே அவன் தமக்கையின் அறையில் இதழினியின் அருகில் அமர்ந்திருந்த அபிராமியைக் கண்டுவிட்டு நின்றான். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. வீட்டைச் சுற்றி விழிகளைச் சுழற்றினான். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோரும் பக்கத்து வீட்டில் கூடி இருந்தார்கள். அதில் அவள் இருந்த அறையின் கதவு நிலையில் சென்று நின்றான்.

 

யார் என்று நிமிர்ந்த அபிராமியும் அவனை எதிர்பார்க்கவில்லை. இருவரும் எதிர்பார்த்த தனிமை எதிர்பாராமல் அமைந்திருந்தது. இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

 

ஆனாலும் சமாளித்துக்கொண்டு, “என்ன…” என்று ஆரம்பித்தவனை வேகமாக இடையிட்டு, வாயில் விரல் வைத்து, இதழினியைக் கண்ணால் காட்டி முறைத்தாள்.

 

ஒருகணம் அசந்து நின்றுவிட்டான் உதயன். அவளின் அந்தக் கண்கள் அவனைக் கட்டி இழுப்பதுபோல் ஒரு பிரம்மை. அவன் விழிகளில் மெல்லிய சிரிப்பு. எழுந்து வெளியில் வா என்று சைகை செய்தான்.

 

அவளும் விசைக்கு இழுபட்டவளாகக் கதவை மெலிதாகச் சாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள்.

 

“என்ன, நேற்றில இருந்து முகமே சரியில்ல.” என்று விசாரித்தான் உதயன்.

 

அவள் விழிகள் வியப்பில் விரிந்தன. கொழும்பிலிருந்து வந்தவன் திரும்பிக்கூடப் பார்க்கிறான் இல்லையே என்று குமைந்துகொண்டு இருந்தவளுக்கு அவன் கேள்வி சில்லிட்டுக் கொண்டு நெஞ்சில் இறங்கியது. “அப்பிடி எல்லாம் இல்லையே.” என்றாள், தன் உற்சாகமெல்லாம் மீண்டவளாக.

 

“ஏன் உமக்கு இந்தப் பொய்? நேற்று இரவில இருந்து இப்ப வரைக்கும் நீர் என்ர முகமே பாக்கேல்லை.” என்றதும் முகத்தைத் திருப்பித் தன் உணர்வுகளை மறைக்க முயன்றாள் அபிராமி.

 

சில கணங்களுக்கு அவள் முகத்தையே பார்த்த உதயன், “இப்பிடி ஒண்டுமே சொல்லாம நிண்டா நான் என்ன எண்டு நினைக்கிறது?” என்றான் மீண்டும்.

 

பேசாமல் எதுவும் தீரப்போவதில்லை என்று புரிந்தவளும் ஒருமுறை தன்னைத் தானே சமன்படுத்தி, நிதானப்படுத்திக்கொண்டு நேராக நிமிர்ந்து அவனையே பார்த்து, “நான் உங்களிட்ட ஒரு கேள்வி கேட்டனான்.” என்றாள்.

 

“அதுக்கு?” என்றான் அவனும் நிதானமாக.

 

“அதுக்குப் பதில் வேணும்.”

 

“அதைப் பற்றிக் கதைக்கிற இடமா இது?”

 

அவள் முகம் இலேசாய்க் கன்றியது. “அண்ணா எனக்குக் கலியாணத்துக்கு பாக்கப் போறார்.”

 

“அது ஒண்டும் நாளைக்கே நடக்கப் போறேல்ல தானே.”

 

இப்போது என்ன சொல்ல வருகிறான்? அதுவரை பொறு என்றா? அவள் மனத்தின் தவிப்பு அவனுக்கு விளங்கவே இல்லையா? அதற்குமேல் கட்டுப்படுத்த முடியாமல், “என்னைப் பிடிக்கேல்லையா உங்களுக்கு?” என்றாள் குரல் அடைக்க.

error: Alert: Content selection is disabled!!