எண்ணமெல்லாம் நீ 8 – 2

“அபி என்னடி நீ? எங்க நிக்கிறாய்? உனக்கு ஒண்டும் இல்லையே? இஞ்ச உன்னைக் காணேல்ல எண்டு எனக்கு உயிரே போயிற்றுது.” என்று எடுத்ததுமே பதறினாள் ஷர்மி.

 

“அப்பிடி எனக்கு என்ன வர இருக்கு எண்டு நிக்கிறாய்? ஒரு அவசரம். அதால வீட்டை வந்திட்டன்.” எதையும் காட்டாத குரலில் இயல்பாகச் சொன்னாள் அபிராமி.

 

“லூசா நீ? என்ன அவசரம் எண்டாலும் இப்பிடித்தான் சொல்லாமக் கொள்ளாமப் போவியா, அதுவும் இந்த நேரம். மாமியோ, இவரோ அறிஞ்சா என்னத்தான் பேசுவினம்.”

 

“பயப்பிடாத ஷர்மி. அப்பிடி எல்லாம் நடக்காது. அதுவும் என்னால உனக்கு ஒரு பிரச்சினை இனி வரவே வராது.” என்னவென்று பிரித்தறிய முடியாத குரலில் அவள் சொல்ல, “அபி!” என்று அதிர்ந்தாள் ஷர்மினி. அவளுக்கு அமிர்தா கேட்ட கேள்வி வேறு நினைவில் வந்து போனது.

 

“வந்ததும் குளிக்கப் போயிற்றன். அதாலதான் உடனே எடுக்கேல்ல. அம்மு எல்லாரிட்டையும் சொல்லிவிடு. அம்மாட்டையும் சொல்லு.” என்றவள், ஷர்மிக்கு மேலே பேசச் சந்தர்ப்பம் கொடுக்காமல் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

 

அவள் வைத்தபிறகும் அசைய முடியாதவளாய் அப்படியே அமர்ந்திருந்தாள் ஷர்மி. தவறு செய்துவிட்டோமோ என்கிற உணர்வு உள்ளத்தை இன்னும் ஆழமாய்க் குத்தியது.

 

“என்னவாம்?” வேகமாக வினவினான் உதயன்.

 

“அவள் குளிக்கப் போனவளாம்.”

 

“ஊப்ஸ்!” வாயை ஊதி மூச்செடுத்தவனுக்கு அப்போதுதான் உயிரே வந்தது. இந்தக் கொஞ்ச நேரத்தில் அவர்களை என்ன பாடு படுத்திவிட்டாள் என்கிற கோபத்தில், “அதுக்கு இப்பிடித்தான் ஒண்டுமே சொல்லாமப் போவாவா உன்ர ஃப்ரெண்ட்!” என்று சிடுசிடுத்தான்.

 

அதற்குப் பதில் சொல்லாமல், “நாங்க ஏதும் பிழை செய்திட்டமா உதயன்?” என்று கலக்கத்தோடு வினவினாள் ஷர்மினி.

 

அவன் கேள்வியாகப் பார்த்தான்.

 

“என்னால இனி உனக்கு ஒரு பிரச்சினையும் வராது எண்டு சொன்னவள். எனக்கு என்னவோ மனம் சரியில்லாம இருக்கு. இப்ப யோசிக்க யோசிக்க அவசரப்பட்டுட்டமோ, நிதானமா யோசிச்சு இருக்கோணுமோ, அபி ஒண்டும் இல்லாம இந்தளவுக்குக் கோவப்படுவாளா எண்டு யோசிச்சு இருக்கோணுமோ எண்டு இருக்கடா.” என்றாள்.

 

அவனுக்கும் ஒருமுறை திக் என்றுதான் இருந்தது. ஆனாலும் சமாளித்து, “முதல் விசயம் மாதவன் அப்பிடியான ஆள் எண்டு நான் நினைக்கேல்ல. அடுத்தது அப்பிடியே இருந்தாலும் எங்கட வீட்டுக்கே வந்து, எங்கட வீட்டுப் பிள்ளையிலேயே கை வைக்க எவனாவது யோசிப்பானா? எதிர்பாராம நடந்ததில உன்ர ஃப்ரெண்ட் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டா. அவ்வளவுதான். நாங்க அவாக்கு சப்போர்ட்டுக்கு நிப்பம் எண்டு நினைச்சிருப்பா. அது இல்லை எண்டதும் கோவம் வந்திட்டுது போல. அதான் சொல்லாமக் கொள்ளாமப் போயிருக்கிறா. அதுக்கு நீ தேவை இல்லாம யோசிப்பியா?” என்றவனுக்கு அவன் அனுப்பிய குறுந்தகவலுக்கான பதில்தான் அவள் ஷர்மினியிடம் சொன்ன பதில் என்று புரிந்தது. அதை அவளிடம் சொல்ல முடியாது என்பதில் அத்தோடு நிறுத்திக்கொண்டான்.

 

இதற்குள் அமிர்தாவின் கணவன் அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தான். அவனுக்கும் உணவு கொடுத்து, அவர்கள் புறப்படுகையில், “நடந்தது எல்லாம் நடந்து முடிஞ்சுது ஷர்மி. அதோட அவளுக்கும் ஒண்டும் நடக்கேல்ல எண்டேக்க இத இதோட விட்டுட்டுப் பயணத்துக்கு அலுவலைப் பார். இனி எனக்கு வரக் கிடைக்காதடி. அதால இப்பவே சொல்லுறன், கவனமாப் போயிற்று வா. அண்ணாட்டயும் சொல்லிவிடு. சுவிஸ் போன பிறகு கோல் எடு.” என்றுவிட்டுப் போனாள் அமிர்தா.

 

சற்று நேரத்தில் சயந்தனும் சீராளனும் வந்து சேர்ந்தனர். மனைவியின் முகத்தைப் பார்த்ததுமே என்னவோ சரியில்லை என்று கண்டு, “என்ன?” என்றான் சீராளன் உடனேயே.

 

கலக்கத்துடன் பார்வை உதயனிடம் சென்று வர அனைத்தையும் திக்கித் திணறிச் சொல்லி முடித்தாள் ஷர்மி.

 

அதையெல்லாம் கேட்ட சீராளனின் முகம் கோபத்தில் சிவந்து இறுகிப்போனது. “நீ நடந்த விதம் சரி எண்டு நினைக்கிறியா ஷர்மி?” என்றான் அவள் விழிகளையே நேராகப் பார்த்து.

 

“இல்ல, அது வீடு தேடி வந்தவரோட…” என்றவளை வேகமாக இடைவெட்டி, “அவன் வீடு தேடி வந்தான் எண்டுறதாலேயே உனக்கு அவன் நல்லவனாவும் என்ர தங்கச்சி பிழையானவளாவும் தெரிஞ்சதோ?” என்று பற்களைக் கடித்தான்.

 

“ஐயோ சத்தியமா அப்பிடி இல்ல. அபியை நான் அப்பிடி நினைப்பனா?” எனும்போதே கணவனின் கடுமையில் அவள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.

 

“சீராளன் ப்ளீஸ்!” என்று நடுவில் வந்த உதயனிடமும், “உங்களிட்ட நான் இத எதிர்பாக்கேல்ல உதயன்!” என்றான் பட்டென்று.

 

உதயனின் முகம் கறுத்துப்போனது. சயந்தன் வேகமாக மேலே பேசாதே என்று உதயனுக்குக் கண்ணைக் காட்டினான்.

 

“சொறி!” என்றதோடு நிறுத்திக்கொண்டான் உதயன்.

 

அவனுக்கும் இப்போது இன்னும் கொஞ்சம் நிதானமாக நடந்திருக்க வேண்டுமோ, குறைந்த பட்சமாக அவளைக் கவனித்திருக்க வேண்டுமோ என்று தோன்றிற்று. செய்தது எல்லாம் போதாது என்று அவளுக்குக் குறுந்தகவல் வேறு அனுப்பி… ஒரு நெடிய மூச்சுடன் தலையைக் கோதிக் கொண்டான்.

 

“அபியை நீ அப்பிடி நினைச்சிருக்காட்டி அவள் என்ன சொல்ல வந்தவள் எண்டு கேட்டிருப்பாய். ஒரு பொம்பிளைப் பிள்ளை இந்த விசயத்தில இப்பிடி நடப்பாளா எண்டாவது யோசிக்க மாட்டியா? எல்லாத்தையும் விட அபி அப்பிடியானவளா?”

 

அமிர்தா கேட்ட அதே கேள்வி. பதில் சொல்ல வழியற்றுக் கண்ணீர் உகுத்தாள் ஷர்மினி. தங்கையை அப்படிப் பார்க்க மனம் பிசைந்தாலும் அவள் செய்தது தவறு என்றே சயந்தனுக்கும் தோன்றிற்று.

 

“அபி செய்தது பிழையாவே இருந்தாலும் இப்பிடித்தான் அவளை அப்பிடியே விட்டுட்டு வந்து உன்ர வேலைய நீ பாப்பியா? அவ்வளவு அக்கறை உனக்கு என்ர தங்கச்சில!” அவனுக்குக் கோபம் அடங்கமாட்டேன் என்றது. உடனேயே அபிராமிக்கு அழைத்தான்.

 

“என்ன நடந்தது அபி?” அவள் அழைப்பை ஏற்றதுமே விசாரித்தான்.

 

இந்த ஒரு கேள்வியை அங்கிருந்த யாரும் அவளிடம் கேட்கவில்லையே. சட்டென்று விழியோரம் அபிக்குக் கண்ணீர் துளிர்த்துப் போயிற்று. இதுதான் கூடப் பிறந்தவனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் போலும் என்று எண்ணியபடி, “பெருசா ஒண்டும் நடக்கேல்ல அண்ணா.” என்று சமாளிக்க முயன்றாள்.

 

“என்ன நடந்தது எண்டு மட்டும் நீ சொல்லு!” என்றான் அவன் அழுத்தி.

 

அவளால் அதை நினைத்தே பார்க்க முடியவில்லை. அந்தளவில் மனம் அருவருத்தது. அதற்கு ஆறுதல் கிடைக்க முதல் அதைவிடப் பெரிய காயம் மனத்தில். குரலை உடைய விடாமல் இறுக்கிப் பிடித்தபடி, “நானும் வெளில ஓடிப்போனனான் அண்ணா. அதாலையோ என்னவோ…” என்றவளால் தமையனிடம் அதைச் சொல்ல முடியவில்லை.

 

“அண்ணா ப்ளீஸ், இத இதோட விடுவமே. அந்த நிமிசம் ஒரு மாதிரி ஆயிற்றுது. எனக்குக் கொஞ்சம் சமாளிக்க ஏலாமயும் இருந்தது அண்ணா. அதுதான் வந்திட்டன். இப்ப நான் ஓகே. தயவுசெய்து ஷர்மிட்டக் கோவப்படாதீங்க.” காதை அங்கே கொடுத்திருந்தாலும் இங்கே மனைவியை விழிகளால் எரித்தான் அவன்.

 

ஷர்மிக்குக் கைகால்கள் எல்லாம் நடுங்கின.

 

அங்கே அவள் அழைப்பைத் துண்டித்ததும், “ஆர்ல சரியோ பிழையோ நீ நடந்துகொண்ட விதம் கொஞ்சமும் சரியில்ல ஷர்மி. ஒரு பொம்பிளைப் பிள்ளைக்கு இப்பிடி நடந்தா அந்த நிமிசம் அவள் நிலைகுலைஞ்சுதான் போவாள். அது உனக்குத் தெரியாமப் போனதா? அந்த நேரம் அவளுக்குத் தேவையான ஆறுதல நீ குடுக்கேல்ல. அதாலதான் இரவில, தனியா, ஆட்டோவில வீட்டுக்குப் போயிருக்கிறாள். அந்த நிலைக்கு அவளை நீ கொண்டு வந்திருக்கிறாய்! பிறகு என்னத்துக்கு நீ அவளுக்கு அண்ணி எண்டு இருக்கிறாய், இல்ல ஃப்ரெண்ட் எண்டு இருக்கிறாய்?” என்றவன் அங்கிருந்த சயந்தன், உதயன் முன் வேறு பேச விரும்பாமல், அறைக்குள் சென்று அன்னையைத் தட்டி எழுப்பினான்.

 

“வீட்டை போய் நித்திரை கொள்ளலாம், வாங்கம்மா.” அவனும் அவரோடு புறப்படவும் தவித்துப்போனாள் ஷர்மினி.

 

“நானும் வரவா.”

 

“நீ இஞ்சயே நில்லு! தம்பி நித்திரை!” என்றவன் அதற்குமேல் தாமதிக்கவில்லை. புறப்பட்டிருந்தான்.

 

அவர்கள் இருவரும் போன பின்பும் கூட அங்குப் பலத்த அமைதி. ஷர்மினியின் அழுகைச் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

 

கணவனின் கேள்விகள் ஒவ்வொன்றும் அவளைக் கூறு போட்டன. அதைவிட அவன் கேட்டதில் தவறு இல்லையே. என்ன நடந்திருந்தாலும் அபியை அவள் கவனித்திருக்க வேண்டுமே.

 

சயந்தனுக்கு அன்னை இறந்ததில் இருந்தே முறையான ஓய்வும் இல்லை, உறக்கமும் இல்லை. இதில் திரும்பவும் தாய்மை அடைந்திருக்கும் மனைவியை முழுமையாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லையே என்கிற தவிப்பு வேறு. எல்லாம் முடிந்தது, இன்றாவது கொஞ்சம் உறங்கி எழ வேண்டும் என்று வந்தால் இங்கே இப்படி ஒரு பிரச்சனை.

 

சயந்தனுக்கு ஏனோ சீராளனில் கோபமோ மனக்குறையோ வரவேயில்லை. அவன் கோபம் சரி என்றே தோன்றிற்று.

 

உதயனின் புறம் திரும்பி, “நீயும் இருந்து இப்பிடி நடக்க விட்டிருக்கிறியேடா. மாதவனில இருந்த நம்பிக்கை உங்க ரெண்டு பேருக்கும் ஏன் அபில இல்லாமப் போனது. மாதவனை விட எங்களுக்கு அபிதானே முக்கியம். தப்பித்தவறி இந்த நேரம் அந்தப் பிள்ளை போற வழில ஏதாவது நடந்திருந்தா?”

 

அதைக் கேட்டும் ஷர்மி கண்ணீர் உகுக்க, “சும்மா சும்மா அழாத ஷர்மி! ஆரும் இஞ்ச வேணுமெண்டு எதையும் செய்யேல்ல. அந்த நிமிசம் அந்தச் சூழ்நிலைல நடந்ததுதான் எல்லாமே. எழும்பிப் போய்ப் படு. அங்க ஆரூரன் தனிய.” என்று அவளை அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு,சயந்தனையும் படுக்கச் சொல்லிவிட்டுத் தானும் எழுந்து வீட்டுக்கு நடந்தான் உதயன்.

 

 

error: Alert: Content selection is disabled!!