எண்ணமெல்லாம் நீ 7 – 2

கொதித்துப் போனாள் அபிராமி. “பொறுக்கி நாயே! செய்றதையும் செய்துபோட்டு என்ன கதைக்கிறாய் நீ!” என்று கையை ஓங்கிக்கொண்டு போனவளை, “என்ன செயிறீர்!” என்று ஓடி வந்து தடுத்துப் பிடித்தான் உதயன். அவன் பின்னால் ஷர்மினியும் அமிர்தாவும்.

 

எல்லோருக்கும் பெரும் திகைப்பு. “அபி என்னடி இது, அவர் அண்ணான்ர ஃப்ரெண்ட்.” என்று அதட்டினாள் ஷர்மி.

 

அமிர்தாவுக்கு என்ன பிரச்சனை, மாதவன் யார் என்றெல்லாம் தெரியாததால் செய்வதறியாது நின்றாள்.

 

அறையில் சும்மா பேரனோடு சரிந்திருந்த தேவகி அம்மா, அதிக வேலையால் அயர்ந்து உறங்கியிருந்ததில் அவர் காதில் இதெல்லாம் கேட்கவில்லை.

 

“பாரும் உதயன், இருட்டில அவா நிக்கிறது தெரியாமத்தான் வந்து மோதிட்டன். சொறி சொன்னாலும் கேக்காம… என்ன உதயன் இது? என்னைப் பாத்தா என்ன பொறுக்கி மாதிரி இருக்கா இவாக்கு?” என்று மாதவன் கண்ணெல்லாம் கலங்கி, உடைந்த குரலில் கேட்கவும், அபியைத் தவிர்த்து அங்கிருந்த எல்லோருக்குமே ஒரு மாதிரி ஆகிப்போயிற்று.

 

“சொறி மாதவன், நீங்க போங்கோ!” என்றான் உதயன் உடனேயே. ஷர்மினியும், “சொறி அண்ணா, அவள் தெரியாம நடந்திட்டாள். பெருசா எடுக்காதீங்கோ ப்ளீஸ். நான் அவளுக்குச் சொல்லுறன்.” என்று அவனைத்தான் சமாளித்தாள்.

 

“ஏய் லூசாடி நீ? அவன் என்ன செய்தவன் எண்டு தெரியாம…” என்று கொதித்தவளை, “அபி ப்ளீஸ்! எங்க எல்லாருக்கும் அவரை நல்லாத் தெரியும். தெரியாம நடந்த விசயத்தைப் பெருசாக்கிப் பிரச்சினையாக்காத. இருட்டின நேரம் நீதான் வீட்டுக்க இருந்து வெளில ஓடி வந்தனீ.” என்று அடக்கப்பட்ட சினத்துடன் அவளை அதட்டினாள் ஷர்மினி.

 

தேவகி அம்மா எழுந்து வர முதல் அவளை அடக்கிவிட வேண்டும் என்கிற அவசரம் அவளுக்கு.

 

அபி திகைத்துப்போனாள். ஷர்மி கூடவா அவளை நம்பவில்லை. அவனை நன்றாகத் தெரியும் என்றால் அவளை அவளுக்குத் தெரியாதா? அதுவரை நேரமும் அடக்க முடியாத கோபத்தில் கொதித்துக்கொண்டிருந்தவள் முழுதாய் உடைந்துபோனாள். பேச்சுக்கூட வரவில்லை.

 

உதயனுக்கும் மாதவனைப் பெரிதாகப் பழக்கமில்லாத போதும் சயந்தனின் நல்ல நண்பன் என்பதும், மனைவி, குழந்தை, நல்ல வேலை என்று மரியாதையும் மதிப்புமாக இருக்கும் ஒருவன் என்கிற வரையில் தெரியும். அப்படியானவனிடம், இறப்பு நடந்த வீட்டில் வைத்து எப்பிடி நடக்கிறாள் இவள் என்கிற சீற்றத்தில், “உனக்கு எத்தின தரம் சொன்னாலும் நீ திருந்தவே மாட்டியா? எங்க வச்சு எப்பிடி நடக்கிறாய்?” என்றான் தன் பங்குக்கு.

 

மீண்டும் கொதித்துப்போனாள் அபி. அதைவிட அவன் எதையெல்லாம் சேர்த்து வைத்துப் பேசுகிறான் என்கிற கோபமும் சேர, “எங்க வச்சு எப்பிடி நடக்கோணும் எண்டு எனக்குத் தெரியும். எனக்கு நீங்க பாடம் எடுக்காதீங்க. முதல் தள்ளுங்க நீங்க. இவனை…” என்று அவனைக் கடந்து மாதவனிடம் போக முயன்றவளை மீண்டும் தடுத்தபடி, “ஏய்! கத்தி ஊரக் கூட்டி எங்க எல்லாரின்ர மானத்தையும் சேர்த்து வாங்காத. உனக்கு எப்பிடியோ எங்களுக்கு மானம் மரியாதை முக்கியம்.” என்றதும் அதிர்ந்து அவனைப் பார்த்தாள் அபி. அவள் விழிகள் கலங்கிச் சிவந்து போயின.

 

மாதவன் வேறு, “உண்மையா தெரியாமத்தான் நடந்தது. அந்தளவுக்குக் கீழ்த்தரமான ஆள் நான் இல்ல. நீங்களும் வேகமா ஓடி வந்தனீங்க. ஆனாலும் சொறி. வேற என்ன சொல்லுறது எண்டு எனக்குத் தெரியேல்ல. சயந்தன் வந்தா நான் வந்தேனாம் எண்டு சொல்லிவிடுங்கோ ஷர்மி. நான் வாறன்.” என்று அவன் வேறு அதி நல்லவனாக நடித்துவிட்டுப் புறப்படவும், “ஐயோ அண்ணா, வந்து சாப்பிட்டுப் போங்க. அவளுக்கு விசர் பிடிச்சிட்டுது. வேற ஒண்டும் இல்ல.” என்று ஷர்மினி அவசரமாக அவனைத் தடுத்தாள்.

 

“இதையெல்லாம் பெருசா எடுக்காதீங்க மாதவன். இவ்வளவு தூரம் வந்திட்டுச் சாப்பிடாமப் போனா சயந்தன் கோவிப்பான். இஞ்ச ஆரும் உங்களைப் பிழையா நினைக்கவும் இல்ல.” என்ற உதயன், “ஷர்மி, அவரைக் கூட்டிக்கொண்டு போய்ச் சாப்பாட்டக் குடு.” என்று அவனை ஷர்மினியோடு அனுப்பி வைத்தான்.

 

அமிர்தாவுக்கு யாருக்காக நிற்பது என்று தெரியாத நிலை. “நீயும் வா அபி.” என்றாள்.

 

“நீ போ, வாறன்.” என்று முணுமுணுத்த அபி முற்றிலுமாக நொறுங்கிப்போய் நின்றாள்.

 

அமிர்தாவுக்கு அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. தயக்கத்துடன் உதயனை ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே நடந்தாள்.

 

உதயன் உள்ளத்தையும் ஏதோ ஒன்று கவ்விக் பிடித்தது. அவளை அப்படியே விட்டுவிட்டுப் போக முடியவில்லை. அதே நேரம் அவள் நடந்துகொண்ட முறை இணக்கமாகவோ தன்மையாகவோ கதைக்க விடாமல் செய்ய, “நடவும் உள்ளுக்கு.” என்றான் இறுக்கமான குரலில்.

 

கலங்கிக்கிடந்த விழிகளால் அவனை எரித்து, “நான் என்ன செய்யோணும் எண்டு எனக்குத் தெரியும். நீங்க உங்கட வேலையப் பாருங்க.” என்று முகத்தில் அடித்தாற்போல் பட்டென்று பதில் சொன்னாள் அபி.

 

முகம் சிவக்க, “தெரியாம நடந்த ஒண்டுக்கு சும்மா ஓவர் ஆக்டிங் போடாம நடவும். இருட்டின நேரம் இஞ்ச நிண்டு இன்னும் என்ன பிரச்சினையை இழுப்பீர் எண்டு தெரியாது.” என்றான் அவனும் சிடுசிடுப்பாக.

 

“போதும் கதைச்சது! வாய மூடிக்கொண்டு போங்க!”

 

நொடியில் சினத்தில் சிவந்து போயிற்று உதயனின் முகம். “இதுதான்டி, இந்தத் திமிர்தான்டி எனக்கு உன்னட்டப் பிடிக்கிறதே இல்ல. ஒரு ஆம்பிளையக் கை நீட்டி அடிக்கப் போற அளவுக்கு ஆணவம் உனக்கு. உன்னை எனக்கும் எப்பவோ இருந்து பிடிக்கும். அதைச் சொல்லாம தள்ளிப் போட்டதுக்குக் காரணமே உன்ர இந்தக் குணம்தான். மாறிட்டாய் எண்டு பிழையா நினைச்சிட்டன். நீ மாறவே இல்ல. பதில் சொல்லு எண்டு நிண்டனி எல்லா? உன்ன எனக்குப் பிடிக்கும். ஆனாலும் நீ எனக்கு வேண்டவே வேண்டாம். இதுதான் என்ர பதில். உன்ர அண்ணா காட்டுறவனையே கட்டி நல்லா இரு. என்னை விட்டுடு.” என்றுவிட்டுப் போனான் அவன்.

 

error: Alert: Content selection is disabled!!